Published:Updated:

மாட்டுச் சிறுநீரில் மதிப்புக்கூட்டல்! - அர்க் விற்பனையில் அசத்தல் வருமானம்!

அர்க் உற்பத்தி
பிரீமியம் ஸ்டோரி
அர்க் உற்பத்தி

கால்நடை

மாட்டுச் சிறுநீரில் மதிப்புக்கூட்டல்! - அர்க் விற்பனையில் அசத்தல் வருமானம்!

கால்நடை

Published:Updated:
அர்க் உற்பத்தி
பிரீமியம் ஸ்டோரி
அர்க் உற்பத்தி

நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கும் பால், சிறுநீர், சாணத்திலிருந்து பல்வேறு பொருள்கள் மதிப்புக்கூட்டப்படு கின்றன. அதில், சிறுநீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கிப் பெறுவதன் மூலம் கிடைக்கும் ‘அர்க்’ மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்த அர்க்கை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது பத்மனேரி. அங்குள்ள அவரது வீட்டில் காலை வேளையில் மாடுகளை மேய்ச்சலுக் காக அனுப்பிக்கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். “என்னோட சொந்த ஊரே இதுதான். டிப்ளோமா கம்ப்யூட்டர் டெக்னாலஜி படிச்சுட்டு டெவலப்பரா வேலைக் குச் சேர்ந்தேன். பல நாடுகள்ல வேலை பார்த்தேன். இப்போ சென்னையில ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ‘சொல்யூஷன் ஆர்க்கிடெக்காக’ இருக்கேன். மூணு வருஷமா, சொந்த ஊர்ல வீட்ல இருந்தே வேலை பார்க்கிறேன்.

பாலசுப்பிரமணியன்
பாலசுப்பிரமணியன்

தாத்தா காலத்துல எங்க வீட்ல மட்டுமல்ல, ஊர்ல எல்லா வீடுகள்லயும் நாட்டு மாடுகள் இருந்துச்சு. தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைச்சுட்டுப் போறதைப் பார்க்கும்போதும், எங்கவூரு மலையடிவாரத்துல மாடுகள் மேயுறதைப் பார்க்கும் போதும் சந்தோஷமா இருக்கும். பால் உற்பத்தி என்ற ஒற்றை நோக்கத்துல எல்லாருமே மாடுகளைப் பார்க்க ஆரம்பிச்சாங்க. அதனால, நாட்டு மாடுகளோட எண்ணிக்கை குறைஞ்சு, கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகமாச்சு. அப்பா ஹோட்டல்ல மேனேஜரா வெளியூர்ல வேலை பார்த்ததுனால, மாடு வளர்ப்புல அதிக ஆர்வம் காட்டல.

இங்கிலாந்தில் நான் வேலை பார்த்தப்போ அடிக்கடி நெஞ்சு வலி வந்துச்சு. எவ்வளவோ டெஸ்ட் எடுத்துப் பார்த்தும், வெளிநாட்டு ஆங்கில மருந்து மாத்திரை எடுத்துக்கிட்டும் எந்தப் பலனும் இல்ல. என்ன காரணம்னும் தெரியல. அந்த நேரத்துலதான் எங்கூட வேலை பார்த்த நண்பர் சிவசுப்பிரமணியன், ‘நாட்டு மாட்டுச் சிறுநீர்ல மருத்துவக் குணம் இருக்கு. அதைக் கொதிக்க வைக்கும்போது ஆவியாவதன் மூலம் கிடைப்பதுதான் அர்க். அந்த அர்க்கை குடிச்சாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சி செஞ்சு பாருங்க’ன்னு சொன்னார். நானும் அர்க்கைக் குடிச்சேன். ஒரு வாரத்துலயே உடல்ல நல்ல முன்னேற்றம் தெரிஞ்சது.

மாடுகள்
மாடுகள்


அதுல இருந்து இப்போ வரைக்கும் தொடர்ந்து அர்க் குடிச்சுட்டு வர்றேன். அர்க்கைக் குடிச்சு பலன் பெற்ற பிறகுதான் அதைப் பற்றி முழுமையா உணர்ந்தேன். மும்பையில ஒரு கோசாலையில், ‘அர்க்’ தயாரிப்பு முறையைக் கத்துக்கிடேன். நாட்டு மாட்டுச்சாணம், சிறுநீரிலிருந்து பஞ்சகவ்யா, சோப்பு, ஷாம்பு, விபூதி, ஹேர் ஆயில், சாம்பிராணி, கொசு விரட்டி, டிஸ்வாஷ் பவுடர்னு 25-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டுதல் பொருள்கள் தயாரிக்குறதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

இந்த நிலையில சொந்த ஊருக்கே வந்து வேலை செய்யலாம்னு மூணு வருஷத்துக்கு முன்னால இங்கயே வந்துட்டேன். பழையபடி, நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்கலாம்னு முடிவெடுத்து ரெண்டு நாட்டுப்பசுவும், ரெண்டு கன்னுக்குட்டியும் வாங்கினேன். ‘என்னடா பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்க? ஒரு நாளைக்கு நாலு லிட்டருக்கு மேல பால் தராத நாட்டுமாட்டை வாங்கியிருக்க? இதை வச்சு எப்படிப் பொழைக்க முடியும். பால் மாட்டால முன்னேறுனதைத்தான் கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, நீ நாட்டு மாட்டை வாங்கி முன்னேற முடியாம நஷ்டப்படப் போற’ன்னு சொந்தக்காரங்க திட்டினாங்க.

அர்க் தயாரிக்கும் உபகரணங்களுடன்
அர்க் தயாரிக்கும் உபகரணங்களுடன்


ஆனா, நானும் மனைவியும் நாட்டுமாடு வளர்ப்புல ரொம்ப உறுதியா இருந்தோம். அதுக்கு வீட்டுல அம்மா, அப்பாவும் ஒத்துழைச் சாங்க. நாட்டு மாட்டுல இருந்து கிடைச்ச பாலை வீட்டுத் தேவைக்காக வச்சுக்கிட்டோம். எனக்குப் பாலைவிட, சிறுநீர்தான் ரொம்ப முக்கியமாத் தெரிஞ்சது. மாடு வாங்கின ஒரு மாசத்துலயே அர்க் தயாரிப்பைத் தொடங்கிட்டேன். ஒரு சாகிவால், 5 தார்பார்க்கர், 3 மலைமாடுகள், 3 காங்கேயம், 3 தென்பாண்டி நெட்டைனு 15 நாட்டுப் பசுமாடுகளும் 3 கன்னுக்குட்டிகளும் இப்ப எங்ககிட்ட இருக்கு” என்றவர் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டுத் தொடர்ந்தார்.

மாதம் 85 லிட்டர்

‘‘ஒரு நாளுக்குச் சராசரியா 3 முதல் 4 லிட்டர் வரை அர்க் கிடைக்கிது. மாசம் 85 லிட்டர் குறையாம கிடைக்கிது. ஒரு லிட்டர் அர்க், ரூ.400-க்கு விற்பனையாகுது. அந்த வகையில மாசம், ரூ.34,000 வருமானமாக் கிடைக்குது. மின்சாரக்கட்டணம், பிளாஸ்டிக் பாட்டில்னு, ஒரு லிட்டருக்கு ரூ.75 செலவாகுது. அந்த வகையில மாசம், ரூ.6,375 செலவாகுது. மீதமுள்ள ரூ.27,625 லாபமாக் கிடைச்சுட்டு இருக்கு. வீட்ல இருந்துகிட்டே கம்பெனி வேலைகளைப் பார்க்கிறதுனால, தினமும் ஒருமுறை மட்டுமே என்னால அர்க் தயாரிக்க முடியுது.

அர்க் அளவிடும் பணி
அர்க் அளவிடும் பணி


தினமும் முழு நேரமா அர்க் தயாரிச்சா, ஒரு நாளைக்கு மூணு, நாலு முறை தயாரிக்கலாம். அதுக்கு 25 மாடுகள்வரை தேவைப்படும். அதன் மூலம் கிடைக்கிற சிறுநீரை வெச்சி இதைவிட மூணு மடங்கு அர்க் கிடைக்கும். திருநெல்வேலி மட்டுமல்லாம, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங் களுக்கும், புனே, ஹைதராபாத், மும்பை, பெங்களூருனு வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிட்டு வர்றேன். அர்க் தயாரிக்கப் பயன்படுற கண்ணாடிக் குடுவைகள், தாங்கிகள், மின் அடுப்பு, குளிர்விப்பான், மண் பானைகள்னு ஆரம்பக்கட்ட செலவு 35,000 ரூபாய் ஆகும். அந்தச் செலவு முதல்முறை மட்டும்தான்” என்றவர் நிறைவாக,

‘‘நாட்டு மாட்டுச்சாணம், சிறுநீரிலிருந்து 25-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கலாம்.”


சாபமே வரமாகும்

“சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு; பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு? என்ற வரிகளுக்கு ஏற்ப நாட்டுமாடு வளர்ப்பவரைப் பெரிய செல்வந்தனாகப் பார்க்கப்பட்ட காலம் மாறி, கூடுதலாகப் பால் தர்ற கலப்பின மாடுகளை வளர்ப் பவர்களைத்தான் இப்ப செல்வந்தர்களாகப் பார்க்குறாங்க. ‘பசுமாடு’ன்னு சொன்னாலே கண்ணுல தெரியுறது பால் மட்டும்தான். அதன் சாணம் சிறுநீரை மதிப்புக்கூட்டி அதிக வருமானம் பெறலாம். இது பலருக்கும் புரியுறதில்ல. ‘நீயெல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு’னு சொல்லுற சாப வார்த்தைகளைக்கூட நாட்டுமாடு வளர்ப்பு மூலமா வரமாக்கலாம்” என்றார் மகிழ்ச்சியுடன்.


தொடர்புக்கு, பாலசுப்பிரமணியன்,

செல்போன்: 88382 61486

உடல் கழிவுகளை நீக்கி சமநிலைப்படுத்தும் ‘அர்க்!’

‘கோமூத்திர அர்க்’கின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து திருநெல்வேலி யைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருநாராயணனிடம் பேசினோம், “நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் மட்டுமல்லாமல், எருமை, வெள்ளாடு, யானை, ஒட்டகம், குதிரை, கழுதை ஆகியவற்றின் சிறுநீரும் சித்த மருத்துவத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நாட்டுப் பசுமாட்டின் சிறுநீர்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை, உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.

திருநாராயணன்
திருநாராயணன்


ரத்தசோகை, உடலில் ஏற்படும் வீக்கங்கள், மஞ்சகாமாலையின் ஆரம்ப நிலை, பல் நோய்கள், ஊறல், அரிப்பு போன்ற தோல் நோய்களுக்கு வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம் என, ‘சித்த மருத்துவ குணபாடம்’ நூலில் கூறப்பட்டுள்ளது. இச்சிறுநீரை 30 முதல் 50 மி.லி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். 250 மி.லி சிறுநீரில் ஒரு கடுக்காயின் தோலை 4 முதல் 6 மணி நேரம் ஊறவைத்து. வடிகட்டி 30 மி.லி வெறும் வயிற்றில் 5 முதல் 7 நாள்கள் தொடர்ந்து எடுத்துக் வந்தால் மலச்சிக்கல் நீங்கி வயிறும் சுத்தமாகும். நாட்டுமாட்டுச் சிறுநீரை ஒன்றரை மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். நேரம் தாண்டினால், அதன் வீரியத் தன்மை குறைவதுடன் அதிக கசப்பு ஏற்பட்டு குடிக்க முடியாமல் போய்விடும். ‘உலோக பாடாண மருந்துகள்’ தயாரிப்பதற்கு முன்னர், உலோகத்தையும் பாடாணங்களையும் தூய்மைப்படுத்துதலுக்கு நாட்டுமாட்டுச் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. ‘வாலை வடித்தல் முறை’யில் நாட்டுமாட்டுச் சிறுநீரைக் கொதிக்க வைத்து ஆவியை குளிர்விப்பதன் மூலம் பெறுவதை அர்க் என்கிறோம். கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தினமும் நாட்டுமாட்டுச் சிறுநீர் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. நாட்டுமாட்டுச் சிறுநீர் கிடைக்காதவர்கள் அர்க்கை எடுத்துக் கொள்கிறார்கள்.

10 முதல் 20 மி.லி அர்க்-ஐ, 100 முதல் 200 மி.லி தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். முதலில் 15 நாள்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு, பின்னர் 7 நாள்கள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 15 நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு 15 நாள்கள் பயன்பாட்டுக்குப் பிறகும், 7 நாள்கள் இடைவெளி இருக்க வேண்டும் நாட்டுமாட்டுச் சிறுநீருக்கு சொல்லப்பட்ட அனைத்து பலன்களும் இதற்கும் பொருந்தும். உடலில் கழிவுகளை நீக்கி உடலைச் சமச்சீராக வைக்கிறது. ‘புற்றுநோய்’ குணமாவதாகவும்கூட பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சித்த மருத்துவத்தைப் பின்பற்றி வருபவர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பினர் மத்தியிலும் கோமூத்திர அர்க் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

தொடர்புக்கு, திருநாராயணன், செல்போன்: 94899 60586

மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள்
மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள்

மேய்ச்சல் முறையே சிறந்தது

மாடுகள் பராமரிப்பு பற்றிப் பேசிய பாலசுப்பிரமணியன், “அர்க் தயாரிக்கத் தினமும் காலையில மாடுகள் முதல் தடவை பெய்யுற சிறுநீரைத்தான் பயன்படுத்தணும். அதுலதான், மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கு. தினமும் காலையில 4 மணியில இருந்து ஒவ்வொரு மாடா எழுப்பி விடுவேன். மாடு எழுந்திருக்கும்போதே பிரியுற சிறுநீரை பிளாஸ்டிக் பாத்திரத்தில பிடிச்சு சேகரிப்போம். 9 மணிக்கு, கொட்டகையிலிருந்து மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவோம். கொட்டகையில் சாணத்தை அள்ளி, எருக்கிடங்கில சேமிப்போம். சாயங்காலம் 6 மணிக்கு மாடுகள் வீடு திரும்பும். நெல் சாகுபடிக்காக அதிகப்படியான ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுறதால வயல்வெளி ஓரத்துல முளைச்சிருக்கும் புல்லு வரைக்கும் பாதிப்படையுது.

அதனால், மலையடிவாரங்கள்ல மட்டுமே எங்க மாடுகளை மேய்க்கிறோம். மதியம், மாலைனு ரெண்டு தடவை குளத்துல தண்ணி காட்டுவோம். ராத்திரியில புல்லை மட்டும் தீவனமாகக் கொடுக்கிறோம். மழைக்காலங்கள், மேய்ச்சலுக்குப் போக முடியாத நாள்கள்ல காலையில் அடர்தீவனம், மதியம் பசுந்தீவனம் கொடுக்கிறோம்.

நாட்டு மாடுகள், தட்பவெப்ப சூழ்நிலையைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவை. நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகம். மற்ற கால்நடைகளைப்போல மருத்துவச் சிகிச்சை எதுவும் தேவையில்ல. பசுக்களில் வீட்டுத் தேவைக்காக மட்டும் பாலைக் கறந்துவிட்டு, மீதிப் பாலைக் கன்றுகளுக்காக விட்டுடுவோம். 23 சென்ட் நிலத்துல இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். அர்க் தயாரிச்சது போக மீதமுள்ள மாட்டுச் சிறுநீரைப் பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் தயாரிக்கிறதுக்காகப் பயன்படுத்திக்கிறோம். சாணத்தைத் தொழுவுரமாப் பயன்படுத்திக்கிறோம்’’ என்றார்.

அர்க் தயாரிக்கும் உபகரணங்கள்
அர்க் தயாரிக்கும் உபகரணங்கள்

அர்க் தயாரிப்பது எப்படி?

மாடுகளிலிருந்து பிளாஸ்டிக் வாளியில் சேகரிக்கப்பட்ட சிறுநீரை வடிகட்டி கண்ணாடிப் பாத்திரத்தில் மாற்றிவிட வேண்டும். 5 லிட்டர் கொள்ளளவுள்ள கண்ணாடிக் குடுவைக்குள் 4 லிட்டர் மாட்டுச் சிறுநீர் ஊற்றி, அதை மின் அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். அந்தச் சூட்டில் குடுவைக்குள் பொங்கி வரும் சிறுநீர் ஆவியாகும். அதன் நீராவி கண்ணாடிக் குழாய் வழியாகச் சென்று மற்றொரு கண்ணாடிக் குடுவையில் சேர்கிறது. இதுதான் அர்க். 4 லிட்டர் சிறுநீர் நீராவியாவதற்கு நான்கு முதல் நான்கரை மணி நேரம் வரை ஆகும். கண்ணாடிக் குடுவைகளில் சூடு ஆறியவுடன் அதை வடிகட்டி பாட்டில்களில் சேகரிக்கலாம். கண்ணாடிக் குடுவைகள் என்பதால் அவை உடைந்துவிடாமல் மிகக் கவனமாகக் கையாள வேண்டும். தினமும், கண்ணாடிக் குடுவைகளைக் கழுவி சுத்தம் செய்த பிறகே அர்க் தயாரிக்க வேண்டும். சிலர், இரும்புக் குடுவையில் சிறுநீரைக் காய்ச்சுகிறார்கள். அப்படிச் செய்யும்போது தூய தன்மை கிடைக்காது. அதன் வீரியம் குறைவதுடன், இரும்பு, சிறுநீரும் சேர்ந்து எதிர்வினை புரிய வாய்ப்புள்ளது. அதனால், அர்க் தயாரிப்புக்குக் கண்ணாடிக் குடுவையே சிறந்தது.

கண்ணாடிக் குடுவை சுத்தப்படுத்த பயோ என்சைம்

ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் 300 கிராம் எலுமிச்சை பழத்தோல் அல்லது ஆரஞ்சு பழத்தோல், 100 கிராம் நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றைப் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி இறுக்கமாக மூடி விட வேண்டும். 30 நாள்கள் தினமும் காலையில் அந்தப் பாத்திரத்தின் மூடியைத் திறந்து மூட வேண்டும். 31-ம் நாளிலிருந்து அடுத்த 90 நாள்களுக்கு மூடியைத் திறக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். 90 நாள்களுக்குப் பிறகு ஜெல்போல மாறியிருக்கும். இதைக் கண்ணாடிக் குடுவைகளைச் சுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism