Published:Updated:

டெல்டா: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மணல் குவாரி? -குமுறும் விவசாயிகள்

கொள்ளிடம் ஆற்றுக்குள் விவசாயிகள் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றுக்குள் விவசாயிகள் போராட்டம் ( ம.அரவிந்த் )

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்ட கொஞ்ச நாள்களிலேயே ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டுள்ளது.

`கல்லணை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பிறகு மணல் குவாரியும் அமைக்க அரசு அனுமதி தந்துள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது’ என அப்பகுதியினர் குற்றம்சாட்டி ஆற்றுக்குள் இறங்கி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் எடுப்பதை எதிர்த்து போராட்டம்
மணல் எடுப்பதை எதிர்த்து போராட்டம்

கல்லணை அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியைக் கடந்து செல்கிறது கொள்ளிடம் ஆறு. திருச்செனம்பூண்டி என்ற கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கியிருப்பதுடன் குவாரி அமைக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே மூன்று முறை மணல் குவாரி அமைத்து மணல் எடுத்த நிலையில் தற்போது அதே இடத்தில் மீண்டும் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததுடன், விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து சமூக ஆர்வலரான வழக்கறிஞர் ஜீவகுமார் என்பவரிடம் பேசினோம், ``கொள்ளிடம் ஆற்றிலிருந்துதான் பல்வேறு மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் செல்கிறது. மேலும், கொள்ளிடம் ஆற்றை நம்பி விவசாயமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருச்செனம்பூண்டி பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

வழக்கறிஞர் ஜீவக்குமார்
வழக்கறிஞர் ஜீவக்குமார்
படங்கள்; ம.அரவிந்த்

மணல் குவாரி அமைக்கப்பட்ட கொஞ்ச நாள்களிலேயே ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்து இங்கு மூன்று முறை குவாரி அமைத்து மணல் எடுத்த நிலையில், தற்போது மீண்டும் மணல் எடுக்க அனுமதித்திருப்பது கல்லணைக்கே ஆபத்தை ஏற்படுத்த கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆறுகளில் நடந்த மணல் கொள்ளையால் ஏற்பட்ட பெரும் பள்ளங்களினால் குறிப்பிட்ட நேரத்துக்கு வர வேண்டிய தண்ணீர் தாமதமாகவே கல்லணையை வந்தடைந்தது. இதுபோன்ற காரணங்களால் தற்போது கடைமடைக்கும் தண்ணீர் தாமதமாக சென்றுகொண்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

தொடர்ச்சியாக மணல் அள்ளப்படுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆறு பாலைவனமாக மாறி வருவதுடன் ஆற்றுக்குள் பெரிய பெரிய பள்ளதாக்குகள் போல் பள்ளங்கள் உருவாகி வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலாக அறிவித்துள்ள அரசு அப்புறம் ஏன் மணல் குவாரிக்கு அனுமதி கொடுக்க வேண்டும். வெறும் கண் துடைப்புக்காக இதை அறிவித்துள்ளதா என்கிற சந்தேகம் எழுகிறது.

அனுமதி பெற்றும் பெறாமலும் பல குவாரிகளை அமைத்து மணலை கொள்ளையடித்து வருகின்றனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், குவாரி அமைக்க கொடுத்த அனுமதியையும் திரும்பப் பெற வேண்டும். இதற்காக பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களை திரட்டி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினோம். உடனடியாக எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதுடன் விவசாயத்தையும், விவசாயிகளையும் அரசு காக்க வேண்டும். இல்லை என்றால் இதைவிட பெரும் போராட்டத்தை நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம். இதை அரசுக்கு ஓர் எச்சரிக்கையாகவே சொல்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு