Published:Updated:

குறைந்த செலவில் வெர்டிகல் கார்டன்... வழிகாட்டும் ஐ.எஃப்.எஸ். அதிகாரி!

வெர்டிகல் கார்டன்
வெர்டிகல் கார்டன் ( twitter )

"நாம் வெர்டிகல் கார்டனுக்குப் பயன்படுத்தும் மூங்கில் நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வளைந்த மூங்கில்களைப் பயன்படுத்தக் கூடாது. சுமார் 6 முதல் 8 வயதுடைய மற்றும் 25 முதல் 30 மீ உயரமுள்ள மூங்கில் சிறந்தது."

மெட்ரோ தூண்கள், உயரமான பாலங்கள் மற்றும் உயரமான கட்டடங்களை அலங்கரிக்கும் செங்குத்து தோட்டங்களை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்போம். இதையெல்லாம் செய்ய அதிக பொருட்செலவு ஆகும் என்றொரு எண்ணம் இருக்கிறது. ஆனால், மிகக் குறைந்த செலவில் வெர்டிகல் கார்டன் செய்து காட்டியிருக்கிறார், திரிபுராவைச் சேர்ந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி, நீரஜ் குமார் சஞ்சல். இதை முறையாகப் பின்பற்றினால் நம் வீட்டிலும் வெர்டிகல் கார்டன் அமைத்து அதன்மூலம் காய்கறிகள், மலர்கள் எனப் பெரும்பாலானவை பயிரிடலாம். அல்லது வீட்டைப் பசுமையாக்கும் செடிகளை வாங்கி வைத்து அழகுபடுத்தலாம்.

வெர்டிகல் கார்டன்
வெர்டிகல் கார்டன்

திரிபுராவின் கோவாய் மாவட்ட வன அதிகாரியாகத் தற்போது பணியாற்றி வரும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி டாக்டர் நீரஜ் குமார் சஞ்சல் எளிமையான பட்ஜெட்டில் வெர்டிகல் கார்டனை வடிவமைத்துள்ளார். இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் அவர், "கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு முறை பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட செங்குத்து தோட்டத்தைப் பார்த்தேன். இதேபோல நாமும் செய்தால் என்ன என்று தோன்றியது. திரிபுராவில் ஏராளமான மூங்கில் இருப்பதால், இதை வைத்துச் செங்குத்து தோட்டம் அமைக்கலாமென முடிவெடுத்தேன். இதுவரை, எனது அலுவலகத்தைச் சுற்றிலும், பூங்காக்களிலும் 30-க்கும் மேற்பட்ட தோட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

ஒரு தோட்டம், பூங்கா, வாகன நிறுத்துமிடம் போன்ற வெளிப்புற அமைப்புகளுக்கு 10X10 அடி வெர்டிகல் கார்டன் (செங்குத்து தோட்டம்) போதுமானதாக இருக்கிறது. வீட்டு காம்பவுண்டின் உட்புற சூழலுக்கு, 7X4 அடி அளவு கொண்ட வெர்டிகல் கார்டன் போதுமானது. இதற்குக் குறைந்தது 2 செ.மீ தடிமன் கொண்ட உள் சுவருடன் உள்ள மூங்கில் இனங்கள் பயன்படுத்த வேண்டும்.

"70% காய்கறி, பழங்கள் என் தோட்டத்துலயே கிடைக்குது"-Dr.கமலா செல்வராஜின் இயற்கை விவசாயம்!

ஒரு தடிமனான மூங்கிலின் சுவர் மெதுவாகச் சிதையும். இந்த வகைகள் குறைந்தது மூன்று ஆண்டுகள் தாங்கும் வகையில் இருக்கும். நாம் பயன்படுத்தும் மூங்கில் நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வளைந்த மூங்கில்களைப் பயன்படுத்தக் கூடாது. சுமார் 6 முதல் 8 வயதுடைய மற்றும் 25 முதல் 30 மீ உயரமுள்ள மூங்கில் சிறந்தது. இத்தகைய மூங்கில்களை எடுத்து, அதை 5 முதல் 7 நாள்கள் தண்ணீரில் மூழ்க வைக்க வேண்டும். இது மூங்கில் உள்ளே இருக்கும் ஸ்டார்ச் பொருளைக் கரைக்க உதவுகிறது, இதனால் உள்ளே பூஞ்சை வளராமல் தடுக்கலாம். இது வெர்டிகல் கார்டன் அடுக்குகளை உறுதிப்படுத்தும்.

மேற்கண்ட முறை மூலம் தோட்டம் அமைத்தால் மூங்கில் சுமார் 5 ஆண்டுகள் வரைத் தாக்குப்பிடிக்கும். மூங்கில் தளம் சிதைந்தவுடன் அதை மாற்ற நினைவில் கொள்ள வேண்டும். தேவையைப் பொறுத்து 10 அடி உயரமுள்ள மூங்கில் துண்டுகளாக வெட்ட வேண்டும். அதன் பின்னர் நீரில் மூழ்க வைக்க வேண்டும். அவற்றை நீரிலிருந்து எடுத்து, ஒவ்வொரு கணுவுக்கும் கீழே பானை போன்ற இடத்தை உருவாக்க வேண்டும். இந்த இடத்தில்தான் மண்ணையும் தாவரங்களையும் வைக்க வேண்டும்.

வெர்டிகல் கார்டன்
வெர்டிகல் கார்டன்

பானை போன்ற இடத்தின் நுனிப்பகுதியில் சிறிய துளைகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாம் விடும் தண்ணீர் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்குச் செல்ல முடியும். இந்த மூங்கில் தண்டுகளை வரிசையாக அடுக்கி, இரும்புக் கம்பி அல்லது பலமிக்க கயிற்றால் உறுதியாகக் கட்டுங்கள். ஒவ்வொரு பானை போன்ற இடத்திலும், மண், தேங்காய் நார்கள் சேர்த்து ஒவ்வொரு இடத்திலும் அலங்கார தாவரங்கள், மூலிகைகள், கீரைகள் அல்லது பூக்களை நடலாம். தாவரங்களின் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் நீரஜ் குமார் சஞ்சல்.

அடுத்த கட்டுரைக்கு