Published:Updated:

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம் வளர்ப்பு!

பசுந்தீவனத்துடன் ஆதித்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுந்தீவனத்துடன் ஆதித்தன்

தீவனம்

கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கான பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் தமிழகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ‘ஹைட்ரோ போனிக்ஸ் முறையில் தீவன வளர்ப்பு’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

மானியத்துடன் கூடிய இந்தத் திட்டம் மூலம் தனது மாடுகளை ஆரோக்கியமாக வளர்த்து வருவதுடன், மற்ற கால்நடை வளர்ப்பாளர்களுக்கு முன்னோடியாகவும் இருந்து வருகிறார் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரங்குடியைச் சேர்ந்த விவசாயி ஆதித்தன்.

மாடுகளுக்குப் பசுந்தீவனத்தை இடும் பணி
மாடுகளுக்குப் பசுந்தீவனத்தை இடும் பணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் எப்போதும் வானம் பார்த்த பூமிதான். இதனால் குடிநீரைத் தேடி குடங்களோடு அலையும் பெண்களை மட்டுமல்ல; பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட வண்டிகளில் காலி குடங்களோடலையும் ஆண்களையும் பார்க்கலாம். மீன் பிடித்தல், விவசாயம் அதற்கடுத்தபடியாக இப்பகுதி மக்கள் நம்பியிருப்பது கால்நடை வளர்ப்பை மட்டுமே. கால்நடைகளை மேய்ச்சலுக்காகக் காடு, மேடு என அதிக தூரம் அலைந்து மேய்க்க வேண்டும். பருவ காலங்களில் ஓரளவு சமாளித்தாலும், கோடைக் காலங்களில் கால்நடைகளின் பாடு திண்டாட்டம்தான்.

இது போன்ற கஷ்டங்களுக்குத் தீர்வாக, தமிழகக் கால்நடைப் பராமரிப்புத்துறை செயல்படுத்தியுள்ள திட்டம்தான் ‘மாநில தீவன அபிவிருத்தி திட்டம்’. ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கு எடுத்தும் செல்லும் முயற்சியாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஹைட்ரோ போனிக்ஸ்’ முறையிலான இந்தப் பசுந்தீவன வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆதித்தனிடம் பேசினோம்.

பசுந்தீவனத்துடன் ஆதித்தன்
பசுந்தீவனத்துடன் ஆதித்தன்

‘‘என்கிட்ட 30 மாடுகள் இருக்கு. இதுல பசு மாடு, காளை மாடு, ஜல்லிக்கட்டு மாடுகளும் அடக்கம். மழைக்காலத்துல நிலத்துல பச்சை இருக்கும். மாடுக மேய்ச்சலுக்குப் போனா வயிறு நிறைய மேய்ஞ்சிட்டு வந்திடும். ஆனா, கோடைக்காலத்துல சிரமம். பச்சை இருக்காது. வைக்கோல், காய்ஞ்ச தீவனங்கள்தான் கொடுக்கணும். இதனால மாடுகளுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காது. பாலோட அளவும் குறைஞ்சுப் போயிடும். அதுக்கூடப் பரவாயில்லை. சினை மாடுக, கன்னு போடும்போது சத்துக் குறைபாடுள்ள கன்னுகளைப் போட்டுடும். இது என்னை மாதிரியான விவசாயிகளுக்குப் பெரிய பிரச்னையா இருந்தது. இந்த நிலையிலதான், கால்நடைத்துறையில இருந்து குறைஞ்ச தண்ணியில பசுந்தீவனம் உற்பத்தி பண்ணலாம். அதுக்கு நிலம்கூடத் தேவையில்லைனு சொன்னாங்க. அது நல்ல ஆலோசனையா தெரிஞ்சது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுமார் 7 அடி உயரம், 4 அடி அகலத்துல பீரோ மாதிரி கூண்டு தயார் செஞ்சு, அதுல 2 அடி நீளம், 1 அடி அகலம் உள்ள 48 பிளாஸ்டிக் தட்டுகளை(டிரேக்கள்) வைக்கிற மாதிரி அறைகள் ஏற்படுத்தினோம். ஒவ்வொரு தட்டுலயும் ஒரு கிலோ முளைவிட்ட மக்காச்சோளத்தைப் பரப்பி, தினமும் காலை, மாலை ரெண்டு வேளையும் சிறிய நீர் தெளிப்பான் மூலம் தண்ணி தெளிச்சுட்டு வந்தோம். 7 நாள்கள்ல ஒவ்வொரு தட்டிலும் சுமார் 8 கிலோ பசுந்தீவனம் கிடைச்சது. சாதாரணமா இந்தப் பசுந்தீவனம் நிலத்தில வளர்க்க 60 நாளாகும். அதிக தண்ணியும், நிலமும் தேவைப்படும்.

பசுந்தீவனம் வளர்க்கும் கூண்டு மற்றும் டிரேக்கள், டிரேக்களில் மக்காச்சோளத்தைப் பரப்புதல்
பசுந்தீவனம் வளர்க்கும் கூண்டு மற்றும் டிரேக்கள், டிரேக்களில் மக்காச்சோளத்தைப் பரப்புதல்

இந்தப் புதிய முறையினால சின்ன இடத்தில சிக்கனமான நீர் தெளிப்புடன் அதிக அளவிலான பசுந்தீவனத்தைச் சாகுபடி செய்ய முடிஞ்சது. சாகுபடி செய்யப்பட்ட இந்தப் பசுந்தீவனத்தில் ஒருவிதமான வாடை இருக்கும். அதை குறைக்கறதுக்காக ரெண்டு கை அளவுக்குத் தவுடு கலந்து வெச்சாப்போதும். மாடுக விரும்பித் தின்னும். இந்தத் தீவனத்தைத் சாப்பிடுற பசுக்கள் வழக்கத்தைவிடக் கூடுதலா 3 லிட்டர் பால் கொடுக்குது’’ என்றவர், பசுந்தீவன அமைப்புக்கான செலவு பற்றி விளக்கினார்.

“இந்தப் பசுந்தீவன வளர்ப்பு அமைப்பு ஏற்படுத்த சுமார் 24,000 ் ரூபாய் செலவாச்சு. இதுல அரசு மானியம் 75 சதவிகிதம் கிடைச்சது. 6,000 ரூபாய் மட்டும் நான் செலவு செய்தேன். இதனால செலவைவிடப் பல மடங்கு வருமானம் கிடைக்குது. அதோட மாடுகளுக்கு நல்ல தீவனமும், ஆரோக்கியமும் கிடைக்கிது’’ என்கிறார்.

தொடர்புக்கு, ஆதித்தன்,செல்போன்: 94423 21617.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறைந்த செலவில் பசுந்தீவன உற்பத்தி!

க்காச்சோளம் மூலம் வளர்க்கப்படும் ‘ஹைட்ரோ போனிக்ஸ்’ பசுந்தீவனத்தின் நன்மைகள் குறித்து விளக்கிய, கீழக்கரை கால்நடை மருத்துவமனையின் உதவி கால்நடை மருத்துவர் ஜெயப்பிரகாஷ், “கோடைக்காலத்தில் வைட்டமின் ஏ சத்து, பசுந்தீவனத்தின் மூலமே கால்நடைகளுக்குக் கிடைக்கிறது. பசுந்தீவனப் பற்றாக்குறையின் மூலம் சினை மாடுகள், கண்கள், மூளை குறைப்பாடுடன் கூடிய கன்றுகளை ஈனுகின்றன. பசுந்தீவனத்தை இரண்டு, மூன்று மாதங்களுக்கு மாடுகள் ஈரலில் சேமித்து வைத்துக் கொள்வதன் மூலம் இந்தக் குறைபாட்டைத் தவிர்க்க முடியும்.

மாடுகள் பொதுவாக அசை போடக்கூடிய விலங்கு. உணவுப் பொருள்களை அரைகுறையாக மென்று விழுங்கிவிடும். அவ்வாறு விழுங்கும் உணவை, ஓய்வாகப் படுத்திருக்கும் நேரத்தில் உடலிலிருந்து கக்கி அதனை மீண்டும் நன்றாக அசை போட்டு உட்கொள்ளும். இப்படிக் கக்கும் பொருள் நார்ச்சத்துக் கொண்டதாக இருந்தால் மட்டுமே அது வெளியே வரும். பொதுவாகக் கால்நடைகளுக்கு 3-இல் 2 பங்கு நார்ச்சத்துக் கொண்ட தீவனத்தைக் கொடுக்க வேண்டும். அதில் பசுந்தீவனம் 3-இல் ஒரு பங்கு இருக்க வேண்டும். இதன் மூலம் கோடைக்காலங்களில் ஏற்படும் பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்து அதிகமாகக் கொண்ட இந்தப் பசுந்தீவனத்தின் மூலம் ஆரோக்கியமான கால்நடைகள் உருவாகும்’’ என்றார்.

பசுந்தீவனம் வளர்ப்பு முறை!

ரு கிலோ மக்காச்சோளத்தைத் தண்ணீரில் ஒருநாள் முழுக்க ஊற வைத்து, பிறகு அதை முளை விடும் வகையில் சாக்குப் பையில் கட்டி வைக்க வேண்டும். பிறகு முளைவிட்ட பயிரை 2-க்கு 1 அடி அளவிலான பிளாஸ்டிக் தட்டில் பரவி இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள பீரோ போன்ற கூண்டில் வைத்து 7 நாள்களுக்குத் தெளிப்பான் மூலம் நீர் தெளித்து வர வேண்டும். இப்படிச் செய்து வந்தால் 8-வது நாள் முதல் தீவனத்தை எடுக்கலாம். தீவனத்தை எடுக்கும் தட்டில் மீண்டும் முளைக்கட்டிய மக்காச்சோளத்தைப் பரப்பி வைக்க வேண்டும். இப்படிச் செய்துகொண்டிருந்தால், தினமும் பசுந்தீவனம் அறுவடை செய்யலாம்.