Published:Updated:

மழையால் பாதித்த நெல் சாகுபடி கைகொடுத்த நாட்டுக்கோழிகள்!

நாட்டுக் கோழிகளுடன் ஜெயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக் கோழிகளுடன் ஜெயலட்சுமி

தவறுகளும் தீர்வுகளும்-4

மழையால் பாதித்த நெல் சாகுபடி கைகொடுத்த நாட்டுக்கோழிகள்!

தவறுகளும் தீர்வுகளும்-4

Published:Updated:
நாட்டுக் கோழிகளுடன் ஜெயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக் கோழிகளுடன் ஜெயலட்சுமி

விவசாயத்தில் தவறுகளைச் செய்தாலும் அதைத் திருத்திக்கொண்டு அடுத்தடுத்து பயணிக்கும் விவசாயிகளின் அனுபவங்களைப் பேசும் தொடர் இது. இந்த இதழில் ‘கொல்லபாளையம்’ ஜெயலட்சுமி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். திருவள்ளூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் குடியம் குகை பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள கொல்லபாளையத்தில் இருக்கிறது இவருடைய பண்ணை. வெயில் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த ஒரு பகல் வேளையில் பண்ணைக்குள் நுழைந்தோம். நாட்டுக்கோழிகளை வளர்ப்பதற்கான கூண்டுகளைச் சுற்றி கம்பி வலைகள் கட்டும் பணியிலிருந்தவர், நம்மைக் கண்டதும் பணிகளை வேலையாள்களிடம் ஒப்படைத்து விட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

“2007-ம் வருஷத்துல இருந்து இயற்கை விவசாயம் செஞ்சிகிட்டு வர்றேன். சீரகச் சம்பா, கிச்சிலிச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, இலுப்பைப்பூ சம்பானு பாரம்பர்ய நெல் ரகங்கள சாகுபடி செஞ்சிகிட்டு வந்தேன். பாரம்பர்ய நெல் ரகங்களுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருந்ததால, சொந்த நிலத்தோட குத்தகைக்கு நிலத்த பிடிச்சும் சாகுபடி செஞ்சிகிட்டு வந்தேன். எப்பவும் ஆடிப்பட்டத்துல சம்பா நெல் ரகங்களைச் சாகுபடி செய்றது வழக்கம். அந்த வகையில 2021, ஆகஸ்ட் மாசம் சொந்த நிலம், குத்தகைக்குப் பிடிச்சதுனு 30 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் நடவு செஞ்சோம். இது வரைக்கும் நெல் சாகுபடியில பெரிய அளவுல தோல்வியே பார்க்காதவள் நான். பூண்டி வட்டாரத்துல பாரம்பர்ய நெல் சாகுபடிக்காக விருதுகூட வாங்கியிருக்கேன். அப்படியிருந்த நான் இப்போ நெல் சாகுபடியே வேண்டாம்ங்கிற சூழ்நிலையில இருக்கேன்” என்றவர், அதற்கான காரணங்களை அடுக்கினார்.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

“30 ஏக்கர்ல நெல் போடுறோம். மழை எப்படி இருக்கும்னு யோசிக்கல. யார்கிட்டயும் கேக்கவும் தோணல. முன்னெல்லாம் மழை பெய்யுமானு ஊர் பெரியவங்ககிட்ட கேட்பாங்க. அந்தப் பழக்கமும் இப்போ வழக்கொழிஞ்சு போச்சு. அரசல் புரசலா வடகிழக்குப் பருவமழை அதிகமா இருக்கும்னு தகவல் வந்துச்சு. அப்போதாவது நான் சுதாரிச்சிருக்கணும். அதையும் கவனத்துல எடுத்துக்கல. வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட முன்னறிவிப்புல சராசரியைவிட அதிகமா மழை பெய்ற மாவட்டங்கள் பட்டியல்ல திருவள்ளூரும் இருந்துச்சு. இதெல்லாம் வழக்கமா வர்றதுதான்னு நினைச்சுகிட்டேன்.

ஏக்கருக்கு 25,000 ரூபாய் கணக்குல 30 ஏக்கருக்கு 7,50,000 ரூபாய் செலவு செஞ்சு சாகுபடி செஞ்சிருந்தேன். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாசம் வரைக்கும் தொடர்ந்து பெய்த கனமழையால நெல் வயல் முழுக்கத் தண்ணீர். நிலத்த சுத்தியிருக்கிற ஓடை, கிணறு, போர்வெல் எல்லாத்துலயும் தண்ணி நிறைஞ்சுடுச்சு. தண்ணி வடியறதுக்கு வழியே இல்ல. வயலுக்குள்ளேயே நுழைய முடியல. தண்ணி எப்படா? வடியும்னு காத்துகிட்டிருந்துதான் மிச்சம். தொடர்ந்து ரெண்டு மாசம் வயல்ல தண்ணி நின்னதுனால பயிர்களெல்லாம் அழுகி போச்சு. வரப்பை ஒட்டியிருந்த சில வயல்கள்ல அறுத்தோம். 30 மூட்டைதான் தேறிச்சு. 30 ஏக்கருக்கும் சேர்த்து மொத்தம் 7 லட்சம் ரூபாய் நஷ்டம். காப்பீடும் செய்யாம விட்டுட்டேன். அதனால இழப்பீடும் பெற முடியல.

நாட்டுக் கோழிகளுடன் ஜெயலட்சுமி
நாட்டுக் கோழிகளுடன் ஜெயலட்சுமி

மழை சம்பந்தமான முன்னறிவிப்புகள கவனத்துல எடுத்துக்காதது நான் செஞ்ச பெரிய தவறு. அதைவிடப் பெரிய தவறு, விற்பனை வாய்ப்பு இருக்கு, உற்பத்தில என்ன பெரிய பிரச்னை வந்துடப்போகுதுன்னு அகலக்கால் வெச்சு, ஒரே பட்டத்துல 30 ஏக்கர்லயும் நெல் போட்டதுதான். பட்டம் மாத்தி பயிர் வெச்சிருந் தாலும் ஓரளவுக்கு நஷ்டத்தைக் குறைச்சிருக்கலாம். நான் மட்டுமல்ல, பல விவசாயிகள் மழை விஷயத்துல கோட்டை விட்டுடுறாங்க. வழக்கமா மழை பெய்யும். ஒண்ணு, ரெண்டு வாரத்துல வடிஞ்சிடும். ஆனா, போன வடகிழக்குப் பருவமழை கடுமையா பெய்ஞ்சதால ஜனவரி மாசம் வரைக்கும் வெள்ளம் வடியவே இல்ல. அதனால, பயிர்கள் அழுகி எதுக்கும் உதவாம போயிடுச்சு. கடன் வாங்கிப் பயிர் வெச்சதால, மன அழுத்தம் அதிகமா ஆயிடுச்சு. யார்கிட்டயும் சரிவரப் பேச கூட முடியல” என்று சிறிது நேரம் அமைதியானவர், அதிலிருந்து மீண்ட விதம்பற்றிப் பேசினார்.

“நவம்பர் மாசத்திலேயே தெரிஞ்சுடுச்சு. இந்த வருஷம் நெல் சாகுபடி அவ்வளவுதான்னு. கடனை அடைக்கிறதுக்கு என்ன வழினு யோசிச்சேன். எங்ககிட்ட 20 நாட்டுக் கோழிக இருந்துச்சு. அதிலிருந்து வாரத்துக்கு 50 முட்டைகள் கிடைச்சுகிட்டு இருந்துச்சு. அந்த முட்டைகள ‘இன்குபேட்டர்’ வெச்சிருக்க வங்ககிட்ட கொடுத்துக் குஞ்சுகளா உற்பத்தி செஞ்சேன். அப்படி உற்பத்தி செஞ்ச குஞ்சுகள வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ அதெல்லாம் வளர்ந்து நானூறுக்கும் மேற்பட்ட கோழிகளா இருக்கு. இதுதவிர நண்பர்கள் மூலமாவும் கோழிகள உற்பத்தி செஞ்சுட்டு வர்றோம். முட்டைகள்தான் பிரதான வருமானமா எடுத்துக் கிட்டு இருக்கோம். அதோட ஒரு குஞ்சு 25 ரூபாய்னு 450 வாத்துக் குஞ்சுகள ஆந்திராவுல இருந்து வாங்கிட்டு வந்து விட்டிருக்கோம். இதுக்காக 20 சென்ட் நிலத்துல தண்ணி தேக்கி வெச்சி அதுல வளர்க்கிறோம். தவிடு, அரிசிதான் முக்கிய உணவு.

கோழிகள் +வாத்துகள்
கோழிகள் +வாத்துகள்

ஆரம்பத்துல சண்டைசேவல், பெருவிடை, சிறுவிடைனு எல்லாக் கோழிங்களையும் கலந்து வளர்த்தோம். கோழிக ஒண்ணை யொண்ணு கொத்துறது, முட்டைகள உடைக்கிறதுனு இருந்துச்சு. இப்போ அதைத் தனித்தனியான கூண்டுகள்ல பிரிச்சு, அந்தந்த ரகங்கள தனித் தனியா வளர்த்துகிட்டு வர்றோம். முழுக்க முழுக்க மேய்ச்சல் முறைதான். ஆரம்பத்துல மேய்ச்சல்ல இருக்கிற கோழிகள் அங்கங்க முட்டை இட்டுடும். அத மத்த கோழிகள் மிதிச்சு உடைஞ்சு சேதமாகும். சுத்தமா இல்லாம இருக்கும். இதனால பாம்புங்க வரும். இப்போ கோழிகள் முட்டையிடுறதுக்குனு வைக்கோல போட்டு விட்டிருக்கிறோம். முட்டையிடுற நேரத்துல அங்க வந்துடும். அதனால பாதுகாப்பா முட்டையைச் சேகரிச்சுடுறோம். சண்டை சேவல்களையும் தனியா கூண்டுகள அடைச்சு வளர்த்து கிட்டு வர்றோம்.

விற்பனைக்காகச் செங்குன்றம் முண்டியம்மன் நகர்ல இறைச்சிக் கடையையும் திறந்திருக்கோம். ஒரு முட்டையை 15 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். இப்போதான் வியாபாரம் சூடு பிடிச்சுக் கிட்டிருக்கு. வாரத்துக்கு 250 முட்டைகள் வரை விக்குறோம். ஒரு முட்டை 15 ரூபாய் கணக்குல 3,750 ரூபாய் வருமானம். மாசத்துக்கு 15,000 ரூபாய். மாசம் 100 கோழிகளுக்கு மேல் இறைச்சிக்காக விக்குறோம். அதுமூலமா 30,000 ரூபாய். ஆக 45,000 ரூபாய் வருமானம். செலவெல்லாம் போக 25,000 ரூபாய் லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. நாட்டுக்கோழி வளர்ப்புக்கான உள்கட்டமைப்புகள உருவாக்கிக்கிட்டு இருக்கேன். வாத்துகள் விற்பனைக்கு வந்துடுச்சுன்னா இன்னும் லாபம் அதிகரிக்கும். இதுவரைக்கும் நான் மட்டுமே தனி முயற்சியா செஞ்சுகிட்டு வந்தேன். இப்போ நண்பர்களையும் இணைச்சு முன்னெடுத்துக்கிட்டு இருக்கேன்’’ என்றவர் நிறைவாக,

நிலக்கடலை வயல்
நிலக்கடலை வயல்

‘‘இந்த மண்ணு நிலக்கடலை சாகுபடிக்கு உகந்த மண். தண்ணி வசதி இருந்ததால நெல் சாகுபடி செஞ்சுகிட்டு வந்தேன். இப்ப, முதற்கட்டமா அரை ஏக்கர்ல நிலக்கடலை போட்டுருக்கேன். மீதி நிலத்துலயும் நிலக் கடலை போடப்போறேன்.

அடிப்படையில நான் ஒரு ‘பிஸியோ தெரபிஸ்ட்’. வேலைக்குப் போனா ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆனா, நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கரப் பார்த்து விவசாயத்துக்கு வந்தவள் நான். இயற்கை விவசாயம்தான் வாழ்க்கைனு முடிவு செஞ்சிட்டேன். அதனால, எவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் விவசாயத்துலயே இருக்கணுங்கறதுல உறுதியா இருக்கேன். என் பொண்ணு உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமம் பள்ளிக்கூடத்துல படிக்கிறாள். அவளும் விடுமுறை நாள்கள்ல வந்து விவசாயம் பார்க்கிறாள். நாட்டுக்கோழி மூலமா கிடைச்சுக்கிட்டு இருக்கிற வருமானம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ஜெயலட்சுமி,

செல்போன்: 76959 25177.

கோழி வளர்ப்பில்
கோழி வளர்ப்பில்

கழுதை வளர்ப்புக்கு பராமரிப்புத் தேவையில்லை!

ஜெயலட்சுமி தன்னுடைய பண்ணையில் இரண்டு கழுதைகளை வளர்த்து வருகிறார். அதுகுறித்துப் பேசியவர், “இந்தப் பண்ணை தொடங்கினப்போ நிலத்துல கல்லு நிறைய இருந்துச்சு. அதைப் பெருக்கி அப்புறப்படுத்த வேண்டிய வேலை இருந்துச்சு. இந்த வேலைகளுக்கு கழுதைக இருந்தா ரொம்பா உதவியா இருக்கும்னு நினைச்சோம். இதுக்காக ஒரு கழுதை 31,000 ரூபாய்னு 2 கழுதைகள(ஆண், பெண்) ஆந்திராவுல இருந்து வாங்கிட்டு வந்தோம். நிலத்துல பெருக்குன கற்கள மூட்டை பிடிச்சு கழுதை மேல ஏத்தி, கொண்டு வந்து ஓரிடத்துல போடுறதுக்கு கழுதைக ரொம்பவே உபயோகமா இருந்துச்சு. இந்த வேலை மட்டுமில்லாம, பண்ணையில எரு கொட்டுறது, நெல் மூட்டைகள சுமக்குறதுன்னு பல வேலைகளுக்கும் பயன்படுத்திக்கிறோம்” என்றவர், பராமரிப்பு முறையைப் பற்றிச் சொன்னார்.

கழுதைகளோடு
கழுதைகளோடு

“கழுதைகளுக்குப் பராமரிப்புச் செலவு எதுவும் இல்ல. கழுதையும் மாடுகள் மாதிரி புல்லைத்தான் சாப்பிடுது. அதோட தவிடு, புண்ணாக்கு போட்ட தண்ணி காட்டினா போதும். வேறெதுவும் தேவையில்ல. மாடு, ஆடுகள் மாதிரிதான் வளர்ப்பு. என்ன... உணவு வைக்கும்போது முதல்ல இதுக்கு வெச்சிடணும். இல்லைனா.. மத்த விலங்குகளுக்கு உணவு வைக்கும்போது நுழைஞ்சு அதுகள விரட்டிடும். பழக்கமானவங்கள உதைக்காது. புதுசா வர்றவங்கள சில சமயங்கள்ல உதைக்கும். குட்டி போட்டு ஒரு வருஷம்வரைக்கும் பால் கொடுக்கும். குட்டிக்குப் போக ஒரு நாளைக்கு 100 மி.லி பால் கிடைக்கும். அதை நாங்களே பயன்படுத்திடுறோம்.

கொரோனா காலத்துல உடல் உறுதிக்காக நானும் என் பொண்ணும் கழுதைப்பால்தான் குடிச்சோம். இன்னைக்கு வரைக்கும் நாங்க தடுப்பூசி போட்டுக்கல. எங்கள கொரோனாவும் தாக்கல. அந்த அளவுக்குக் கழுதைப்பால்ல சத்துகள் இருக்குறத அனுபவத்துல உணர்ந்திருக்கோம். குழந்தைக்கு வேணும்னு கேக்கறங்வங்களுக்கு 10 மி.லி அளவு பாலாடையில விற்பனைக்குக் கொடுக்கிறோம். கழுதையோட சாணம் நல்லா வீரியமா இருக்கு. குறிப்பா நாத்து உற்பத்திக்குப் பயன்படுத்துறோம். எகிப்து பேரழகி ‘கிளியோபாட்ரா’ கழுதைப்பால்லதான் குளிப்பாங்கனு சொல்வாங்க. அதுக்காக நாங்க சோப்பு, ஷாம்பு தயாரிக்கிற முயற்சியில இருக்கோம். எங்ககிட்ட இருக்கிறது சுமை தூக்குறதுக்குன்னே பழக்கப்பட்ட கழுதைகள். நாங்க ஒரு கழுதை 30,000 - 40,000 ரூபாய்னு விக்கிறோம். கழுதைகள வளர்த்து விக்குறவங்க அதுங்களுக்குச் சுமை தூக்குற பயிற்சி கொடுத்து வித்தா கூடுதல் விலை கிடைக்கும். நாட்டுமாடுகள், கோழிகள்னு கழுதைகளும் எங்க பண்ணைக்கு அழகு சேர்க்குது” என்று சொல்லி கழுதையைத் தழுவிக்கொண்டார்.

அனுபவங்களை அனுப்புங்கள்

விவசாயத்தில் தவறு செய்திருந்து, அதற்குத் தீர்வு கண்டது குறித்து மற்ற விவசாயிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களின் அனுபவங்களை எழுதி அனுப்பவும். சிறந்த அனுபவங்கள், இந்த பகுதியில் இடம்பெறும்.

தவறுகளும் தீர்வுகளும், பசுமை விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-600002

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப்: 99400 22128

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism