Published:Updated:

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - உயிரியல் முறைதான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ‘பலே’ ஆயுதம்!

பூச்சி மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
பூச்சி மேலாண்மை

பூச்சி மேலாண்மை - 11

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - உயிரியல் முறைதான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ‘பலே’ ஆயுதம்!

பூச்சி மேலாண்மை - 11

Published:Updated:
பூச்சி மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
பூச்சி மேலாண்மை

யற்கை வழி வேளாண்மையில் முக்கியமானது, உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு. எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், நன்மை செய்யும் பூச்சிகளை நமக்கான கூலிப்படைகளாக அமர்த்தி, தீமை செய்யும் பூச்சிகளை நம் எல்லைக்குள் வராமல் செய்வதுதான் உயிரியல் கட்டுப்பாடு. வயலில் உயிரியல் சூழல் உருவாக, சில விஷயங்கள் அவசியம். வேதி பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. உழவியல் முறைகள், நன்மை செய்யும் பூச்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். நிலத்தின் பல்லுயிர்ப் பெருக்கம் சரியான முறையில் இருக்க வேண்டும். ‘மைக்ரோ கிளைமேட்’ எனப்படும் பயிர்களுக்கு இடையிலான காலநிலை சரியான முறையில் இருக்க வேண்டும். நிலங்களின் சூழலியல் தன்மை, நன்மை செய்யும் பூச்சிகள் வாழ்வதற்கேற்ப இருக்க வேண்டும். எந்த ரகப் பயிர்கள், நன்மை செய்யும் பூச்சிகளை நமது நிலத்தில் அதிகப்படுத்துகின்றனவோ, அவை வயலில் இருக்க வேண்டும். வரப்புகளில் தீமை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கக்கூடிய ஆமணக்கு போன்ற பயிர்களை நடவு செய்ய வேண்டும். இவை கவர்ந்திழுக்கும் தீமை செய்யும் பூச்சிகள், வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளுக்கு உணவாகிவிடும். நன்மை செய்யும் பூச்சிகளில், ஆண் பூச்சிகளின் பெருக்க விகிதத்தையும் கண்காணிக்க வேண்டும்.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - உயிரியல் முறைதான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ‘பலே’ ஆயுதம்!

உயிரியல் முறை பூச்சிக் கட்டுப்பாட்டுக்கான ஆய்வுகளை, ‘இன்டர்நேஷனல் பயாலஜிக்கல் கன்ட்ரோல்’ என்ற அமைப்பு உலகளவில் மேற்கொள்கிறது. இது பன்னாட்டு உயிரியல் கட்டுப்பாட்டு நிறுவனம். உயிரியல் கட்டுப்பாடு தொடர்பாக 1988-ம் ஆண்டுவரை 4,221 ஆய்வுகள் நடந்திருக்கின்றன. அந்த ஆய்வு முடிவுகளைப் பன்னாட்டு உயிரியல் கட்டுப்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நடந்த 1,251 சோதனைகளில், இயற்கை எதிரிகள்மீது நன்மை செய்யும் பூச்சிகளும் ஒட்டுண்ணிகளும் நன்றாகவே வேலை செய்திருக்கின்றன. 2,038 சோதனைகள் தோல்வியைத் தழுவின. 932 ஆராய்ச்சிகள் எந்த முடிவும் எட்டப்படாமல் இருக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகளின்படி, நன்மை செய்யும் பூச்சிகளின் செயல்பாடு 38 சதவிகிதம் உபயோகமாக இருக்கிறது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில சோதனைகள், எதனால் தோல்வியைத் தழுவின என்பதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் அதிக அளவிலான வெப்பம், குளிர் காலத்தில் அதிக பனி, மழைக்காலங்களில் அளவுக்கு அதிகமான மழை ஆகியவை முக்கியமான காரணங்கள். இதனால், இறக்குமதி செய்யப்பட்ட நன்மை செய்யும் பூச்சிகள் உயிர்வாழ்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, சோதனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டுண்ணிகள்மீது, அந்தப் பகுதியில் வசிக்கும் இயற்கையான ஒட்டுண்ணிகள் முட்டையிட்டுள்ளன. இதனால், சில சோதனைகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - உயிரியல் முறைதான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ‘பலே’ ஆயுதம்!

உயிரியல் கட்டுப்பாட்டில் ஒட்டுண்ணிகளின் பங்கு முக்கியமானது. ஒட்டுண்ணிகளில் குளவிதான் கதாநாயகன். தீமை செய்யும் பூச்சிகளைக் கபளீகரம் செய்வதில் கில்லி. வீட்டின் சுவர்களில் செங்குளவி கட்டும் செம்மண் கூடுகளைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் கூடு குறித்துத் தெரிந்து கொண்டாலே உயிரியல் கட்டுப்பாட்டைச் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம்.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - உயிரியல் முறைதான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ‘பலே’ ஆயுதம்!

குளவி, கூட்டைக் கட்டிய புதிதில் உடைத்துப் பார்த்தால் உள்ளே பச்சை நிறத்தில் புழு இருக்கும். அந்தப் புழு வயல்களில் பயிரைத் தாக்கும் தீமை செய்யும் பூச்சிகள் வகையைச் சேர்ந்த பச்சைப்புழு. குளவி, வயலில் சுற்றிவந்து கொழுகொழுவென இருக்கும் புழுக்களைப் பார்த்தவுடன் அதன்மீது அமர்ந்து கொட்டும். குளவி கொடுக்கில் உள்ள விஷத் தன்மையால் புழு மயங்கிவிடும். அதை எடுத்துக்கொண்டு, சுவரில் வைக்கும் குளவி, அதன் உடலுக்குள் கொடுக்கு மூலமாக முட்டைகளைச் செலுத்தும். சாதாரணமாக 3-5 முட்டைகள்வரை இடும். முட்டை வைத்தவுடன், செம்மண்ணை எடுத்து, புழுவைச் சுற்றிக் கூடு போன்று பூசிமெழுகிவிடும். அந்த முட்டைகள், இரண்டு மூன்று நாள்களில் பொரிந்துவிடும். முட்டையிலிருந்து வெளியே வரும் இளம் புழுக்களுக்கான உடனடி உணவு, பச்சைப் புழுவின் உடல்தான்.

குளவியின் புழுக்கள் பச்சைப்புழுவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கூட்டுப் புழுக்களாக மாறி, அடுத்துக் குளவியாக மாறி விடுகின்றன. குளவிகள் பறந்துபோன பிறகு கூட்டை எடுத்துப்பார்த்தால், உள்ளே பச்சைப்புழுவின் உடல் சருகாக இருக்கும். குளவிகள் கூட்டைவிட்டுச் செல்வதற்குச் சில நாள்களுக்கு முன்பு உடைத்துப் பார்த்தால், உள்ளே சிறிய வெள்ளைப் புழுக்களைப் பார்க்கலாம்.

 நீ.செல்வம்
நீ.செல்வம்

அவைதான், குளவிகளாக உருவெடுக்கின்றன. இப்படிக் குளவிகள் வயல் முழுவதும் சுற்றி, தீமை செய்யும் பச்சைப்புழுக்களை அழிக்கின்றன. இதற்குப் பெயர்தான் உயிரியல் கட்டுப்பாட்டு முறை. இந்தக் குளவிகள் இரை விழுங்கி வகையைச் சேர்ந்தவை. இந்தக் குளவிகளைப் போலவே பலவகையான குளவிகள் இருக்கின்றன. இவற்றை ஒட்டுண்ணிகள் என அழைக்கிறோம். அடுத்த பூச்சிகளின் முட்டைகள்மீது முட்டை வைப்பவை முட்டை ஒட்டுண்ணிகள். புழுக்களுக்குள் முட்டை வைப்பவை புழு ஒட்டுண்ணிகள். இவற்றைப் போலவே, கூட்டுப்புழு ஒட்டுண்ணி, பூச்சி ஒட்டுண்ணிகள் ஆகியவையும் உள்ளன. சில ஒட்டுண்ணிக் குளவிகள், செங்குளவியைப் போல் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவை உருவத்தில் மிகவும் சிறியவை. ஒரு பேனா முனையில் 10 குளவிகள் அமர முடியும் என்றால், அவற்றின் அளவை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவற்றை லென்ஸ் கொண்டு மட்டுமே பார்க்க முடியும்.

இப்படிப்பட்ட ஒட்டுண்ணிக் குளவிகள், பச்சைப்புழுக்களை நேரடியாகத் தாக்குவதில்லை. ஆனால், புழுக்களைக் கருவிலேயே காலி செய்துவிடுகின்றன. பச்சைப்புழுக்களின் முட்டைகள் அல்லது மற்ற புழுக்களின் முட்டைக் குவியல்கள் மீது அமர்ந்து அவற்றுக்குள் இந்தக்குளவிகள் முட்டைகளை இட்டு விடுகின்றன. பச்சைப் புழுக்களின் முட்டைகள் பொரிய 4-5 நாள்கள் ஆகும். ஆனால், முட்டை ஒட்டுண்ணிக் குளவிகளின் முட்டைகள், 24 மணி நேரத்தில் பொரிந்துவிடும். அப்படிப் பொரியும் குட்டிப் புழுக்களுக்குப் பச்சைப்புழுக்களின் முட்டைகள்தான் உணவு. இதனால், பச்சைப்புழுக்கள் கரு நிலையிலேயே அழிக்கப்பட்டு விடுகின்றன.

நெல் பயிரைத் தாக்கும் குருத்துப்புழு, கரும்பைத் தாக்கும் இடைக்கணுப்புழு, நுனி குருத்துப்புழு ஆகியவை பயிர்களின் குருத்துப் பகுதியில் அமர்ந்து பயிரைச் சுரண்டி உண்ணும். நெல்லும் கரும்பும் வளரும்போது ஒருவகையான வாசனை வெளிப்படும். அந்த வாசனைதான் தீமை செய்யும் பூச்சிகளுக்கான அழைப்பு மணி. அந்த வாசனை வரும் திசையில் பயணித்துப் பயிர்களின் குருத்துப் பகுதிகளில் இவை குடியிருக்கத் தொடங்கும். இயற்கை அனைத்து உயிர்களுக்கும் சமவாய்ப்பை வழங்குகிறது. தீமை செய்யும் புழுக்களால் பயிர் அதிக சேதமாகக் கூடாது அல்லவா. அதற்கான வழியையும் இயற்கையே வகுத்துள்ளது. பயிர், வாசனையை வெளிப்படுத்துவதுபோல, குருத்துகளைத் தின்னும் புழுக்களின் கழிவுகளிலிருந்து ஒருவித வாசனை பரவும். அந்த வாசனை, நன்மை செய்யும் ஒட்டுண்ணிப் பூச்சிகளுக்கான அழைப்பு.

நெல் பயிரில் ஏதாவது ஒரு குருத்தின் உள்ளே மையத்தில் குருத்துப்புழு இருக்கும். புழுவின் கழிவு வாசனையால் வரும் ஒட்டுண்ணிக் குளவிகள், குருத்துப்புழு உள்ள குருத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும். அந்த இடத்தில் பயிரில் அமர்ந்துகொண்டு பெண் குளவி, தனது கொடுக்கை உள்ளே அனுப்பும். அங்கேயுள்ள புழுவின் மீது தனது கொடுக்கு மூலமாக முட்டை வைக்கும். அந்த முட்டை பொரிந்து வெளிவரும் குளவியின் புழுக்களுக்கு, குருத்துப்புழு உணவாகிவிடும். இதுதான் இயற்கையின் அதிசயம்.

-வளரும்

வலசைப் போகும் பூச்சிகள்!

றவைகள் வலசை செல்வதுபோலப் பூச்சிகளும் வலசை செல்கின்றன. தங்களுக்கான வாழ்வியல் சூழ்நிலை இல்லாத நிலையிலும் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் சமயங்களிலும் பூச்சிகள் இடம் பெயர்கின்றன. தங்களுக்கு ஏற்ற வாழ்வியல் சூழ்நிலை மற்றும் உணவு இருக்கும் இடங்களில் தங்கும் பூச்சிகள், அங்கேயே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன. மொனார்க் வண்ணத்துப்பூச்சி இப்படி வெகுதூரம் பறக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், மொனார்க் வண்ணத்துப்பூச்சியினுடைய இறக்கையின் உள்பக்கத்தில், எந்தக் காலனியைச் சேர்ந்தது. எங்கிருந்து கிளம்புகிறது, எப்போது புறப்பட்டது போன்ற விவரங்கள் அடங்கிய மைக்ரோ பேப்பரை ஒட்டிக் கண்காணித்தனர். அப்படிக் கண்காணித்தபோது... கனடாவிலிருந்து கிளம்பிய அந்த வண்ணத்துப்பூச்சி மெக்சிகோ வரை பயணித்தது தெரியவந்தது. இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட தூரம் 2,596 கிலோமீட்டர். 1957-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கிளம்பிய இந்தப் பூச்சி... நான்கு மாதங்கள் கழித்து 1958-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி மெக்சிகோவில் பிடிபட்டது.

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - உயிரியல் முறைதான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ‘பலே’ ஆயுதம்!

வலசை வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, அவற்றைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றன. பறவைகளின் வாழ்நாள் அதிகம். அதனால், அதற்கான அவகாசம் கிடைக்கிறது. ஆனால், பூச்சிகளின் வாழ்நாள் குறைவு என்பதால், வலசை வந்த இடத்தில் உருவாகும் அடுத்த தலைமுறைதான் அங்கிருந்து கிளம்புகிறது.

அசுவினியை இலைக்கு அடியில்தான் நாம் பார்த்திருப்போம். அசுவினி, கும்பல் கும்பலாகத்தான் இருக்கும். கும்பல் அதிகமாகும்போது உணவுப்பற்றாக்குறை ஏற்படும். அதனால், இடம்பெயர வேண்டிய சூழல் உருவாகும். அப்படி இடம் பெயரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் அசுவினிக்கு இறக்கை முளைத்துவிடும். இடம் பெயர்வதற்காக இறக்கை முளைக்கும் ஒரே உயிரினம் அசுவினிதான். இறக்கை முளைத்ததும் செடியின் நுனிப்பகுதியில் சென்று அமர்ந்துகொள்ளும். காற்று வேகமாக வீசும்போது காற்றின் வேகத்தில் பயணித்து அடுத்த இடத்துக்குச் சென்றுவிடும். மிக அதிகமான உயரத்தில்கூட அசுவினிப்பூச்சிகள் பறக்கின்றன. இப்படி 18,000 அடி உயரத்தில் விமானத்துக்கு இணையாக அசுவினி பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.