Published:Updated:

புதிய ராட்சதக் கிணறு... டெல்டாவை அச்சுறுத்தும் ஹைட்ரோகார்பன்!

ஹைட்ரோகார்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹைட்ரோகார்பன்

பிரச்னை

‘சாமியே வரம் கொடுத்தாலும், பூசாரி குறுக்கே நிற்பார்’ என்று கிராமப் புறங்களில் ஒரு சொலவடை உண்டு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்டங்களை, `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா’க அறிவித்ததோடு, `இனி இங்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது’ என்று தனிச்சட்டத்தையும் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அரசு அதிகாரிகளோ, ஓ.என்.ஜி.சி-யோடு கைகோத்துக்கொண்டு, தங்கள் பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் சோழங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

புதிய ராட்சதக் கிணறு... டெல்டாவை அச்சுறுத்தும் ஹைட்ரோகார்பன்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயிருக்கிறது சோழங்கநல்லூர். இங்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் 3,500 மீட்டர் ஆழத்தில் புதிய கிணறு அமைக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஓ.என்.ஜி.சி நிறுவனம், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக, பல ஆயிரம் அடி ஆழத்தில் ராட்சதக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய்-எரிவாயு எடுத்து வருகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் சுரண்டப்படுவதாகவும், கச்சா எண்ணெய்க் கசிவால் விளைநிலங்கள் மலடாகிப்போவதாகவும் வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில், டெல்டா மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தும்விதமாக நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டம் என அடுத்தடுத்த ஆபத்துகள் பயமுறுத்திக்கொண்டே இருந்தன. `இது போன்ற அபாயகரமான திட்டங்களை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில்தான் தற்போது தமிழக அரசு இதற்காகத் தனிச்சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசின் இந்தச் சட்டப்பூர்வமான நடவடிக்கைக்குப் பிறகும்கூட ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகக் கொந்தளிக்கிறார்கள் சோழங்கநல்லூர் பகுதி மக்கள்.

புதிய ராட்சதக் கிணறு... டெல்டாவை அச்சுறுத்தும் ஹைட்ரோகார்பன்!

இந்த நிலையில், இது தொடர்பான முத்தரப்புக் கூட்டம் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி நிறுவன அதிகாரிகள், சோழங்கநல்லூர் பொதுமக்களில் சிலர் கலந்துகொண்டனர். தகவலறிந்து அங்கு வந்த தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ``இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் புதிய கிணறு அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்துவது சட்டத்துக்கு விரோதமானது. இந்தக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினார்கள். முத்தரப்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ‘‘சோழங்கநல்லூர், பெருங்குடி பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டன. நாங்கள் கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 2016-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய கிணறு அமைக்க அனுமதி வழங்கவில்லை. சட்ட விரோதமாகப் புதிய கிணறுகள் அமைக்கப்படுவதாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார். பெருங்குடியில் ஆய்வுக் கிணறு அமைக்கும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இதை சோழங்கநல்லூரில் கைவிடவில்லை. `இது சட்ட விரோதமானது’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்டிருப்பதால், புதிதாக அமைக்கப்படும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணற்றுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், வருவாய்த்துறையினர் ஓ.என்.ஜி.சி-க்கு ஆதரவாக, சமாதானக் கூட்டம் நடத்துவது சட்ட விரோதம்” என்றார்.

இது குறித்து விளக்கமளித்த ஓ.என்.ஜி.சி அதிகாரிகள், “வழக்கமான கச்சா எண்ணெய்- எரிவாயு எடுப்பதற்காகத்தான் புதிய கிணறு தோண்டும் பணியில் நாங்கள் ஈடுபட்டோம். ஆனால், `இது ஹைட்ரோகார்பன் ஆய்வுப் பணி’ என்று பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்றார்கள். ஆனால் சோழங்கநல்லூர் மக்களோ, ‘இது ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுதான்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். `ஒருவேளை இது வழக்கமான கச்சா எண்ணெய்க் கிணறுதான் என்றாலும்கூட அனுமதிக்க முடியாது. நிலத்தடி நீர் ஆதாரங்கள், நீர்நிலைகள், விளைநிலங்கள் பாதிக்கப்படும்’ என்கிறார்கள். தமிழக அரசு இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, சோழங்கநல்லூர் மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற வேண்டும். இதைச் செய்யத் தவறினால், தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம்’ வெறும் ஏட்டுச்சுரைக்காயாகவே போய்விடும்.