Published:Updated:

மண் வளம்+விளைச்சல் இரண்டுக்கும் கைகொடுக்கும் மட்குக் கரைசல்! - 2,000 ரூபாயில் அசத்தல் தொழில்நுட்பம்!

மட்குக் கரைசல் தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
மட்குக் கரைசல் தொழில்நுட்பம்

எம்.ஜே.பிரபு, வேளாண் பத்திரிகையாளர்

மண் வளம்+விளைச்சல் இரண்டுக்கும் கைகொடுக்கும் மட்குக் கரைசல்! - 2,000 ரூபாயில் அசத்தல் தொழில்நுட்பம்!

எம்.ஜே.பிரபு, வேளாண் பத்திரிகையாளர்

Published:Updated:
மட்குக் கரைசல் தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
மட்குக் கரைசல் தொழில்நுட்பம்

ந்தியாவில் 57 பெரிய ரசாயன உரத் தொழிற்சாலைகளும், 64 சிறிய மற்றும் நடுத்தர உரத் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த உரத் தொழிற்சாலைகள் இயங்குவதற்காகக் கடந்த பட்ஜெட்டில் சுமார் 94,000 கோடி ரூபாயை உரமானியமாக ஒதுக்கியுள்ளது இந்திய அரசு. இந்தச் சூழ்நிலையில் ‘புதிதாக உரத் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்’ என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உரத் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இப்படித் தொடங்கப்படும் உரத்தொழிற்சாலைகள் விவசாயிகளுக்குப் பயன்படுகிறதா? என்பதை அரசுகள் ஆராய வேண்டும். இதுவரை இந்த அரசுகள் விவசாயிகளுக்கு உருப்படியாக எதையும் யோசித்து அதற்குத் தீர்வு கண்டபாடில்லை. வளர்ந்த நாடுகளில் எல்லாம் இயற்கை வேளாண்மை மேம்பட்டு வரும் சூழலில், இந்தியாவில் மட்டும் மீண்டும் மீண்டும் உரத் தொழிற்சாலைகள் தொடங்கப் படுவதன் நோக்கம் என்ன? விவசாயம் எளிமையாக இருக்க வேண்டும். அதற்கு எளிமையான இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களே போதுமானது. ஒரு இந்திய விவசாயியின் மாத வருமானம் சராசரியாக 8,000 ரூபாய் என்கிறது புள்ளிவிவரம். இப்படியே உரப் பயன்பாடு தொடர்ந்தால், விவசாயியின் வருமானம் எப்படி அதிகரிக்கும்? இதற்கு, விவசாயிகளே இயற்கை உரத் தொழிற்சாலையைத் தொடங்கிப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி.

மட்குக் கரைசல் தொழில்நுட்பம்
மட்குக் கரைசல் தொழில்நுட்பம்


விவசாயம், அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் அது இன்னும் முழுமையாக வளராமல் இருக்கிறது. இதனால், விவசாயத்திலிருந்து வேறு தொழில்களுக்கு இடம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், இயற்கை விவசாயம் செய்வோர் சுயசார்போடு இருக்கிறார்கள். குறிப்பாக நகரப்பகுதிகளில் மாடித்தோட்டம் அமைத்திருப்பவர்கள்தான் இயற்கை விவசாயம் அதிகம் செய்கிறார்கள் என்பேன். அதை அரசும் உணர்ந்து மாடித்தோட்டத்தை இயற்கை விவசாய இயக்கமாகவே மாற்றிச் செயல்படுத்தி வருகிறது. இதுவெல்லாம் இயற்கை விவசாயத்துக்குக் கிடைத்த வெற்றி. இதேபோன்று பண்ணை விவசாயத்துக்கும் ஏன் இயற்கை வேளாண்மையை அரசு பரிந்துரைக்கக் கூடாது. இப்போதிருக்கும் ரசாயன உரப்பயன்பாட்டில் வெளிப்படைத் தன்மை இல்லை. அதற்கு மாறாக இயற்கை விவசாயம் வெளிப்படையாக இருக்கிறது. அதனால்தான் நிறைய பேர் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இயற்கை விவசாயம் சம்பந்தமாகக் கேள்வி கேட்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஓர் இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தைத்தான் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். பத்திரிகை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண் பத்திரிகையாளராகப் பணிபுரிந்திருக்கிறேன். இந்தியா முழுக்கச் சுற்றி பல விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள், தொழில்நுட்ப அனுபவங்கள், கண்டுபிடிப்புகள் பற்றி எழுதி இருக்கிறேன். அந்த வகையில் இயற்கை விவசாயத்துக்கு அர்ப்பணிப்போடு பணி செய்து வரும் பசுமை விகடனில் ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மட்குக் கரைசல் தொழில்நுட்பம்
மட்குக் கரைசல் தொழில்நுட்பம்


சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இயற்கை விவசாயியைச் சந்திக்க முடிந்தது. சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த அழகேசன் என்பவர்தான் அவர். இவர் எப்போதும் தன்னை ஆல் இன் ஆல் அழகேசன் என்றுதான் சொல்லிக் கொள்வார். நாட்டு மாட்டின் சாணம், சிறுநீரை வைத்தே நல்ல விளைச்சல் எடுத்து வருகிறார். 200 அல்லது 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக் கொள்கிறார். டிரம்மின் மேல் பகுதியிலும், அடிப்பகுதியில் இரண்டு வால்வுகளைப் பொருத்தி விடுகிறார். இவற்றைக் கொண்டுபோய் வயலுக்குத் தண்ணீர் செல்லும் வாய்க்கால் பகுதிகளில் நிழற்பாங்கான இடத்தில் வைத்து விடுகிறார்.

மட்குக் கரைசல் தொழில்நுட்பம்
மட்குக் கரைசல் தொழில்நுட்பம்



இந்த டிரம்முக்குள் 5 லிட்டர் மாட்டுச் சிறுநீர் (நாட்டு மாட்டுச் சிறுநீர் என்றால் நல்லது), 5 கிலோ பசுஞ்சாணம், வீட்டில் மீதமாகும் காய்கறிக் கழிவுகள், பழைய, மீந்துபோன பால், தயிர், மோர் கழிவுகள், பண்ணைக் கழிவுகள் அதாவது தோட்டத்தில் வீணாகும் காய்கறி, பழக் கழிவுகள், இதோடு தோட்டத்தில் கிடைக்கும் வேப்பிலை, கொழிஞ்சி, எருக்கன், நொச்சி உள்ளிட்ட பச்சை இலை தழைகளைப் போட்டு டிரம்மானது முக்கால்வாசி நிரம்பும்படி செய்துவிடுகிறார். பிறகு, டிரம் நிரம்பும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி விட்டு அதன் வாய்ப்பகுதியைக் காடா துணியால் மூடிவிடுகிறார். வாரத்துக்கு ஒருமுறை கலக்கிவிட்டு 20 - 25 நாள்கள் மட்க விடுகிறார். பிறகு, வயலுக்குத் தண்ணீரைப் பாசனம் செய்யும்போது, வாய்க்கால் வழியாகச் செல்லும் தண்ணீரில் இந்த மட்குக் கரைசலைக் கலந்து விட்டுவிடுகிறார். நெல், காய்கறிகள், பழப்பயிர்கள், மரப் பயிர்கள் என்று அனைத்துக்கும் இதே முறை பாசனம்தான்.

விவசாயி அழகேசன்
விவசாயி அழகேசன்


இனி, விவசாயி அழகேசன் சொல்வதைக் கேட்போம்.

“எனக்கு 50 ஏக்கர் நிலமிருக்கு. விவசாயத்தோடு இயற்கை இடுபொருள்களைக் கொண்டு தோட்டத்தை உருவாக்கி கொடுக்கிற பணியைச் செஞ்சிட்டு வர்றேன். அந்த வகையில எங்க பகுதியிலேயே முதன்முறையாக ஜீவாமிர்தத்தைச் சொட்டுநீர்ல கொடுக்குற முறையை அறிமுகப்படுத்தினேன். நாங்க பராமரிச்சிட்டு வர்ற தோட்டங்கள்ல காய்கறிகள், மரப்பயிர்கள், பழப்பயிர்கள்னு நிறைய இருக்கும். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியாக இடுபொருள்களைக் கொடுக்கிறது எங்களுக்குச் சாத்தியமில்லாத விஷயம். அதனால, தோட்டத்தில் கிடைக்கிற இலை, தழைகள், சாணம், மாட்டுச் சிறுநீரை பிளாஸ்டிக் டிரம்ல போட்டு மட்கவெச்ச மட்குக் கரைசலைத்தான் பயிர்களுக்குக் கொடுத்துட்டு வர்றோம். இப்படிக் கொடுக்கிறதால மண்ணில் மண்புழுக்கள் நிறைய பெருகுது. நிலத்துல நுண்ணுயிர்கள் பெருகி இருக்கு. மண்ணுல நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிச்சிருக்கு. அதாவது, ஈரத்தைத் தக்கவைக்கிற திறன் அதிகரிச்சிருக்கு. மண்ணுக்குக் காற்றோட்டம் கிடைக்கிறதுனால பயிர்களின் வளர்ச்சி சிறப்பா இருக்குது. விளைச்சலும் நல்லாவே இருக்குது.

வளமில்லாத மண்ணை வளப்படுத்த இந்தத் தொழில்நுட்பம் ரொம்பவே கைக்கொடுக்குது. கவர்மெண்ட்டோட வேளாண் காடுகளையே நாங்க இந்த முறையிலதான் பராமரிச்சு கொடுக்கிறோம். என்னோட தோட்டங்கள்லயும் இந்த முறையைப் பயன்படுத்திட்டு வர்றேன். நல்ல விளைச்சலும் மண் வளமும் இது மூலமா சாத்தியமாகுது. ரசாயன உரங்களோட உதவி இல்லாமலேயே எளிமையா பயிர்கள வளர்க்கிறேன்... ரெண்டு மடங்கு விளைச்சல் எடுக்கிறேன்” என்கிறார் அழகேசன்.

உரச்செலவையும் வெகுவாகக் குறைக்கும் இந்தத் தொழில்நுட்பம் குறித்து மைராடா வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகேசனிடம் கேட்டேன். ‘‘நல்ல தொழில்நுட்பம்தான். தாராளமாகப் பயன்படுத்தலாம். இயற்கை இடுபொருள் என்பதால் கூடுதலாகக் கொடுத்தாலும் பிரச்னையில்லை’’ என்று சொன்னார்.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு


உடனே, செங்கல்பட்டு மாவட்டம், மொறப்பாக்கத்தில் உள்ள எங்களுடைய வாழைத்தோட்டத்துக்கு இந்த முறையைச் செயல்படுத்திப் பார்த்தேன். அவர் சொன்ன மாதிரியே ஏக்கருக்கு 4 டிரம்களை (200 லிட்டர் கொள்ளளவு) வாங்கி வந்து பயன்படுத்தினேன். நல்ல பலன் கிடைத்தது. வாழையின் வளர்ச்சியும் சிறப்பாக இருந்தது. கூடுதலாக இடுபொருள்கள் கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. மண் வளமாவதற்கு இந்த முறை நல்லாவே கைகொடுக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் மற்ற விவசாயிகளுக்கும் தெரியவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கே எழுதுகிறேன்.

விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மட்குக் கரைசல் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை தேவைப்படும். ரசாயன உரத்தொழிற்சாலைகளை நம்பாமல், நாமாகவே இப்படி இயற்கை உரத் தொழிற்சாலையை உருவாக்கிக் கொண்டால், விவசாயத்தில் செலவைக் குறைத்து, வருமானத்தைப் பெருக்கலாம்.


தொடர்புக்கு, அழகேசன்,

செல்போன்: 99446 35117