நாட்டு நடப்பு
Published:Updated:

நெல் சாகுபடி, நாட்டு மாடுகள், மரச்செக்கு... அரசுப் பணியாளர்கள் மட்டுமல்ல...

சபர்மதி குருகுலம்
பிரீமியம் ஸ்டோரி
News
சபர்மதி குருகுலம்

இங்கு விவசாயிகளும் உருவாக்கப்படுகிறார்கள்!

கற்றல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இயங்கி வருகிறது சபர்மதி குருகுலம். காவலர் பணி இடங்களுக்கான தேர்வு, இந்திய ஆட்சிப் பணித் தேர்வு, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு களுக்கான பயிற்சிகள் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? விவசாயம் என்பது விவசாயி களுக்கானது மட்டுமல்ல. இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனும், விவசாயம் செய்யக் கற்றிருக்க வேண்டும்... குறிப்பாக, போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிகளுக்குச் செல்பவர்களுக்கு அவசியம் விவசாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது சபர்மதி குருகுலம். இயற்கையோடு இயைந்த தற்சார்பு வாழ்வியல் இங்கு போதிக்கப்படுகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்பு, பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி, மரச்செக்கில் எண்ணெய் உற்பத்தி எனப் பல விதங்களிலும் அசத்துகிறது சபர்மதி குருகுலம்.

இதன் செயல்பாடுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள, மிகுந்த ஆர்வத்தோடு ஓர் பகல் பொழுதில் இங்கு சென்றோம். செம்மண் சுவர்கள், பனை யோலையால் வேயப்பட்ட கூரை... மாணவர்கள் தங்கும் குடில்கள், வகுப்பறைகள் உட்பட அனைத்துக் கட்டுமானங்களும் பாரம்பர்யத்தோடு காட்சி அளித்தன. இவற்றைச் சுற்றிலும் பசுமையான விளைநிலங்கள். இதன் அருகே அமைக்கப்பட்டுள்ள மாட்டுக் கொட்டகையில் 20-க்கும் மேற் பட்ட நாட்டு மாடுகள், கன்றுகள்... பாரம்பர்யத்தைப் பறைசாற்றுகின்றன.

சபர்மதி குருகுலம்
சபர்மதி குருகுலம்

சற்று தூரம் நடந்து சென்றால் சமையல் கூடம்... மணம் வீச உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அதையொட்டியே இரண்டு மரச் செக்குகள். அவற்றில் கடலை எண்ணெய் ஆட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் அருகிலேயே மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

போட்டித் தேர்வுக்காக இங்கு பயில வரும் மாணவர்கள் இங்கேயே தங்கி இருந்து இயற்கையான சூழலில், தற்சார்பு வாழ்வியல் முறையைப் பயின்று வருகின்றனர். கற்றல், பராமரித்தல், விவசாயப் பணி செய்தல் என அனைத்தையும் இவர்களே தங்களுக்குள் பங்கிட்டுச் செய்து கொள்கின்றனர்.

வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்த சபர்மதி குருகுலத்தின் நிறுவனர் குணசேகரன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று, இதன் நோக்கம் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். “அரசுப் பணிக்குப் போற எல்லோரும் விவசாயத்தைப் பத்தி அவசியம் தெரிஞ்சுக்கணும். அரசோட கொள்கை முடிவுகளை எடுக்கிற உயரத்துக்கு அவங்க போனால், விவசாயிகளோட நிலையைப் புரிஞ்சுகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி முடிவெடுக்கவும் இது உதவும். போட்டித் தேர்வுல வெற்றி பெற முடியாம போறவங்க, அரசுப் பணி கிடைக்கலைன்னாகூட விவசாயம் செஞ்சு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக்க முடியும்’’ என்று சொன்னவர், சபர்மதி குருகுலம் எப்படி உருவானது என்பது குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

மாணவர்களுக்கு வகுப்பு
மாணவர்களுக்கு வகுப்பு

“நான் கல்லூரி மாணவரா இருந்த சமயத்துலயே ஓய்வு நேரங்கள்ல நண்பர்களோட சேர்ந்து கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்திருக்கேன். ஆசிரியர் பணிங்கறது எனக்கு ரொம்பவே பிடிச்சது. சமூகச் செயல்பாடுகள்லயும் எனக்கு ஈடுபாடு அதிகம். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால பொறியியல் படிச்சிட்டு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துல வேலை செய்ய வேண்டியதாயிடுச்சு. அப்பவும் கூட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமூக நலன் சார்ந்த பணிகளைத் தொடர்ச்சியா செஞ்சுகிட்டே இருந்தேன். நானும் என்னோட நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஸ்மைல் நலவாழ்வு அமைப்பைத் தொடங்கினோம்.

விவசாய வேலைகள்
விவசாய வேலைகள்

அந்த அமைப்பு சார்பா, கிராமப்புறங்கள்ல உள்ள மணவர்களுக்குப் பாட வகுப்புகள் நடத்தினோம். சமூக நலன் சார்ந்த ஈடுபாடு காரணமா ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகணும்ங்கற எண்ணம் எனக்கு உண்டாச்சு. 30 வயசுல ஐ.ஏ.எஸ் தேர்வெழுதினேன். அதுல தேர்ச்சி பெறாததால என்னோட ஐ.ஏ.எஸ் கனவு சாத்தியப்படாம போச்சு. அதனால என்ன? நம்மால ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக முடியலைன்னாலும், இதுல ஆர்வம் உள்ளவங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உருவாக்குவோம். மற்ற அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்கும் பயிற்சி அளிப்போம்னு முடிவெடுத்து ஸ்மைல் அமைப்பு நண்பர்களோட சேர்ந்து, 2016-ம் ஆண்டு இந்த சபர்மதி குருலத்தைத் தொடங்கினோம். பொதுவாகப் போட்டித் தேர்வுகளுக்கான தரமான பயிற்சி மையங்கள் சென்னை மாதிரியான பெருநகரங்கள்லதான் இருக்கு. கிராமப்புற மாணவர்களுக்கும் அப்படியொரு தரமான கல்வியைக் கொடுக்கணும்ங்கிறதுதான் இந்தக் குருகுலத்தோட முக்கிய நோக்கம்.

இந்த ஆறு ஆண்டுகள்ல இதுவரைக்கும் சுமார் 500 மாணவர்கள் இங்க பயிற்சி பெற்றிருக்காங்க. இவங்கள்ல நிறைய பேர், போட்டித் தேர்வுகள்ல வெற்றி பெற்று அரசுப் பணிகளுக்குப் போயிருக்காங்க. இதுல முத்தாய்ப்பான விஷயம் என்னென்னா, இவங்க எல்லாருமே விவசாயத்தையும் கத்துக்கிட்டுப் போயிருக்காங்க’’ என்றார்.

மாடுகள் பராமரிப்பு
மாடுகள் பராமரிப்பு

நெல் முதல் தீவன சோளம் வரை

இங்கு நடைபெற்று வரும் விவசாயம் சார்ந்த பணிகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார், சபர்மதி குருகுலத்தின் விவசாயப் பிரிவு பொறுப்பாளரும் ஸ்மைல் நலவாழ்வு அமைப்பின் பொருளாளருமான கணேசமூர்த்தி, “8 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கோம். இப்ப, ஒன்றரை ஏக்கர்ல சொர்ணமசூரி பாரம்பர்ய நெல் பயிரிட்டிருக்கோம், ஒன்றரை ஏக்கர் பரப்புல மாடுகளுக்கான தீவன சோளம், மீதி பரப்புல நிலக்கடலை, காய்கறிகள் பயிரிட்டிருக்கோம்.

நாட்டு மாடுகள் வளர்ப்பு

காஞ்சிபுரம் குட்டை, துருந்தல், காசர்கோடு குட்டை... இந்த ரகங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளர்க்குறோம். இங்க நாங்க குருகுலம் ஆரம்பிக்குறப்ப, இந்தப் பகுதியில உள்ள விவசாயிங்க, தங்களோட பசு மாடுகளை இன விருத்திக்காகக் காளை மாட்டோட இணை சேர்க்காம, அதுக்கு பதிலா ஊசிதான் போட்டுக்கிட்டிருந்தாங்க. எங்களோட குருகுலத்துல நாங்க வளர்க்குற நல்லா திடாகாத்திரமான நாட்டு மாட்டு காளைகளை இனச் சேர்க்கைக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கோம். இதுக்கு 150 ரூபாய் மட்டும் பணம் வசூலிக்கிறோம். குருகுலத்துல உள்ள நாட்டு மாட்டு காளை களோட இனச் சேர்க்கையில ஈடுபடக்கூடிய மாடுகள் உடனே கருத்தரிக்கிறதால, இதுக் காகப் பலரும் எங்க மாடுகளைத் தேடி வர்றாங்க’’ என்று சொன்னவர், மணி என்ற நபரை நம்மிடம் அறிமுகம் செய்து, ‘‘இவர், போட்டித் தேர்வு பயிற்சிக்காக இங்க தங்கி இருக்கார். இவர்தான் மாடுகளைப் பார்த்துக்கிறாரு. இவரை நாங்க காளை மணினுதான் கூப்பிடுவோம். அந்தளவுக்குக் காளை மாடுகள் வளர்ப்புல ஈடுபாடும், நிபுணத்துவமும் கொண்டவராகிட்டாரு மணி’’ என்றவர், மேலும் தொடர்ந்தார் கணேசமூர்த்தி. ‘‘நாட்டு மாட்டுச் சாணம் தாராளமா கிடைக்குறதுனால, எருவுக்குப் பஞ்சமில்லை. நிறைய மண்புழுவுரமும் தயாரிக்க முடியுது. பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மூலிகை பூச்சி விரட்டி உட்பட இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திதான் இங்க விவசாயம் பண்ணிட்டு வர்றோம். போட்டித் தேர்வு பயிற்சிக்காக இங்க வந்த வைகுண்ட மூர்த்தி, முரளி... இவங்கதான் விவசாயத்தைக் கவனிச்சிக்குறாங்க. பார்த்துக்குறாங்க.

செக்கு எண்ணெய் தயாரிப்பு
செக்கு எண்ணெய் தயாரிப்பு

மரச்செக்கு

இங்க ரெண்டு மரச்செக்குகள் வெச்சிருக் கோம். இதுல இருந்து கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் உற்பத்தி செஞ்சிட்டு இருக்கோம். இங்கவுள்ள நிலத்துல நாங்க விளைவிக்கிற கடலையையே எண்ணெய் எடுக்கப் பயன்படுத்திக்கிறோம். தேங்காய், எள்ளு வெளிய இருந்து கொள் முதல் பண்ணிக்கிறோம். மாசத்துக்கு 300 லிட்டர் கடலை எண்ணெய், 100 லிட்டர் நல்லெண்ணெய், 15 லிட்டர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செஞ்சு விற்பனை செஞ்சுட்டு வர்றோம் இந்தக் குருகுலத்துல பயிலக்கூடிய. நவநீத கிருஷ்ணன் என்கிற மாணவர் மரச்செக்குக்கான பொறுப்புகளைப் பார்த்துக்கிறாரு. விவசாயத்தைவிடவும் எண்ணெய் உற்பத்தியில நல்ல லாபம் கிடைக்குது. தரமான செக்கு எண்ணெய்ங் கிறதால எங்களோட தயாரிப்புக்கு தேவை அதிகமா இருக்கு” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

செக்கு எண்ணெய்
செக்கு எண்ணெய்

எல்லோரும் விவசாயம் கத்துக்கணும்!

“மற்ற தொழில்களை ஒப்பிடும்போது... விவசாயத் துல அதிக லாபம் கிடைக்காதுனு சொல்லி, பலரும் விவசாயத்துல இறங்கத் தயங்குறாங்க. விவசாயத்துல நாம செலுத்துற உழைப்புக்கும் முதலீட்டுக்கும் நிகரான வருமானத்தோடு, கொஞ்சம் கூடுதலா, லாபம் ஈட்டினாலே போதும். இதுல அதிக லாபம் பார்க்கணும்னு நினைக்கக் கூடாது. இது ஒரு வாழ்க்கை முறையா இருக்கணும். எல்லோரும் விவசாயம் கத்துக்கணும். சபர்மதி குருகுலத்துல மேற்கொள்கிற விவசாயம் மூலம் ஈட்டுற வருவாயைப் பயன்படுத்தி தான் இந்தக் குருகுலத்தையே நடத்திக்கிட்டிருக்கோம். இதுதான் தற்சார்பு.

மாணவர்களுக்குப் பயிற்சி
மாணவர்களுக்குப் பயிற்சி

ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் ஒரு சபர்மதி குருகுலத்தை உருவாக்கணும். நம்ம நாட்டுல உள்ள விவசாயிகள் எல்லாரையுமே இயற்கை விவசாயத்துக்கு மாத்தணும். பொதுமக்கள் - விவசாயிகள் - மாணவர்கள்... இவங்களுக்கு இடையில ஒரு பாலமாகச் சபர்மதி குருகுலம் இருக்கணும். காந்தியோட தற்சார்புக் கொள்கை, நம்மாழ்வாரோட இயற்கை விவசாயக் கொள்கை ஆகிய ரெண்டையும் முன்மாதிரியா வெச்சு தொடர்ச்சியா இயங்குவோம்” என்கிறார் குணசேகரன்.

விவசாயம்
விவசாயம்

பயிற்சிக்கு கட்டணமில்லை!

அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்காக, சபர்மதி குருகுலத்தில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வரும் பிரசாந்த், இங்குள்ள மரச் செக்குகளை நிர்வகித்து வருகிறார். இவரிடம் நாம் பேசியபோது, ‘‘சென்னை மாநிலக் கல்லூரி யிலதான் படிச்சேன். அதுக்கு பிறகு எந்த வேலை கிடைச்சாலும் செஞ்சுகிட்டு இருந்தேன். அப்படியே ரெண்டு வருஷம் ஓடிடுச்சு. இந்தச் சூழல்லதான் என்னோட நண்பர் மூலமா இந்தக் குருகுலம் பத்தி எனக்குத் தெரிய வந்துச்சு. நாமும் இங்க தங்கி பயிற்சி எடுத்து அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகலாம்னு முடிவெடுத்தேன். இங்க பயிற்சி எடுத்துக்குறதுக்குக் கட்டணம் எதுவுமில்லை. குரு தட்சணை முறைப்படி நம்மளால முடியுற தொகையைக் கொடுத்தா போதும். அதேசமயம் இங்க தங்குறதுக்கும், சாப்பிடுறதுக்கும் 3,000 ரூபாய் மட்டும் பணம் செலுத்தியாகணும். இது ரொம்ப குறைவான தொகை. சேவை மனப்பான்மையால, இவ்வளவு குறைச்ச கட்டணத்துக்கு அனுமதிக்குறாங்க.

நூலகம்
நூலகம்


ஆனா, இந்தத் தொகையையும்கூட என்னால செலுத்த முடியலை. இதுக்குப் பதிலாகத்தான் மரச்செக்குகளை நிர்வகிக்கிற வேலையை எடுத்துப் பண்ணிக்கிட்டிருக்கேன். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் எழுதணும்னுதான் வந்தேன் அதன்படி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எழுதியிருக்கேன். அடுத்ததா பேங்கிங் தேர்வுகள் எழுதப்போறேன். இங்க நிலவுற அமைதியான சூழல் படிக்க ஏதுவா இருக்கு. இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சுக்கவும், அதுல பங்கெடுத்துக்கவும் முடியுது. இதை ரொம்ப நல்ல விசயமா நினைக்குறேன்” என்றார் பிரசந்த்.

குணசேகரன், கணேசமூர்த்தி, பிரசாந்த்
குணசேகரன், கணேசமூர்த்தி, பிரசாந்த்

5 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி

``இங்க படிச்சு பயிற்சி எடுத்துக்கிட்ட ஒரு மாணவி போட்டி தேர்வுல வெற்றி பெற்று வங்கிப் பணியில சேர்ந்துட் டாங்க. முக்கியமா இங்க காவலர் தேர்வுக்கான பயிற்சிக்குதான் நிறைய பேர் வர்றாங்க. எழுத்துத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்குறதோட மட்டுமல்லாம அவங்க இங்கயே உடற்பயிற்சிகள் செய்றதுக்கான உபகரணங்களையும் இங்க அமைச்சிருக்கோம். இங்க பயிற்சி எடுத்துக்கிட்டவங்கள்ல நிறைய பேர் காவலர்களாகத் தேர்வாகியிருக்காங்க. இதுவரைக்கும் 5 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிச்சிக்கிட்டு இருக்காங்க. இவங்க எல்லாரும் விவசாயத்தையும் கத்துக்கிட்டாங்கனு நினைக்குறப்ப இன்னும் கூடுதல் பெருமையா இருக்கு” என்கிறார் குணசேகரன்.