Election bannerElection banner
Published:Updated:

மாடித்தோட்டம், பயோ காஸ், குறுங்காடு... ஒரு சுயேச்சை வேட்பாளரின் `அடடே' பிரசாரம்!

மகாலட்சுமி
மகாலட்சுமி

பெண்களை மையப்படுத்தி ஓட்டு கேட்டு வருகிறார் சென்னை, வேளச்சேரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இயற்கை விவசாயி (உழத்தி) மகாலட்சுமி.

``வீட்டுக்கு வீடு வீட்டுத்தோட்டம், காஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக பயோ காஸ், கேன் வாட்டருக்குப் பதிலாக சேமிக்கப்பட்ட மழைத் தண்ணீர் பயன்பாடு, மின்சாரத்துக்குப் பதிலாக சோலார் மின்சாரம்” என்று பெண்களை மையப்படுத்தி ஓட்டு கேட்டு வருகிறார் சென்னை, வேளச்சேரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இயற்கை விவசாயி (உழத்தி) மகாலட்சுமி.

பிரதான கட்சி வேட்பாளர்களெல்லாம் பேண்டு செட், தாரை, தப்பட்டை, பட்டாசு, மைக், ரேடியோ செட் என்று சகிதமாக வரும் நிலையில் கழுத்தில் சின்னமாக வழங்கப்பட்டிருக்கும் பச்சை மிளகாயைப் போட்டுக்கொண்டு தனியொரு மனுஷியாக ஓட்டு கேட்டு வருகிறார்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

அவரிடம் பேசியபோது, ``எல்லா கட்சிக்காரங்களும் காசு கொடுத்து ஆட்களைக் கூட்டிக்கொண்டு ஓட்டு கேட்கிறார்கள். எனக்கு, பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டிட்டு வரத் தேவையில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் வேட்பாளராகக் களம் காண்கிறேன்.

நான் பசுமை விகடன் படித்து இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அதில் சொல்லப்பட்டுள்ள தற்சார்புக்கான விஷயங்களெலலாம் பெருவாரியான மக்களுக்கு போய் சேர வேண்டும் என்றுதான் தேர்தலில் நிக்கிறேன்.

நகரங்களைப் பொறுத்தவரை வீட்டிலுள்ள பெண்களுக்குத்தான் எல்லா பிரச்னைகளும். மாசாமாசம் காய்கறிச் செலவே பெரிய செலவாக இருக்கிறது. இதற்கு வீட்டுக்கு வீடு மாடித்தோட்டம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தால், காய்கறி உற்பத்தி பெருகி நகரங்களுக்கு வெளியேயிருந்து வரும் காய்கறிகளை எதிர்பார்த்து இருக்க தேவையில்லை.

பிரசாரத்தில்
பிரசாரத்தில்

அதேபோன்று கேஸ் சிலிண்டருக்கு கொடுக்கும் பணம், பெண்களின் கண்ணீரை வரவழைக்கிறது. கணவன்மார்கிட்ட இருந்து அப்படி இப்படி சேமித்து வெச்ச பணத்தையெல்லாம் கேஸுக்கு கொடுத்துட்டு இருக்காங்க. இதற்கு மாற்றா காய்கறிக் கழிவுகளிலிருந்து பயோ கேஸ் தயாரித்து பயன்படுத்தலாம். இதற்கான சிறிய அளவில் பிளான்ட் அமைத்து பயோ கேஸ் உற்பத்தி செய்யலாம். இதை வீடுகளுக்கும் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கே நகரத்தில் தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறாங்கள். அதையே பெய்யும் மழைநீரைச் சேமித்து அதை குடிநீராகவும் சமையலுக்கும் பயன்படுத்தலாம். மாத வருமானத்தில் கரன்ட் பில் கட்டுறதுக்கே பெரிய தொகை செலவிட வேண்டியிருக்கிறது. அதற்குப் பதிலாக வீட்டுக்கு வீடு சோலார் பேனல் வைத்தால் அரசின் கரன்ட்டை எதிர்பார்க்க தேவையில்லை. இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய நிலக்கரியை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தவும் தேவையில்லை.

நகரங்களில் சுத்தமான காற்றை வழங்க ஆங்காங்கே குறுங்காடுகள் உருவாக்க வேண்டும். பெண்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய தொழில் பூங்காக்களை உருவாக்க வேண்டும். இப்படி பல யோசனைகளை தேர்தல் அறிக்கையாக உருவாக்கி மக்களிடையே பிரசாரம் செஞ்சிட்டு வருகிறேன்.

நான் ஜெயிப்பேனா, தோற்பேனா என்பது தெரியாது. ஆனா, இந்த விஷயங்கள் மக்களிடம் போய் சேர வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும். அதற்காகத்தான் இப்படித் தெரு தெருவாக நானே போய் வாக்காளர்களிடம் பேசி விளக்குகிறேன். சிலபேர் ஆர்வமா கேப்பாங்க. பலபேர் கடந்து போயிடுவாங்க. ஆனா, அதபத்தி கவலையில்லை.

பிரசாரத்தில்
பிரசாரத்தில்

இந்த மக்களுக்கு இயற்கை பத்தியும், இயற்கை விவசாயம் பத்தியும், தற்சார்பு வாழ்க்கை பத்தியும் தெரிஞ்சுக்கணும் என்ற நோக்கத்தோடு வேளச்சேரி தொகுதியில் வலம் வந்துட்டு இருக்கேன். நோட்டாவுக்குப் போடும் ஓட்டுக்களையாவது எனக்குப் போடுங்கள்னு கேட்டுக்கொள்கிறேன். இருங்க அங்க 4 பேர் நிக்கிறாங்க. அவங்ககிட்ட ஓட்டு சேகரிக்கணும்” என்றபடியே கிளம்பினார்.

தமிழகத் தேர்தல் சூடுப்பிடித்து பிரசாரம் அனலடித்துக் கொண்டிருக்கிறது. நாளையோடு பிரசாரம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் பிரதானக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், நட்சத்திர வேட்பாளர்கள் எனக் களம் கண்டு வரும் சூழலில் இப்படியும் சில சுயேச்சை வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு