Published:Updated:

30 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்சாமரச் சோளம்... இளம் விவசாயி மீட்டெடுத்தது எப்படி?

வெண்சாமரச் சோளம்
வெண்சாமரச் சோளம்

பசுமைப் புரட்சிக்கு முன்னாடி இங்கே சுற்றுவட்டாரம் முழுக்க வெண்சாமரச் சோளம் சாகுபடி செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு கதிர்ல இருந்தும் 1 கிலோ வரைக்கும் தானியம் கிடைச்சதா பெரியவங்க சொல்றாங்க

'மானாவாரி விவசாயிகள் பணப் பயிர்களைக் கைவிட்டுட்டு, முன்னோர்கள் சாகுபடி செஞ்ச சிறுதானியங்களைக் கையில் எடுக்கணும்' என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அவைதான் விவசாயிகளைத் தற்சார்போடு வாழவைக்கும் எனச் சான்றுகளோடு வழிகாட்டினார். அவரின் கருத்துப்படி சிறுதானியங்களை மீட்டெடுத்து, பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலூகா, பேரளி கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி நல்லப்பன்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு, காலப்போக்கில் கைவிடப்பட்ட வெண்சாமரச் சோளத்தை மீண்டும் மீட்டெடுத்து சாகுபடி செய்திருக்கிறார். வெண்சாமரச் சோளத்தைப் பார்க்கும் ஆவலில் அவரைச் சந்திக்கச் சென்றோம். எட்டடிக்கு மேல் உயரமாக வளர்ந்திருந்த வெண்சாமரச் சோளப் பயிர்கள், காற்றில் அசைந்தாடி நம்மை வரவேற்றன. பயிர்களுக்குள் உலவிக்கொண்டிருந்த நல்லப்பன் உற்சாகமாக வரவேற்றார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்சாமரச் சோளம்... இளம் விவசாயி மீட்டெடுத்தது எப்படி?

"இந்தக் கதிர்களைப் பாருங்க. நல்லா வாளிப்பா சிலிர்த்துக்கிட்டு இருக்கு. முழுமையா பால் புடிச்சி, கதிர்கள் முற்ற ஆரம்பிச்சிருக்கு. இப்பவே கதிர்கள் வெள்ளை நிறத்துலதான் இருக்கு. இன்னும் முழுமையா முதிர்ச்சி அடைஞ்சு, அறுவடை நேரத்துல இன்னும் நல்லா வெள்ளை நிறத்துல மாறிடும். 'மன்னர்களுக்கு வீசக்கூடிய வெண்சாமரம் மாதிரி இந்தக் கதிர்கள் இருக்குறதுனாலதான் இதுக்கு 'வெண்சாமரச் சோளம்'னு பேர் வந்துச்சு'ன்னு பெரியவங்க சொல்றாங்க" என்று பெயர் விளக்கம் தந்தவர், தொடர்ந்து அவரைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2MHqcyx

''விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எம்.சி.ஏ படிச்சிட்டு, பெங்களூருல மென்பொருள் நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். எங்க மாமா மூலமா பசுமை விகடனும், நம்மாழ்வார் கருத்துகளும் அறிமுகமாச்சு. அவை எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்த, ஒரு கட்டத்துல சொந்த ஊருக்கே வந்து இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். நாலு வருஷமா வரகு, பனிவரகு, இருங்குச்சோளம் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். போன வருஷம் படைப்புழு தாக்கி மக்காச்சோளத்துல கடுமையான மகசூல் இழப்பு. ஏக்கருக்கு 7-8 மூட்டைதான் கிடைச்சுது. 15-20 மூட்டை மகசூல் கிடைச்சாதான் ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். படைப்புழுவைக் கட்டுப்படுத்த, வழக்கத்தைவிடக் கூடுதலா பூச்சிமருந்துக்குச் செலவு செஞ்சதுனால மக்காச்சோளம் சாகுபடி செஞ்சிருந்த விவசாயிகள் எல்லாருக்குமே நஷ்டம். இந்த வருஷம் தலா அரை ஏக்கர்ல வெண்சாமரச் சோளம், இருங்குச் சோளம், 60 சென்ட்ல பனிவரகு, 70 சென்ட்ல வரகுச் சாகுபடி செஞ்சிருக்கேன்" என்றவர், வெண்சாமரச் சோளச் சாகுபடி அனுபவம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

'பசுமைப் புரட்சிக்கு முன்னாடி இங்கே சுற்றுவட்டாரம் முழுக்க வெண்சாமரச் சோளம் சாகுபடி செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு கதிர்ல இருந்தும் 1 கிலோ வரைக்கும் தானியம் கிடைச்சதா பெரியவங்க சொல்றாங்க. இது பொரிக்குப் பயன்படுத்த அருமையா இருக்கும். வீடுகள்லயே பொரி செஞ்சு சாப்பிட்டுருக்காங்க. 'சட்டியைச் சூடேத்தி, கொஞ்சமா சோளம் போட்டாலே நிறைய பொரி கிடைக்கும்'னு சொல்றாங்க. கொழுக்கட்டை, புட்டு, தோசை, குழிப்பணியாரம், பொங்கல் எல்லாம் செஞ்சு சாப்பிட்டிருக்காங்க. இதுல சத்துகள் அதிகம். உடம்புக்கு நல்ல வலிமையைக் கொடுக்கக்கூடியது. இதைப் பத்தி நான் பல வருஷங்களுக்கு முன்னாடியே நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, வெண்சாமரச் சோளப் பயிர்களை எங்கேயுமே பார்க்க முடியலை. இதை எப்படியாவது மறுபடியும் சாகுபடி செஞ்சே ஆகணும்னு தீவிரமான விதைத் தேடுதல்ல இறங்கினேன். ரெண்டு வருஷம் தேடினதுல செந்துறையில் இருந்த ஒரு விவசாயி மூலமா அஞ்சு கிலோ வெண்சாமரச் சோள விதை கிடைச்சது. விதை பரவலுக்காக ரெண்டு கிலோ விதையை மத்த விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு, மூணு கிலோ விதையை அரை ஏக்கர்ல விதைச்சேன்'' என்றவர் சாகுபடி முறைகளைச் சொல்லத் தொடங்கினார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்சாமரச் சோளம்... இளம் விவசாயி மீட்டெடுத்தது எப்படி?

அரை ஏக்கர்ல 120 ஆடுகளை 10 நாள்களுக்குக் கிடை போட்டு, உழவு ஓட்டி, விதைச்சேன். மழை ஈரத்துல பயிர் செழிப்பா வளர்ந்துச்சு. 30-ம் நாள் களையெடுத்தேன். எந்த ஒரு இடு்பொருளுமே கொடுக்கலை. வழக்கமா சோளத்துல வரக்கூடிய குருத்துப்பூச்சித் தாக்குதல்கூட இதுல இல்லை. சுற்றுவட்டார நிலங்கள்ல மக்காச்சோளத்துல படைப்புழு தாக்குதல் இருந்தது. ஆனா, என்னோட வயல்ல அது மாதிரியான பாதிப்பு கொஞ்சம்கூட ஏற்படலை. கதிர்கள்ல பால் பிடிக்கும் தறுவாயில தொடர்ந்து ஐந்து நாள்கள் மழை பெய்ஞ்சதுனால சில கதிர்கள்ல மட்டும் தேன் ஒழுகல் பாதிப்பு ஏற்பட்டுச்சு. பிறகு தானாகவே சரியாகிடுச்சு. தண்டுப்பகுதியில நீர்ச்சத்து அதிகமா இருக்கு. தண்டு நல்லா திடகாத்திரமா இருக்குறதுனால சூரைக்காற்று, கனமழைக்கும் தாக்குப்புடிச்சி வளருது. இப்ப 90 நாள்கள் ஆகுது. 110-120 நாள்கள்ல கதிர் முத்தி அறுவடைக்கு வந்துடும்.

'அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு'ங்குற பழமொழியை நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். இது வெண்சாமரச் சோளத்துக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு. சோளக்கதிர்களை அறுவடை செஞ்ச பிறகு, நடுப்பகுதித் தட்டையை மாட்டுக்குத் தீவனமாகக் கொடுத்துடலாம். எட்டடி உயரத்துக்குப் பயிர் வளர்ந்திருக்கறதுனால, 500-750 கிலோ தட்டை கிடைக்கும். இதுல கால்சியம், சிலிக்கான், புரதச்சத்து அதிகமா இருக்கு. இதைக் கொடுத்தா மாடுகள் அதிகமா பால் கொடுக்கும். நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா வளரும். அரை ஏக்கர்ல குறைந்தபட்சம் 250 கிலோ தானியம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இப்பவே பல விவசாயிகள் விதைக்குச் சொல்லிவெச்சிருக்காங்க. கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சாலே 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். தட்டையோட விலை மதிப்பு குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாய். மொத்தம் 21 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கு'' என்றார்.

- இளம் விவசாயி நல்லப்பன் பகிர்ந்த அனுபவத்தை பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த வெண்சாமரச் சோளம்! https://www.vikatan.com/news/agriculture/bringing-back-traditional-pulses-crops

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

வீடியோ வடிவில்...

அடுத்த கட்டுரைக்கு