Published:Updated:

வெள்ளத்திலும் மகசூல்! வியட்நாமில் ஏற்பட்ட தக்காளிப் புரட்சி!

வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

சிறிய நுட்பம்... பெரிய லாபம்! - வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்! -3

வெள்ளத்திலும் மகசூல்! வியட்நாமில் ஏற்பட்ட தக்காளிப் புரட்சி!

சிறிய நுட்பம்... பெரிய லாபம்! - வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்! -3

Published:Updated:
வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

மிகச் சுலபமான, சிறிய வேளாண் தொழில்நுட்பங்கள் எப்படி மிகப்பெரிய மாற்றங்களையும் லாபத்தையும் கொடுக்கின்றன என்பதை உதாரணங்களுடன் சொல்லும் தொடர் இது. உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமான விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.

மெகோங் ஆறு. ஆசியாவின் ஆறாவது நீளமான ஆறு. சுமார் 4,350 கி.மீ நீளம் கொண்டது. உலகளவில் பெரிய ஆறுகளின் பட்டியலில் பத்தாவது இடம். திபெத் பீடபூமியில் உற்பத்தியாகும் இந்த ஆறு, சீனாவின் மேற்குப் பகுதி வழியாக ஓடி வந்து, பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் ஊடாகப் பாய்ந்து, இறுதியாகத் தென்சீனக் கடலில் கலக்கிறது. லாவோஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் பெரும்பகுதியும், தெற்கு வியட்நாமின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் (6,00,000 சதுர கிலோமீட்டர் அளவுக்கு) மெகோங் ஆற்றுப்படுகையில்தான் அமைந்திருக்கின்றன. எனவே, இந்த நிலங்களில் நடைபெறும் விவசாயம் மெகோங் ஆற்றின் நீரை நம்பியே இருக்கிறது.

மெகோங் ஆறு
மெகோங் ஆறு

இந்த ஆற்றுப்படுகை முழுவதும், ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரையிலும் மழை வெளுத்து வாங்கும். அதனால், மெகோங் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இப்படி வெள்ளம் கரைகளைத் தாண்டி ஓடும்போது, விளைநிலங்களைப் பதம் பார்ப்பதுவும் வழக்கமான காட்சிகள்தாம். அதுவும் கடைமடையில் இருக்கும் வியட்நாமில், இந்த வெள்ளச் சேதம் மிக மிக அதிகமாகவே இருக்கும். இந்த மழை வெள்ளத்துக்குப் பயந்தே, பெரும்பாலான வியட்நாம் விவசாயிகள் இப்பருவத்தில் காய்கறிகளைப் பயிரிடுவதைத் தவிர்த்துவிடுவார்கள்.

அதேபோல வியட்நாமின் வடபகுதியில் பாய்ந்தோடும் இன்னொரு ஆறு செந்நதி. இதுவும், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் ‘யுன்னான்’ மாநிலத்தில் உருவாகி, வடக்கு வியட்நாமின் வழியாகப் பாய்ந்தோடி, டோங்கின் வளைகுடாவில் கலக்கிறது. வியட்நாமின் தலைநகரான ஹனோய் நகரம் உட்பட 15,000 சதுர கிலோமீட்டர் செந்நதிப் படுகையில்தான் அமைந்திருக்கிறது. வியட்நாமின் உணவு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் படுகையும், மழைக் காலத்தில் காய்கறி உற்பத்திக்கு ஏதுவாக அமைவதில்லை. ஆனால், இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். எப்போது ஒரு பொருளின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்போது அதன் சந்தை விலை மிக அதிகமாக இருக்கும். எனவே, ஜூன் முதல் நவம்பர் வரையிலான 6 மாதங்களில் காய்கறி உற்பத்தி செய்ய முயற்சி செய்தனர் வியட்நாம் விவசாயிகள். காரணம், அந்தப் பருவத்தில் காய்கறிகளை விளைவித்தால், வருமானம் அதிகமாகக் கிடைக்கும்.

சீனிவாசன் ராமசாமி
சீனிவாசன் ராமசாமி

பொதுவாகவே, கீரைகள் மிகக் குறுகிய காலத்துக்குள் அறுவடைக்கு வந்துவிடும் என்பதால், பசுமைக்குடில்கள் மற்றும் பிளாஸ்டிக் கூரைகளைக் கொண்ட வலைக்குடில்கள் அமைத்து, கீரைகளைப் பயிரிட்டு லாபம் பார்த்தார்கள். ஆனால், அப்போதும் தக்காளி போன்ற பயிர்களைப் பயிரிடுவதில் மிகப்பெரும் சவாலைச் சந்தித்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய வில்லனாக அமைந்தது, தக்காளியைத் தாக்கும் பாக்டீரிய வாடல் நோய். அதன் தீவிரம் மழைக்காலத்தில் மிக அதிகமாக இருக்கும். மழைநீர் பாய்ந்தோடும் வயல்களுக்கு எல்லாம், பாக்டீரியாக்கள் பரவி அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து, தக்காளிச் சாகுபடியை முற்றிலுமாக அழித்துவிடும். இதற்குப் பயந்துகொண்டே, எந்த விவசாயியும் மழைக்காலத்தில் தக்காளி பயிரிடுவதில்லை. இந்நிலையில், அதற்கு மிகப்பெரும் தீர்வைக் கொடுத்தது ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம். சிறு நெருப்பாய், ஒற்றை மனிதரால் பற்ற வைக்கப்பட்ட தக்காளியில் ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம், பெரும் காட்டுத்தீயாய் பரவி, இன்றைக்கு வியட்நாமில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தக் கதையைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

தக்காளித் தோட்டம்
தக்காளித் தோட்டம்

தொழில்நுட்பத்தைப் பரவலாக்கிய
‘நோ குவாங் வின்’

1990-ம் ஆண்டுக்கு முன்புவரை, பாக்டீரிய வாடல் நோய் வியட்நாமில் ஒரு பெரும் பிரச்னையாக இருந்ததில்லை. ஆனால், 1990-க்குப் பிறகு, வியட்நாமின் காய்கறி உற்பத்தி அபரிமிதமாக அதிகரித்ததால், பாக்டீரிய வாடல் நோயின் தாக்கமும் அதிகரித்தது. தக்காளி மட்டுமன்றி, கத்திரிக்காய், மிளகாய் ஆகிய பயிர்களையும் தாக்க ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில், வியட்நாமில் ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் ஆரஞ்சு மற்றும் லோங்கான் (லிச்சி குடும்பத்தைச் சேர்ந்தது) போன்ற பழ மரங்களில் மட்டுமே பரவலாக இருந்தது.

எனவே, 1998-ம் ஆண்டு, வியட்நாம் வேளாண் விஞ்ஞானிகள் தைவானில் இருக்கும் சர்வதேச காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகத்தில் ஒருமாத காலம் தங்கி காய்கறிகளில் ஒட்டுக்கட்டும் தொழில் நுட்பத்தில் பயிற்சி எடுத்தனர். அதில் ‘நோ குவாங் வின்’ என்ற விஞ்ஞானியும் ஒருவர். பயிற்சி முடித்து வியட்நாம் திரும்பிய விஞ்ஞானி குவாங் வின், தெற்கு வியட்நாமின் ஹோசிமின் நகரிலும், மத்திய வியட்நாமின் மலைப்பகுதி மாநிலமான இலாம் டோங்கிலும், வியட்நாமுக்கு ஏற்ற பாக்டீரிய வாடல்நோய் எதிர்ப்புத்திறன் மிக்க கத்திரி ரகங்களைத் தேர்ந்தெடுக்கும் ஆய்வை முன்னெடுத்தார். இந்த இலாம் டோங் மாகாணம்தான் வியட்நாமின் தக்காளி உற்பத்தியில் முதன்மை மாநிலம். 2003-ம் ஆண்டு, இந்த மாநிலத்தில் 56 முன்னோடி விவசாயிகளுக்கும், 59 வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கும், முனைவர் வின் தக்காளியில் ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்தார். அதைத் தொடர்ந்து, அவர் 20 மாகாணங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை இத்தொழில்நுட்பத்தில் வல்லுநர் களாக்கினார்.

தக்காளித் தோட்டம்
தக்காளித் தோட்டம்

அப்படி ஆரம்பித்த தக்காளியில் ஒட்டுக் கட்டும் தொழில்நுட்பம், விஞ்ஞானி வின் எடுத்த சீரிய முயற்சியால் மளமளவென இலாம் டோங் மாகாணத்தில் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் விஞ்ஞானி வின், தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு எளிமையாகப் புரியும் வகையில் விளக்கக் கையேடுகள், துண்டுப் பிரசுரங்கள், காணொளிகளையும் வெளியிட்டார். அதன் விளைவாக, நான்கே ஆண்டுகளில் இலாம் டோங் மாகாணத்தில் மட்டும் 10,000 ஏக்கரில் ஒட்டுக்கட்டப்பட்ட தக்காளி பயிரிடப்பட்டது. அதே நேரத்தில், வடக்கு வியட்நாமில் இந்தத் தொழில்நுட்பம் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆராய்ச்சி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிறுவனம், செந்நதிப்படுகையின் ஹனோய் நகரிலும், வின் புக் மாகாணத்திலும், வடமேற்குப் பகுதியில் இருக்கும் மலை மாகாணமான சோன்லாவிலும் மூன்று உற்பத்தி நிறுவனங்களை அமைத்து ஆண்டொன்றுக்கு 20 லட்சம் ஒட்டுக்கட்டப்பட்ட தக்காளி நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. பல தனியார் நாற்றுப் பண்ணைகளும் ஒட்டுத் தக்காளி நாற்றுகளை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றன.

தக்காளிச் செடி
தக்காளிச் செடி

இன்றைய தேதியில் வடக்கு வியட்நாமின் செந்நதிப்படுகையில் உள்ள விவசாயிகள் பெருமழை பருவத்தில் மட்டும், ஒட்டுக்கட்டிய தக்காளி நாற்றுகளை உபயோகிக்கிறார்கள். காரணம் அந்தப் பருவத்தில்தான் பாக்டீரிய வாடல்நோய் தாக்குதல் மிக அதிகமாக இருக்கிறது. மற்ற பருவங்களில் ஒட்டுக்கட்டாத தக்காளி நாற்றுகளையே பயன்படுத்துகிறார்கள். நோய்த் தாக்குதல் அதிகம் இல்லை என்பது போக, ஒட்டுக்கட்டப்பட்ட தக்காளி நாற்றுகள் மூன்று மடங்கு விலை அதிகம் என்பதுவும் ஒரு காரணம். தேவையே இல்லாமல், ஏன் அதிகம் செலவழித்து ஒட்டுக்கட்டப்பட்ட நாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று, அதை உபயோகிப்பதில்லை. ஆனால், இலாம் டோங் மாகாணத்தில் ஆண்டு முழுவதும், முழுக்க முழுக்க ஒட்டுக்கட்டப்பட்ட தக்காளி நாற்றுகளே உபயோகிக்கப்படுகின்றன. உயர்ந்த மலைப்பகுதிகளைக் கொண்ட இம்மாகாணத்தில் காற்றின் ஈரப்பதம் எப்போதுமே அதிகளவில் இருக்கும். எனவே, பாக்டீரிய வாடல்நோயின் தீவிரம் ஆண்டு முழுவதும் இருக்கும் என்பதால், ஒட்டுக் கட்டப்பட்ட தக்காளி நாற்றுகள் மட்டுமே ஒரே தீர்வு.

ஒட்டுக்கட்டப்பட்ட தக்காளியில் அதிக மகசூலும் கிடைக்கிறது. இலாம் டோங் மாகாணத்தில் ஒரு ஏக்கரில் சராசரியாக 29 டன்னும், செந்நதிப்படுகையில் ஒரு ஏக்கரில் சராசரியாக 33 டன்னும் அறுவடை செய்கிறார்கள். ஆனால், ஒட்டுக்கட்டப்படாத தக்காளிகள், ஒருவேளை பாக்டீரிய வாடல்நோய் இல்லாமல் தப்பிப் பிழைத்தால், அதிகபட்சம் ஏக்கருக்கு 23 டன் வரையில் மட்டுமே மகசூல் கொடுக்கும். ஆனால், அப்படித் தப்பிப் பிழைப்பது அரிதிலும் அரிது. ஆக, ஒட்டுக்கட்டிய தக்காளியைப் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் மிக அதிகம். உதாரணத்துக்கு, இலாம் டோங் என்ற ஒற்றை மாகாணத்தில் மட்டுமே ஒட்டுத்தக்காளி தொழில்நுட்பம் அறிமுகமான 2002 முதல் 2012 வரையிலான பத்தாண்டுகளில், விவசாயிகள் அடைந்திருக்கும் லாபம் 292 கோடி ரூபாய் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இது வியட்நாம் விவசாயத்தில் மாபெரும் புரட்சி.

தக்காளித் தோட்டம்
தக்காளித் தோட்டம்

வெள்ளத்தை வென்ற தக்காளி

கம்போடியா, வியட்நாமின் அண்டை நாடு என்ற போதிலும், அங்கு ஒட்டுத்தக்காளி தொழில்நுட்பம் 2017-ம் ஆண்டுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே, வருடத்தில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் சுமார் ஆறுமாதக் காலத்துக்கு, தக்காளி மற்றும் இதர காய்கறிகளுக்கு வியட்நாம் நாட்டையே நம்பி இருக்கிறது. அந்த அதிசார்பு நிலையைக் குறைக்கும் பொருட்டு, 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒட்டுத்தக்காளி தொழில்நுட்பம் கடந்த நான்காண்டுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறிய அளவில் பரவிக் கொண்டிருக்கிறது. அதை அதிகரிக்க வேண்டி, கடந்த ஆண்டு முதல் ஒரு வேளாண் திட்டம் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கம்போடியா தலைநகர் ‘நோம் பென்’ நகருக்கு அருகில் கடந்த ஜூலை மாதம் ஒட்டுக்கட்டிய தக்காளி பயிரிடப்பட்டிருந்தது. நன்கு வளர்ந்த தக்காளிச் செடியில் காய்கள் குலுங்கிக் கொண்டிருந்த சூழலில், அக்டோபர் மாதம் பெருமழை ஆரம்பித்தது. அக்டோபர் 9-ம் தேதி ஆரம்பித்த மழை அடுத்த ஆறு நாள்களுக்குக் கொட்டித் தீர்த்தது. அந்த ஆறு நாள்களில், தக்காளி வயல் முழுவதும் வெள்ள நீரால் மூழ்கியிருந்தது. ஒட்டுக்கட்டப்படாத தக்காளிப் பாத்திகளில், பாதிக்கும் மேற்பட்ட செடிகள் வாடி மடிந்துவிட்டன. ஆனால், ஒட்டுக்கட்டிய தக்காளிச் செடிகள் அதே பொலிவுடன், கொஞ்சமும் வாடாமல் நின்றிருந்தன. ஆறுநாள்கள் கழிந்து, வெள்ளம் வடிந்த பின்னரும், ஒருசில வாரங்களுக்கு அந்தப் பாத்திகளிலிருந்து தக்காளி அறுவடை செய்யப்பட்டது. நாடு முழுதும் பரபரப்பான இந்தத் தொழில்நுட்பம், கம்போடியா தேசிய தொலைக்காட்சியில் தலைப்புச் செய்தியானது. அதைப் பின்வரும் காணொளியில் (https://youtu.be/GnOXrE1LQWc) நீங்களும் காணலாம்.

ஒட்டுக் கட்டுதல்
ஒட்டுக் கட்டுதல்

பாக்டீரியாவில் பல ரகங்கள்

ஆக, ஒட்டுத்தக்காளி தொழில்நுட்பம் பாக்டீரிய வாடல்நோய் மட்டுமன்றி, மழை வெள்ளத்தையும் தாங்கி வளரும் திறனைக் கொடுக்கிறது என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதோடு, மண்ணில் இருந்து தாக்கும் மற்ற பூஞ்சை நோய்கள் மற்றும் வேர்முடிச்சு நூற்புழுக்கள் ஆகியவற்றுக்கும் ஒட்டுத் தக்காளிகள் எதிர்ப்புத்திறனை அளிப்பதாக நிறைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒட்டுத்தக்காளி தொழில்நுட்பம் பலவித பிரச்னைகளுக்கும் ஒரு முக்கியத் தீர்வாக இருக்கிறது என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், இந்த இடத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.

இப்போது கோவிட்-19 வைரஸில் இங்கிலாந்தில் ஒரு புதிய வகை உருவாகி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் மற்றொரு வகை உருவாகி இருக்கிறது என்றெல்லாம் நாம் கேள்விப்படுகிறோம். அது எல்லாவித நோய்க்கிருமிகளுக்கும் பொருந்தும். தக்காளியைத் தாக்கும் வாடல் நோய்க்கான பாக்டீரியாவிலும், வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. ஒரே நாட்டுக்குள், உதாரணத்துக்கு இந்தியாவில், தென்னிந்தியாவில் ஒருவகையும், வட இந்தியாவில் மற்றொரு வகையும், வடகிழக்கு மாநிலங்களில் மூன்றாவது வகையும் இருக்கலாம்.

தக்காளித் தோட்டம்
தக்காளித் தோட்டம்
தக்காளித் தோட்டம்
தக்காளித் தோட்டம்

அந்த எல்லா வகை பாக்டீரியாவுக்கும், ஒரே கத்திரி ரகத்தில் எதிர்ப்புத்திறன் இல்லாமல் இருக்கும். எனவே, பாக்டீரிய வாடல்நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட கத்திரி ரகங்கள், நமது மாவட்டத்துக்கு, மாநிலத்துக்கு, நாட்டுக்கு ஏற்றதா என்ற ஆய்வை மேற்கொண்டு உறுதி செய்த பிறகே, அதை ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்துக்குப் பயன்படுத்த வேண்டும். அதை உள்ளூரில் இருக்கும் வேளாண் ஆய்வு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை காய்கறிகளில் ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்தைச் சொல்லிவந்தேன். இது சாதகமற்ற பருவத்திலும் ஒரு பயிரை உற்பத்தி செய்யத் துணைபுரிகிறது என்றும் சொன்னேன் அல்லவா? அதே போல வேறுசில நுட்பங்களும் பருவமில்லா பருவத்தில் பயிர் சாகுபடியைச் சாத்திய மாக்குகின்றன. அவற்றைப் பற்றி, அடுத்துவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

- வளரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism