Published:Updated:

ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சத்தான லாபம்... சபாஷ் போட வைக்கும் சப்போட்டா!

அறுவடையான சப்போட்டா பழங்களுடன் நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான சப்போட்டா பழங்களுடன் நடராஜன்

மகசூல்

ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சத்தான லாபம்... சபாஷ் போட வைக்கும் சப்போட்டா!

மகசூல்

Published:Updated:
அறுவடையான சப்போட்டா பழங்களுடன் நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான சப்போட்டா பழங்களுடன் நடராஜன்

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது கொளுமடை கிராமம். தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் வாய்க்காலை அடுத்து உள்ளது நடராஜனின் சப்போட்டாத் தோட்டம். காற்றில் மரத்துடன் சேர்த்துக் கொத்துக் கொத்தாக அசைந்தாடிக் கொண்டிருந்தன சப்போட்டா பழங்கள். அறுவடை செய்த பழங்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார் நடராஜன். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் உற்சாகமானவர், தோட்டத்திற்குள் நடந்தபடியே பேசத் தொடங்கினார்.

‘‘அடிப்படையில் விவசாயம் குடும்பம். அப்பா ‘டிரான்ஸ்போர்ட் புக்கிங் ஏஜென்சி’யை நடத்திட்டு வந்தாரு. 9-ம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்கப்புறம் அப்பாவோடு சேர்ந்து தொழிலைப் பார்த்துட்டு இருந்தேன். எனக்கு உடல்நிலையில பிரச்னை வந்துச்சு. நாட்டுரகக் காய்கறிகள், சிறுதானியங்கள், பாரம்பர்ய ரக அரிசியை உணவுல பயன்படுத்த சொல்லி மருத்துவர்கள், நண்பர்கள் அறிவுரை சொன்னாங்க. பக்கத்து கிராமங்கள்ல இருந்து இதையெல்லாம் வாங்க ஆரம்பிச்சேன். பாரம்பர்ய ரகத்துல செஞ்ச சோற்றைச் சாப்பிட ஆரம்பிச்சதுமே உடல்நிலையில முன்னேற்றம் தெரிஞ்சுது. சிறுதானியங்களின் மகத்துவத்தையும் உணர்ந்தேன்’’ என்றவர் விவசாயத்திற்குள் காலடி எடுத்து வைத்த சம்பவம் பற்றிப் பேசினார்.

அறுவடையான சப்போட்டா பழங்களுடன் நடராஜன்
அறுவடையான சப்போட்டா பழங்களுடன் நடராஜன்

‘‘வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமளே உற்பத்தி செஞ்சா என்னன்னு யோசனை வந்துச்சு. 30 சென்ட்ல கத்திரி, தக்காளி, மிளகாய், கீரைகள், படர் கொடி காய்கறிகளைச் சாகுபடி செஞ்சேன். நானே விதைச்சு, தண்ணி ஊத்தி பரமாரிச்சு அந்தக் காய்கறிகளைப் பறிச்சு சாப்பிட்டப்போ அதோட சுவையை உணர்ந்தேன். அதுலயும் மட்கின சாண உரத்தைத் தவிர வேற எந்தவித ரசயன உரமும் போடாம விளைய வெச்சதன் பலனை அனுபவிச்சேன். அந்தக் காய்கறி, கீரைகளை நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் கொடுத்தேன். அவங்களும் சாப்பிட்டு நல்லா இருக்குறதா சொன்னாங்க. இப்படி ஒவ்வொருத்தராச் சொல்லவும்தான் ஏக்கர் கணக்குல விளைய வச்சு, ரசாயன உரப் பயன்பாடில்லாத காய்கறிகளை மக்களுக்கும் விற்பனை செய்யலாம்னு முடிவெடுத்தேன்’’ என்றவர் தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘ஏற்கெனவே வாங்கிப் போட்டிருந்த இந்த 5 ஏக்கர் நிலத்தை விவசாயத்துக்கு ஏத்த நிலமா மாத்தினேன். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாம விவசாயம் செய்யணும்கிறதுல உறுதியா இருந்தேன். ‘இயற்கை விவசாயம் செய்யணும்கிற உன்னோட எண்ணம் சரியானதுதான். அந்த இயற்கை விவசாயத்துலயும், இயற்கையான இடுபொருள்களைப் பயன்படுத்தினா இன்னும் சிறப்பா இருக்கும்’னு சொல்லி பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார் ஒரு நண்பர்.

சப்போட்டா பழங்கள்
சப்போட்டா பழங்கள்

மகசூல் கட்டுரைகள்ல, விவசாயிகள் சாகுபடிப் பாடத்தை வாசிச்சதும் அதுவே தெளிவான வழிகாட்டலா இருந்துச்சு. சில சந்தேகங்களை விவசாயிகள்ட்ட போன் செஞ்சுப் பேசியும் தெளிவுபடுத்தியிருக்கேன். ‘பசுமை ஒலி’ பக்கத்துல கொடுத்திருக்கிற நம்பருக்கு ‘போன்’ செஞ்சுக் கேட்டு, இடுபொருள்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். அதே மாதிரி, இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்ற சில விவசாயிகளோட தோட்டத்துக்கு நேர்ல போயிப் பார்த்தும் விசாரிச்சேன். ‘விவசாயத்துக்கு மண்ணுதான் மூல ஆதாரம். முதல்ல மண்ணை வளப்படுத்துப்பா’ன்னு மூத்த விவசாயி ஒருத்தர் சொன்னார். மூணு தடவை பலதானிய விதைப்பு விதைச்சு மடக்கி உழுதேன். மண்புழு உரம் தூவியும், மட்கிய தொழுவுரத்தைக் கொட்டியும் மண்ணை வளப்படுத்தினேன். காய்ஞ்சுக் கிடந்த இடத்துல மண் வாசனையும், மண் புழுக்களையும் பார்த்தப்போ எனக்குச் சந்தோஷமா இருந்துச்சு. அறுபதாம் குறுவை நெல்லை சாகுபடி செஞ்சேன். கணிசமான மகசூல் கிடைச்சுது. ஒரு ஏக்கர்ல 5 வகைக் காய்கறிகளைச் சாகுபடி செஞ்சேன். காய்கறிகளுக்குப் பராமரிப்பு அதிகம்கிறதுனாலயும், வேலையாள்கள் பற்றாக்குறையினாலயும் பழப்பயிரைச் சாகுபடி செய்யலாம்னு நினைச்சேன்.

சப்போட்டா தோட்டம்
சப்போட்டா தோட்டம்

பழப்பயிர் சாகுபடி செஞ்சுட்டு வந்த சில விவசாயிகளோட தோட்டங்களுக்குப் போய்ப் பார்த்ததுலயும், அந்த விவசாயிங்களோட அனுபத்தைக் கேட்டதுலயும் ‘சப்போட்டா’வை சாகுபடி செய்யலாம்னு சொன்னாங்க. எனக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு. இது மொத்தம் 5 ஏக்கர் நிலம். மூன்றரை ஏக்கர்ல சப்போட்டா பறிப்புல இருக்கு. மீதி ஒன்றரை ஏக்கர்ல தேக்கு, குமிழ், மகோகனி உள்ளிட்ட 6 வகை மரங்கள் இருக்கு” என்றவர் அறுவடை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

‘‘மூன்றரை ஏக்கர்ல 380 மரங்கள் இருக்கு. இதுல 340 மரங்கள் நல்ல நிலையில இருக்கு. பழம் பறிக்க ஆரம்பிச்சு 5 வருஷம் ஆகுது. பழம் பறிக்கிற காலத்துல எல்லா விதமான பறவைகளையும் இங்க பார்க்கலாம். மயில்கள் கூட்டமா வரும். சமயத்துல கரடியும் பழம் பறிச்சு சாப்பிடும். அதுங்களுக்குப் போகத்தான் மிச்சம்னு நானும் அதை விரட்ட எந்த முயற்சியும் எடுக்கல. போன வருஷம் ரெண்டு பருவத்துலயும் சேர்த்து 42,000 கிலோ பழங்கள் கிடைச்சுது. இதுல முதல் ரகம் 25 ரூபாய்க்கும், ரெண்டாவது ரகம் 20 ரூபாய்க்கும் விற்பனை செஞ்சேன். சராசரியா கிலோ 22 ரூபாய். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில இருக்க 4 பழக்கடைகள், 2 சூப்பர் மார்க்கெட்கள், 3 இயற்கை அங்காடிகள்ல விற்பனை செய்றேன். அந்த வகையில 9,24,000 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல செலவு 2,87,325 ரூபாய் போக மீதமுள்ள 6,36,675 ரூபாய் லாபம்தான்’’ என்றவர் நிறைவாக,

அறுவடையான சப்போட்டா பழங்களுடன் நடராஜன்
அறுவடையான சப்போட்டா பழங்களுடன் நடராஜன்

‘‘முறையா கவாத்து செஞ்சு, அடியுரம் வெச்சுப் பராமரிச்சாலே அடுத்தடுத்த வருஷங்கள்ல காய்ப்பு அதிகரிக்கும். ‘சீசன்’ நேரத்துல கடைகள்ல விற்பனை செஞ்சது போக மீதியிருக்குற பழங்களைத் தோட்டத்துக்கு வெளிய வெச்சு விற்பனை செஞ்சுடுறேன்” என்று சொல்லி முடித்தார் நடராஜன்.

தொடர்புக்கு, நடராஜன்,

செல்போன்: 94431 57779.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

மூன்றரை ஏக்கரில் சப்போட்டா சாகுபடி செய்வது குறித்து நடராஜன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

சப்போட்டா சாகுபடி செய்யச் செம்மண், கரிசல்மண் ஏற்றது. இதற்குப் பட்டம் ஏதும் கிடையாது. மழைக்கு முன்பாக நடவு செய்ய வேண்டும். நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 20 அடி, வரிசைக்கு வரிசை 20 அடி என்ற இடைவெளியில் மூன்றடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழிகளை 10 நாள்கள் வரை காய விட வேண்டும். இதற்கிடையில் நீர்ப் பாசனத்திற்காகச் சொட்டுநீர்ப் பாசன அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

சப்போட்டா தோட்டம்
சப்போட்டா தோட்டம்குழித் தோண்டி எடுத்த மண்ணுடன் தலா 5 கிலோ மட்கிய தொழுவுரத்தைக் கலந்து குழிக்குள் போட்டுச் சப்போட்டாக் கன்றுகளை நட வேண்டும். 4 முதல் 6 மாத கன்றுகள் நடவுக்கு ஏற்றவை. நடவு செய்தவுடன் உயிர் நீரும், பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். கன்று நடவு செய்ததிலிருந்து 6-ம் மாதத்தில் நுனிக்கிள்ளி விட வேண்டும். ஒன்றரை ஆண்டு வரை பூக்கும் பூக்களைக் கிள்ளி விட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை அடியுரமாகத் தொழுவுரம் வைக்க வேண்டும்.

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு, தொழுவுரத்துடன் வேப்பம் பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கினை (6 கிலோ தொழுவுரம், 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 2 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு) கலந்து வைக்க வேண்டும். கன்றின் வளர்ச்சியைப் பொறுத்து அளவை கூட்டிக் கொண்டே செல்ல வேண்டும். மாதம் ஒரு முறை 200 லிட்டர் (ஒரு ஏக்கருக்கான அளவு) அமுதக்கரைசலைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். சப்போட்டாவைப் பொறுத்த வரையில் நோய்த்தாக்குதல் என்பது கிடையாது. இருப்பினும், மழை பெய்து முடிந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம்.

ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு பூக்கும் பூக்களைக் காய்க்க விடலாம். இரண்டாவது ஆண்டில் காய்கள் ஆங்காங்கே தென்படும். மூன்றாவது ஆண்டுக்குப் பிறகு மகசூல் படிப்படியாகக் கூடும். நான்காவது ஆண்டிலிருந்து நல்ல மகசூல் கிடைக்கும். டிசம்பர் முதல் மார்ச் வரையிலும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் என ஆண்டுக்கு 8 மாதங்கள்தான் சீசன் காலம். வெளிறிய பழுப்பு நிறத்தில் இருப்பதைப் பார்த்துப் பழங்களைப் பறிக்கலாம். மூன்றாவது ஆண்டுக்குப் பிறகு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மழைக்கு முன்பாகக் கவாத்துச் செய்ய வேண்டும். 4 மாதங்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். சப்போட்டாவைப் பொறுத்தவரையில் அதிக தண்ணீர், அதிக ஊட்டம் கொடுக்கத் தேவையில்லை. அளவான தண்ணீர், ஊட்டம் கொடுத்தாலே நல்ல மகசூல் எடுக்கலாம்.

பறிப்பில் கவனம்!

சப்போட்டாவைப் பறிக்கும்போது பால் வடியும். இது பழங்களின் மீது பட்டுக் காய்ந்தால், பார்ப்பதற்குக் கரை படிந்ததுபோல இருக்கும். இதனால், சந்தையில் விலை கிடைக்காது. பறித்த பழங்களை அந்தந்த மரத்தின் அடியிலேயே தலைகீழாக வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். இப்படி வைத்தால் வடியும் பால் மண்ணில் பட்டு, 5 நிமிடங்களில் காய்ந்துவிடும். இப்படி ஒவ்வொரு மரத்தின் அடியிலும் வைத்துவிட்டு பிறகு கூடைகளில் சேகரிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism