Published:Updated:

தக்காளி வீணாவதைத் தடுக்க புது சாதனம்... விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் ஐ.ஐ.டி மாணவர்கள்!

தக்காளி மட்டுமல்லாமல், எளிதில் கெடக்கூடிய காய்கறிகள், பழங்கள், இறைச்சி பொருள்கள் போன்றவற்றையும் நீண்டதூரம் வரை எடுத்துச் சென்று வியாபாரம் செய்யும் வகையில் இதை வடிவமைத்துள்ளனர்.

TAN 90
TAN 90

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுவது தக்காளி. ஆனால், கடந்த சில காலமாக `தக்காளியைச் சரியான நேரத்தில் விற்பனை செய்யாவிட்டால் எல்லாமே வீணாகிவிடும்' என்று விவசாயிகள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி அரசுத்துறைகளும் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளன. அதன் முதற்படியாக தக்காளி, மாம்பழம் மற்றும் காய்கறிகள் விலை குறைந்து அதைக் குப்பையில் வீணாக வீசும் நிலை ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, விவசாயிகளின் தோட்டத்துக்கே சென்று அவற்றைப் பதப்படுத்தி மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றிக்கொடுக்கும் வசதி கொண்ட 5 வாகனங்களை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

தற்போது இதேபோல சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களும் தக்காளி விவசாயிகளுக்கு உதவும் வகையில் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். தக்காளி மட்டுமல்லாமல், எளிதில் கெடக்கூடிய காய்கறிகள், பழங்கள், இறைச்சிப் பொருள்கள் போன்றவற்றையும் நீண்டதூரம் வரை எடுத்துச்சென்று வியாபாரம் செய்யும் வகையில் இதை வடிவமைத்துள்ளனர்.

Vikatan

டான் 90 (TAN 90) எனும் விவசாயிகளுக்கான குறைந்தவிலை குளிர்சாதனப் பெட்டியை ஐ.ஐ.டி.,யின் ஆராய்ச்சி மாணவர்களான செளமால்யா முகர்ஜி, சிவ் ஷர்மா, ரஜானிகாந்த் ராய் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம், 2020-ம் ஆண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும். அதில் இந்தக் கருவியும் சிறு பங்காற்றவேண்டும் என்பதே இவர்களின் இலக்கு. TAN 90-ன் வேலை, காய்கறிகளை பண்ணை முதல் அது நமது கைக்கு கிடைக்கும் வரை பாதுகாப்பாக கெடாமல் கொண்டுவந்துசேர்ப்பதே ஆகும். இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதுடன், உணவு வீணாதலும் தடுக்கப்படுகிறது.

இந்த சாதனம் எங்கும் சுலபமாக எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டால் உணவுப் பொருள்களின் ஆயுள் கூடும். அதிக விலை இருந்தால் இது கிராமப்புறத்தைச் சென்றடையாது என்பதைக் கருத்தில் கொண்டு குறைந்த முதலீடு, குறைந்த எரிபொருள் செலவு என்று அனைத்துத் தரப்பு விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

``தெர்மல் பேட்டரியில் இந்த TAN 90 குளிர்சாதனப் பெட்டி இயங்குகிறது. இதில் உள்ள தட்பவெப்ப மாறுபாடுகளை கிரகிக்கும் கருவியால் 200 கி.மீ வரை பாதுகாப்பாக எளிதில் அழுகும் பொருள்களை பத்திரமாக கொண்டு செல்லலாம்" என்கிறார், பேராசிரியர் சத்ய நாராயணன் சேஷாத்ரி.

TAN 90
TAN 90

இந்தக் குளிர்சாதனப் பெட்டிக்கு இரண்டு பக்கத்திலும், பொருள்களை குளிர்ச்சியாக வைப்பதற்கான சாதனங்கள் (Self standing cooling devices) இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் பலமாகும். 58 லிட்டர் கொள்ளளவு வரைக்கும் இந்தக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். இந்தப் பெட்டியின் கண்டுபிடிப்பால், இனி குளிரூட்டப்பட்ட சரக்கு வாகனங்களின் தேவை குறையும். அதற்கு அதிக பணம் செலவழிப்பதிலிருந்தும் தப்பலாம்.

TAN 90-ன் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு வருங்காலத்தில் சூரிய ஒளியைப் பயன்படுத்தும் முயற்சியும் முருகப்பா குழுமத்துடன் இணைந்து ஆய்வு நடந்துவருகிறது. TAN 90-யை பழவகைகளுக்கு, காய்கறி வகைகளுக்கு மட்டுமன்றி கறி, மீன் போன்ற அசைவ உணவுகள், மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தலாம். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்தக் கண்டுபிடிப்பால் விரைவில் பயன்படப்போகின்றன.

Vikatan

10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை 10 மணிநேரம் இதனால் தக்கவைத்துக்கொள்ள முடியும். அப்படியானால் இதற்கு நிறைய மின்சாரம் தேவைப்படாது. 4 பெட்டிகளை முழுவதுமாக சார்ஜ் செய்ய இரண்டு யூனிட் மின்சாரம் போதுமானது. இதில் 50 கிலோ வரை சேமிக்கமுடியும். இது சாதாரண ஐஸ் பாக்ஸின் கொள்ளளவை விட அதிகம். TAN 90-க்கு அதிக ஆயுட்காலமும் உண்டு. பொருள்களை எடுத்துச்செல்லும்போது எலிகளின் தொல்லை, நுண்ணுயிரிகளின் பாதிப்பு இந்தப் பெட்டியை உபயோகிப்பதால் இருக்காது. இந்தப் பெட்டி உபயோகத்தில் இல்லாத பொழுது சார்ஜ் போட்டு தயாராக வைத்துக் கொள்ளலாம். இயற்கையோடு இணைந்த கண்டுபிடிப்பான TAN 90 சமீபத்தில் நடந்த ``இந்தியன் இன்னோவேஷன் குரோ புரோகிராம்-2.0" போட்டியில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதை பெற்றிருக்கிறது. குறைந்த முதலீடு, நீண்ட ஆயுள், இயக்குவதற்கான செலவு குறைவு எனப் பல சிறப்புகளைக் கொண்ட TAN 90 யை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. அதனால் இதைத் தயாரிப்பதற்கான வேலையை ஆரம்பித்துள்ளனர், ஐ.ஐ.டி மாணவர்கள். விவசாயிகள் வியாபாரிகளுக்குப் பயன்படப் போகும் என்பது மட்டும் நிச்சயம்.