Published:Updated:

தினைப் பொங்கல், குதிரைவாலி கூட்டாஞ்சோறு, அடுப்பில்லா சமையல்... அருமையான உணவு!

உணவு
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு ( ம.அரவிந்த் )

உணவு

ரிசி உணவுக்கு மாற்றாக சிறுதானியங்களும் தற்போது நமது வீடுகளில் இடம்பெற ஆரம்பித்துள்ளன. “அரிசி உணவில் செய்யும் பொங்கல் மட்டுமா சுவையாக இருக்கும் சிறுதானிய அரிசியில் செய்யும் பொங்கலும் சுவை மிகுந்தது. அதிலும் கூட்டாஞ்சோறு இன்னும் சுவை மிகுந்தது” என்கிறார் சிறுதானிய உணவு தயாரிப்பாளர் ரமேஷ்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ்-மகேஸ்வரி தம்பதி, அடுப்பில்லா உணவு, சிறுதானிய உணவு குறித்த பயிற்சி கொடுத்து வருகிறார்கள். அத்துடன் நிகழ்ச்சிகளிலும் சமைத்துக் கொடுப்பதன் மூலம் மன நிறைவான வருமானமும் பார்க்கிறார்கள்.

ஒரு காலைவேளையில் ரமேஷ்-மகேஷ்வரி தம்பதியைச் சந்தித்தோம். சிறுதானியத்தில் தினை இனிப்புப் பொங்கல், குதிரைவாலி கூட்டாஞ்சோறு, வரகு தயிர் சாதம், சாமை சாம்பார் சாதம் தயார் செய்து, அதன் ருசியை உணர வைத்த ரமேஷ், சிறுதானிய உணவுகள் பற்றிப் பேசினார்.

ரமேஷ்-மகேஷ்வரி தம்பதி
ரமேஷ்-மகேஷ்வரி தம்பதி

‘‘பட்டு நெசவுதான் எங்களோட பூர்வீக தொழில். ஆரம்பத்துல பட்டுப்புடவை தறி நெய்ஞ்சுகிட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல கும்பகோணத்தில இருக்க வேதாத்திரி மகரிஷி பயிற்சி மையத்தில சேர்ந்தேன். எளிமையான தியானம், உடற்பயிற்சி, மன வளம், உணவுப் பத்தி பயிற்சி கொடுத்தாங்க. அது என்னோட மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு.

கழிவுகளை நீக்கும் எளிய உணவு

ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கத்துல இயற்கை உணவு பயிற்சிமூலம் உடம்புல இருக்குற கழிவுகள் நீக்குறது குறித்த 3 நாள் பயிற்சியில கலந்துகிட்டேன். அதைப் பின்பற்றவும் ஆரம்பிச்சேன். காலையில் தேங்காய், வாழைப்பழம், பேரிச்சம் பழம், மதியம் கொஞ்சம் சாப்பாடு, இரவு பழங்கள்னு எளிய உணவுகளை எடுத்துகிட்டேன். உடம்புல இருக்கக் கழிவுகள் நீங்கி உடல் ஆரோக்கியமா மாறுச்சு. அதை என்னால உணர முடிஞ்சது.

பிறகு, அதுகுறித்த தேடல் அதிகமாச்சு. இயற்கை உணவு தயாரிக்குற பயிற்சியும் எடுத்துக்கிட்டேன். அந்த நேரத்துலதான், புதுக்கோட்டையில நம்மாழ்வார் தலைமையில் இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்துச்சு.

அந்தக் கூட்டத்திலதான் முதல் தடவையா நம்மாழ்வார் ஐயாவை நேர்ல பார்த்தேன். அந்த நிகழ்ச்சிக்கு நான்தான் சமையல். அடுப்பில்லாம காய்கறி ‘சாலட்’, இனிப்பு அவல், தினை பாயசம்னு 6 வகையான அறுசுவை உணவுகளைச் சமைச்சிருந்தேன். தினை பாயசத்தைச் சாப்பிட்ட பிறகு என்னைக் கூப்பிட்டு, முதுகில் தட்டிக் கொடுத்த நம்மாழ்வார் ஐயா, ‘இயற்கை உணவு செய்றதை விட்டுடாத. இத உன்னோட நிறுத்திக்காம நாலு பேருக்குச் சொல்லிக்கொடு... மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து’னு சொல்லிட்டுப் போனார்.

நம்மாழ்வாருடன்
நம்மாழ்வாருடன்

எனக்கு இயற்கை உணவு மேல பெரிய ஈடுபாடு வர அந்த நிகழ்ச்சி தான் காரணமா இருந்துச்சு’’ என்று சிலாகித்தவர், இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சிபற்றிப் பேசினார்.

‘‘சிவகாசி மாறன், கருப்பசாமி, நான் மூணு பேரும் சேர்ந்து பல ஊர்கள்ல மாதாந்தர பயிற்சியெல்லாம் கொடுத்தோம். கரூர் மாவட்டம், சுருமான்பட்டியில நம்மாழ்வார் ஐயா உருவாக்கின வானகம் பண்ணையில நடந்த இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டு, இயற்கை உணவு தயாரிப்பு பற்றிப் பயிற்சி கொடுக்குற வாய்ப்பு கிடைச்சது’’ என்றவர், அடுப்பில்லா சமையல் குறித்துப் பேசினார்.

தேங்காய்ப் பால் அவல்

‘‘அடுப்பில்லாம இயற்கையா 60 வகை உணவுகள் வரைக்கும் செய்யலாம். சுரைக்காய் சாலட், வெண் பூசணிக்காய்கூட்டு, சுவை யூட்டிய பாகற்காய், வெள்ளரிக்காய், புடலங்காய் கட்லெட், பல நாட்டுக் காய்கறிகள் ஒண்ணா சேர்த்து சாலட், மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் இனிப்பு அவல், எலுமிச்சைச் சாறு கலந்த கார அவல்னு பட்டியல் நீண்டுகிட்டே போகும்.

இதுக்கிடையில எனக்குத் திருமணம் நடந்தது. அடுப்பில்லா உணவு, சிறுதானிய உணவு செய்வதை மகேஷ்வரிக்கும் கற்றுக் கொடுத்தேன். பல ஊர்களுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து போய்ப் பயிற்சி கொடுத்துட்டு வர்றோம்’’ என்றவர் நிறைவாக,

சிறுதானிய உணவு
சிறுதானிய உணவு

‘‘இப்ப பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு எங்களைச் சமைக்கக் கூப்பிடுறாங்க. வெளிமாநிலங்களுக்கும் போறோம். இப்பவும் நாங்க பயிற்சி கொடுக்குறத மட்டும் நிறுத்தல. மக்கள் அதிகம் கூடுற நிகழ்ச்சிகள்ல ‘ஸ்டால்’ போட்டு அடுப்பில்லா உணவு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துறோம்.

அடுப்பில்லா உணவு, சிறுதானியம், பாரம்பர்ய அரிசியில செய்யுற உணவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்குறோம். பாரம்பர்ய அரிசியில் மாப்பிள்ளைச் சம்பா, கறுங்குறுவை ரெண்டையும் அதிகம் பயன் படுத்துறோம். வருமானத்தை மட்டுமே பெருசா நினைக்காம இதைச் செஞ்சுட்டு வர்றோம். இதுமூலம் எங்களுக்கு வருமானம் மட்டுமல்ல மனசும் நிறைஞ்சிருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.


தொடர்புக்கு, ரமேஷ்,

செல்போன்: 99947 56330.

கறிவேப்பிலை கீர்

‘‘தேங்காய்ப் பாலை எடுத்து, அதுல அவல் போட்டு ஊறவைப்பேன். 10 நிமிடங்களுக்குப் பிறகு, அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்தால் தேங்காய்ப்பால் அவல் தயார். கறிவேப்பிலை, தேங்காய், தேவையான அளவு ஏலக்காய், இஞ்சி, கொத்தமல்லித் தழையைச் சேர்த்து தண்ணி ஊத்தி மிக்ஸியில் அரைச்சா கறிவேப்பிலை கீர் தயாராகிடும்.

சிறுதானிய உணவு
சிறுதானிய உணவு

வாழைக்காயைச் சின்னச் சின்னதா நறுக்கிக்கணும். எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் மூணையும் தேவையான அளவு கலந்து, அதுல நறுக்குன வாழைக்காயைப் போட்டு 25 நிமிடம் ஊற வைக்கணும். பிறகு, நிலக்கடலைப் பொடி, சீரகத் தூள், மிளகுத் தூள், துருவிய தேங்காயைத் தூளைச் சேர்த்துக் கிளறிச் சாப்பிட்டால் அடுப்பில்லாம செஞ்ச உணவா இதுனு எல்லோரும் கேப்பாங்க’’ என்கிறார் ரமேஷ்.

சிறுதானிய பொங்கல்!

‘‘சிறுதானியத்துல 20-க்கும் மேற்பட்ட உணவுகளைச் செய்றதோட அதுகுறித்த பயிற்சியும் கொடுக்கிறோம். சாமை வெண்பொங்கல், குதிரைவாலி கூட்டாஞ்சோறு, வரகு தயிர்சாதம், தினை பாயாசம், பனிவரகு பிரியாணி, சிறுதானியத்துல கீரை சாதம், வாழைப்பூ பிரியாணி, தினை சர்க்கரை பொங்கல்னு பல வகையான உணவுகளைச் செய்றோம். சிறுதானியத்துல சாமை, வரகு, குதிரைவாலி, தினை இந்த நாலுதான் அதிகம் பயன்படுத்துறோம். சுரைக்காய் காய்கறி சாலட், பூசணிக்காய் தயிர்பச்சடி, வாழைக்காய் பசுமைக் கூட்டுனு பலவிதமான உணவுகளை அடுப்பில்லாம சமைக்கலாம்’’ என்கிறார் மகேஷ்வரி.