நாட்டு நடப்பு
Published:Updated:

செலவு குறைவு... வரவு அதிகம் பயிர்களைப் பாதுகாக்கும் நன்மை செய்யும் பூச்சிகள்...

பூச்சிகளுடன் ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
பூச்சிகளுடன் ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரியில் ஒரு பூச்சி மனிதர்!

பூச்சி மேலாண்மை

விவசாயத்தில் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாகத் திகழ்வது பூச்சித்தாக்குதல். பயிர்களுக்குத் தீமை செய்யக்கூடிய சைவ பூச்சிகளை, அசைவ பூச்சிகள் மூலம் அழிக்க முடியும் என்கிறார்கள் வேளாண்மைத் துறையில் பணியாற்றும் பூச்சியியல் நிபுணர்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்நிலையில்தான் கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன், பயிர்களுக்கு நன்மை செய்யக்கூடிய பூச்சிகளை உற்பத்தி செய்து, இயற்கை விவசாயிகளிடம் விற்பனை செய்து வருகிறார். அடிப்படையில் இவரும் ஒரு விவசாயி, 8 ஏக்கரில் அலங்காரச் செடிகள் உற்பத்தி செய்து வரும் இவர், இளங்கலை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிப்டாஸ் பயோ சொல்யூஷன் என்ற பெயரில் இவர் நடத்தி வரும் பூச்சிகள் உற்பத்தி நிலையத்தைப் பார்வையிடச் சென்றோம். நம்மை வரவேற்ற ராமகிருஷ்ணன் இந்நிலையத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். வாசலில் அடுத்தடுத்த நிலையில் இரண்டு அடுக்குகளாகக் கதவுகள் அமைக்கப் பட்டுள்ளன. முதலில் உள்ள கதவைத் திறந்து உள்ளே சென்று அதை உள்புறமாகப் பூட்டிய பிறகு, அதற்கு அடுத்துள்ள கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றோம். இங்கு வளர்க்கப்படும் பூச்சிகள் வெளியே பறக்காமல் பாதுகாக்கவும், வெளியிலிருந்து ஏதேனும் பூச்சிகள், இதன் உள்ளே வந்து இங்குள்ள பூச்சிகளைத் தொந்தரவுகள் செய்யாமல் தடுப்பதற்காகவும், இந்த இரண்டு அடுக்குக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பூச்சிகளுடன் ராமகிருஷ்ணன்
பூச்சிகளுடன் ராமகிருஷ்ணன்

ஒரு வீட்டைதான் பூச்சிகள் உற்பத்தி நிலையமாக மாற்றியுள்ளார் ராமகிருஷ்ணன். இந்த வீட்டின் ஜன்னல், கதவுகள் என அனைத்து பகுதிகளிலும் வலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த வீட்டின் அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் டப்பாக்களில் பூச்சிகள் வளர்க்கப்படுகின்றன.

நம்மிடம் பேசிய ராமகிருஷ்ணன், “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளிப்படிப்பு முடிச்சதும் பெரியகுளத்துல உள்ள தோட்டக்கலை கல்லூரியில, இளநிலை தோட்டக்கலைப் பட்டப்படிப்பு முடிச்சிட்டு, 8 ஏக்கர் பரப்புல அலங்காரச் செடிகள் உற்பத்தி செய்ய ஆரம்பிச்சேன். நான் உற்பத்தி செஞ்ச செடிகள்ல பூச்சித்தாக்குதல் அதிகமா இருந்துச்சு. நிறைய பூச்சிக்கொல்லி தெளிச்சுப் பார்த்தேன். அதுக்கு ஏகப்பட்ட செலவுகள் செஞ்சேன். ஆனாலும், அதைக் கட்டுப்படுத்தவே முடியலை. இதுக்கு என்ன தான் தீர்வுனு தீவிர தேடுதல்ல இறங்கினப்ப தான், தாவரங்களைச் சாப்பிடக்கூடிய சைவ பூச்சிகளை, அசைவ பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்னு தெரிய வந்துச்சு. கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் மூலமா, நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைச்சு, என்னோட தோட்டத்துல விட்டேன். நல்ல பலன் கிடைச்சது.

பூச்சி வளர்ப்பு
பூச்சி வளர்ப்பு

அப்பதான், நன்மை செய்யும் பூச்சிகளை நாமே உற்பத்தி செஞ்சு விற்பனை செய்யலாம்கிற யோசனை வந்து இதுக்கான பயிற்சிகள்ல கலந்துகிட்டேன். ஹைதராபாத்ல உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளான்ட் ஹெல்த் மேனேஜ்மென்ட் (என்.ஐ. பி.ஹெச்.எம்) நிறுவனம், நன்மை செய்யும் பூச்சிகள் வளர்க்க, விவசாயிகளுக்கு இலவச பயிற்சி கொடுக்குறாங்க. அங்க போயி பத்து நாள்கள் பயிற்சி எடுத்தேன். பெங்களூர்ல என்.பி.ஏ.ஐ.ஆர் (National Bureau of Agricultural Insect Resources) என்ற நிறுவனம் செயல் படுது. இந்தியாவுல பல்வேறு பகுதிகள்ல உள்ள நன்மை செய்யும் பூச்சிகளைச் சேகரிச்சு, இனப்பெருக்கம் செய்ய வைக்கு றாங்க. இந்தியாவுல பல மாநிலங்கள்லயும் உள்ள வேளாண்மைத் துறைக்கு நன்மை செய்யும் பூச்சிகளோட முட்டைகள், புழுக்கள் விநியோகம் செய்றாங்க. விவசாயிகளும் வாங்கிக்கலாம். என்.பி.ஏ.ஐ.ஆர் நிறுவனத் துக்கு நாம பணம் அனுப்பினா, அவங்க அதைக் கூரியர்ல அனுப்பிடுவாங்க. அதை நாம தனியா வச்சு பெருக்கம் அடைய செய்யலாம். நேரடியா விவசாய நிலத்துலயும் விடலாம்.

பூச்சி அட்டைகள்
பூச்சி அட்டைகள்

‘‘அரிசி, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள்ல வரக்கூடிய அந்துப் பூச்சி களோட (கார்சிரா) முட்டைகளை உணவாகக் கொடுத்துதான், நன்மை செய்யும் பூச்சிகளை இங்க வளர்த்துக்கிட்டு இருக்கோம்.

தானியங்களைப் பதப்படுத்தி, டப்பாக்கள்ல நிரப்பிவிடுவோம். அதுல அந்துப் பூச்சி களோட முட்டைகளைப் போட்டுவைப்போம். அதுல இருந்து வரக்கூடிய புழுக்கள் தானியத்தைச் சாப்பிட்டு, அடுத்த சில வாரங்கள்ல முதிர்ந்த பூச்சிகளாக வளரும். அந்தப் பூச்சிகளைக் குழாய் மூலம் புடிச்சு, வேறொரு டப்பாவுல போடுவோம். அந்த டப்பாவோட அடிப்பாகத்துல வலை அமைச் சிருப்போம். தேனை பஞ்சுல நனைச்சு, அந்த டப்பாவுல போடுவோம். முதிர்ச்சி அடைஞ்ச அந்துப் பூச்சிகளுக்கு அதுதான் உணவு. ஆண் அந்துப்பூச்சிகளுக்கும் பெண் அந்துப் பூச்சிகளுக்கும் இடையில இனச்சேர்க்கை நடக்கும். அடுத்த ரெண்டு நாள்கள்ல தாய் அந்துப்பூச்சிகள் நிறைய முட்டைகளை இட்டுவிட்டு, அடுத்த ரெண்டு மூணு நாள்ல செத்துவிடும். அதோட முட்டைகள் வலையில உள்ள துளைகள் வழியா கீழ வந்து விழும். அதைத் தனியாகச் சேகரிப்போம்.

பூச்சி வளர்ப்பு
பூச்சி வளர்ப்பு

அந்த முட்டைகளை ஒரு டப்பாவுல போட்டு, அதுல நன்மை செய்யும் பூச்சிகளை விடுவோம். அந்தப் பூச்சிகள் இடக்கூடிய முட்டைகள்ல இருந்து புழுக்கள் வெளியில வரும்.

அந்தப் புழுக்கள், அந்துப்பூச்சி களோட முட்டைகள் சாப்பிட்டு வளர்ந்து, அடுத்த சில நாள்கள்ல கூட்டுப்புழுக்களாகவும், முதிர்ந்த பூச்சிகளாகவும் வளர்ச்சி அடையும். எங்களோட தேவைக்கு ஏற்ப, முட்டை களாவும், புழுக்களாவும், கூட்டுப் புழுக் களாவும். முதிர்ச்சி பூச்சிகளாகவும் பல்வேறு நிலைகள்ல எடுத்து மறு உற்பத்திக்கும் விற்பனைக்கும் பயன் படுத்திக்குவோம்’’ என்று சொன்னவர், இங்கு உற்பத்தி செய்யப்படும் நன்மை செய்யும் பூச்சிகளின் வகைகளைப் பட்டியலிட்டார்.

‘‘நன்மை செய்யும் பூச்சிகள் முற்றிலும் அழிக்கப்படுவதால், ஒரு கட்டத்துக்கு மேல் கெடுதல் செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.’’

டிரைக்கோகிரம்மா (Trychogramma), கிரைசோபெர்லா கார்னியா (chrysoperla), பிரக்கான் (bracon), இ.பி.என் (EPN- Entomo pathogenic nematode) உள்பட இன்னும் சில வகையான பூச்சி களை உற்பத்தி பண்ணிகிட்டு இருக் கோம். டிரைக்கோகிரம்மா முட்டை களை ஓர் அட்டையில ஒட்டி விற்பனை செய்றோம். ஓர் அட்டையில 15,000 - 20,000 முட்டைகள் இருக்கும். ஓர் அட்டை 50 ரூபாய்னு விற்பனை செய்றேன். நெல், காய்கறி, கரும்பு பயிர்களுக்கு இதைக் கட்டிவிடலாம். ஒரு ஏக்கருக்கு 10 அட்டைகள் கட்டிவிட்டாலே போதும்.

பூச்சி வளர்ப்பு
பூச்சி வளர்ப்பு

இதுல வரக்கூடிய பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளோட முட்டைகளை அழிச்சிடும். கிரைசோ பெர்லா கார்னியா முட்டைகளையும் அட்டையில ஒட்டிதான் விற்பனை செய்றோம். ஓர் அட்டை யில 1,000 முட்டைகள் இருக்கும். ஓர் அட்டையோட விலை 750 ரூபாய். இதைப் பழத் தோட்டங்கள்ல தேவைக்கேற்ப கட்டிவிடலாம். இந்த முட்டைகள்ல இருந்து வரக்கூடிய பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளை அழிச்சிடும்.

பிரக்கான் பூச்சிகளைக் கூட்டுப்புழு நிலையில விற்பனை செய்றேன். ஒரு கூட்டுப்புழுவோட விலை 1 ரூபாய் 25 பைசா. தென்னை, காய்கறிகள், பழப் பயிர்கள் உள்ள தோட்டங்கள்ல இந்தப் புழுக்களை விட்டோம்னா, தீமை செய்யும் பூச்சிகளை அழிச்சிடும். தீமை செய்யும் பூச்சிகளோட நடமாட்டத்தைப் பொறுத்து, பிரக்கான் கூட்டுப் புழுக்களோட எண்ணிக்கை யைத் தீர்மானிச்சிக்கலாம். இ.பி.என் பூச்சிகளையும் புழுக்கள் நிலையிலதான் விற்பனை செய்றேன். ஒவ்வொரு புழுவோட உடல்லயும் ஏராளமான நூற்புழுக்கள் நிறைஞ்சு இருக்கும். வாழை, காய்கறிப் பயிர்கள்ல இ.பி.என் புழுக்களை விட்டோம்னா, அதோட உடல்ல இருந்து நூற்புழுக்கள் வெளியாகி, தீமை செய்யும் பூச்சிகளோட புழுக்களை அழிச்சிடும். இ.பி.என் புழுவோட விலை 3 ரூபாய். ஒரு ஏக்கருக்கு சுமார் 1,500 புழுக்கள் விடலாம். தீமை செய்யும் பூச்சிகளோட நடமாட்டத்தைப் பொறுத்து, இ.பி.என் புழுக்களோட எண்ணிக்கையைத் தீர்மானிச் சுக்கலாம்.

அரிசி, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள்ல வரக்கூடிய அந்து பூச்சிகளோட (கார்சிரா) முட்டைகளை உணவாகக் கொடுத்துதான், நன்மை செய்யும் பூச்சிகளை இங்க வளர்த்துக்கிட்டு இருக்கோம்.

நான் இந்த உற்பத்தி நிலையத்தை ஆரம்பிச்ச புதுசுல, எனக்குத் தெரிஞ்ச விவசாயிகள் மட்டும்தான் என்கிட்ட இருந்து நன்மை செய்யும் பூச்சிகளோட முட்டைகள், புழுக்களை வாங்கினாங்க. மற்ற விவசாயி கள்கிட்டயும் விழிப்புணர்வு ஏற்படுத்தணுங் கற நோக்கத்துனால, இதைப் பத்தின தகவல் களைச் சமூக ஊடகங்கள்ல பகிர்ந்தேன். இணையதளமும் ஆரம்பிச்சேன்.

அதைத் தொடர்ந்து வெளிமாவட்டங் களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாம, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஒடிசா உட்பட இன்னும் பல வெளிமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிங்களும் என்னைத் தொடர்பு கொள்ள ஆரம்பிச்சாங்க. அவங்க சாகுபடி செஞ்சிருக்குற பயிர்கள்ல ஏற்பட்டிருக்குற பாதிப்பையும், அங்க தென்படக்கூடிய பூச்சிகளையும் போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப்ல அனுப்பிடுவாங்க. அதுக்கு ஏற்ப, நன்மை செய்யும் பூச்சிகளோட முட்டைகள், புழுக்களைக் கூரியர்ல அனுப்புவேன்.

இதை வணிக நோக்கத்தோட மட்டும் செய்யல. இப்போ இதுல செலவுக்கும் வரவுக்கும் சரியா போயிடுது. லாபம் முக்கிய மில்ல விவசாயிகள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தணும்கிறதுதான் என்னோட முதன்மையான நோக்கம். விவசாயிகளே இந்தப் பூச்சிகளை வளர்த்து, தேவையான சமயங்கள்ல பயன்படுத்திக்கிட்டா, பூச்சிக் கொல்லிக்கான செலவுகளைப் பெருமளவு குறைக்கலாம்.

பூச்சி வளர்ப்பு
பூச்சி வளர்ப்பு

இயற்கை விவசாயிங்க, தங்களோட பயிர்களைப் பூச்சிகள்கிட்ட இருந்து பாதுகாக்க, மூலிகைப் பூச்சிவிரட்டி, இஞ்சி-பூண்டு-பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்துறாங்க. அதுக்கு நலன் பலன் இருக்கத்தான் செய்யும். அதுல மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனா, அதுமாதிரியான இயற்கை இடுபொருள்கள் தெளிச்சும்கூட சில சமயங்கள்ல பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியலைனா, நன்மை செய்யும் பூச்சி களோட முட்டைகளையும் புழுக்களையும் பயன்படுத்தலாம். 75 - 90 சதவிகிதம் பலன் கொடுக்கும்’’ எனச் சொல்லி முடித்தர்.


தொடர்புக்கு, ராமகிருஷ்ணன்,

செல்போன்: 99465 57555

விவசாயிகளே உற்பத்தி செய்யலாம்!

திருச்சி, பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் ‘பூச்சி’ செல்வத்திடம் பேசினோம், “தமிழக அரசின் சார்பில் பல்வேறு பகுதிகளில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நன்மை செய்யும் பூச்சிகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, ஒரு வயலில் பல வகையான பூச்சிகள் இருக்கும். அதில் 25 - 40 சதவிகித பூச்சி ரகங்கள் சைவ பூச்சிகளாக இருக்கும். இவைதான் பயிரைத் தாக்கி கெடுதல் செய்யும். இந்த சைவ பூச்சிகள் பயிரின் பூவுக்குள், தண்டுக்குள், காய்க்குள் சென்று அவற்றைச் சாப்பிடும்.

ஒரு வயலில் நன்மை செய்யக்கூடிய அசைவ பூச்சிகள் 60 சதவிகிதம் இருக்கும். இவை, சைவ பூச்சிகளைத் தேடி அலைந்து வெளியில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும். பூச்சிக்கொல்லி அடிக்கும்போது இந்தப் பூச்சிகள்தான் முதலில் சாகும். பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகள் எளிதில் அழியாது. உழவர் வயல்வெளி பள்ளித் திட்டம் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் தமிழக வேளாண்மைத்துறை இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

 ‘பூச்சி’ செல்வம்
‘பூச்சி’ செல்வம்

விவசாயிகள் தங்களுடைய பயிருக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு முன்பு, அங்குள்ள தீமை செய்யும் பூச்சிகளையும், நன்மை செய்யும் பூச்சிகளையும் இனம் காண வேண்டும். அதற்கு ஏற்பதான் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வயலில் ஏதேனும் பூச்சிகளின் நடமாட்டத்தைப் பார்த்துவிட்டாலே, உடனடியாக உரக்கடைக்குச் சென்று பூச்சிக்கொல்லி வாங்கி வந்து பயிர்களில் தெளித்துவிடுகிறார்கள். அந்தப் பூச்சிக்கொல்லி, எந்த வகையான பூச்சிகளை அழிக்கும் என்றெல்லாம் விவசாயிகளுக்குத் தெரிவதில்லை.

நன்மை செய்யும் பூச்சிகள் முற்றிலும் அழிக்கப்படுவதால், ஒரு கட்டத்துக்கு மேல் கெடுதல் செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால, மறுபடியும் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பூச்சிக்கொல்லிகளின் நஞ்சு செடிகளில் தங்கி உணவு சங்கிலியை பாதிக்கும்.

பயிர் பாதுகாப்பு
பயிர் பாதுகாப்பு

விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிப்பதற்காக, அவற்றை வெளியிலிருந்து விலைக்கு வாங்கி விடுவது ஒரு வழிமுறை. அதற்கான செலவுகளைத் தவிர்க்க, வேறொரு யுக்தியும் உள்ளது. விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் நன்மை செய்யும் பூச்சிகளை இயற்கையாகவே பெருக வைக்க வரப்பு ஓரங்களில் தட்டைப்பயறு வளர்க்கலாம். அதைச் சாப்பிட தீமை செய்யும் பூச்சிகள் அங்கு வரக்கூடும். தட்டைப்பயறில் இருக்கக்கூடிய தீமை செய்யும் பூச்சிகளைச் சாப்பிடுவதற்காக... சிலந்தி, பொறிவண்டு, பச்சக்கண்ணாடி, றெக்கப்பூச்சி உட்பட இன்னும் பலவிதமான நன்மை செய்யும் பூச்சிகளும் அங்கு வரும். அவைதான் பயிர்களைப் பாதுகாக்கக்கூடிய எல்லையோர வீரர்கள். செண்டுமல்லி, ஆமணக்கு ஆகியவற்றையும் எல்லை பாதுகாப்புப் பயிராக வளர்க்கலாம்’’ எனத் தெரிவித்தார்.

பூச்சிகள்
பூச்சிகள்

கிராமம்தோறும் பூச்சிகள் உற்பத்தி மையம்

‘‘ஐம்பது, அறுபது வருஷங்களுக்கு முன்னாடி எல்லாம் பூச்சிக்கொல்லி எதுவும் பயன் படுத்தாமதானே விவசாயம் செய்தாங்க. அப்பெல்லம் நன்மை செய்யும் பூச்சிகளும் தீமை செய்யும் பூச்சிகளும் சம நிலையிலதான் இருந்தச்சு. பூச்சிக்கொல்லி அடிக்க ஆரம்பிச்சதுனாலதான் ஏற்றத் தாழ்வு அதிகரிச்சி, தீமை செய்யற பூச்சிகளோட எண்ணிக்கை அதிகரிச்சிடுச்சு. ஒரு விவசாயி தன்னோட நிலத்துல மட்டும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பயன்படுத்தினா, அப்போதைக்குத் தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்... ஆனா, அக்கம் பக்கத்து விவசாயிங்க, அவங்களோட நிலத்துல அதிக விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லியை தெளிச்சா, அதோட வாடையால, பக்கத்து வயல்ல உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் செத்துப்போக வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க, ஒரு கிராமத்துல உள்ள விவசாயிகள் அனைவருமே தங்களோட நிலங்கள்ல நன்மை செய்யும் பூச்சிகளைப் பயன்படுத்தணும். விவசாயிகள் ஒருங்கிணைஞ்சு, நன்மை பூச்சிகள் உற்பத்தி மையம் தொடங்கலாம். இதுக்கு அரசாங்கம் முன்முயற்சி எடுக்கணும். முதல்கட்டமா விவசாயிகள் மத்தியில இது தொடர்பா விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’’ என்கிறார் ராமகிருஷ்ணன்.