கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சரக்குகளை ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல்களையும் தாண்டி இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என அரசு அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியானது முந்தைய நிதியாண்டின் முதல் பத்து மாதங்களைவிட, நடப்பு நிதியாண்டின் (ஏப்ரல்-ஜனவரி, 2021-22) முதல் பத்து மாதங்களில் அமெரிக்க டாலர் மதிப்பில் 23 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு கடந்த நிதியாண்டில் 15,974 மில்லியன் அமெரிக்கன் டாலராக இருந்தது. தற்போது இந்த நிதியாண்டில் 19,709 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதிலிருந்து 23,713 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்.
2021-22 ஏப்ரல் – ஜனவரி மாதங்களில் அரிசி அந்நிய செலாவணி வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. இதனால் 7,696 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோதுமை ஏற்றுமதியும் ஏறக்குறைய நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. மற்ற தானியங்கள் ஏற்றுமதி அமெரிக்க மதிப்பில் 66 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து தானிய தயாரிப்புகள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட பொருள்கள் ஏற்றுமதியில் 14 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளன. பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதியில் 11 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது.

நாட்டின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழியை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதை இதிலிருந்து காணமுடிகிறது. ``2018-ல் ஏற்படுத்தப்பட்ட விவசாய ஏற்றுமதி கொள்கையின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகளுடன் இணைந்து குழுக்களில் கவனம் செலுத்துவதன் மூலம், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில், நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்" என்று வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஆணையத்தின் (APEDA) தலைவர் எம்.அங்கமுத்து தெரிவித்துள்ளார்.