Published:Updated:

நிவர் புயல்: மழை நீரில் மூழ்கிய பயிர்கள்... உடனடியாக விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?

சேதமடைந்த நெற்பயிர்கள்
சேதமடைந்த நெற்பயிர்கள் ( படம்: விகடன் / லோகேஸ்வரன்.கோ )

விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைத்துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பெரும் அச்சத்தோடு எதிர்பார்க்கப்பட்ட நிவர் புயல் கரையைக் கடந்துவிட்டது. நல்லவேளையாக, பெரிய அளவில் சேதம் இல்லை. ஆனாலும் கூட ஒரு சில பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்ததால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்கள். குறிப்பாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்ததால், நெற்பயிர்கள் சில இடங்களில் மூழ்கி உள்ளன. இவ்வாறு தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிரை எப்படி பாதுகாக்க வேண்டும் என முக்கிய ஆலோசனையை வழங்குகிறார் தஞ்சை மாவட்டம் தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாஸ்கரன்

விவசாயி பாஸ்கரன்
விவசாயி பாஸ்கரன்

``நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால், மண்ணில் தளர்வு ஏற்பட்டு, வேர்கள் ஆட்டம் கண்டிருக்கும். பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே விவசாயிகள் தங்களது நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வடிகட்ட வேண்டும். மண் இறுகத் தொடங்கியதும், புதிய வேர்கள் கிளர்ந்தெழும். இதை வெற்றிகரமாக வளர்த்தெடுக்க, ஏக்கருக்கு 5 கிலோ கடலைப் புண்ணாக்கும், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கும் கலந்து தெளிக்கலாம்.

இதனால் நுண்ணுயிரிகள் பெருகி, பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு பூச்சி, நோய்த்தாக்குதலும் தடுக்கப்படும்” என்றார்.

விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைத்துறையும் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார் வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி. அவை...

1. நெற்பயிர் மூழ்கியுள்ள தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரை வடித்திட விவசாயிகள் மத்தியில், துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

2. வயலில் தேங்கியுள்ள நீரை வயல் மட்டத்தைவிட ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும்.

3. வடிகால் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காது வடியவிடும் வகையில் பொதுப்பணித் துறையினரை அணுகி தக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

சேதமடைந்த வாழை மரங்கள்
சேதமடைந்த வாழை மரங்கள்
படம்: விகடன் / லோகேஸ்வரன்.கோ

4. நெற்பயிர் இளம் பயிராக இருப்பதால் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை:

இளம்பயிர் நீரின் தேக்கத்தால் தழைச் சத்து மற்றும் துத்தநாகச் சத்து குறைபாடு ஏற்பட்டு, இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறக்கூடும். எனவே, தண்ணீரை வடித்தவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். நடவு முடிந்து, இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி நாற்றுகள் அழுகிவிட்டால், இருப்பில் உள்ள நாற்றுகளைக் கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும். இருப்பில் நாற்றுகள் இல்லாவிட்டால், அதிக குத்துகள் உள்ள நடவுப் பயிரைக் கலைத்து, பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட வேண்டும்.

5. நெற்பயிர் தண்டு உருளும் பருவம் அல்லது பூக்கும் பருவத்தில் இருந்தால், ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை, 10 லிட்டர் நீரில் கரைத்து வைத்து, மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து இலைவழியாக உரமிட வேண்டும்.

6. தண்ணீர் தேக்கத்தால் பயிர் வளர்ச்சி குன்றிக் காணப்பட்டால், தண்ணீரை வடித்தவுடன், ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கையும் கலந்து ஒருநாள் இரவு வைத்திருந்து அதனுடன் 17 கிலோ பொட்டாஷ் உரத்தையும் கலந்து மேலுரமாக வயலில் போட வேண்டும்.

சேதமடைந்த நெற்பயிர்கள்
சேதமடைந்த நெற்பயிர்கள்
படம்: விகடன் / லோகேஸ்வரன்.கோ

7. பூச்சி நோய்த் தாக்கம் இருந்தால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை:

நெற்பயிர் அதிக நாள்கள் நீரில் மூழ்கி இருந்தால், குருத்து ஈ, இலைச் சுருட்டுப் புழு, பச்சை தத்துப்பூச்சி போன்ற பூச்சி தாக்குதலும், குலைநோய், இலையுரை கருகல் நோய்த் தாக்குதலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு பூச்சி அல்லது நோய்த் தாக்குதல் தெரிந்த உடனேயே, அருகில் உள்ள துறை அலுவலர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் பரிந்துரைகளைப் பெற்று, அதற்கேற்றவாறு பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

8. இது குறித்து, மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள வேளாண்துறை அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு