நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

சமையலறை கழிவுகளிலிருந்து எரிவாயு, மின்சாரம், உரம்... அசத்தும் சக்திசுரபி!

சக்திசுரபி கலனுடன் ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
சக்திசுரபி கலனுடன் ராமகிருஷ்ணன்

ஆற்றல்

ரிவாயு விலை உயர்வு, அடிக்கடி தடைப்படும் மின்சாரம் ஒரு பக்கம், தினம்தோறும் டன் கணக்கில் குவியும் கழிவுகள் இன்னொரு பக்கம். இவை இரண்டுக்கும் தீர்வாக இருக்கிறது கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திர இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், (நார்டெப்) வடிவமைத்துள்ள ‘சக்தி சுரபி’ என்ற எரிவாயுக்கலன்.

சமையலறைக் கழிவுகள்மூலம் எரிவாயு தயாரிப்பது குறித்துக் கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினோம். ‘‘உயிரியல் எரிவாயு தொழில்நுட்பத்தை மக்களிடையே பரப்புறதுல பல தடைகள் இருக்கு. உதாரணமா நிறைய மாட்டுச்சாணம் தேவைப்படும். அதுவும் ஒரு தடைதான். பெரும்பாலான சிறு விவசாயிகளிடம்கூட எரிவாயுக் கலன்ல போடுற அளவுக்குச் சாணம் கிடைக்கிறதில்ல. ஆனா, எல்லா வீடுகளிலும் சமையலறைக் கழிவுகள் அதிகமாகத் தேக்கமாகுது.

அந்தக் கழிவுகளைக் கையாள்றது சவாலா இருக்கு. உற்பத்தியைவிட கழிவுகளை மேலாண்மை செய்றதுதான் கஷ்டமான வேலை. நாங்க அந்தக் கழிவுகளை மீத்தேன் எரிவாயுவா மாத்துறோம். ஏற்கெனவே பயன்பாட்டுல இருந்த சாண எரிவாயுக் கலனோட மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இந்த ‘சக்தி சுரபி.’ இதுமூலம் சமையலறை காய்கறிக் கழிவுகளை எரிவாயுவா மாத்துற தோடு, அந்தக் கழிவுகளைச் செடிகளுக்கு உரமாகவும் மாத்தலாம்’’ என்றவர், சக்திசுரபி கலனைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘கழிவுகளை உள்ளே போட குழாய், செரிப்பான், வாயுக் கொள்கலன், உரம் வெளிவர்ற கழிவுப்பாதை இதையெல்லாம் உள்ளடக்கியதுதான் ‘சக்திசுரபி கலன்’. ஒரு கன மீட்டர் வாயுவை உற்பத்தி செய்றதுக்கான கலன் அமைக்க 25,500 ரூபாய் செலவாகுது. இதில், நிலைத்த கலன் அமைக்க மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித்துறை 8,000 ரூபாய் மானியம் கொடுக்குது. நாலு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு இந்தக் கலன் போதும். ஒரு கன மீட்டர் முதல் 100 கன மீட்டர் வரை வாயு உற்பத்தியாகும் அளவுக் குக்கூட இதைப் பெருசா வடிவமைக்கலாம்.

சக்தி சுரபி கலன்
சக்தி சுரபி கலன்

பெரிய உணவு விடுதிகள், பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள், காப்பகங்கள் மாதிரி யான இடங்கள்ல இதை அமைச்சிருக்காங்க. இதே எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம்’’ என்றவர், அதைப் பற்றி விளக்கினார்.

மின்சார உற்பத்தி

‘‘மின்சார உற்பத்திக்கான டீசல் ஜெனரேட்டர்ல ஒரு சில மாற்றங்களைச் செய்றது மூலமா இந்த வாயுவைப் பயன்படுத்தி அதை இயக்க முடியும். அது மூலமா மின்சாரம் கிடைச்சிடும். சாண எரிவாயு, சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிப்பு மாதிரியான மாற்று எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு மானியம் கொடுக்குது. அதேபோலக் கர்நாடகா, கேரளா மாநில அரசுகளும் மானியம் கொடுத்து மாற்று எரிசக்தியை ஊக்குவிக்குறாங்க. ஆனா, தமிழ்நாட்டுல இதுக்கு மானியம் கிடையாது. அப்படி மானியம் கிடைச்சா நிறைய பேர் மாற்று எரிசக்தி உற்பத்திக்கு மாறுவாங்க” என்றார்.

தொடர்புக்கு:

இயக்குநர்,

விவேகானந்தா கேந்திரம் (நார்டெப்)

இயற்கை வள அபிவிருத்தி திட்டம்,

விவேகானந்தபுரம்,

கன்னியாகுமரி.

தொலைபேசி: 04652 246296, 298294

சமையலறைக் கழிவுகளில் எதையெல்லாம் பயன்படுத்தலாம்?

பழைய சாதம், பருப்பு, குழம்பு, கூட்டு போன்ற அவித்த கழிவுகளைப் போடலாம். மீன், கோழி, ஆடு போன்ற மாமிசக் கழிவுகள், நறுக்கிய காய்கறிக் கழிவுகள், பழக்கழிவுகள், கோதுமை, அரிசி தானியக் கழிவுகள், கிழங்கு, பயறு, சோளக் கழிவுகள், உபயோகித்த டீத்தூள், காபித்தூள் கழிவுகள், சாதம் வடித்த கஞ்சி, அரிசி, காய்கறிகள் சுத்தம் செய்த தண்ணீர் ஆகியவற்றைப் போடலாம். அவித்த கழிவுகள், மாவுச்சத்து, மாமிசக் கழிவுகளில் அதிக கொழுப்புத்தன்மை இருப்பதால் விரைவாக நொதித்தல் தன்மை ஏற்பட்டு மீத்தேன் உற்பத்தி அதிகமாக இருக்கும். ஆனால், காய்கறிக் கழிவில் நொதித்தல் தன்மை உருவாக ஓரிரு நாள்கள் ஆகும் என்பதால், அவற்றைக் கையால் நசுக்கி உள்ளே போட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

அதிக புளிப்புத் தன்மை மற்றும் அதிக காரத்தன்மை உடைய கழிவுகளைப் போடக் கூடாது. முருங்கைக்காய் போன்ற சக்கைப் பொருள்களைப் போடக்கூடாது. அவை மட்காது. கழிவு வெளியேறும் குழாயின் ஓடுபாதையை அடைத்துவிடும். அத்துடன் செரிப்பானின் மேல்பகுதியில் ஆடைபோல் படிந்து வாயு உற்பத்தியைப் பாதிப்படையச் செய்யும்.

 மாடுகள்
மாடுகள்
Vijay.T

இரண்டு மாடுகள் இருந்தால் போதும்

மாட்டுச் சாணத்தின் மூலம் எரிவாயு தயாரிப்பது, வீட்டில் மாடு இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஒரு கன மீட்டர் சாண எரிவாயுக் கலன் அமைக்க 30,000 ரூபாய் செலவாகிறது. மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித்துறை, நிலைத்த ஒரு கன மீட்டர் கலன் அமைக்க 8,000 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதில், தீன பந்து, காதிகிராம தொழில் ஆணைய மாதிரி (கே.வி.ஐ.சி) என இரண்டு வகைகள் உள்ளன. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு இரண்டு மாடுகளின் மூலமாகக் கிடைக்கும் சாணமே போதுமானது. இந்தக் கலனின் அமைப்பு முறைகள் அனைத்தும் சக்திசுரபி கலனைப் போலத்தான்.

பூத்துக் குலுங்கும் பூக்கள்… திரட்சியான பழங்கள்!

சக்திசுரபி கலன்மூலம் சமையலறை எரிவாயு உற்பத்தி செய்து பயன்படுத்தி வரும் கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணியிடம் பேசினோம். “மாற்று எரிசக்திக்கான வழிமுறையா சமையலறைக் கழிவுகள்ல இருந்து சக்திசுரபி கலன்மூலம் எரிவாயு தயாரிக்கலாம்ங்கிற தகவலைக் கேள்விப்பட்டுக் கேந்திரத்துல நடந்த ஒருநாள் பயிற்சியில கலந்துகிட்டேன். வீட்ல மீதமாகுற உணவுகள், காய்கறிக்கழிவுகள் மூலமா எரிவாயு தயாரிச்சு பயன்படுத்துற முறை எனக்கு ரொம்பப் பிடிச்சது. பயிற்சி எடுத்த ஒரு வாரத்துலயே எங்க வீட்டுக்குப் பின்னால சக்திசுரபி கலனை அமைச்சோம். 2007-ல இருந்து இப்போ வரைக்கும் அந்தக் கலன்ல உற்பத்தியாகுற வாயுவைச் சமையலுக்குத் தினமும் பயன்படுத்திட்டு வர்றேன். தினமும் ஒரு மணிநேரம் வரைக்கும் பயன்படுத்துற அளவு எரிவாயு கிடைக்குது. கூடுதல் தேவைக்கு சிலிண்டரை பயன்படுத்துறேன். வருஷத்துக்கு அதிகபட்சமா 3 சிலிண்டர்தான் பயன்படுத்துறோம்.

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

இதுல, கிடைக்குற சிலெரி கழிவைத் தனியா ஒரு தொட்டியில சேகரிச்சு வச்சுருக்கேன். தோட்டத்துல உள்ள வாழை மரங்கள், தென்னை, மா, கொய்யா, மாதுளை, ரோஜா, செம்பருத்தின்னு எல்லாத்துக்கும் 15 வாரங்களுக்கு ஒரு தடவை ஒரு மரத்துக்கு, 3 கப் தண்ணியில ஒரு கப் சிலெரி கலந்து விடுறேன். இந்தக் கழிவைப் பக்கத்து வீடுகளுக்கும் உரத்துக்காகக் கொடுக்குறேன். பூக்குற பூவும், காயும் திரட்சியா இருக்கு. வாழைப்பழத்தோட சுவை கூடுதலா இருக்கு. என்னைப் பார்த்து 22 பேர் அவங்களோட வீடுகள்ல இந்தக் கலனை அமைச்சிருக்காங்க. சிலர், அவரவர் வீட்டுத் தேவைக்குப் போக ஒரு லிட்டர் சிலெரியை பத்து ரூபாய்னு வித்து உபரி வருமானமும் பார்க்குறாங்க. வீட்டுக்கு ஒரு கலன் இருந்தா, கேஸ் எப்ப வரும்னு காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்ல. கேஸ் எப்போ தீரும் என்கிற கவலையும் இருக்காது” என்றார்.

வாயுவை உற்பத்தி செய்யும் முறைகள்

சக்தி சுரபி கலனில் ஒரு கன மீட்டர் வாயுவை உற்பத்தி செய்யும் முறை குறித்து ராமகிருஷ்ணன் கூறிய தகவல்கள் இங்கே பாடமாக...

சக்திசுரபி கலனுடன் ராமகிருஷ்ணன்
சக்திசுரபி கலனுடன் ராமகிருஷ்ணன்

சக்தி சுரபிக் கலன் பொருத்தப்பட்ட முதல் நாள் மட்டும் அதில், மாட்டுச்சாணம் போட வேண்டும். 30 நாள்கள் பழையதான மாட்டுச்சாணத்தைப் பயன்படுத்துவது நல்லது. சாணமும் தண்ணீரும் சம விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது, ஒரு கன மீட்டர் வாயுவை உற்பத்தி செய்யும் கலனில் 250 கிலோ சாணம், 250 லிட்டர் தண்ணீர் இருக்க வேண்டும். கலக்கும்போது சாணத்தில் உள்ள வைக்கோல் உள்ளிட்ட தேவையற்ற பொருள்களை எடுத்துவிட வேண்டும். பிறகு, சாணக்கரைசலை செரிப்பானுக்குள் ஊற்ற வேண்டும்.

சாணத்தில் உள்ள ‘மெத்தனோ பாக்டீரியம்’ நார்ச்சத்துகள் மிகுந்த பொருள்களிலிருந்து மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்வதற்கு உதவி செய்கிறது. முதல் முறை மட்டுமே மாட்டுச்சாணம் தேவை. அதற்குப் பிறகு, 5 கிலோ சமையலறைக் கழிவுகளைப் போட்டு டிரம்மால் மூடிவிட வேண்டும். தினமும் 5 கிலோ சமையலறைக் கழிவுகளைப் போட வேண்டும். ஓரிரு நாள்களில் எரிவாயு உற்பத்தி தொடங்கிவிடும்.

முதல் 4 நாள்களில் உற்பத்தியாகும் எரிவாயுவில் சற்றே துர்நாற்றம் இருக்கும். அதனால் அதை அப்படியே வெளியேற்றி விட வேண்டும். இந்த வாயு தீப்பற்றாது. 5-ம் நாளிலிருந்து ஒரு வாரம்வரை கழிவுகள் எதையும் போடாமலே எரிவாயுவை எரிய விட வேண்டும். பிறகு, சாதாரணமாக வீட்டில் மிச்சமாகும் காய்கறி மற்றும் உணவுக்கழிவுகளைக் கலனில் போடலாம்.

ஒரு கனமீட்டர் வாயுக்கலனைப் பொறுத்தவரை தினமும் 5 கிலோ சமையலறைக் கழிவுகள் தேவைப்படும். கலனிலிருந்து உற்பத்தியாகும் எரிவாயுவைச் சமையலறையில் உள்ள அடுப்பில் இணைத்துப் பயன்படுத்தலாம். ஒரு கன மீட்டர் சக்தி சுரபி எரிவாயு, 430 கிராம் எல்.பி.ஜி-க்குச் சமம். வீட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இக்கலனை வைக்கலாம்.

கலனில் உள்ள கழிவு வெளிப்போக்குக் குழாய் வழியே வரும் சிலரியைச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஊட்டச்சத்து மிகுந்தது. இது எந்த மண்ணாக இருந்தாலும் அதைக் கரிமச்சத்துக் கொண்டதாக மாற்றிவிடும் தன்மை கொண்டது.