Published:Updated:

சோளப்பயிர்களை பாதிக்கும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்... தப்பிப்பது எப்படி?

படைப்புழுத் தாக்குதல்
News
படைப்புழுத் தாக்குதல்

2018-ம் ஆண்டு மக்காச்சோளப் பயிர்களை அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கி விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தின. தற்போது அந்தப் பிரச்னை மீண்டும் தொடங்கியுள்ளது.

Published:Updated:

சோளப்பயிர்களை பாதிக்கும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்... தப்பிப்பது எப்படி?

2018-ம் ஆண்டு மக்காச்சோளப் பயிர்களை அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கி விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தின. தற்போது அந்தப் பிரச்னை மீண்டும் தொடங்கியுள்ளது.

படைப்புழுத் தாக்குதல்
News
படைப்புழுத் தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு ஆகிய தாலுகாக்களில் நடப்பாண்டு ராபி பருவத்தில் சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், உளுந்து, பாசி கம்பு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.

பாதிப்பை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
பாதிப்பை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

இவற்றில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதே போல விருதுநகர் மாவட்டத்திலும் மக்காச்சோளப் பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்தாகூர் படைப்புழுவால் ஏற்பட்டுள்ள தாக்குதலை நேரில் ஆய்வு செய்தார். அமெரிக்கன் படைப்புழுக்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

கடந்த 2019-ம் ஆண்டு கோடை உழவு, வேப்பம் பிண்ணாக்கு இடுதல், விதைநேர்த்தி, வரப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி, இனக்கவர்ச்சிப் பொறிகள் போன்ற பல்வேறு ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறைகள் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஓரளவு மகசூலைப் பெற்றனர். படைப்புழுத் தாக்குதல் தென்பட்டால் `கலவைக் கரைசலை'த் தெளித்து கட்டுப்படுத்தலாம் என இயற்கை முன்னோடி விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயியான ஏகாம்பரத்திடம் பேசினோம், ``இயற்கை விவசாயத்தில் பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த மூலிகைப்பூச்சிவிரட்டி, ஐந்திலைக்கரைசல், பத்திலைக்கசாயம், கலவைக்கரைசல், இஞ்சி-பூண்டு-மிளகாய்க்கரைசல், அக்னி அஸ்திரம், தேமோர்க்கரைசல் போன்ற பலவகைக் கரைசல்களைத் தெளிப்பது வழக்கம்.

ஏகாம்பரம்
ஏகாம்பரம்

கடந்த ஆண்டு பயிர்களை நாசம் செய்த பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த கலவைக்கரசைலைத் தெளிக்கலாம் எனப் பல முன்னோடி விவசாயிகள் பரிந்துரைத்தனர். அதே கலவைக் கரைசலையே அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலுக்கும் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

அடுப்புச்சாம்பல் 2 கிலோ, வேப்பங்கொட்டை 2 கிலோ, ஆட்டுச்சாணத்தூள் 2 கிலோ, மிளகாய்த்தூள் 250 கிராம், மஞ்சள்தூள் 500 கிராம், பெருங்காயத்தூள் 50 கிராம், வசம்புத்தூள் 50 கிராம், இஞ்சி 200 கிராம், வெள்ளைப்பூண்டு 200 கிராம், சின்னவெங்காயம் 500 கிராம், சோற்றுக்கற்றாழை 7 மடல் (துண்டுதுண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்), பசுமாட்டுச் சிறுநீர் 15 லிட்டர் ஆகியவற்றை பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு ஒருநாள் முழுவதும் வைத்திருந்து அடுத்தநாள் வடிகட்டி, அந்தக் கரைசலை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

விருதுநகரில் அய்வு செய்த எம்.பி மாணிக்தாகூர்
விருதுநகரில் அய்வு செய்த எம்.பி மாணிக்தாகூர்

இதுதான் கலவைக்கரைசல். இந்தக் கலவைக் கரைசல் தயாரிக்க கூறப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு ஏக்கர் பரப்பில் தெளிப்பதற்கான அளவு. 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் கலவைக்கரைசலை ஊற்றி, நன்கு கலக்கி, மாலை நேரத்தில் கைத்தெளிப்பானால் (ஸ்பிரேயர்) தெளிக்க வேண்டும். மாலை நேரத்தில் தெளிப்பதால், இக்கரைசல் துளிகள் பயிர்களில் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.

5 முதல் 7 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து வர வேண்டும். இக்கரைசல் தெளிக்கப்பட்டவுடன் பயிர்களின் இலை, தண்டு, காய் என அனைத்துப் பாகங்களின் சுவையும் கசப்பு மற்றும் காரத்தன்மையாக மாறிவிடுவதால், இச்சுவையின் தாக்கம் தாங்காமல் வெட்டுக்கிளிகள் பயிர்களைத் திண்ணாது. அப்படியே கடித்து சாப்பிட்டாலும், கார, கசப்புத்தன்மையால் செரிமானப் பிரச்னை ஏற்பட்டு அவை உயிரிழக்கும். இதனால், அவற்றின் முட்டை உற்பத்தி தடை படுவதால் இனவிருத்தியைத் தடுக்கலாம். விவசாயிகள், தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இக்கரைசலைத் தெளிக்கலாம்.

படைப்புழுத் தாக்குதல்
படைப்புழுத் தாக்குதல்

இக்கரைசலைத் தயாரிக்கும் செலவு மிகக்குறைவுதான். இது எவ்வித ரசாயனக் கலப்புமில்லாத, முற்றிலும் இயற்கையான கரைசல் என்பதால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் போல பயிர்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை. இதன் மூலம் வெட்டுக்கிளித் தாக்குதலை மட்டுமல்ல, தீமை செய்யும் பூச்சிகள், புழுக்களையும் கட்டுப்படுத்தலாம். காய்கறிகள், பழப்பயிர்கள், நெல், வாழை, பூக்கள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் இக்கரைசலைத் தெளிக்கலாம்” என்றார்.