Published:Updated:

`இனி காய்கறி, பழங்களை எளிதாக சேமிக்கலாம்!' - விவசாயிகளுக்காக மாணவர்கள் வடிவமைத்த `சப்ஜி கூலர்ஸ்'

குளிர்பதனப் பெட்டி
குளிர்பதனப் பெட்டி

இந்த குளிர்பதனப் பெட்டியில் 100 கிலோ காய்கறிகளைச் சேமிக்கலாம். காய்கறிகள் மட்டுமில்லாமல் பழங்கள், மலர்களையும் சேமித்து வைக்க முடியும். இந்த அமைப்பு எந்தவித ரசாயனமும் இன்றி இயற்கை முறையில்தான் செயல்படுகிறது.

விவசாயிகளின் முக்கிய பிரச்னையே விற்பனைதான். அறுவடை செய்த காய்கறிகள், பழங்களை இருப்பு வைக்க முடியாமல் கிடைக்கும் விலைக்கே விற்பனை செய்துவிடுவதால் போதுமான விலை கிடைப்பதில்லை. விலை கிடைக்காமலோ, அறுவடை செய்த காய்களை சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமலோ இருக்கும் நேரங்களில் அதை இருப்பு வைப்பது மிகவும் சிரமம்.

குளிர்பதனப் பெட்டி
குளிர்பதனப் பெட்டி
அரிதான புதிய வகை நுண்ணுயிரி கண்டுபிடிப்பு; சாதித்த அரசுக் கல்லூரி மாணவி!

சில பகுதிகளில் குளிர்பதன அறைகளை அரசுகள் கட்டிவிட்டிருந்தாலும் அங்கே கொண்டு போய் வைப்பதில் விவசாயிகள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், விவசாய விளைபொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு சரியான தொழில்நுட்பம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் ஒடிசா, மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் சிறிய குளிர்பதனப் பெட்டிகள் பிரபலமாகி வருகின்றன. இதற்கு மின்சாரம் தேவையில்லை. தனியாக பெட்டிகளும் வாங்கத் தேவையில்லை. ஒருமுறை பண்ணையில் அமைத்துவிட்டால் பல நாள்களுக்குப் பலன் தரும். இதை சப்ஜி கூலர்ஸ் (Subjee Coolers) என்று அழைத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் இதை விவசாயிகளின் தோட்டங்களில் அமைத்துக் கொடுத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

இந்த சப்ஜி குளிர்பதனப் பெட்டியை வடிவமைத்தவர்கள் பாம்பே ஐ.ஐ.டியைச் சேர்ந்த விகாஸ் ஜா, சரயு குல்கர்னி, குனவந்த் நெகடே ஆகியோர். தற்போது இவர்களே சேர்ந்து ரூகார்ட் டெக்னாலஜீஸ் என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கி இந்த குளிர்பதனப் பெட்டி முறையை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க செயல்பட்டு வருகிறார்கள்.

காய்கறிகள் சேமித்தல்
காய்கறிகள் சேமித்தல்

இதுகுறித்து ரூகார்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனர் விகாஸ் ஜா பேசியபோது, ``செலவு குறைந்த இந்த குளிர்பதனப் பெட்டி, சிறு குறு விவசாயிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது. ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதம். இந்த குளிர்பதனப் பெட்டியில் 100 கிலோ காய்கறிகளைச் சேமிக்கலாம். காய்கறிகள் மட்டுமில்லாமல் பழங்கள், மலர்களையும் சேமித்து வைக்க முடியும். இந்த அமைப்பு எந்தவித ரசாயனமும் இன்றி இயற்கை முறையில்தான் செயல்படுகிறது. அதாவது நீர் ஆவியாதல் முறையில் இது செயல்படுகிறது.

இந்த அமைப்பை நிறுவுவதற்கு முதலில் செங்கற்கள், சிமென்ட் கலவையைப் பயன்படுத்தி ஒரு தொட்டியைக் கட்டிக்கொள்ள வேண்டும். தொட்டிக்குள்ளும் தொட்டியை மூடுவதற்கும் இரும்பினால் ஆன அமைப்பை அமைக்க வேண்டும். தொட்டிக்கு உள்ளே நைட்ரஜன் பால்களை வைத்துவிடுவோம். அறையின் வெப்பநிலை 5-15 டிகிரி செல்சியஸில் இருப்பதுபோல் பராமரிக்கும்.

அதேபோன்று ஈரப்பதம் வெளியில் இருப்பதை விட 85-90 சதவிகிதம் இருக்கும். இந்த இரண்டையும் தொடர்வதற்கு தினமும் 10 லிட்டர் தண்ணீரை அதற்கென்று உள்ள அமைப்பில் விட வேண்டும். வழக்கமாக குளிர்பதனப் பெட்டி இயங்குவதற்கு மின்சாரம் பயன்படுத்தப்படும். இதற்கு மின்சாரமும் தேவையில்லை. மழை, வெயில் எதுவும் பெட்டிக்குள் இருக்கும் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

இதை நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்தலாம். ஒடிசா, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் 300 விவசாயிகளுக்கு அரசின் உதவியோடு அமைத்துக் கொடுத்தோம். இப்படி அமைத்து பரிசோதித்ததில் பெட்டிக்குள் வைக்கும் காய்கறிகள் 5-6 நாள்கள் தாங்குவதாக சொல்லியிருக்கிறார்கள். இருப்பு வைத்து நல்ல விலைக்கே விற்பனை செய்திருக்கிறார்கள்” என்றார்.

குளிர்பதனப் பெட்டி
குளிர்பதனப் பெட்டி
பறவைகளை விரட்டும் எளிய கருவி! - பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு!

இந்த அமைப்பை அமைப்பதற்கு ரூ.45,000 செலவாகும் என்கிறார்கள். இதை ஜீரோ பட்ஜெட்டிலும் அமைத்துக் கொள்ளலாம். இதற்குத் தேவையான செங்கல், இரும்புத் தகடு உள்ளிட்டவற்றை வாங்கி நாமே அமைத்தும் கொள்ளலாம். இந்த முறை ஏற்கெனவே இருந்து வரும் முறைதான். அதில் தினந்தோறும் தண்ணீர் ஊற்றி பெட்டிக்குள் குறைந்த வெப்பநிலையைப் பராமரிப்பதுதான் கூடுதல் அம்சம். இந்த அமைப்பை நிறுவுவதற்கான விஷயங்களைத் தெரிந்து கொண்டால் விவசாயிகளேகூட அமைத்துக் கொள்ளலாம். ஒருமுறை அமைத்துவிட்டால் பல ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும். பராமரிப்பும் மிக எளிதானது. பயன்படுத்துவதும் அதைவிட எளிதானது. இதில் பிளாஸ்டிக் பெட்டிகள், கூடைகள் எதில் வேண்டுமென்றாலும் காய்கறிகள், பழங்களை வைத்துக் கொள்ளலாம். இனி, காய்கறிகளை எளிதாக இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.

அடுத்த கட்டுரைக்கு