Published:Updated:

`மாடித்தோட்டத்தை குரங்குகளிடமிருந்து இப்படித்தான் காப்பாற்றினோம்!' - ஓர் அனுபவ பகிர்வு

கம்பிவலைக்குள் மாடித்தோட்டம்
கம்பிவலைக்குள் மாடித்தோட்டம்

எல்லாம் மூன்று மாதங்கள்தான். மீண்டும் குரங்குகள் படையெடுக்கத் தொடங்கின. நாங்கள் வெறுத்துப்போனோம். ஆனால், இந்த முறை இதற்கு கண்டிப்பாக முடிவு கட்ட வேண்டும் என்று களத்தில் இறங்கினோம்.

மாடித்தோட்டம் போடுவது இன்று நகரவாசிகளிடையே இருக்கும் பெரும் கனவு. அந்தக் கனவு எனக்கும் இருந்தது. ஆனால், கணவர் அடிக்கடி மாற்றலுக்கு உள்ளாகும் வேலையில் இருந்ததால் அதற்குச் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் பல வருடங்கள் சென்னை நகரத்தின் மத்தியப் பகுதியில் வாழ்ந்துவிட்டு, நகரத்துக்கு வெளியே ஊரப்பாக்கம் பகுதியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் நல்ல காற்றோட்டமான பகுதியில் 11-வது தளத்துக்கு இடம் பெயர்ந்தோம். இந்த அடுக்குமாடி குடியிருப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம் நாங்கள் வசித்த ஃபிளாட்டுடன் அமைந்த சுமார் 600 சதுர அடி அளவிலான காலி இடம்தான். பல வருட கனவான தோட்டம் அமைப்பது நனவாவதற்கான ஓர் அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்ற உற்சாகம் பீடித்துக் கொண்டது. இந்த இடத்தைப் பயன்படுத்தி நல்ல ஒரு மாடித்தோட்டம் அமைக்கத் திட்டமிட்டோம்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

அதற்கான வேலைகளில் முழு மூச்சில் இறங்கினோம். இருபது மண்தொட்டிகள் வாங்கினோம். அரசு அலுவலகத்திலிருந்து மண்ணுக்குப் பதிலாகத் தென்னை நாரால் செய்யப்பட்ட கலவையையும் விதைகளையும் மற்ற இயற்கை உரங்களையும் வாங்கினோம். ஆட்டோமேட்டிக்காகத் தண்ணீர் பாய்ச்சுவதற்கான குழாய்களை அமைத்தோம். இந்த மாடித்தோட்ட ஏற்பாடுகளைச் செய்ய ஒரு வாரத்துக்குமேல் ஆனது. எடுத்தவுடனே கத்திரி, வெண்டை, புடலை, கீரை முதலான பல விதைகளை விதைத்துப் பராமரித்தோம். சில நாள்கள் சென்ற பிறகு அவை செடிகளாக முளைத்து வந்ததும் எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தினமும் காலையும் மாலையும் செடிகளைப் பார்வையிடுவதும்  பராமரிப்பதுமாக இருந்தோம். பிறகு ஒவ்வொரு செடியாக காய்க்கத் தொடங்கியது. 

செடிகளில் காய்கள் நன்கு காய்த்த பிறகுதான் நாங்கள் எதிர்பாராத சோதனை ஏற்பட்டது. எங்கிருந்தோ வந்த சில குரங்குகள், காய்களையும் செடிகளையும் பிய்த்து சின்னாபின்னமாக்கின. இதை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை. சரி கூகுளே துணை என்று இணையத்தில் தேடியதில், இந்தப் பிரச்னை மாடித்தோட்டம் போட்ட பலருக்கு இருப்பது தெரியவந்தது. சென்னை ஐ.ஐ.டி மாணவர்களின் விடுதியில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களையும்கூட அவர்களால் ஒன்றும் செய்ய முடியாததையும் கூட விவரித்திருந்தார்கள்.

பரங்கிக்காய்
பரங்கிக்காய்

`தெரிந்த நண்பர் பாம்புகள் இருந்தால் குரங்கு வராது’ என்றார்.

`அதற்காக பாம்பு எப்படி வளர்க்க முடியும்’ என்றேன்.

`நீங்கள் பிளாஸ்டிக் பாம்புகளை வாங்கிச் செடிகளின் அருகில் போடுங்கள்’ என்றார்.

அவர் சொன்னபடியே சில பிளாஸ்டிக் பாம்புகள் வாங்கி பல செடிகளின் மீதே வைத்தேன். ஒன்றும் பிரயோஜனமில்லை. குரங்குகள் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. மற்றொரு அன்பர் `புலி பொம்மை வாங்கி வையுங்கள்’ என்றார். அதையும் முயன்று பார்த்தேன். குரங்குகள் எதற்கும் மசியவில்லை. பட்டாசு வெடிப்பதுபோல் ஒலி எழுப்ப ஓர் உபகரணம் செய்து அதையும் உபயோகித்தோம். அதற்கும் குரங்குகள் பயப்படவில்லை. 

குரங்குகள் ஆதிக்கம் அதிகமானதில், மற்ற குடியிருப்பு வாசிகளுக்கும் பல்வேறு தொல்லைகள் ஏற்பட்டன. குரங்குகள் வீடு புகுந்து எல்லாவற்றையும் துவம்சம் செய்வது தொடர் கதையாகவே, குடியிருப்புவாசிகள் எல்லோரும் சேர்ந்து வனத்துறையை அணுகினோம். வனத்துறை அலுவலர்கள் `இலவசமாக வந்து குரங்குகளைப் பிடித்துக் கொடுக்கிறோம்’ என்றனர். ஆனால், பிடிக்கப்பட்ட குரங்குகளைக் கொண்டுசெல்ல `ஒரு மினி டெம்போவை நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர். அதற்கும் சம்மதித்தோம்.

கம்பிவலைக்குள் மாடித்தோட்டம்
கம்பிவலைக்குள் மாடித்தோட்டம்
மண்பானையிலும் மகசூல் எடுக்கலாம்... எப்படி? - மாடித்தோட்ட ஆலோசனைகள்! - வீட்டுக்குள் விவசாயம் - 19

ஒரு நல்ல நாளில் காலை 9 மணிக்கு கூண்டுடன் வந்து குரங்குகளைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, முதலில் ஒரு குரங்கு கூண்டில் மாட்டியது. அதன்பின் ஐந்து, ஆறு குரங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக மாட்டின. ஆனால், நான்கு குரங்குகள் என்ன செய்தும் மாட்டவில்லை. பிடித்த குரங்குகளைக் கூண்டில் வைத்து எடுத்து சென்றுவிட்டார்கள். பிடிக்கப்படாத குரங்குகள் `இனிமேல் இங்கு வராது. வேறெங்காவது சென்றுவிடும்’ என்றார்கள். 

அவர்கள் சொன்னது சரிதான். பிடிபடாத குரங்குகள் எல்லாம் இரண்டு, மூன்று நாள்கள் கழித்து சென்றுவிட்டன. நாங்கள் மீண்டும் மாடித்தோட்டத்தைச் சரி செய்து பராமரிக்கத் தொடங்கினோம். வெண்டையும் கத்திரியும், சுரைக்காயும், கீரையும் நன்றாக விளைய மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், எல்லாம் மூன்று மாதங்கள்தான். மீண்டும் குரங்குகள் படையெடுக்கத் தொடங்கின. நாங்கள் வெறுத்துப்போனோம். ஆனால், இந்த முறை இதற்கு கண்டிப்பாக முடிவு கட்ட வேண்டும் என்று களத்தில் இறங்கினோம்.

கட்டட வேலை செய்யும் ஒரு மேஸ்திரியை அணுகி தோட்டம் முழுவதற்கும் கம்பி வேலி அமைக்க ஏற்பாடு செய்தோம். தோட்டம் அமைந்துள்ள பகுதியின் நான்கு புறத்திலும் நல்ல திடமான இரும்புக் கம்பங்களை நிற்கவைத்து, சுவருடன் இணைத்து நான்குபுறத்திலும் இரும்பு வலைக்கம்பிகளை பொருத்தினோம். மேற்பகுதியில் ஏழு அடி உயரத்தில் வலைக்கம்பிகளால் மேற்கூரை அமைத்தோம். இந்த 600 சதுரஅடிக்கு 1 லட்சம் வரை செலவானது (மூன்று ஆண்டுகளுக்கு முன்பு). அதன் பிறகு எந்தக் குரங்கும் உள்ளே வரவில்லை. மாடித்தோட்டத்தில் வளரும் செடிகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கம்பி வளையத்துக்குள் குரங்குகளால் நுழைய முடியவில்லை என்பதே காரணம். குரங்கு தொல்லையை சமாளித்துவிட்டோம் என்ற என்ற மனநிறைவு ஏற்பட்டது. 

சென்னை நகரின் மத்தியப் பகுதியில் இருப்பவர்களுக்கு குரங்குகள் பிரச்னை இல்லை. ஆனால், சென்னையையொட்டிய புறநகர் பகுதியில் குரங்குகளோடு போராடுவது அன்றாட வழக்கம். ஆனால், அந்த தொல்லையை எளிதாக சமாளித்துவிட்டோம் என்பதே எங்களுக்குப் பெருமகிழ்ச்சி.

மாடித்தோட்டத்தில் ஜெயமங்கள்
மாடித்தோட்டத்தில் ஜெயமங்கள்
மாடித்தோட்ட சாகுபடியில ரொம்ப சுலபமான பயிர் கீரைதான்... ஏன் தெரியுமா? - வீட்டுக்குள் விவசாயம் - 8

எங்களுடைய மாடித்தோட்டம் இப்போது கம்பி வலைத்தோட்டமாக மாறிவிட்டது. நீங்கள் படத்தில் காண்பது இந்த வலைத்தோட்டத்தைத்தான். கடந்த சில ஆண்டுகளாக மாடித்தோட்டத்தில் படிப்படியாக பல முயற்சிகளை மேற்கொண்டு, தென்னைநார்க் கழிவு, மாட்டுச் சாணம் மற்றும் இயற்கை உரங்களை மட்டுமே உபயோகித்து பல வகையான காய்கறிகளை வெற்றிகரமாகப் பயிர் செய்து, அதை வீட்டுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இந்த கொரோனா காலத்தில் நல்ல சத்தான காய்கறிகள் குடும்பத்துக்கு போதுமான அளவு கிடைக்கிறது. ஆரோக்கியமே அருந்தனம். அந்த ஆரோக்கியம் நமக்கு கைகூட இயற்கை விவசாயம் அவசியம்.

- ஜெயமங்கள், மாடித்தோட்ட விவசாயி,

ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

அடுத்த கட்டுரைக்கு