Published:Updated:

மரக் கிளைகளை நடும் ‘போத்து நடவு முறை!’

அய்யப்பன்
பிரீமியம் ஸ்டோரி
அய்யப்பன்

தொழில்நுட்பம்

மரக் கிளைகளை நடும் ‘போத்து நடவு முறை!’

தொழில்நுட்பம்

Published:Updated:
அய்யப்பன்
பிரீமியம் ஸ்டோரி
அய்யப்பன்

‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்ற நிலைமாறி ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம். இயற்கையைப் பாதுகாக்கும் காரணிகளுள் முதல் காரணி மரங்கள். தற்போதைய நிலையே தொடர்ந்தால், இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என எச்சரிக்கிறது ஓர் ஆய்வு. ஒரு கன்று மரமாகி வளர்ந்து நிற்க, சில ஆண்டுகளாகும். அதேசமயம் கிளைகளை நடவு செய்தால் விரைவில் மரங்களாக வளர்ந்துவிடும். இந்தத் தொழில்நுட்பம்தான் ‘போத்து நடவு’ என அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம்தான் தற்போதைய தேவை என்கிறார் ‘போத்து நடவு’ முறையில் இதுவரை மூவாயிரம் கிளைகளை நட்டு மரமாக்கியுள்ள, துணை வேளாண் அலுவலரான அய்யப்பன்.

கிளைகளை நடவு செய்யும் பணியில்...
கிளைகளை நடவு செய்யும் பணியில்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசியடுத்த லெட்சுமிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் போத்துமுறை நடவுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அய்யப்பனைச் சந்தித்தோம். “மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகிலுள்ள பாப்பநாயக்கன்பட்டிதான் என்னோட சொந்த ஊரு. திண்டுக்கல், காந்திகிராமப் பல்கலைக்கழகத்துல வேளாண்மை படிப்பு படிச்சுட்டு, உதவி வேளாண் அலுவலரா வேலைக்குச் சேர்ந்தேன். 32 வருஷம் ஓடிடுச்சு. இப்போ ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உழவர் சந்தையில் துணை வேளாண் அலுவலரா இருக்கேன்.

புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்தூர் கிராமத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்தராவ் என்பவர், ஆலமரக் கிளையை வெட்டி, போத்துமுறையில் நடவு செய்தார். அது வளர்ந்து சோலைவனமாக மாறிடுச்சு. அந்தப் பகுதியில் வேலை செஞ்சப்ப அவரோட பழகும் வாய்ப்பு கிடைச்சது. அவர் மூலமாத்தான் போத்து நடவுமுறைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனந்தராவின் இறப்பிற்குப் பிறகு, அவருடன் இருந்த ஆசைத்தம்பியுடன் இணைந்து, தொடர்ந்து மரம் நடும் பணியில் ஈடுபட்டேன்.

சாலையோரத்தில் நடவு செய்யப்பட்டுள்ள மரக் கிளைகள்
சாலையோரத்தில் நடவு செய்யப்பட்டுள்ள மரக் கிளைகள்

அப்போதைய மாவட்ட ஆட்சியர், போத்துமுறை நடவினை 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் ஆசைத்தம்பி தலைமையில், மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தினார். நேரம் கிடைக்கும்போது நானும் இதில் கலந்துகிட்டேன். இதன்மூலம் 7.6 லட்சம் மரங்கள் நடப்பட்டன. மத்திய அரசின் ஆய்வுக்குழு இதனை ஆய்வு செய்து (2016-17-இல்) மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசு விருது கொடுத்தாங்க. ஓய்வு நேரத்தில் மரம் நடலாம்னு நினைச்சு வேளாண்மைத்துறையிலிருந்து உழவர் சந்தைக்கு மாறினேன். இதுவரை தனிப்பட்ட முறையில் 800 மரங்களையும், சமூக அமைப்புகளுடன் இணைந்து 3,000 மரங்களையும் போத்துமுறையில் நடவு செய்திருக்கேன். என்னோட பெயரையே ‘மரங்களானவன்’ என மாத்திக்கிட்டேன்” என்றவர் போத்து நடவுமுறைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

10 ஆண்டுகள் வயதுடைய மரத்தின் கிளைகள்தான் சிறந்தது...

‘போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள். மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்தல் முறைக்குப் ‘போத்து நடவு’ என்று பெயர். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை ஆகிய 8 மரங்கள் போத்துமுறை நடவுக்கு ஏற்றது. இதில் உதியன், வாதமடக்கி வேகமாக வளரும். தேர்வு செய்யும் மரங்கள் குறைந்தது 10 வருட முதிர்ச்சி அடைந்த மரமாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், மணிக்கட்டுக் கனத்தில் அதிக வளைவு இல்லாமல் நேராக இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள சிறிய கிளைகளையும், இலைகளையும் உதிர்த்துவிட வேண்டும். 8 முதல் 10 அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளை, கரும்பு வெட்டுவதுபோலச் சற்று சரிவாக வெட்ட வேண்டும். சரிவாக வெட்டினால்தான் அதன் அடிப்பாகத்தில் திசுக்கள், ஈரமண்ணுடன் கலந்து புதிய வேர்கள் உருவாக ஏதுவாக இருக்கும். நடவிற்கு முந்தைய நாள் கிளைகளை வெட்டினால் போதும். நடவு தாமதமானால், கிளைகளின் அடிப்பகுதியில் ஈரத்துணிச் சுற்றி நிழலில் வைக்கலாம்.

அய்யப்பன்
அய்யப்பன்

4 அடி ஆழம், 4 அடிச் சுற்றளவில் குழி எடுக்க வேண்டும். ஒரு வாரம் குழியை ஆறவிட வேண்டும். நடவிற்கு முந்தைய மாலை ஒரு குடம் தண்ணீரை ஊற்ற வேண்டும். மறுநாள் 5 கிலோ மட்கிய தொழுவுரத்தில், அசோஸ்பைரில்லம் 50 கிராம், பாஸ்போ பாக்டீரியா 50 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து குழிக்குள் ஒன்றரை அடி உயரத்திற்கு நிரப்ப வேண்டும். இந்த உரம்கூடத் தேவையில்லை. ஆனால், உரமிட்டால் வளர்ச்சி வேகமாகும். அதன்பின் கிளையை நட்டு அதைச்சுற்றி மீதமுள்ள மேல் மண்ணைப் போட்டு இறுக்கமாக மிதித்துவிட்டு குவித்துக் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் காற்றின் சலனம், நீரின் சலனத்தால் வேர் பிடித்தல் தாமதமாகும். கிளையின் உச்சிப்பகுதியில் பசுஞ்சாணத்தை உருண்டைபோலப் பிடித்து வைக்க வேண்டும். கிளையைச் சுற்றி 4 அடி உயரத்திற்கு இரும்பு அல்லது பைபர் வேலி அமைத்து, அதைச்சுற்றி கருவேல முள்வேலியும் அமைக்க வேண்டும். இதனால், இரட்டைப் பாதுகாப்பு கிடைக்கும்.

அதைச் சுற்றிலும், பழைய வேட்டி அல்லது சேலையைச் சாணக் கரைசலில் முக்கியெடுத்துக் கட்ட வேண்டும். இதனால், ஆடு மாடுகள் அருகில் வராது. 25 முதல் 30 நாளில் வேர் பிடிக்கத் துவங்கும்.

மரக் கிளைகளை நடும் ‘போத்து நடவு முறை!’

45 முதல் 50 நாள்களில் இலைகள் துளிர் விடுவதைப் பார்க்கலாம். இந்த முறையில் 10 முதல் 12 அடி இடைவெளியில் அடுத்த கிளை களை நடலாம். ஆடி மாதம் 18-ம் தேதி முதல் மார்கழி மாதம் வரை வெப்பம் குறைவாக இருப்பதாலும், இடையிடையே பருவமழை ஓரளவுப் பெய்வதாலும், பனிப்பொழிவு இருப்பதாலும் போத்து அல்லது மரக்கன்றுகள் நடவு செய்ய இதுவே ஏற்றக் காலமாகும்.

45 முதல் 50 நாளில் இலைகள் துளிர்விடுவதைப் பார்க்கலாம். என்னோட பெயரையே ‘மரங்களானவன்’ என மாத்திக்கிட்டேன்.

கன்றுகளாக நடவு செய்தால் 5 முதல் 6 அடி உயரமுள்ளவற்றை நட வேண்டும். 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீர் மட்டும் ஊற்றினாலே போதும். ஓராண்டு வரையில் கண்ணும் கருத்துமாகப் பார்த்தால் போதும். வேறெந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை” என்றவர் நிறைவாக,

‘‘ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் மரம் வளர்ப்பில் ஆர்வமுள்ள 20 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்தப் போத்து நடவுமுறை குறித்துச் சொல்லித் தரப்போறேன். ஒவ்வொருத்தரும் ரெண்டு கன்றுகளை நட்டு பராமரிச்சுட்டு வந்தாலே அந்தக் கிராமம் பசுமையாகிடும்” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, அய்யப்பன், செல்போன்: 99438 56697.