Published:Updated:

`வேதாரண்யம் முதல் திருச்சி வரை..!' - ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் தவிக்கும் விவசாயிகள்

`ரசாயன உரம் பயன்படுத்தினால் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் வரும் நீங்க ரசாயன உரம் அதிகமாகப் பயன்படுத்தினீங்களா?' எனக் கேட்டார். அதற்கு விவசாயிகள், `நாங்க ரசாயன உரம் அதிகம் பயன்படுத்த மாட்டோம்' எனச் சொன்னோம்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் சம்பா பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வயல்களில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், `கவலைப்படாம இருங்க அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருகிறேன்’ எனக் கூறினார். இது தங்கள் வயிற்றில் பால் வார்ப்பதுபோல் இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

டெல்டா மாவட்டத்தில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் 80 சதவிகித சம்பா பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. `பல வருடங்களுக்குப் பிறகு இப்பதான் விளைச்சல் அமோகமாக இருக்கு அதிக அறுவடை செய்யலாம்' என விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், விவசாயிகளின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்.

`இது விவசாயிகளோட பிரச்னைதானேனு அலட்சியமா இருந்துடக் கூடாது!’- உரத்தட்டுப்பாடால் கொதிக்கும் டெல்டா

இதனால் அனைத்து விவசாயிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிப்படைந்த வயல்களில் பயிர்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தில் ககன்தீப் சிங் பேடியைச் சந்தித்து, பயிர் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறினர். அருகில் உள்ள வயல்களில் இறங்கி ஆய்வு மேற்கொண்ட அவரிடம் பாதிக்கப்பட்ட பயிர்களை எடுத்துக் காண்பித்தனர்.

பாதிக்கப்பட்ட பயிர்
பாதிக்கப்பட்ட பயிர்

இது குறித்து விவசாயி அழகிரிவேல் என்பவரிடம் பேசினோம், ``வேதாரண்யம் தொடங்கி திருச்சி வரை ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் சொல்ல முடியாத வேதனையில் தவித்து வருகிறார்கள். என்னுடைய 7 ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்திருந்தேன். ஆனைக்கொம்பன் ஈ தாக்கி 90 சதவிகிதப் பயிர்களுக்கு மேல் பாதிப்படைந்துவிட்டன. அனைத்து விவசாயிகளின் நிலையும் இதுதான்.

இதை ஆய்வு செய்ய வந்த ககன்தீப் சிங் பேடியிடம் கண் கலங்க கூறினோம். அப்போது அவர் `யாரும் கவலைப்படாதீங்க உங்களுக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கேன்’ என எங்களை தேற்றும் விதமாகப் பேசினார். மேலும், ரசாயன உரம் பயன்படுத்தினால் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் வரும். நீங்க ரசாயன உரம் அதிகமாகப் பயன்படுத்தினீங்களா எனக் கேட்டார். அதற்கு விவசாயிகள் நாங்க, ரசாயன உரம் அதிகம் பயன்படுத்த மாட்டோம் என்றார்கள்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

அதேபோல் காலம் தவறி பயிரிட்டாலும் இந்தத் தாக்குதல் வருவதற்கு வாய்ப்பிருக்கு என்றார். நாங்கள் காலம் தவறிதான் பயிரிட்டோம் என்றோம். ஏன் காலம் தவறி பயிர் செய்தீர்கள் என கேட்டார். அதற்கு காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடவில்லை தண்ணீர் வந்த பிறகே நம்பிக்கையுடன் பயிர் செய்தோம். ஆனால், இதுபோன்ற தாக்குதலால் பயிர் பாதிப்படைந்ததுபோல் இதற்கு முன் நடந்தது இல்லை என்றோம்.

ஆனைக்கொம்பன் ஈ கடுமையாகத்தான் தாக்கியிருக்கு என்றார். சில விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் போனால் என்ன மாதிரியான பொருளாதார கஷ்டங்களைச் சந்திப்போம் என ஆங்கிலத்தில் சொல்ல முயன்றனர்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

அதற்கு அவர் நீங்க தமிழிலேயே பேசலாம் எனக்குப் புரியும் எனக் கூறி தமிழிலேயே விளக்கங்களைக் கேட்டு, தமிழிலேயே பேசியது விவசாயிகள் அனைவரையும் கவர்ந்தது. எல்லோரும் கவலைப்படாமல் இருங்க இன்ஷூரன்ஸ் செலுத்தியவர்களுக்கும் செலுத்தாதவர்களுக்கும் உரிய இழப்பீடு தொகை பெற்றுத் தருகிறேன் எனக் கூறி கலங்கிப்போயிருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கையளித்துச் சென்றார்” என்றார்.