Published:Updated:

விளைச்சலைக்கூட்டும் பெருங்காயம் பூச்சியை விரட்டும் மூலிகை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விளைச்சலைக்கூட்டும் பெருங்காயம்
விளைச்சலைக்கூட்டும் பெருங்காயம்

கண்டுபிடிப்பு

பிரீமியம் ஸ்டோரி

கட்டுரையாளர்: எம்.ஜே.பிரபு

விவசாயத்தில் செலவைக் குறைத்தாலே வருமானத்தை அதிகரித்துவிட முடியும். செலவைக் குறைக்க எளிமையான வழி இயற்கை விவசாயம்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்கிற விவசாயி, வீட்டில் ரசம் தயாரிக்கப் பயன்படுத்தும் பெருங்காயத்தைப் பயன் படுத்திப் பயிர்களைப் பராமரித்து வருகிறார் என்ற தகவல், சேவா விவேகானந்தன் மூலம் கிடைத்தது. வழக்கமாக இயற்கை விவசாயிகள் என்றால் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், இஞ்சி பூண்டு கரைசல் பயன்படுத்துவார்கள். இவர் பெருங்காயக் கரைசலைப் பயன்படுத்தி எப்படி விவசாயம் செய்கிறார் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகச் சென்று பார்த்தோம்.

அவர் பெருங்காயக் கரைசல் மட்டும் தயாரிக்கவில்லை. மூலிகைப் பூச்சிவிரட்டி யையும் தயாரித்துப் பயன்படுத்தி வருவதைப் பார்க்க முடிந்தது. அந்தப் பூச்சிவிரட்டியை தேசிய கண்டுபிடிப்பாளர் அமைப்பிடம் சொன்னேம். அதன்மூலம் சிறந்த கண்டு பிடிப்பாளருக்கான விருதும் அவருக்குக் கிடைத்தது. இவரைச் செல்லமுத்து என்றால் தெரியாது. ‘பெருங்காயம்’ செல்லமுத்து என்றால்தான் பலருக்கும் தெரியும். பசுமை விகடனுக்காக அவரிடம் பேசினோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறை எப்படிப் பேசினாரோ, அப்படியே இப்போதும் பேசினார்.

செல்லமுத்து
செல்லமுத்து


“ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மஞ்சள் போட்டிருக்கேன். 1990-கள்ல நான் விவசாயக் கூலித் தொழிலாளி. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கிறது, ரசாயன உரத்த நிலங்களுக்குப் போடுறதுனு வேலைக்குப் போவேன். எங்க பக்கத்துத் தோட்டக்காரங்க வீட்ல அஞ்சாறு பீர்க்கன் செடிகள வெச்சிருந்தாங்க. அதுல பூச்சித்தாக்குதல் இருந்திருக்கு. பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கிறதுக்கு என்னைக் கூப்பிட்டாங்க. அங்கே போனேன். அப்போ அவங்க பொண்ணு கல்யாணத்துக்காக நிறைய பெருங்காயம் வாங்கி வெச்சிருந்தாங்க. அத எடுத்துட்டுப் போய்க் கடையில கொடுக்கச் சொன்னபோது, யதேச்சையாதான் அந்தப் பெருங்காயத்த தண்ணியில கரைச்சு செடிகிட்ட ஊத்துங்கன்னு சொன்னேன். அவங்களும் நான் சொன்னபடியே 100 கிராம் பெருங்காயத்த 5 லிட்டர் தண்ணில கரைச்சு, ஓர் இரவு முழுக்க வெச்சிருந்து காலையிலே ஊத்தியிருக்காங்க. தொடர்ந்து காலை நேரங்கள்ல ஊத்திட்டு வந்திருக்காங்க. ஒரு வாரம் கழிச்சு அந்தப் பக்கம் போனேன். செடியில பூச்சித் தாக்குதல் குறைஞ்சது மட்டுமல்லாம, காய்களும் நல்லா காய்க்கத் தொடங்கியிருந்துச்சு. அப்பதான் தெரிஞ்சது, பெருங்காயக் கரைசலை வேர் பகுதில ஊத்தினா நல்ல பலன் கிடைக்கும்னு.

அதேமாதிரி இன்னொரு விவசாயியோட நிலக்கடலை தோட்டத்துக்கு மருந்தடிக்கப் போயிருந்தேன். அது 4 ஏக்கர் நிலம். ‘நிலத்துல அங்கங்க செடிக காய்ஞ்சு போகுது என்ன செய்யணும்’னு கேட்டாரு அந்த விவசாயி. பெருங்காயக் கரைசலையே இவருக்கும் சொல்வோம்னு, ஒரு கிலோ கட்டி பெருங்காயத்த சுமார் 200 லிட்டர் தண்ணியில கரைச்சு ஊத்தச் சொன்னேன். அப்போ ஒரு கிலோ பெருங்காயம் 200 ரூபாய். இப்போ 1,000 ரூபாய்னு விக்குது. காயும் நிலையில இருந்த செடிகளெல்லாம் பச்சை கட்டி துளிர்க்க ஆரம்பிச்சிடுச்சு. அந்த விவசாயி ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அப்புறம் நான் பயிர் செஞ்சிட்டு வந்த மஞ்சளுக்கு இந்தக் கரைசலக் கொடுத்துப் பார்த்தேன். நல்ல பலன் கிடைச்சது.

பெருங்காயம்
பெருங்காயம்

இத நெல், காய்கறிகள்னு எல்லா பயிர்களுக்கும் ஒருமுறை கொடுக்கலாம். தென்னை மரத்துக்கும் கொடுக்கலாம். வேர் சம்பந்தமான நோய்கள் எதுவும் தாக்காது. குறிப்பா, சல்லி வேர் ஓடுற பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் அதிகம் வரும். அந்த மாதிரி பயிர்களுக்கு இது நல்லாவே பலன் அளிக்கும். வேருக்குக் கொடுக்கும்போது அதோட வீரியம் செடிக்கும் போயிடும். அதனால் பூச்சி தாக்குதலையும் இதுமூலமா கட்டுப்படுத்தலாம். பெரும்பாலும் இதைப் பாசன நீர்ல கலந்து விடுறதுதான் நல்லது. அப்படிக் கொடுத்தாதான் இது வேருக்குப் போய்ச் சேரும். இதனால பயிர்களோட வேர் நல்லா இருக்கும். கரைசலா தயாரிச்சு கொடுக்க முடியாதவங்க ஒரு கிலோ கட்டி பெருங்காயத்த பாசன தண்ணி போற வழியில போட்டு விட்டுட்டா போதும். அதன் சத்துகள் பயிர்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.

தென்னைக்கு 6 மாசத்துக்கு ஒரு தடவை, வாழை, மஞ்சள், கரும்பு மாதிரியான வருஷ பயிர்களுக்கு 3 மாசத்துக்கு ஒரு தடவை, காய்கறி செடிகள்ல பூபூக்குற நேரத்துல ஒரு தடவை கொடுக்கலாம். சப்போட்டோ, மா, பப்பாளி, மாதுளை மாதிரியான பழப்பயிர்களுக்கு வருஷத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். ரசாயன விவசாயிகளும் பயிர்களுக்கு இதைக் கொடுக்கலாம். மாடித்தோட்டத்துல செடிகள் வளரலைனா வீட்ல இருக்கிற பெருங்காயத்த எடுத்துத் தண்ணில கரைச்சு ஊத்திப்பாருங்க... நல்லா வளரும்.

கரைசல் தயாரிக்கும் பணி
கரைசல் தயாரிக்கும் பணி

இதுல அறிவியல் ரீதியா என்ன இருக்குதுன்னு எனக்குத் தெரியாது. நான் எந்தப் பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பல. அனுபவம் மூலமாத்தான் விவசாயிகளிடையே இத பரப்பிட்டு வர்றேன். ஆயிரக்கணக்கான விவசாயிகள் இத பயன்படுத்திப் பலன் அடைஞ்சிருக்காங்க. ஒரு ஏக்கருக்கு 250 கிராமிலிருந்து 1 கிலோ பெருங்காயத்த எடுத்துக்கலாம். அத 200 லிட்டர் தண்ணியில கரைச்சு பாசன தண்ணி வழியாக விடலாம். இல்லைனா மக்குல மொண்டு ஊத்தலாம்’’ என்றவர், மற்றொரு கண்டுபிடிப்புப் பற்றிப் பேசினார்.

“தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமே அங்கீகரிச்ச கண்டு பிடிப்பையும் நான் செஞ்சிருக்கேன். 1997 வாக்குல பூச்சிக்கொல்லி மருந்து தெளிச்சிட்டு வந்ததால, நோய்வாய்ப்பட்டு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. பக்கத்துல இருக்குற கொடிமுடி டாக்டர் நடராஜன்கிட்ட போய்ச் சொன்னேன். ‘நீ பூச்சிமருந்து தெளிக்கிற தொழில விட்டாத்தான், இந்த நோய் குணமாகும்’னு சொல்லிட்டார். அவர் சொன்னபடியே விட்டுட்டேன். அப்ப கிடைச்ச ஓய்வு நேரங்கள்ல மூலிகைப் பூச்சிவிரட்டி (Bio Pesticide) தயாரிப்புல இறங்கினேன். அப்படிக் கண்டுபிடிச்சதுதான் இந்தப் பூச்சிவிரட்டி.

இதுல ‘தழை, மணி, சாம்பல் சத்து (NPK) அதிகமாக இருக்கு. அதனால, பயிர்கள் கருகருன்னு பச்சையா வளரும்.


தலா 1 கிலோ நொச்சி, சோற்றுக்கற்றாழை, வேப்பங்கொட்டை, எருக்க இலை, ஆடாதொடா எடுத்துத் தனித்தனியா தண்ணி விட்டுக் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைச்சு எடுத்துக்கணும். அரைச்சத ஒண்ணா கலந்தா 7 லிட்டர் கரைசல் கிடைக்கும். அதிலிருந்து 700 மி.லி எடுத்து 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிக்கணும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இப்போ பரவலா மரவள்ளியைத் தாக்குற மாவுபூச்சிக்கு ரசாயனத்த தெளிக்கிறாங்க. இத தெளிச்சு பாருங்க, உடனடியா நல்ல பலன் கிடைக்கும்.

மரவள்ளித் தோட்டத்துக்கு ஒருமுறை பூச்சிக்கொல்லி தெளிக்க ஏக்கருக்கு 1,500 ரூபாய் செலவு பண்றாங்க. 1 ரூபாய் செலவில்லாமலே இந்த முறையில பூச்சியைக் கட்டுப்படுத்திடலாம். தயாரிக்கிறதுக்குச் சிரமப்படுற சில விவசாயிகள், எங்கிட்ட வாங்கிட்டுப் போய்த் தெளிக்கிறாங்க. தென்னையில ஈரியோபைட் (தேங்காய் மீது சொரசொரப்பா இருப்பது) வந்தாக்கூட இத தெளிக்கலாம். விவசாயிகள் இதுக்கு மாறணும். பிரான்ஸ் நாட்ல இருந்து ஒருத்தர் வந்து இந்தப் பூச்சிவிரட்டியை வாங்கிட்டு போனாரு. இப்படி வெளிநாட்டுல இருந்து சிபேர் வந்து வாங்கிட்டுப் போயிருக்காங்க. அந்தளவுக்கு வெளிநாடுக வரைக்கும் இந்தப் பூச்சிவிரட்டி போய்ச் சேர்ந்திருக்கு.

சேவா விவேகானந்தன் மூலமாகக் கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்துல இத கொடுத்துச் சோதனை செஞ்சோம். இதுல ‘தழை, மணி, சாம்பல் சத்து (NPK) அதிகமாக இருக்கு. அதனால, பயிர்கள் கருகருன்னு பச்சையா வளரும்.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

கத்திரி, வெண்டை, காய்கறி பயிர்கள்ல பூச்சிகள விரட்டுறதுக்கு ரொம்ப உதவியாக இருக்குதுனு அறிக்கை கொடுத்திருக்காங்க. ஆடு, மாடுகளோட குடற்புழு நீக்கத்துக்கும் இதைக் கொடுக்கலாம்.

சில வருஷங்களுக்கு முன்ன ஒரு பண்ணைக்குப் போயிருந்தேன். அங்க கன்னுக்குட்டி ஒண்ணு குடற்புழுத் தாக்கத்தால, பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையா இருந்தது. அந்தப் பண்ணையோட பெண்மணி, ‘இதுக்கு என்ன பண்றது’ன்னு கேட்டாங்க. நான், இந்த மூலிகைக் கரைசலை கொடுத்துப் பாருங்கன்னு சொன்னேன். அதைக் கொடுத்த 3 நாளைக்குப் பிறகு, நோய் குணமாகி கன்னுக்குட்டி நடமாட ஆரம்பிச்சது. அப்புறம் கால்நடை பல்கலைக் கழகத்துல இந்தப் பூச்சிவிரட்டியைக் கொடுத்து, கால்நடைகளுக்குக் கொடுக் கலாமானு சோதனை பண்ணி பார்க்கச் சொன்னேன். அவங்க 87 சதவிகிதம் குடற்புழுத் தாக்கத்துக்குப் பலன் கொடுக்குதுனு அறிக்கை கொடுத்தாங்க. இப்போ கால்நடைகளுக்குக் கொடுக்கப் பரிந்துரை செய்றேன். நான் ஏழாம் வகுப்பு தான் படிச்சிருக்கேன். இதையெல்லாம் அனுபவம் மூலமாகத்தான் கண்டுபிடிச்சேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு,

கே.எம்.செல்லமுத்து,

செல்போன்: 94866 02389

ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்!

மதுரையில் உள்ள நீடித்த வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டு இயக்கம் (சேவா) என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சேவா விவேகானந்தனிடம் மூலிகைப் பூச்சிவிரட்டி குறித்துப் பேசினோம். “செல்லமுத்துவின் மூலிகைப் பூச்சிவிரட்டி(Herbi Pesticide) கண்டுபிடிப்பு குறித்து 2002-ல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்குக் கொடுத்தோம். அங்கே பரிசோதனைக்கூடம், வயல் என்று சோதனை செய்து பூச்சிகளை விரட்ட பயிர்களுக்குப் பயன்படுத்தலாம் என்று 2004-ல் அறிக்கை கொடுத்தது. அதன் பிறகு, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இதைப் பயன்படுத்த பயிற்சி அளித்தோம்.

சேவா விவேகானந்தன்
சேவா விவேகானந்தன்

தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் நிறைய விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2010-ல் கொடுத்து 2012-ல் ஆடு, மாடுகளுக்குப் பயன்படுத்தலாம் என்று அறிக்கை கொடுத்தது. ஆடு, மாடுகளுக்கும் இதைக் கொடுத்து நிறைய பேர் பலன் பெற்று வருகின்றனர். மூலிகைப் பூச்சிவிரட்டி பயன்படுத்தினால் கைமேல் பலன் கிடைக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு