Published:Updated:

மாதம் 1.5 லட்சம் அன்று விவசாயி.. இன்று வியாபாரி! இயற்கை அங்காடி நடத்தும் மென்பொறியாளரின் அனுபவம்!

இயற்கை அங்காடியில் சதிஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை அங்காடியில் சதிஷ்குமார்

அங்காடி

மாதம் 1.5 லட்சம் அன்று விவசாயி.. இன்று வியாபாரி! இயற்கை அங்காடி நடத்தும் மென்பொறியாளரின் அனுபவம்!

அங்காடி

Published:Updated:
இயற்கை அங்காடியில் சதிஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை அங்காடியில் சதிஷ்குமார்

யற்கையோடு ஒன்றி வாழ்தல், நஞ்சில்லாத உணவு உற்பத்தி, கலப்படம் இல்லாத ஆரோக்கியமான உணவை மக்கள் மத்தியில் பரப்புதல், வாழ்வியலோடு ஒரு தொழில் என்ற வகையில் விவசாயத்தைப் பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலர், இப்படித் தேர்ந்தெடுக்கும் விவசாயத் தொழிலை சரிவரப் புரிந்துகொள்ளாமல் அகலக்கால் விரித்து, பிறகு விவசாயமே சரியில்லை என்று தூக்கிப் போடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் விவசாயம் கைகொடுக்கவில்லையென்றாலும் அது சார்ந்த தொழிலில் முத்திரை பதித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சதிஷ்குமார். அவரிடம் பேசினோம்.

“எனக்கு பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி. நகரத்துக்குப் போனால் பிழைத்துக்கொள்ளலாம். பெரிய ஆள் ஆகிவிடலாம் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். பி.டெக் முடிச்சிட்டு ‘சாப்ட்வேர் கம்பெனி’யில வேலை செஞ்சுகிட்டு இருந்தேன். அந்தத் துறைக்குள்ள நுழைஞ்ச சில நாளிலேயே அதன் மீதான ஈர்ப்பு போயிடுச்சு. பிறகு நம் மரபு, இயற்கை விவசாயம், நம்மாழ்வார் பயிற்சினு ஓடிக்கிட்டு இருந்தேன். இந்த ஆர்வத்துக்கெல்லாம் விவசாயம்தான் வடிகாலாக இருக்கும்னு நினைச்சேன். எல்லாத் தொழில் களையும் திட்டமிட்டு, வரவு, செலவு கணக்கு பாத்துப் பக்காவா செய்றோம். ஆனா, விவசாயத்த மட்டும் அப்படிச் செய்றதில்ல. நாம ஏன் விவசாயத்த ஒரு திட்டமிட்ட தொழிலா செய்யக் கூடாதுன்னு 2013-ம் வருஷம் விவசாயத்துக்குள்ள நுழைஞ் சேன். நுழையறதுக்கு முன்னாடியே பல பண்ணை களுக்குப் போய்ப் பார்வையிட்டு அனுபவங்கள சேகரிச்சுக்கிட்டு தான் இறங்கினேன்.

இயற்கை அங்காடியில் சதிஷ்குமார்
இயற்கை அங்காடியில் சதிஷ்குமார்

செங்கல்பட்டு மாவட்டம், அரியனூர் கிராமத்துல 5 ஏக்கர் நிலத்த ஒரு ஏக்கர் 20,000 ரூபாய்னு குத்தகைக்கு எடுத்தேன். ஏற்கெனவே ரசாயன விவசாயம் செஞ்சுகிட்டு இருந்த நிலம். நான் குத்தகைக்கு எடுத்த உடனே எளிதா வளரக்கூடியதும், விற்பனை செய்யக்கூடியதுமான கீரையை 2 ஏக்கர்ல போட்டேன். ஆனா, ஒரு வருஷம் வரைக்கும் கீரை சரியாவே வளரல. 50,000 ரூபாய் நஷ்டம். அடுத்து காய்கறிப் போட்டேன். அது ஓரளவுக்குக் கை கொடுத்துச்சு. விளைஞ்சத சென்னையிலிருக்கிற இயற்கை அங்காடி களுக்கு விற்பனை செஞ்சுகிட்டு வந்தேன். ஓரளவுக்கு விலை கிடைச்சாலும், நேரடியா விற்பனை செஞ்சா இதைவிடக் கூடுதல் லாபத்தையும், வாடிக்கையாளர்களுக்கு இன்னும் தரமா கொடுக்க முடியுங்கற யோசனையும் வந்துச்சு. அதுக்காக ‘அறுவடை ஆர்கானிக்ஸ்’ அப்படிங்கிற பெயர்ல, கிழக்குக் கடற்கரை சாலையில இருக்கும் பாலவாக்கத்ததுல இயற்கை அங்காடியைத் தொடங்கினேன்.

மத்த கடைகளுக்குக் காய்கறிகள விற்பனை செய்யும்போது 1 கிலோ 20 ரூபாய்னு விலை கிடைச்சது. நேரடியா விற்கும்போது 1 கிலோவுக்கு 40 முதல் 50 ரூபாய் கிடைச்சது. கடைக்குத் தேவையான பொருள்கள்ல 50 சதவிகிதம் பண்ணையில இருந்து வந்துகிட்டு இருந்துச்சு. பண்ணைச் செலவு, கடை வாடகை, ஆள்கள் கூலி எல்லாம் போக மாசம் 70,000 ரூபாய் லாபம் கிடைக்க ஆரம்பிச்சது. ஐ.டி துறையில வேலை செஞ்சுகிட்டே பகுதி நேரமாத் தான் இதைச் செஞ்சுகிட்டு வந்தேன். வருமானம் கிடைக்க ஆரம்பிச்ச நம்பிகையில மாசம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கிட்டு இருந்த ஐ.டி வேலையை ரிசைன் பண்ணேன்” என்றவர், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

இயற்கை அங்காடி
இயற்கை அங்காடி

“மொத்தமா 5 ஏக்கர். அதுல 3 ஏக்கர்ல காய்கறிகள், ஒரு ஏக்கர் நெல், அரை ஏக்கர்ல சிறுதானியங்கள், அரை ஏக்கர்ல தென்னை, நாட்டுக்கோழி வளர்ப்பு, உரத் தேவைக்காக 4 மாடுகளையும் வளர்த்துக்கிட்டு வந்தேன். சுழற்சி முறை விவசாயம், இயற்கை இடுபொருள்கள் பயன்பாடு, ஒருங்கிணைந்த பண்ணையம்னு எல்லா விஷயங்களையும் பண்ணைக்குள்ள கொண்டு வந்தேன்.

ஆனா, கடையில விற்பனை எப்போதும் ஒரே மாதிரி இருக்காதுங்கற விஷயம் போகபோகத்தான் தெரிஞ்சது. பண்ணையில இருந்து கொண்டு போகுற எல்லாப் பொருள்களையும் வித்துட முடியல. 20 கிலோ காய்கறிகள கொண்டு போனா 10 கிலோ தான் விற்பனை ஆகும். மத்ததெல்லாம் சுருங்கி வாடிவிடும். அது அப்படியே வீணாயிடும். அரிசி, பருப்பு, சிறுதானியங்களும் அந்த மாதிரிதான். நீண்ட நாள் இருப்பு வைக்கிறதுனால பூச்சி, வண்டுகள் விழுந்துடும். அந்தப் பொருள் எல்லாம் வீணாயிடும். இப்படி வியாபாரத்துல அடிக்கடி சுணக்கம் ஏற்பட்டுச்சு.

இயற்கை அங்காடி
இயற்கை அங்காடி

இன்னொண்ணு பண்ணை வேலைகளை யும் நான்தான் பார்க்கணும். விற்பனை வேலைகளையும் நான்தான் பார்க்கணுங்கற சூழ்நிலை. அதனால, பண்ணைக்கும் கடைக்கும் மாறி மாறி அலைஞ்சுகிட்டு இருந்தேன். மத்தவங்ககிட்ட ஒப்படைக் கலாம்னு நினைச்சாலும் இயற்கை விவசாயம், இயற்கை விவசாயப் பொருள்கள வாடிக்கையாளர்கிட்ட பேசி விக்கிறதை திறமையா செய்ற ஆள்கள் கிடைக்கிறது பெரிய சவாலா இருந்துச்சு. நாம மனசுல நினைக்கிறத அப்படியே செய்ற ஆள்கள் கிடைக்கல. இவ்வளவுக்கும் பண்ணையில சுபாஷ் பாலேக்கர் விவசாயம், பயோ டைனமிக் விவசாயம்னு பலவிதமான விவசாய முறைகளை முயற்சி செஞ்சு பார்த்தேன். நாம விளைவிக்கிற பொருள் 100 சதவிகிதம் இயற்கையா இருக்கணும்ங்கறதில தீவிரமா இருந்தேன்.

தீவிரமா இருந்து என்ன பயன்? நான் எடுத்தது குத்தகை நிலம். இவ்வளவுக்கும் இயற்கை விவசாயத்துல நீண்ட, நெடிய அனுபவமுள்ள அரியனூர் ஜெயச்சந்திரன், டி.டி.சுப்பு ரெண்டு பேரும் நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருந்தாங்க. அதெல்லாம் நீண்ட காலத்துக்குப் பயன் தரக்கூடிய யோசனைகள். அதையெல்லாம் செயல்படுத்தணும்னா சொந்த நிலமா இருந்தாதான் முடியும்ங்கற உண்மை எனக்குப் புரிஞ்சது. சொந்த நிலம் வாங்குறதுக்குப் பொருளாதாரச் சூழல் இல்ல. அதனால, விவசாய முயற்சியைக் குத்தகை நிலத்துல முன்னெடுக்க முடியல.

‘‘இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருள்கள எத்தனை பேர் சாப்பிடுறாங்க, எந்தப் பகுதில அதிகம் வாங்குறாங்கனு ஒரு தகவல் கிடைச்சா, நல்லா இருக்கும்.’’

ஒரு கட்டத்துல விவசாயத்தையும் கடையையும் தொடர்ந்து நடத்த முடியல. விவசாயம் செய்றதுக்கு நிறைய பேரு இருக்காங்க. விற்பனைதான் பலருக்குப் பிரச்னையா இருக்குனு நினைச்சு அங்காடியைத் தொடர்ந்து நடத்த முடிவு செஞ்சேன். நாங்க விவசாயம் செஞ்ச பகுதியில நிறைய பேரு பழக்கமாகிட்டாங்க. அவங்கெல்லாம் மாடு வளர்த்து அந்தப் பாலை ஒரு லிட்டர் 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்றாங்க. நாம ஏன் இதை வாங்கிட்டுப் போய்ச் சென்னையில விற்பனைச் செய்யக் கூடாதுனு தோணுச்சு. அவங்க விற்பனை செய்றதைவிட 3 ரூபாய் கூடக் கொடுத்து வாங்கினேன். அதைச் சென்னை கொண்டு போய்ப் பாட்டில்ல அடைச்சு ஒரு லிட்டர் 35 முதல் 40 ரூபாய்னு விற்க ஆரம்பிச்சேன். அதுக்கு வரவேற்பு இருந்தாலும், விற்காத பால் கெட்டுப் போயிடுச்சு. மாட்டிலிருந்து கறந்த பால் 3 மணி நேரம் வரைதான் தாங்கும். இதுக்குன்னே இருக்குற வெப்பநிலையைப் பராமரிக்கிற பெட்டியில வெச்சா 6 மணி வரை தாங்கும். அந்தப் பெட்டியை வாங்கி அதுல வெச்சுதான் இப்ப விற்பனை செய்றேன். ஆரம்பத்துல 20 லிட்டர்ல தொடங்குன பால் விற்பனை இப்போ 1,200 லிட்டர் வரைக்கும் உயர்ந்திருக்கு.

இயற்கை விவசாயப் பண்ணை நடத்துன அனுபவத்துல நிறைய இயற்கை விவசாயிகளோட தொடர்பு கிடைச்சது. அவங்ககிட்ட இருந்து பொருள்களை வாங்கி விற்பனை செய்றேன். பால் விற்பனை, இயற்கை அங்காடி மூலமா பாரம்பர்ய அரிசி வகைகள் நல்லா விற்பனை ஆயிட்டு இருக்கு. இதுமூலமா மாசம் ஒன்றரை லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்” என்ற சதிஷ்குமார் நிறைவாக,

இயற்கை அங்காடி
இயற்கை அங்காடி

“இயற்கை விளைபொருள்களுக்குத் தேவை அதிகமா இருக்குது. ஆனா, அதுக்குத் தகவல் தளம்(டேட்டா பேஸ்) இல்லை. இயற்கை விவசாயத்துல விளைஞ்ச பொருள்கள எத்தனை பேர் சாப்பிடுறாங்க, எந்தப் பகுதில அதிகம் வாங்குறாங்கனு ஒரு தகவல் கிடைச்சா, அங்க இயற்கை விவசாயப் பொருள்களக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும். விவசாயிகள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் இடையே ஒரு பொதுவான தளம் இருக்கணும். விற்பனை செய்றவங்களுக்கும் இயற்கை விவசாய விளைபொருள் பத்தி பேசத் தெரியணும். பலபேர் இயற்கை அங்காடியைத் தொடங்குன வேகத்துல மூடிட்டு போறதுக்குக் காரணம் இதுதான். வாடிகையாளர்களுக்கு வர்ற சந்தேகத்த நிவர்த்திச் செய்யணும். அதுக்கு நம்மகிட்ட நேர்மை இருக்கணும். அது இருந்தா இயற்கை அங்காடியை சரியா நடத்த முடியும்.

இன்னொண்ணு இயற்கை அங்காடிகள் நடத்துறதுக்கும் அதுசார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்கும் அரசாங்கத்தோட உதவிகள் தேவைப்படுது. ஆனா, அரசுகிட்ட கொடுக்குற அளவுக்கு இயற்கை அங்காடி நடத்துறவங்ககிட்ட தகவல்கள் இருக்கணும். அது இருந்தால் இன்னும் இயற்கை விளை பொருள்களுக்கான விற்பனையை அதிகரிக்க முடியும்” என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சதிஷ்குமார்,

செல்போன்: 63802 72861

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism