Published:Updated:

இந்தப் பூச்சி கடித்தால் 5 நிமிடங்களில் மரணம்... மக்களை மிரட்டிய வாட்ஸ்அப் தகவல்! உண்மையா?

வைரலான கம்பளிப்பூச்சி

கர்நாடகாவில் நடந்ததாகக் கூறப்படும், பச்சைப் பூச்சியின் புகைப்படமும், வயலில் பருத்தி பயிர்களுக்கு நடுவில் மக்கள் மயங்கிக் கிடக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.

இந்தப் பூச்சி கடித்தால் 5 நிமிடங்களில் மரணம்... மக்களை மிரட்டிய வாட்ஸ்அப் தகவல்! உண்மையா?

கர்நாடகாவில் நடந்ததாகக் கூறப்படும், பச்சைப் பூச்சியின் புகைப்படமும், வயலில் பருத்தி பயிர்களுக்கு நடுவில் மக்கள் மயங்கிக் கிடக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.

Published:Updated:
வைரலான கம்பளிப்பூச்சி

பச்சை வண்ணத்தில் காணப்படும் அழகான கம்பளிப்பூச்சி ஒன்றை உயிரைக் கொள்ளும் வில்லனாக சித்திரித்து வாட்ஸ்அப்பில் ஒரு தகவலை யாரோ பரவவிட்டனர். அது சமூக ஊடகங்களில் வைரலானபோது பலரையும் அச்சம் கொள்ள வைத்தது. குறிப்பாக, விவசாயிகளை பயமுறுத்துவதாகவே இருந்தது.

ஸ்லக் அந்துப்பூச்சி வகையைச் சேர்ந்த வண்ணமயமான கம்பளிப்பூச்சிதான் அது. இந்தப் பச்சை பூச்சி கடித்தால் 5 நிமிடங்களில் மரணம் ஏற்படும் என்றும், இது பாம்பைவிட விஷமானது என்றும், இதனால் கர்நாடகாவில் இறந்து போனார்கள் என்றும், வயலில் இறந்த கிடப்பது போன்ற படங்களை வைத்து பகிர்ந்துள்ளனர்.

வைரலான புகைப்படம்
வைரலான புகைப்படம்

கரும்புக் காட்டில் அடிக்கடி காணப்படும் பூச்சியால்தான் இந்த மரணம் நிகழ்ந்ததாக கம்பளிப்பூச்சி மற்றும் ஆணின் சடலம் போன்ற படங்களுடன் பரவிய அந்தச் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இது மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, கம்பளிப்பூச்சி வகைகளை அழிப்பது குறித்து நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி வேளாண் நிபுணர் ஒருவர் கூறுகையில், ``விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. விவசாயிகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பதிவுகள் எந்த நேரத்திலும் வைரலாகிவிடுகின்றன. இந்த வகையான கம்பளிப்பூச்சிகள் அவ்வளவு எளிதானவை அல்ல. மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் ஆழமான காடுகளில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, கரும்பு வயல்களில் இந்தப் பூச்சிகளைக் காண வாய்ப்பில்லை" என்றார்.

வாட்சாபில் வந்த  தகவல்
வாட்சாபில் வந்த தகவல்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பேசும்போது, ``சாமானிய மக்களுக்கு பல பூச்சிகளைப் பற்றி அதிகம் தெரியாது என்பதால், வெறும் ஆர்வக்கோளாறால் இப்படி இஷ்டத்துக்கு வைரலாக்கு கின்றனர். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐந்து முக்காடு பாம்புகளைப் பார்த்தேன் என்று புகைப்படங்கள் வைரலானது... அதைப்போல புராணங்களில் சொல்லும் மணல் போவா பாம்பு, இரண்டு தலை பாம்பு இப்படி இஷ்டத்துக்கு வதந்திகளை அள்ளிவிட்டனர். இந்தக் கதைகளை நம்பி, கடந்த காலங்களில் விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்குகள் உள்ளன. சைபர் க்ரைம் போலீஸார் இதுபோன்ற வதந்திகளைக் கண்காணிக்க வேண்டும்" என்று கூறினார்.

கர்நாடகாவில் நடந்ததாகக் கூறப்படும், பச்சைப் பூச்சியின் புகைப்படமும், வயலில் பருத்திப் பயிர்களுக்கு நடுவில் மக்கள் மயங்கிக் கிடக்கும் புகைப்படங்களும் உண்மையா என்பது பற்றி விசாரித்தோம்...

வைரலான புகைப்படத்தில் உள்ளவர்கள் பூச்சி கடித்து இறக்க வில்லை, வயலில் வேலை பார்த்தபோது மின்னல் தாக்கி இறந்த போது வெளியான புகைப்படம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம், ஜலாகான் மாவட்டத்தில் நடந்துள்ளது.

பூச்சி செல்வம்
பூச்சி செல்வம்

இது குறித்து திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பூச்சிசெல்வம் கூறியதாவது:

``இந்தச் சம்பவத்துக்கும் புகைப்படத்தில் உள்ள புழுவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. புகைப்படத்தில் உள்ள கம்பளிப்பூச்சியின் பெயர் `ஸ்டிங்கிங் நெட்டில் ஸ்லக் கம்பளிப்பூச்சி.' இந்தப் பூச்சி மனிதர்களுக்கு ஆபத்தானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது நமது தோல் ரோமத்தின் மீது பட்டால் சிறிது அரிப்பு ஏற்படும் அவ்வளவுதான். உயிரைக் கொல்லக்கூடிய விஷம் இந்தப் பூச்சிகளுக்கு இல்லை. சமூக வலைதளத்தில் பரவிவரும் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது. இந்தப் பூச்சிகளால் பெரிய ஆபத்தோ, உயிரிழப்போ ஏற்படாது. எனவே, விவசாயிகள் உட்பட அனைவரும் இது பற்றி பயப்பட வேண்டாம், தயவுசெய்து இது போன்ற தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.