Published:Updated:

எப்போதும் கைவிடாத பந்தல் சாகுபடி... எப்படி ஆரம்பிப்பது?

bittergourd
bittergourd

எந்த நிலையிலும் நஷ்டத்தைக் கொடுப்பதில்லை என்பதால் பெரும்பாலான விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது பந்தல் காய்கறிச் சாகுபடி. இதை எப்படித் தொடங்குவது?

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் பல நேரங்களில் வருமானத்தை வாரிக்கொடுத்தாலும், சில நேரங்களில் காலையும் வாரிவிட்டுவிடும். ஆனால், எந்த நிலையிலும் நஷ்டத்தைக் கொடுப்பதில்லை என்பதால் பெரும்பாலான விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது பந்தல் காய்கறிச் சாகுபடி. இதில் பல நன்மைகள் இருந்தாலும், ஆரம்பகட்ட பந்தல் அமைக்கும் செலவு காரணமாக, பந்தல் சாகுபடியில் விருப்பம் இருந்தாலும், தயங்கி நிற்கிறார்கள் பெரும்பாலான விவசாயிகள். ஆனால் பந்தல் சாகுபடியை முறையாகச் செய்தால் அதிகமான லாபம் எடுக்கலாம். அதற்கான வழிகாட்டி இதோ.

Vikatan

உழவு மற்றும் பந்தல்

'முதலில் 5 கலப்பை அல்லது 8 கலப்பை கொண்டு இரண்டு உழவு செய்யவும். பின்னர் கல்தூண்களை ஊன்றி கம்பிகளைக் கட்டி பந்தல் அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க கிட்டத்தட்ட 1,50,000 ரூபாய் வரை செலவாகும். ஒருமுறை கல்பந்தல் அமைத்து விட்டால்... கம்பிகள் 50 வருடம் வரையிலும், தூண்கள் 100 வருடங்களுக்கு மேலும் பயன் தரும். பந்தல் அமைத்த பிறகு, 16 அடி இடைவெளியில் தென்வடலாக பார் அமைத்து, சொட்டு நீர்ப்பாசனக் கருவிகளைப் பொருத்திக் கொள்ளவேண்டும். ஏக்கருக்கு தலா, ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை 12 டன் தொழுவுரத்தில் கலந்து, பார் பாத்திகளுக்குள் தூவி, 5 அடி இடைவெளியில் இரண்டரை அடி அகலம் கொண்ட வட்டக்குழிகளை அமைக்கவேண்டும்.

விதைநேர்த்தி அவசியம்

நாட்டு விதைகளான, பாகற்காய், புடலங்காய், பீர்க்கன்காய், சுரைக்காய், கோவைக்காய், வெள்ளரிக்காய், அவரைக்காய் ஆகியவற்றில் நமக்குத் தேவையான விதைகளை, தரமான நாட்டு விதைகளை அரைலிட்டர் பஞ்சகவ்யாவில் இட்டு, 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்து, நிழல் தரையில் பரப்பி, உலர வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும்போது முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் படுக்கை வசமாக நடவு செய்து, ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த 16-ம் நாளில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாள்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

Gourd
Gourd

நீர்ப்பாசனம்

அதிகாலை அல்லது மாலை 1 முறை ஏக்கருக்கு 15 முதல் 20 நிமிடம் தண்ணீர் தினமும் விட்டால் போதும். காய்கள் நன்கு பிடித்தவுடன் தினமும் காலையிலும், மாலையிலும் தண்ணீர் பாய்ச்சினால் காய்கள் எடை கூடும். அதிக வெப்பம் சுமார் 30 முதல் 40 டிகிரி உள்ளபோது இதுபோல் இரண்டு தடவை தண்ணீர் பாய்ச்சவும்.

வளர்ச்சிக்குப் பிண்ணாக்கு, பூச்சிக்குப் புளித்த மோர்

ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், ஒவ்வொரு செடியின் தூரிலும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசலை ஊற்ற வேண்டும். நடவு செய்த 18-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு, 250 மில்லி அரப்பு-மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, அனைத்துச் செடிகள் மேலும் படும்படி விசைத்தெளிப்பான் மூலம் புகைபோல் தெளிக்க வேண்டும். 23-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து செடிகள் மேல் செழிம்பாகத் தெளிக்க வேண்டும்.

நடவிலிருந்து 20 நாள்களுக்கு ஒரு முறை, 100 மில்லி புளித்த மோர், 50 கிராம் சூடோமோனஸ் ஆகிய இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவைப்படும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் மற்றும் அசுவிணி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, செடிகள் ஒரே சீராக வளர உதவி செய்கிறது. நடவுசெய்த 60-ம் நாளுக்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 200 மில்லி புளித்த மோர், 100 கிராம் சூடோமோனஸ் என அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும். இதைத் தெளித்து வந்தால், சாம்பல் நோய் மற்றும் வைரஸ் தொற்றுகள் இருக்காது.

26, 27-ம் நாள்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், ஆறு லிட்டர் மீன் அமிலம், 70 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு செடிக்கும் அரைலிட்டர் அளவுக்கு நேரடியாக ஊற்றவேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படும். 30-ம் நாளுக்குள் கொடிகளை கொம்பில் படரவிட வேண்டும். கொம்புக்குப் பதிலாக கெட்டியான காடா நூலை கம்பியில் இழுத்துக்கட்டியும் படரவிடலாம். திசைமாறிப்போகும் கூடுதல் பக்கக் கிளைகளை கவாத்து செய்யவேண்டும்.

60-ம் நாளில் 100 மில்லி அரப்பு-மோர் கரைசல், 100 மில்லி தேங்காய்ப்பால், 100 மில்லி இளநீர், இவற்றுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால், பெண்பூக்கள் உதிராமல் இருப்பதோடு, பூஞ்சண நோய்த் தாக்குதலும் இருக்காது.

Grabbucket
Grabbucket

பூச்சிகளுக்குப் பொறிகள்

பந்தலுக்கு உள்பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் விளக்குப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பச்சைப்புழுக்கள், காய்துளைப்பான்கள் போன்றவை கட்டுப்படும். பந்தலுக்குள் இரண்டு மூன்று இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பந்தல் காய்கறிகளைத் தாக்கும் குளவிகளைக் கட்டுப்படுத்தலாம் இந்தப் பொறிக்குள் சென்று மாட்டிக்கொண்டு அவை இறந்துவிடும்.

இதே பராமரிப்புதான் அனைத்து வகை பந்தல் காய்கறிகளுக்கும். ஆனால், பாகலுக்குக் கொஞ்சம் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். உதாரணமாக புடலை சாகுபடியில், நடவுசெய்த 65-ம் நாளில் இருந்து காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 140 நாள்கள் வரை காய்ப்பு இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 40 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும். நாம் விதைக்கும் பந்தல் காய்கறிகளிலிருந்தே, அடுத்த போகத்துக்கு உரிய விதைகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மீண்டும் மீண்டும் விதைக்காக செலவு செய்வது மிச்சம்.

எப்போதும் விலை குறையாத ஆர்கானிக் காய்கறிகள்... காரணம் இதுதான்!

மூடாக்கு மற்றும் விற்பனை

செடிகள் உள்ள பாத்திகளில் நம்மிடம் உள்ள கழிவுகள் போட்டு மூடி சூரிய வெப்பத்தை தடுப்பதன் மூலம் ஈரப்பத்தை காக்கலாம். மல்சிங் ஷீட் கொண்டும் செய்யலாம். களைகளும் கட்டுப்படும், ஈரப்பதமும் பாதுகாக்கும். ஒருநாள் இடைவெளியில் காலை சூரிய உதயத்திற்கு முன் காய்களை அறுவடை செய்து நிழலில் வைத்து சந்தைக்கு அனுப்பவும். சந்தை வாய்ப்புகள் பற்றி கேட்டு அறிந்து விற்பனை செய்வது கூடுதல் வருமானம் கொடுக்கும்.

அடுத்த கட்டுரைக்கு