வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளின் வளர்ச்சிக்கு சில பராமரிப்பு முறைகளும், உரம் வைத்தலும் மிக முக்கியம். குறிப்பாக, பஞ்சகவ்யா இடுதல், இலைகளை வெட்டிவிடுதல், தேமோர் கரைசல் இடுதல் இவையெல்லாம் மிக முக்கியமான விஷயங்களாகும். அதில் சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார், `ஸ்ரீ கார்டன் நீட்ஸ்' நிறுவனர் ஸ்ரீபிரியா கணேசன்.
1. நாம் ஆரம்பத்தில் உரம், மண் கலவை அனைத்தும் கலந்துதான் விதை போட்டிருப்போம். இருந்தாலும், சில வழிமுறைகளைப் பின்பற்றுவது செடிகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. செடி வளர ஆரம்பித்ததும், சில இலைகள் துளிர்த்திருக்கும் காலத்தில், மேலே வெட்டிவிட (ட்ரிம்) வேண்டும். இதனால் கிளைகள் அதிகமாகும், செடியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
2. அடுத்ததாக, செடிகள் வளர்ந்து காய்கறிகள் தரும் காலத்தில் மாட்டுச்சாணம் அல்லது வெர்மிகம்போஸ்ட் (Vermicompost) இட வேண்டும்.
3. காய்கறிச் செடிகளில் பூக்கள் காய் வைப்பதற்கு முன்பே உதிர்ந்துவிடும். இது பலரின் மாடித் தோட்டத்தில் நடப்பதுதான். இதைத் தவிர்க்க, தேமோர் கரைசலை நீரில் கரைத்து செடிகளின் மீது ஸ்பிரே செய்து விட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
4. மிளகாய், தக்காளி போன்ற செடிகளில் இலையின் ஓரங்கள் சுருண்டு இருப்பது போன்று இருக்கும். இதைச் சரி செய்ய, புளிச்ச மோரில் கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். 1 லிட்டர் தண்ணீரில் 1/4 டம்ளர் இந்தக் கலவையைச் சேர்த்து காலை, மாலை என இரு வேளைகளுக்கு, மூன்று நாள்கள் தெளித்து வரவும்.
5. செடியில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும் 15 நாள்களுக்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும். நன்றாக வளர்ந்த செடிகளுக்கு 5 மி.லி வேப்ப எண்ணெய், கூடவே சிறிதளவு திரவ சோப்பை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். சோப்புக்குப் பதிலாக பூந்திக்கொட்டையை அரைத்து, நீரில் இதே போன்ற அளவில் கலந்தும் தெளிக்கலாம். இதனால் பூச்சித் தொல்லைகள் இருக்காது. கீரை, சிறிய அளவிலான செடிகள் போன்றவற்றுக்கு 1 மி.லி வேப்ப எண்ணெய்யை, ஒரு லிட்டர் நீரில் கலந்து, கூடவே சில துளிகள் புளிச்ச மோர் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். தொடர்ந்து இதேபோன்று 15 நாள்களுக்கு செய்து வந்தால் பூச்சிகளின் தொல்லைகள் குறையும்.
6. செம்பருத்திச் செடிகளில் மாவுப்பூச்சி தொந்தரவு இருந்தால், அவற்றின் மீது குளிர்ந்த நீரை ஸ்பிரே செய்யலாம். ஏனென்றால், மாவுப் பூச்சிகளுக்கு குளிர் என்றால் எதிரி. அதனால் குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும். இதனுடன் கூடவே, பழைய, பயன்பாடற்ற டூத்பிரஷைக் கொண்டு மாவுப் பூச்சிகள் இருக்கும் இடத்தைத் தேய்த்துவிட்டு குளிர்ந்த நீரைத் தெளிக்கலாம். பூச்சிகள் அதிகமாக இருந்தால் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். அரிசி கழுவிய நீரை, நீரில் கலந்து தெளித்தாலும் மாவுப் பூச்சிகள் குறையலாம். பூச்சிகள் மிக அதிகமாக இருந்தால், அந்த இலைகளை வெட்டிவிட்டு மேலே கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி வர மாவுப் பூச்சிகள் முற்றிலும் குறைந்துவிடும்.

7. மழைக்காலங்களில் அதிக உரங்கள் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் திரவமாகத் தெளிப்பது நல்லது. இதற்கு, வெர்மிகம்போஸ்ட்டை இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு, ஐந்து லிட்டர் நீரில் சேர்த்து, நிழலில் மூன்று நாள்களுக்கு மூடி வைக்கவும். பின் அதனுடன் தண்ணீர் கலந்து செடிகளின் மீது ஸ்பிரே செய்யலாம் அல்லது செடிகளுக்கு ஊற்றலாம். இரண்டுமே நல்லதுதான். இதேபோன்று மாட்டுச்சாணத்தையும் ஊறவைத்து மூன்று நாள்களுக்குப் பின் அதை எடுத்து தண்ணீருடன் கலந்து ஸ்பிரே செய்யலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
8. அடுத்ததாக கிட்சன் கழிவுகள். வீட்டில் கழிவுகளாக மிச்சம் ஆகும் காய்கறிக் கழிவுகள் மற்றும் பழத் தோல்களை ஒரு பக்கெட்டில் போட்டு, வெல்லம் ஒரு கைப்பிடி அளவு போட்டு, இரண்டு நாள்களுக்குப் பின் அதில் உள்ள நீரை வடிகட்டி, அதை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம். அல்லது பழத்தோல், காய்கறிக் கழிவுகளை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, காலையில் தண்ணீரில் ஊறவைத்து, மாலையில் அந்த நீரை வடிகட்டி தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம்.
9. வேப்பிலை, காய்கறிகள், அரிசி கழுவிய நீர், பருப்பு கழுவிய நீர் இவற்றை எல்லாம் தண்ணீரில் கலந்து செடிகளுக்குப் பயன்படுத்தலாம். வாழைப்பழ தோலை சிறிது சிறிதாக கட் செய்து, அதே அளவு வெல்லத்தை எடுத்து, இரண்டையும் தண்ணீரில் 20 நாள்களுக்கு ஊறவைத்து, அதன் பின் அந்த நீரை தண்ணீருடன் சேர்த்துக் கலந்து அதைச் செடிகளுக்கு பயன்படுத்தும்போது நல்ல வளர்ச்சி இருக்கும்.
10. செடி பசுமையாகச் செழித்து வளர ஈயம் கரைசல் எனப்படும், பப்பாளிப் பழம், வாழைப்பழம், இவற்றுடன் வெல்லத்தைக் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துக்கொண்டு 20 நாள்கள் ஊறவைத்த பின் அதை எடுத்து தண்ணீருடன் கலந்து செடிகளில் ஸ்பிரே செய்தால் அதிகமான நன்மையைத் தரும்.
11. ஊட்டச்சத்துகளுக்கும், அதிகப்படியான வளர்ச்சிக்கும் பஞ்சகவ்யா தெளிக்கலாம். பஞ்சகவ்யா வாங்கி வந்ததும் பாட்டிலில் இருக்கும் வாயுவை வெளியேற்ற வேண்டும். 20 மி.லி பஞ்சகவ்யாவை வடிகட்டி எடுத்துக்கொண்டு அதை 2 லிட்டர் நீருடன் கலந்து, செடிகளில் தெளிக்க வேண்டும். முக்கியமாக இலைகளுக்கு அடியில் தெளிப்பது நல்லது.