Published:Updated:

ஹைட்ரோகார்பன்... வல்லுநர் குழு என்ன செய்யவேண்டும்?

ஹைட்ரோகார்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஹைட்ரோகார்பன்

பிரச்னை

ஹைட்ரோகார்பன்... வல்லுநர் குழு என்ன செய்யவேண்டும்?

பிரச்னை

Published:Updated:
ஹைட்ரோகார்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஹைட்ரோகார்பன்

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட, ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட வல்லுநர் குழுவை உருவாக்கி அதற்கான நோக்கம் மற்றும் ஆய்வு எல்லைகளை வரையறுத்து 09.08.2021 அன்று தமிழ்நாடு அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினரும் சூழலியலாளருமான சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான இந்தக் குழு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு வெளியில் உள்ள நிலப்பகுதியில் ஆய்வு செய்து 4 மாதங்களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதுபற்றி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஜெயராமனிடம் பேசினோம்.

ஜெயராமன்
ஜெயராமன்


“தமிழ்நாடு முழுவதையுமே ஹைட்ரோ கார்பன் திட்டங்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் தடை செய்ய, அறிவியல்பூர்வமான ஆய்வு அடிப்படையில் அறிக்கை தயாரித்து, அத்திட்டத்தைத் தடுப்பதன் நியாயப்பாடுகளை நிலை நிறுத்துவதன் மூலம்தான் சாதிக்க முடியும். அந்த வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மட்டுமன்றி, அதற்கு அப்பாலுள்ள நிலப்பரப்புகளையும் ஹைட்ரோகார்பன் திட்டத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு முயற்சியாகத் தமிழக அரசு, இந்த வல்லுநர் குழுவை நியமித்துள்ளது.

2020-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் இரண்டு பெரும் குறைகள் இருக்கின்றன. முதலாவது, ஒட்டுமொத்த காவிரிப்படுகையும் இந்தச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. இரண்டாவது, புதிதாக வரக்கூடிய ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களைத்தான் இந்தச் சட்டம் தடை செய்கிறதேயொழிய முன்னமே காவிரிப் படுகையைப் பாழாக்கி கொண்டிருக்கக்கூடிய எண்ணெய்க் கிணறு களையும் திட்டங்களையும் மூடுவதற்கு இதில் வழியில்லை. இந்த இரண்டு குறைகளையும் சரி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதையுமே இத்தகைய அழிவிலிருந்து காக்க வேண்டும்.

கூடுதலாக, காவிரிப்படுகைக்கு வெளியில் பல பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் பாழாக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் தடுத்து நிறுத்தி விடவில்லை. ஆகவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்திலுள்ள குறைகளை நீக்கவும், தமிழ்நாடு முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய எண்ணெய் - எரிவாயு, ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்தவும், முன்னெடுக்க வேண்டிய பெருமுயற்சியின் தொடக்கமாக இந்த வல்லுநர் குழு அமைப்பதைக் கருதலாம்.

ஹைட்ரோகார்பன்
ஹைட்ரோகார்பன்


காவிரிப்படுகையின் அனைத்து மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங் களும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டங்களும் இச்சட்ட வரம்புக்குள் வந்திருக்கின்றன. ஆனால், காவிரிப்படுகையில் உள்ள இன்னும் பல பகுதிகளும், பல மாவட்டங்களும் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை என்பது பெரும் குறையாகும்.

ராமநாதபுரத்தில் ஓ.என்.ஜி.சி பல ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்தி, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கிணறுகள் அமைக்கும் திட்டத்தைக் கையில் வைத்திருக்கிறது. அதன்படி திருப்புல்லாணி (2 கிணறுகள்), பெரியபட்டினம், ரெகுநாதபுரம், பனைக் குளம், களரி (2), புள்ளந்தை, புத்தேந்தல், உத்தரகோசமங்கை, அச்சந்திபிரம்பு, பட்டணம்காத்தான் (2), பழங்குளம், சித்தார்கோட்டை, தேவிப்பட்டினம், பெருநயல், அத்தியூத்து, ஆற்றங்கரை, கீழ நாகாச்சி, பிரப்பன் வலசை, சட்ட கோன்வலசை (2) ஆகிய பகுதிகளில் கிணறுகள் அமைக்கப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் ஹைட்ரோகார்பன் கிணறுகள்தான்.

காவிரிப்படுகைக்கு வெளியில் பல பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் பாழாக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் தடுத்து நிறுத்திவிடவில்லை.


ஏற்கெனவே, ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதி. இந்நிலையில் நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாக உறிஞ்சி யெடுத்து ஹைட்ரோகார்பன் கிணறுகளில் நீரியல் விரிசல் முறைக்கு எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத் தினால், வேறு வழியேயில்லாமல் இப்பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறியே தீர வேண்டும்.

இத்திட்டங்களால் மக்கள் பல்லாயிரம் பேர் வெளியேற நேர்ந்தால், அவர்களை அரசு என்ன செய்வதாக இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. 2018-ல் ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் திரவ மற்றும் வாயு ஹைட்ரோ கார்பன்களைக் கண்டறியும் ஆய்வு நடவடிக்கைகளை இந்திய அரசு நடத்தியது.

புதுச்சேரியில் உள்ள பாகூர் முதல் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வரை 28,000 மில்லியன் டன் நிலக்கரியும், 98,000 கோடி கன மீட்டர் எரிவாயுவும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. 2016-ல் கடலூர் மாவட்டத்தில் 14 எண்ணெய்க் கிணறுகள் அமைக்க மக்களிடம் கருத்துக் கேட்பு அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இது போன்றே பல மாவட்டங்களில் மக்கள் கருத்துக் கேட்பு எதிர்ப்பைப் பதிவு செய்வதில் முடிந்தது,

காவிரிப்படுகையில் கடற்கரையையொட்டி 1,794 சதுர கிலோமீட்டர் பரப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்திலிருந்து கடலூர் வரை ஒரு மண்டலம். பரங்கிப் பேட்டையிலிருந்து வேதாரண்யம் வரை இரண்டாவது மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை 736 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூன்றாவது மண்டலம். இந்த முதல் சுற்று ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான ஏலப்பகுதி மட்டும் 5034 ச.கி.மீ. இரண்டாவது சுற்றில் 464 கி.மீ பரப்பும், மூன்றாவது சுற்றில் 1,861 ச.கி.மீ பரப்பும் ஏலம் விடப்பட்டது. வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி, ஆயில் இந்தியா லிமிடெட் ஆகியவை ஏலத்தில் உரிமம் பெற்று, தமிழகத்தைச் சீரழிக்கக் காத்திருக்கின்றன.

ஹைட்ரோகார்பன்
ஹைட்ரோகார்பன்


காவிரிப்படுகையில் மாதானம், காளி, குத்தாலம், நரிமணம், அடியக்கமங்கலம், கீழ்வேளூர், நன்னிலம், ஆதிச்சபுரம் வடக்கு, கோயில்கலப்பால், மாத்தூர், காஞ்சிரங்குடி, பந்தநல்லூர்; ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம் (10 கிணறுகள்) பாக் நீரிணைவு (5 கிணறுகள்). இவை அனைத்தும் ஷேல் மீத்தேன் கிணறுகள், அபாயகரமான நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தித்தான் எண்ணெய் - எரிவாயு எடுக்க முடியும்.

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுகள் நடந்துள்ளன. மதுரை அவனியாபுரத்திலிருந்து ராமநாதபுரம் மண்டபம் அருகே மெய்யம்புலி வரை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தளக்காவூரிலிருந்து மதகுபட்டி, சிவகங்கை உருளி, மானாமதுரை வழியே அருப்புக்கோட்டை வரை ஆய்வு நடத்தப் பட்டது.

ஆகவே, எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை மதிப்பீடு செய்ய உருவாக்கப்பட்டுள்ள உயர்மட்ட தொழில் நுட்ப வல்லுநர் குழு கூடுதல் உழைப்பை செலுத்தி வலிமையான ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இத்திட்டங்களைத் தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டும்.

உலகமே மாற்று எரிசக்தி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவை பயன்படுத்துவதால் உலக வெப்பநிலை உயர்ந்து, பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து, பல தீவுகளும் நகரங்களும் காவிரிப்படுகை பகுதியுமே கடலில் மூழ்கும் அபாயம் நெருங்கி வந்து கொண்டிருக்கும்போது, இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும்.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவைப் பயன்படுத்தி இத் திட்டங்களைத் தடுத்து நிறுத்த மக்கள் முற்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism