Published:Updated:

நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளும் பாதுகாப்பு நுட்பங்களும்!

paddy
பிரீமியம் ஸ்டோரி
paddy

தொழில்நுட்பம்

நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளும் பாதுகாப்பு நுட்பங்களும்!

தொழில்நுட்பம்

Published:Updated:
paddy
பிரீமியம் ஸ்டோரி
paddy

லக அளவில் நெல் முக்கியமான உணவுப் பொருள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அத்தியாவசியமான உணவுப் பொருள். ஆனால், அதை உற்பத்தி செய்வதற்குள் விவசாயிகள் படும் சிரம் சொல்லி மாளாது. பூச்சி, நோய்த் தாக்குதலிலிருந்து பயிரைக் காப்பாற்ற பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றிலிருக்கும் நஞ்சு நெல்லில் படிந்து, அரிசி மூலமாக மனித உடலுக்குள் சென்றுவிடுகிறது. உணவுப் பொருள்களில் நஞ்சுகளைத் தவிர்க்க, தற்போது இயற்கைவழி வேளாண்மையைப் பல விவசாயிகள் முன்னெடுத்துவருகிறார்கள்.இந்த நிலையில், ``நெல் பயிரைத் தாக்கும் பூச்சி, நோய்களைப் பற்றி விவசாயிகள் முழுமையாகத் தெரிந்துகொண்டால், இயற்கைவழி வேளாண்மை மூலமே பயிர்களைக் காப்பாற்றி நல்ல மகசூல் பெறலாம்’’ என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள அதியமான் வேளாண்மைக் கல்லூரியின் பயிர் பூச்சியியல் துறை துணைப் பேராசிரியர் பவித்ரா தாரணி. அவர் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளும் பாதுகாப்பு நுட்பங்களும்!

``நெல் பயிரில் 5 சதவிகிதம் மகசூல் இழப்பு பூச்சிகளால் ஏற்படுகிறது. ஆனைக்கொம்பன் ஈ, இலைச் சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், இலைப்பேன், கூண்டுப்புழு, புகையான் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான பூச்சிகள். இவற்றில் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனைக்கொம்பன் ஈ

உருளை வடிவில் நீலம், சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களில் இலையின் அடிப்பகுதியில் இருக்கும். இவை தனித்தனியாகவும் கூட்டமாகவும் காணப்படும்.

சராசரியாக ஒரு பெண் பூச்சி 100 முதல் 200 முட்டைகள்வரை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழு, வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும். அதன் முன் பகுதி கூர்மையாக இருக்கும். புழுக்களின் நடமாட்டம் பெரும்பாலும் மொட்டுகளில்தான் இருக்கும். புழுக்கள் தங்களுடைய வாழும் இடத்தில் உருண்டை அல்லது முட்டை வடிவம்போல் உருவாக்கி, அதன் உட்புறத்தில் கூட்டுப்புழுப் பருவத்தை அடையும். புழுப்பருவம்தான் அதிக சேதங்களை ஏற்படுத்தும்.

paddy
paddy

அறிகுறிகள்:

நாற்றங்கால் முதல் பயிர் பூக்கும் நிலை அடையும் வரை இதன் தாக்குதல் இருக்கும். பெரும்பாலும் பயிரின் அடிப்பகுதியில்தான் தாக்குதல் இருக்கும். இதன் தாக்குதலுக்குள்ளான தூர்களில் உருண்டை வடிவில் முடிச்சு இருக்கும். இலை வெளித்தண்டு, வெங்காய இலைபோல இருக்கும். இந்தத் தூர்களிலிருந்து கதிர்கள் உருவாகாது. ஒருகட்டத்தில் இலைகள் சுருண்டுவிடும். இதன் கூட்டுப்புழுப் பருவம் முட்டை வடிவ உள்ளிடத்துக்குக் கீழே இருக்கும். சிறிது சிறிதாக அதன் மேற்பகுதியில் நகர்ந்து, அவசரக் காலம் வந்தால் அதன் கொம்புகளை வெளியே நீட்டி உணரும். இதன் அந்துப் பூச்சி, ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்.

பாதுகாப்பு முறைகள்:

எதிர்ப்புத் திறனுடைய ரகங்களைப் பயிரிட்டால் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தலாம். இந்தப் பூச்சியின் உணவாக அறுகம்புல், சாமை வகைப் பயிர்களை நெல் வயலிலும், வயலின் பக்கங்களிலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான சிலந்தி, தட்டான், ஊசித்தட்டான் போன்றவற்றையும், சிலந்திகளையும் வயலில் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். அவையே ஆனைக்கொம்பனைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பார்த்துக்கொள்ளும். நடவு வயலில் 10 நாள்கள் ஆனதும் பிளாட்டிகாஸ்டர் ஒரைசா என்ற புழு ஒட்டுண்ணியை 100 சதுர மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் வயலில் விட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலைச்சுருட்டுப் புழு

இது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில், முட்டை வடிவத்தில் இருக்கும். புழு 15 முதல் 20 மில்லிமீட்டர் நீளத்தில் பச்சை நிறத்தில் இருக்கும். ஒளி கசியும் தன்மைகொண்ட இது, மிக வேகமாகச் செயல்படும். புழுப் பருவத்தில்தான் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இலைகளை நீளவாக்கில் மடித்து உள்ளே சென்று, இலைகளின் திசுக்களை உண்ணும். இதனால் பாதிக்கப்பட்ட இலைகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் தாக்குதல் அதிகமானால் வயல் முழுவதும் காய்ந்ததுபோலக் காட்சியளிக்கும்.

ஆனைக்கொம்பன் ஈ,  இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான்
ஆனைக்கொம்பன் ஈ, இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான்

இலையைச் சுருட்டி உள்ளே போய் 10 நாள்களில் கூட்டுப்புழு பருவத்தை அடையும். அதன் பிறகு அந்துப்பூச்சியாக வெளியே வரும். பழுப்பு நிறத்தில் இறக்கைகளும், அதன் நடுவில் கறுப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகளும் இருக்கும். இறக்கைகளின் ஓரத்தில் கறுப்பு நிறத்தில் பட்டையான கோடு இருக்கும். இவை வயல்களில், இலைகளின் மேல் காணப்படும்.

பாதுகாப்பு முறைகள்:

இதன் தாக்குதல் மர நிழல்கள் மற்றும் வயல் ஓரங்களில்தான் முதலில் தோன்றும். அதன் பிறகுதான் வயல் முழுவதும் பரவும். எனவே நிழல் இருக்கும் இடங்களில் பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வரப்புகளிலுள்ள புற்களை நீக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவை பூச்சிகளைக் கவர்ந்து தாக்குதலுக்கு வழிவகுக்கும். தாக்குதல் இருந்தால், டிரைக்கோகிரம்மா சிலோனிஸ் போன்ற முட்டை ஒட்டுண்ணிகளை நடவு செய்த 37, 44 மற்றும் 51-ம் நாள் ஒரு ஹெக்டேருக்கு 2 சிசி என்ற அளவில் விட வேண்டும். நெல் வயலில் அளவுக்கு அதிகமாக யூரியாவைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி இட்டால் பயிரில் பச்சையம் உண்டாகி, இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இலைச்சுருட்டுப்புழு இலையைச் சுருட்டிக்கொண்டு அதனுள்ளிருந்து நெல் இலையின் பச்சையத்தைச் சுரண்டும். அந்தப் புழுவை இலையிலிருந்து கீழே இருக்கும் தண்ணீரில் விழச் செய்ய வேண்டும். அதற்கு, நீளமான கயிறு ஒன்றை வயலில் இருபக்க வரப்புகளில் (எ.கா: வடக்கு, தெற்கு) நின்றுகொண்டு நெல் பயிர்மீது கயிறு படுமாறு வைத்து எதிர்த் திசையில் (கிழக்கு அல்லது மேற்கு) கயிற்றை இழுக்க வேண்டும். அப்படிச் செய்தால் இலையில் இருக்கும் புழு நீரில் விழுந்து மூச்சுத் திணறி இறந்துவிடும்.

முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா சிலோனிஸ் முட்டைகளை (Tricho card) நடவு செய்த 37, 44 மற்றும் 51-ம் நாள் என ஒவ்வொரு முறையும் 5 சிசி (சுமார் 1 லட்சம் முட்டைகளுள்ள அட்டை) வயலில் விட வேண்டும். அந்துப் பூச்சிகள் இரவு நேரங்களில்தான் வயலுக்கு வரும். எனவே, ஒரு ஏக்கருக்கு இரண்டு விளக்குப்பொறி அமைக்கலாம். வயலில் இயற்கையாக இருக்கும் வேட்டைக்காரர்களான சிலந்தி, பொறிவண்டு, ஊசித்தட்டான் போன்றவற்றை அழிக்காமல் இருக்க வேண்டும். நெல் பயிரில் கதிர் வருவதற்கு முன்பாக ஒரு ஹெக்டேருக்கு 40-50 காய்ந்த மரக்கிளைகளை நட்டு வைக்கலாம். புழுவை உண்ணும் பறவைகள் அதில் அமர்ந்து இலைச்சுருட்டுப்புழுவை உண்ணும். கதிர் பருவத்தில் இருக்கும் நெல் வயலில் குச்சிகளை நடவு செய்யக் கூடாது.

ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தால் இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகமாகும்.

தண்டு துளைப்பான்

வெள்ளை நிறத்தில், நீள்வட்ட வடிவில், சிறிது தட்டையாக இருக்கும். முட்டைகள் கூட்டமாகவே காணப்படும். அதன்மேல் ரோமங்கள் தெரியும். இதன் புழு பார்ப்பதற்கு வெளிர் மஞ்சள் நிறத்தில், தலை பழுப்பு நிறத்தில் இருக்கும். புழுக்களின் தாக்குதல் மிக மோசமாக இருக்கும்.

அறிகுறிகள்:

வளரும் தண்டுகளின் நடுக்குருத்து காய்ந்துவிடும். முதிர்ந்த பயிரில் இருக்கும் தானியங்கள் காய்ந்துவிடும். பிறகு தானியங்கள் தட்டையாகி, வெண்கதிர் ஆகிவிடும்.

கூட்டுப்புழுப் பருவம் இலைகளின் உள்ளே இருக்கும். ஆண் அந்துப்பூச்சியின் இறக்கையின் முன்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் கறுப்புப் புள்ளிகள் இருக்காது. பெண் அந்துப்பூச்சியின் இறக்கையின் முன்பகுதி பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் கறுப்பு நிறப்புள்ளிகள் இருக்கும்.

பாதுகாப்பு முறைகள்:

நாற்றங்காலில் இருக்கும் நாற்றுகளின் நுனிப்பகுதியில் இதன் முட்டைகள் காணப்படும். நடவுக்கு முன்பாக, நாற்று நுனியைக் கிள்ளி நடவு செய்ய வேண்டும். நடவு செய்து ஒரு மாதம் ஆன வயலில் டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் முட்டை ஒட்டுண்ணி அட்டையை 5 சிசி வாரம் ஒரு முறை வயலில் கட்ட வேண்டும். பேசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸ் வார் குர்ஸ்டாகி என்ற உயிரியை ஒரு ஹெக்டேருக்கு 2.5 கிலோ இட வேண்டும். இதனால் தண்டு துளைப்பான் முட்டை இடுவது குறையும். வேப்பங்கொட்டைக் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி, அத்துடன் பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் கலந்து பயன்படுத்தலாம்.

இலைப்பேன் இளம்பூச்சி, கூண்டுப்புழு, புகையான்
இலைப்பேன் இளம்பூச்சி, கூண்டுப்புழு, புகையான்

இலைப்பேன்

பார்ப்பதற்கு வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். முட்டைகள், இலைத் திசுக்களின் உட்புறத்தில் இருக்கும். புழுக்கள் இளம் இலைகளில் வாழும். கறுப்பு நிறத்தில் கால்கள், தலை, உணர் கொம்புகள் இருக்கும். உடல் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். புழுவின் தாக்குதல் நாற்றங்கால் முதல் நடவு வயல் வரை தொடரும்.

அறிகுறிகள்:

புழுக்களும், அதன் முதிர்ந்த பூச்சிகளும் சாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இளம் நாற்றுகளில் மஞ்சள், வெள்ளை நிறத்தில் வரிகள் தெரியும். இலைகளின் நுனி சுருண்டு காய்ந்துவிடும். நெல் மணிகள் வீணாகி, வளர்ச்சியைப் பாதியில் நிறுத்திவிடும். கூட்டுப்புழுப் பருவம் இலைகளின் உள்ளே வசதியாக வாழும். இந்தப் பூச்சியின் கூட்டுப்புழுப் பருவத்திலேயே அதன் இறக்கைகள், பிற வளர்ச்சிகள் எல்லாம் நன்கு தெரியும். இலைப்பேனின் முதிர் பூச்சிகள் பார்ப்பதற்குக் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். பெண் பூச்சிகளைவிட ஆண் பூச்சிகள் சிறியதாக இருக்கும்.

பாதுகாக்கும் முறை:

நடவு செய்தவுடன் பயிர் மூழ்க, நீர்க் கட்ட வேண்டும். நாற்றுகளின் மேல் தண்ணீரில் நன்றாக நனைத்த ஈரத்துணியை வைத்து இழுக்க வேண்டும். அப்படிச் செய்தால் இலையில் ஒட்டியுள்ள இலைப்பேனை அகற்றிவிடலாம். வண்டுகள், இலைப்பேனைக் கொன்று உண்ணும் கொன்றுண்ணிகள், நாவாய்ப் பூச்சிகள் மூலம் இயற்கையாகவே இலைப்பேனை அழித்துவிடலாம். வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் தெளித்து 48 மணி நேரத்துக்குள் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம். இரண்டு நாள்களுக்கு, பயிரைத் தண்ணீரில் மூழ்கிய நிலையில் வைத்தால் கட்டுப்படுத்தலாம்.

‘‘நெல் பயிரில் 5 சதவிகிதம் மகசூல் இழப்பு பூச்சிகளால் ஏற்படுகிறது. ஆனைக்கொம்பன் ஈ, இலைச் சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், இலைப்பேன், கூண்டுப்புழு, புகையான் ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான பூச்சிகள்.

கூண்டுப்புழு

நீரில் மிதந்துகொண்டிருக்கும். இலையின் அடிப்பகுதியில் முட்டைகள் இருக்கும். இதன் முட்டைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில், மென்மையாக இருக்கும். புழுக்கள் ஒளி கசிந்த நிலையில், வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும். தலை ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கூண்டுப்புழு தண்ணீர் இன்றியும் சிறிது காலம் வாழும். குழல் வடிவ கூடுகள் அமைத்து அதில் வாழும். கூடுகள் இலைகளில் தொங்கும் வடிவில் இருக்கும். புழுக்களின் தாக்குதல் சற்று அதிகமாகவே இருக்கும்.

அறிகுறிகள்:

புழுக்கள் பச்சைத் திசுக்களை உண்டு, குழல் வடிவக் கூண்டுகள் அமைத்து தண்ணீரில் மிதக்கும். திசுக்களைச் சுரண்டி உண்பதால் இலைகள் வெள்ளைநிறக் காகிதம்போல் இருக்கும். தாக்குதல் அதிகமானால் செடி முழுவதும் வளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும். அந்துப்பூச்சி, வெள்ளை நிறத்தில் இருக்கும். உடலில் கறுப்பு நிறத்தில் புள்ளிகள், பழுப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகள் இருக்கும்.

பாதுகாப்பு முறைகள்:

புழுக்களைக் கீழே தண்ணீரில் விழவைக்க, ஏற்கெனவே செய்தது போலக் கயிறு போட்டு இழுக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்க வேண்டும். புழு ஒட்டுண்ணியான பிரக்கோன் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

புகையான்

பெண் பூச்சிகள் பயிரின் அடிப்பகுதியில், இலைத்தாளின் அடியில் முட்டையிடும். முட்டைகள் வெள்ளை நிறத்தில் ஒளி கசிந்த நிலையில் இருக்கும். இளம் புகையான் பூச்சிகள் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். வளர்ச்சி அடைந்தவுடன் நீல நிறத்தில் காணப்படும். அந்துப்பூச்சிகள் 5 மி.மீ நீளத்துடன், மஞ்சள், பழுப்பு நிறத்தில் இருக்கும். சில சமயம் அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கைகள் நிறமின்றி மங்கிய நிலையில் இருக்கும். இதில் சிற்றிறக்கைகள் இருக்கும்.

‘‘முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா சிலோனிஸ் அட்டைகளை நடவு செய்த 37, 44 மற்றும் 51-ம் நாள் என ஒவ்வொரு முறையும் 5 சிசி வயலில் விட்டும் பூச்சிக்களைக் கட்டுப்படுத்தலாம்.’’

அறிகுறிகள்:

புகையான் தாக்கிய பயிர்கள் அனைத்தும் காய்ந்து, தீயில் எரிந்ததுபோல் இருக்கும். தீய்ந்துபோன பயிர்கள் வட்ட வடிவில் அங்குமிங்குமாகக் காட்சியளிக்கும். காய்ந்த குட்டை நோயைப் பரப்பும் காரணியாகப் புகையான் செயல்படும்.

பாதுகாப்பு முறை:

புகையான் தாக்கத் தொடங்கியவுடன் மூன்று நான்கு நாள்களுக்கு வயலில் நீரை வடிகட்ட வேண்டும். நாற்றுகளை நெருக்கமாக நடவு செய்வதைத் தவிர்த்துவிட்டு 30 செ.மீ இடைவெளியில் நடவு செய்தால் தாக்குதலைக் குறைக்கலாம். காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்ய வேண்டும். அதிக அளவில் தழைச்சத்து அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். எதிர்ப்பு ரகங்களைப் (கோ.42) பயன்படுத்தினால் புகையானைக் கட்டுப்படுத்தலாம். ஒரு ஹெக்டேருக்கு 15 லிட்டர் தண்ணீரில் 450 மி.லி வேப்பெண்ணெய் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இயற்கை எதிரியான நாவாய்ப்பூச்சியை அந்துப்பூச்சிப் பருவத்தில் 200-250 என்ற எண்ணிக்கையில் 10 நாள்கள் இடைவெளியில் வயலில் விட வேண்டும். இது புகையான் முட்டை மற்றும் இளம் புகையானை உண்ணும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism