Published:Updated:

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்

ஆர்கானிக் காய்கறி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்கானிக் காய்கறி

அறிவோம்

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்

அறிவோம்

Published:Updated:
ஆர்கானிக் காய்கறி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்கானிக் காய்கறி

`இது ஆர்கானிக் காய்கறி சார்... ரசாயன உரம் போடாமல் விளைஞ்ச வெண்டைக்காய் மேடம்... இது இயற்கையில விளைஞ்ச பப்பாளி, சாப்பிட ருசியா இருக்கும்!'

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்

சமீபகாலமாக ஆர்கானிக் உணவுகளுக்கு அதிக மவுசு ஏற்படக் காரணம், விழிப்புணர்வும் ஆர்கானிக் உணவுப்பொருள்கள் மீதான மோகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதுதான். இதற்கான சந்தை வாய்ப்புகளும் மிக வேகமாக விரிவடைந்துவருகின்றன.

மற்ற பொருள்களின் சந்தை விலையோடு ஒப்பிடுகையில், ஆர்கானிக் பொருள்களின் விலை மூன்று மடங்கு அதிகம். ஆனாலும், விலையைப் பொருட்படுத்தாமல் ஆர்கானிக் பொருள்களை வாங்குவதில் பெருமையடைகிறோம். ஆர்கானிக் உணவுகள் உடலுக்கு நல்லது என்கிற அடிப்படையைத் தவிர, ஆர்கானிக் என்றால் என்ன, அதன் உண்மைத் தன்மையை எப்படிக் கண்டறிவது என்பது பற்றியெல்லாம் பலருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால்தான் வியாபாரிகளும் தங்கள் தொழில் ‘உத்தி’யைப் பயன்படுத்தி மக்களை எளிதில் ஏமாற்றுகின்றனர். இதைத் தவிர்க்க, நாம் கவனிக்கவேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆர்கானிக் என்பது என்ன?

‘ஆர்கானிக்’ எனும் வார்த்தை ‘இயற்கையானது’ என்பதைக் குறிக்கிறது. அதாவது, ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங் களால் விளைவிக்கப்படும் உணவுப்பொருள்களைத்தாம் ஆர்கானிக் என்கிறோம். ஹார்மோன்களோ, மருந்துகளோ பயன்படுத்தப்படாமல் வளர்க்கப்படும் விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சி, பால், முட்டை போன்ற உணவுப்பொருள்களையும் இது குறிக்கிறது. முக்கியமாக, பயிர்களுக்கும் கனிகளுக்கும் கொடுக்கப்படும் உரங்களின் தன்மையைப் பொறுத்தே, `ஆர்கானிக்' என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்கானிக் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

விவசாயம் சாராத மக்களுக்கு, இயற்கையான விளைபொருளுக்கும், ரசாயன உரத்தில் விளைந்த பொருளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது சற்றே கடினம்.

 • இயற்கையில் விளைந்த பொருள்களுக்கு அவற்றுக்கே உரித்தான மணம் இருக்கும். தோல் மென்மையாகவும் சற்று சுருங்கியும் காணப்படும். உதாரணமாக... தக்காளி ஒருவாரம் வரை கெடாமல் தோல் மட்டும் சுருங்கினால் அது ஆர்கானிக்.

 • இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒரே வடிவத்திலும் ஒரே நிறத்திலும் இருக்காது. இவற்றுக்கென பிரத்யேக மணமும் மிகுந்த சுவையும் இருக்கும்.

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்
 • கீரைகள், பார்ப்பதற்கு பளீர் பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் போதாது. மருந்து வாசனை வராமல், பச்சை மணத்துடன் இருக்கிறதா என சோதிப்பதுடன், குறைந்தபட்ச இலைகளையாவது பூச்சிகள் அரித்துள்ளதா எனப் பார்த்து வாங்குங்கள். ஏனெனில், ரசாயனம் தெளித்த கீரையை பூச்சிகள் நெருங்க வாய்ப்பில்லை.

  • ஆர்கானிக் விளைபொருள்களில் 20 முதல் 25 சதவிகிதம் வரை வண்டுகள், பூச்சிகள் இருக்கத்தான் செய்யும். வண்டுகளும் பூச்சிகளும் ஒதுக்கிய பழங்கள், காய்கறிகள், அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங் களையும் வாங்குவது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. வண்டுகள் தாக்கிய பகுதிகளை மட்டும் அப்புறப் படுத்திவிட்டு தாராளமாகப் பயன்படுத்தலாம்.

  • சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் தானியங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஆர்கானிக் அரிசி களில் தயாரிக்கப்படும் உணவில் மறுநாள்வரை கெட்டுப்போன மணம் வராது.

  • எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆனால், சந்தையில் விற்கப்படும் நல்லெண்ணெய், எள் விலையைவிடக் குறைவு. செக்கில் ஆட்டிய எண்ணெய், கூடுதல் விலையுடன் நல்ல மணத்துடனும், உணவுக்கு மிகுந்த சுவையூட்டக் கூடியதாகவும் இருக்கும்.

இயற்கை காய்கறிகளை உறுதிசெய்வது எப்படி?

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்

ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும் பொருள்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். `அந்தப் பொருள்கள் எந்த ஊரிலிருந்து வருகின்றன? எந்த விவசாயியிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன? அந்த விவசாயி எந்தச் செக்கில் எண்ணெய் எடுக்கிறார்?' - இப்படிப்பட்ட கேள்விகளைக் கடைக்காரரிடமே அவசியம் கேளுங்கள். பதில் சொல்லத் தயங்கும் அல்லது மறுக்கும் கடைகளை நம்பாதீர்கள். அதேபோல, ஆர்கானிக்கில் பிராண்டுகளுக்கு முக்கியத்துவம் தர தேவையில்லை. அதன் ஆரம்பப் புள்ளி நல்ல நோக்கத்துடன், நேர்மையாக இருந்தாலும், இடையில் கடந்துவரும் பாதையில் பிழை நேரலாம். முடிந்த வரை, விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்யும் அங்காடிகளைத் தேர்வுசெய்தால் போலிகளிடமிருந்து தப்பலாம்.

ஆர்கானிக் பொருள்கள்... நன்மையும் சிரமங்களும்

 • ஆர்கானிக் உணவுப்பொருள்களில் உடலுக்குத் தேவையான சத்துகள் அதிகமாக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து உண்பதால், உடல்நலம் சீராகி ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். உடல் பருமனடைவதைக் கட்டுப்படுத்துவதுடன் தேவையற்ற எடையைக் குறைக்கவும் முடியும்.

 • விளைநிலங்களில் ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லிகளோ குறைந்தால், சூழல் மாசடைவதும் குறையும். இதனால் விளைநிலங்களைச் சுற்றிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் சுத்தமாகும்.

 • இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் விலங்குகளிலிருந்து அதிக அளவு இறைச்சி, பால் மற்றும் முட்டையைப் பெற முடியும்.

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்
 • இயற்கை விவசாயத்தில் குறைந்த அளவிலான விவசாயிகளே ஈடுபட்டுள்ளதால், ஆர்கானிக் விளைபொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கூடுதல் விலை என்பதை மேலோட்டமாகப் பார்க்காமல் கூர்ந்து நோக்கினால்... ரசாயனத்தில் விளைந்த 10 கிலோ அரிசிக்கு நிகராக, இயற்கை முறையில் விளைந்த 6 முதல் 7 கிலோ அரிசியே போதுமானதாக இருக்கும். இதுவே, 10 கிலோ அரிசிக்கு இணையான சாதத்தைத் தரும். இதை ஒப்பிடும்போது, இரண்டின் விலையும் கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும். ஆனால், ஆர்கானிக் என்ற பெயரில் போலியான அரிசியை வாங்கினால் விலையும் அதிகம்; ஆரோக்கியத்துக்கும் கேடு என்பதால், கவனம் தேவை.

 • நாம் வழக்கமாக உண்ணும் பொருள்கள் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். ஆர்கானிக் உணவுப்பொருள்கள் அப்படி அருகிலேயே கிடைப்பதில்லை. இதுபோன்ற சில சிரமங்களை ஏற்றுக்கொண்டால், உடலுக்கு பல மடங்கு ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் உண்டு.

ஆர்கானிக் மட்டுமே ஆபத்பாந்தவனா?

‘நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர் என எல்லாவற்றிலும் ரசாயனம் கலந்துவிட்ட நிலையில், உணவை மட்டும் இயற்கையானதாக எடுத்துக்கொள்வது எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்கிற கேள்வி எழலாம்.

மாசுக் காற்றின் மூலம் குறைந்த அளவு நஞ்சு நம் உடலில் சேரும். குடிக்கும் தண்ணீரை சுத்தப்படுத்திக் குடிப்பதற்கான மாற்றுவழி இருக்கிறது. ஆனால் உணவு என்பது, நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது.

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்

காற்று, தண்ணீர் போன்ற காரணிகளால் ஏற்படும் நோய்களுடன் மல்லுக்கட்டும் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்குத் தரவல்லது உணவுதான். எனவே, ரசாயனக் கலப்புடன்கூடிய மாசுபட்ட உணவுக்கு மாறாக, இயற்கை உணவை உண்பதே மற்ற பிரச்னைகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் அரணாகவே அமையும்.

இயற்கைக் காய்கறிகளை உண்பதற்கான மூன்று வழிகள்

1. இயற்கை விவசாயம் செய்வது.

2. இயற்கை விவசாயப் பொருள்களை நம்பத்தகுந்த விவசாயிகளிடம் நேரடியாகப் பெறுவது.

3. மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் மூலமாக இயற்கையான காய்கறிகளை உற்பத்திசெய்து கொள்வது.

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்

இந்த வழிகளில் நகர வாசிகளில் பெரும்பாலானோர் மாடித்தோட்டக் காய்கறி வளர்ப்பையே பின்பற்றி வருகிறார்கள். இதனால் நம் செலவு குறைவதோடு, ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

ஆர்கானிக் பால் உண்மையா?

ஆர்கானிக் பால் மற்றும் ஆர்கானிக் முட்டைகள் கடைகளில் கிடைக்கின்றன. ஆர்கானிக் தீவனத்தை உண்ணும் மாடு மற்றும் கோழிகளின் வாயிலாக மட்டுமே ஆர்கானிக் பால் மற்றும் முட்டை கிடைக்கும். மேலும், அவற்றுக்கு எந்தவிதமான ஆன்டிபயாட்டிக்குகளும் கொடுத்திருக்கக் கூடாது. எனவே, கடைகளில் கிடைக்கும் ஆர்கானிக் பால் மற்றும் முட்டையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு வாங்குங்கள். முடிந்தவரை ஆர்கானிக் பண்ணைகளில் வாங்குவதே நல்லது.

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism