Published:Updated:

பூச்சி மேலாண்மை: 16 - சாறுஉறிஞ்சும் பூச்சிகள் உஷார்!

பூச்சி மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
பூச்சி மேலாண்மை

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

பூச்சி மேலாண்மை: 16 - சாறுஉறிஞ்சும் பூச்சிகள் உஷார்!

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

Published:Updated:
பூச்சி மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
பூச்சி மேலாண்மை

காலநிலை முன்னறிவிப்பு என்பதுபோல, பூச்சித் தாக்குதலுக்கான முன்னறிவிப்பும் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேளாண் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இதுதொடர்பாகத் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வதுடன், விவசாயிகளுக்கும் தெரிவிக்கிறார்கள். பூச்சித் தாக்குதலுக்கான முன் அறிவிப்பு என்பது, கடந்தாண்டுக் குறிப்பிட்ட பூச்சித் தாக்குதல் எப்படி இருந்தது, பாதிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதைப் பொறுத்தும், தற்போது நிலவும் காலசூழ்நிலையைப் பொறுத்தும் அமையும். ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வது, கடந்த ஆண்டாக இருக்கலாம். கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம். அந்த முந்தைய தரவுகளின் அடிப்படையில் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. அந்த முடிவு நடப்பு ஆண்டு எந்தப் பகுதியில் எந்தப் பயிர்ச் சாகுபடி செய்யப் படுகிறது, அந்த நேரத்தில், அந்தப் பகுதியில் எந்தவிதமான காலநிலை நிலவும், அதற்கேற்ப அந்தப் பயிரில் பூச்சி எந்தவிதமாக வாழும் என்பதைக் கணித்துச் சொல்வதுதான் பூச்சி நோய்த் தாக்குதலுக்கான முன்னறிவிப்பு.

பூச்சி மேலாண்மை: 16 -  சாறுஉறிஞ்சும் பூச்சிகள் உஷார்!

இதில் பல்வேறு மாதிரிகள், வெவ்வேறு வகையான நிகழ்தகவுகள் இருக்கின்றன. ஒன்று கடந்தகாலத் தரவுகளின் அடிப்படையில் சொல்லப்படுவது. இரண்டு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்பவும், மூன்றாவது பயிரின் வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்பவும் சொல்லப்படுவது. இவற்றின் அடிப்படையில் கணித்துச் சொல்லப்படும் தகவல், குறுகியகால அறிவிப்பாக இருக்கலாம் அல்லது நீண்டகால அறிவிப்பாகவும் இருக்கலாம். அந்த அறிவிப்பு எந்தப் பயிருக்கு எப்படிப் பொருந்தும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில்தான் பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் வெவ்வேறு மாதிரிகளைப் பயன்படுத்து கின்றன. பல இடங்களில் அறிவிப்புக்கு ஏற்பப் பூச்சித் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. சில இடங்களில் அறிவிப்புக்கு எதிர்மறை யாகவும் நடந்துவிடுகின்றன.

நீ.செல்வம்
நீ.செல்வம்

சீனாவில் கடந்த பத்தாண்டுத் தரவுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பூச்சிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முடிந்தது. அமெரிக்காவில் மிகத் துல்லியமாக முடிவுகள் எடுக்கப்படு கின்றன. ஆனால் இந்தியாவில் சூழல் அப்படி இல்லை. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், குளிர் மண்டலப் பிரதேசங்களில் ஆண்டுதோறும் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் துல்லியமாகக் கணித்துச் சேமிக்கப்படுகிறது. அவர்களிடம் அந்தத் திறன் இருப்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கின்றன. ஆனால் இந்தியா வெப்ப மண்டலப் பிரதேசம். இங்கு பல்வேறு காலச் சூழ்நிலைகள் நிலவுகின்றன. பலவிதமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அசுவினிப் பூச்சி
அசுவினிப் பூச்சி

அதனால் இங்கு பூச்சி, நோய்க் கணிப்பு இன்னும் துல்லியமான நிலையை எட்ட முடியவில்லை. இந்தியா முழுவதும் பல்வேறு விதமான முடிவுகளை ஆராய்ச்சி நிலையங்கள் வெளியிடுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இதில் முன்னணி வகிக்கிறது.

இந்த வாரத்தில் வேளாண் பல்கலைக்கழகம் சில முன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது பயிர்கள் வளர்ச்சி நிலையை எட்டும் பருவம் என்பதால், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். நெல்லில் இலைப்பேன், பருத்தியில் இலைப்பேன் மற்றும் வெள்ளை ஈ, தக்காளியில் இலைச்சுருட்டுப் புழு மற்றும் ஊசித் துளைப்பான், கத்திரியில் சாம்பல் கூன் வண்டுகள், வெங்காயத்தில் இலைப்பேன், காலிஃபிளவர், முட்டைகோஸில் வைரமுதுகுப் பூச்சித் தாக்குதல் இருக்கலாம்’ என்கிறது அந்த அறிவிப்பு.

பூச்சி மேலாண்மை: 16 -  சாறுஉறிஞ்சும் பூச்சிகள் உஷார்!

சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்குதலைத் தடுக்க, ஒரு ஏக்கருக்கு ஐந்து மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகளை வைக்க வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தால் ஒரு லிட்டர் நீரில், 50 கிராம் வேப்பங்கொட்டைக் கரைசலைக் கலந்து தெளித்துச் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இந்த ஆண்டுத் தமிழ்நாட்டைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் முக்கியமான பூச்சிகளாக மக்காச்சோளத்தில் படைப்புழு, தென்னை மரத்தில் சுருள் வெள்ளை ஈ இருக்கின்றன. மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்த சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாறு உறிஞ்சும் பூச்சிகளைத் தடுக்க ஏக்கருக்கு ஐந்து மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறிகளை வைக்க வேண்டும். வயலுக்கு நன்மைசெய்யும் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் பிரியாணி அசுவினிதான்.

சரியான இடைவெளியில் மக்காச்சோளத்தைப் பயிரிட வேண்டும். மானாவாரியில் 45-க்கு 20 சென்டிமீட்டர் என்ற அளவிலும், இறவை பாசனப் பகுதிகளில் 60-க்கு 25 சென்டிமீட்டர் என்ற அளவிலும் இடைவெளி இருக்குமாறு பயிரிட வேண்டும். அப்படிப் பயிர் செய்தால் பயிர் எண்ணிக்கை சரியாகப் பராமரிக்கப்படும். போதுமான இடைவெளி இருப்பதால் படைப்புழுத் தாக்குதல் குறையலாமெனக் கணித்திருக்கிறார்கள். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடுவதால் மண்ணில் உள்ள படைப்புழுக்களின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். தொடர்ந்து மக்காச்சோளம் பயிரிடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஒரு ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து, தாய் அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது தொடர்ந்து ஒரேவிதமான பூச்சிக்கொல்லியைத் தெளிக்கக் கூடாது. தெளிக்கும்போது பூச்சிக்கொல்லி குருத்துப் பகுதியில் படுவதுபோலத் தெளிக்க வேண்டும். மெட்டாரைசியம் பூஞ்சாணக் கலவையை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் அல்லது 400 மில்லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்பதையும் இந்த அறிவிப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

சுருள் வெள்ளை ஈ தாக்குதலைத் தடுக்கும் ஒட்டுண்ணி!

தென்னை மரத்தில் சுருள் வெள்ளை ஈ, தாக்குதலுக்கு ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பூச்சிக்கொல்லிகள் அற்ற இயற்கை சூழலை உருவாக்குவதன் மூலம்தான் சுருள் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த முடியும்.

பூச்சி மேலாண்மை: 16 -  சாறுஉறிஞ்சும் பூச்சிகள் உஷார்!

அவற்றை அழிக்க இயற்கை எதிரிகள் தேவை. என்கார்சியா ஒட்டுண்ணி, பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சி மற்றும் பொறி வண்டுகளை உருவாக்கிப் பாதுகாப்பதன் மூலம் சுருள் ஈயைக் கட்டுப்படுத்தலாம். மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்படும் ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தலாம். ஐந்தடி நீளம் ஒன்றரை அடி அகலம் உள்ள ஒட்டுப்பொறிகளை 5 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் தென்னை மரங்களுக்கு இடையே ஆங்காங்கே கட்டி வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த முன்னறிவிப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் அனைத்து விதமான பயிர்களிலும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது அந்த முன் அறிவிப்பு.

பூச்சிகளின் வாழ்நாள் சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்தது. பூச்சிகளின் வளர்சிதை மாற்றம் என்பது நான்கு விதமான அவதாரங்களை உள்ளடக்கியது. முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் அந்துப்பூச்சி. இந்த நான்கு விதமான அவதாரங்களை முழுமையாக அடைந்த பூச்சியைத்தான் முழு வளர்ச்சி அடைந்த பூச்சி என்கிறோம். 80 சதவிகிதப் பூச்சிகள் இப்படிப்பட்ட பூச்சிகள்தான். சில பூச்சிகள் முட்டை, அதிலிருந்து சின்ன பூச்சி, அப்படியே வளர்ந்து பெரிய பூச்சி ஆகிவிடுகின்றன. இதை, குறை வளர்ச்சிநிலை மாற்றமுள்ள பூச்சிகள் என்கிறோம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மழைக்காலத்தில் வீட்டுக்கு வரும்; தொட்டாலே ஒருவித வாசனை அடிக்கும் பச்சைநிற நாவாய்ப்பூச்சி.

‘‘போதுமான இடைவெளியில் மக்காச்சோளத்தைப் பயிரிட்டால் படைப்புழுத் தாக்குதல் குறையலாமெனக் கணித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.’’

வளர்சிதை மாற்றங்களில் பூச்சிகளில் நடக்கும் வேலை மிகவும் முக்கியமான வேலை. புழுப் பருவத்தில் இருக்கும்போது அதன் வேலையே சாப்பிடுவது மட்டும்தான். வேகமாகச் சாப்பிட்டு விரைவாக வளர்ந்தால்தான் கூட்டுப் புழுப் பருவத்திற்கு மாறும். கூட்டுப்புழுப் பருவத்தில்தான் உணவை நிறுத்திவிட்டுக் கூடுகட்டி வளரும். புழுப் பருவத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு ஒன்று இருக்கிறது. நாம் இதுவரை பாம்புச்சட்டை உரிப்பது பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் புழுவும் சட்டை உரிக்கும் என்பது புதிதான விஷயம். புழு அதன் உடம்பு எடையைப் போல 50 மடங்கு சாப்பிடும். 48 மடங்குக் கழிவை வெளியேற்றும். சாப்பிடும் சாப்பாட்டுக்கு ஏற்ப உடல் பெரிதாவதால் சட்டை உரியும். இது வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத பண்பு.

சட்டை உரிக்கும்போது அதன் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், உடலிலிருந்து தோலைக் கழட்டி எரியும் முறை மற்றும் அடுத்த வளர்ச்சி நிலைக்கு மாறும்முறை எனப் புழு அவதாரம் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கிறது. ஈ, எறும்பு, வண்ணத்துப்பூச்சியென எல்லாப் பூச்சிக்கும் புழுப் பருவம் இருக்கிறது. அதன் பிறகு கூட்டுப் புழுப் பருவத்தில் அதன் உடல் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப் படுகிறது. கூட்டுப்புழுப் பருவத்தில் பூச்சியின் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியடையும் பருவம். அப்போதுதான் இறக்கை முளைக்கிறது. உடலியல் ரீதியான வெளிப்புற மாற்றங்கள் இந்தப் பருவத்தில்தான் ஏற்படும். இப்படி நான்கு அவதாரங்களில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்தான் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை வளர்த்துக்கொள்ள உதவி புரிகின்றன.

தொடு நஞ்சு என்ற முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி தெளித்தபோது பூச்சி மேலே பட்டு இறந்தது. ஆனால் புழுவின் மீது பட்டபோது அது சட்டையை உரித்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தது. ஓடிப்போகும் புழுக்களைக் காலி செய்வதற்காகக் குடல் நஞ்சு கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் சுலபமாகத் தப்பித்தது புழு. 50 மடங்கு சாப்பிட்டு 48 மடங்குக் கழிவை வெளியேற்றுவதற்குப் பதிலாக 50 மடங்கையும் கழிவாக வெளியேற்றியது. அதன்மூலம் நஞ்சு வெளியே வந்துவிட்டது. புழுவின் வாயில் உள்ள எச்சில், உணவைச் செரிக்க வைப்பதுடன் பூச்சிக்கொல்லியில் உள்ள வீரியங்களை ஒன்று இரண்டாக வெட்டிக் குறைக்கும் பணியையும் செய்கிறது.

பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியில் முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப் பூச்சியென முழு வளர்ச்சியடைந்த பூச்சிகளும், இல்லையென்றால் முட்டை, முட்டையிலிருந்து சிறிய பூச்சி, பெரிய பூச்சியெனக் குறை வளர்ச்சியுள்ள பூச்சிகளும் பார்த்தோம். இன்னும் சில பூச்சிகள் முட்டை, புழு, கூட்டுப்புழு என வளர்ச்சி பருவங்கள் தண்ணீரில் இருக்க வளர்ச்சியடைந்த பூச்சி மட்டும் பறந்து தரைக்கு வரும்.

‘‘அசுவினிக்குப் தட்டைப் பயறு மிகவும் பிடிக்கும். அதனால்தான் வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும் தட்டைப்பயறைச் சாகுபடி செய்கிறோம்.’’

உதாரணம் கொசுவும், தட்டானும். அனைத்து உயிர்களிலும் ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் இனப்பெருக்கம். பெண், முட்டையை உருவாக்கும். ஆண், விந்தணுவை உருவாக்கும். அவை இரண்டும் சேர்ந்தால் அடுத்த தலைமுறை உருவாகும். இது வழக்கமாக நடக்கக்கூடிய இனப்பெருக்க நடவடிக்கை.

ஆனால் பூச்சிகளில் ஒரு வித்தியாசமான நடவடிக்கை இருக்கிறது. 75 சதவிகித பூச்சிகள் வழக்கமான முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. 25 சதவிகிதம் வித்தியாசமான முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. அதில் முக்கியமானது அசுவினி. மற்ற பூச்சிகளை ஓரே இடத்தில் இந்த அளவுக்குக் கூட்டமாகப் பார்க்க முடியாது. பயிரில் மேலே இருக்கும் ஒவ்வொரு இலைக்குப் பின்னால் கூட்டங்கூட்டமாக அசுவினி அமர்ந்திருக்கும். காரணம், அதன் இனப்பெருக்கத்தில் உள்ள ஒரு மாற்றம்.

ஒரு பெண் அசுவினியின் வாழ்நாள் 21 நாள்கள் என எடுத்துக்கொண்டால், ஏழாவது நாளில் அது வயதுக்கு வந்துவிடும். அதன்பிறகு ஆண் துணை தேவை இல்லை. அசுவினி நேரடியாக முட்டைப் போடாது. அதற்குப் பதிலாகக் குஞ்சுப்போட தொடங்கிவிடும். ஏழாவது நாளில் வயதுக்கு வந்ததிலிருந்து குஞ்சு போட ஆரம்பிக்கும். ஒரு நாளைக்கு 40 குஞ்சுகள் வீதம் உருவாக்கிக்கொண்டேயிருக்கும். இந்த இடத்தில் இன்னோர் அதிசயம் நடக்கிறது. அம்மா அசுவினி 14-வது நாள் குஞ்சு போடும். அதே நாளில் அது முதலில் பொறித்த குஞ்சுகளும், ஏழு நாள் வயதில் இருக்கும். அவையும் அப்போது குஞ்சு உற்பத்தி செய்யத் தொடங்கி விடும். ஆக 14-வது நாளில் தாய் அசுவினி 40, அது முதலில் போட்ட 40 குஞ்சுகளும் தலா 40 குஞ்சுகளைப் பிரசவிக்கும். இப்படித் தாய், குட்டிகள் அனைத்தும் சேர்ந்து குட்டிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதால்தான் அசுவினி கும்பல் கும்பலாகக் காணப்படுகிறது.

இலைக்குப் பின்னால் கொள்ளுப்பாட்டி முதல் எள்ளுப்பேத்திவரை விதவிதமான தலைமுறை அசுவினிகள் அமர்ந்திருக்கும். அசுவினிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? வயலுக்கு நன்மைசெய்யும் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் பிரியாணி அசுவினிதான். ஒரு செடியில் இரண்டு மூன்று இலை இருக்கும் நேரத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் வகையில் வரும் அசுவினி.

செடியில் இவை கும்பல் கும்பலாக இருப்பதால்தான் இவற்றைச் சாப்பிட பொறிவண்டு, சிர்பிட் ஈ, கண்ணாடி இறக்கைப் பூச்சி, சிலந்தி உள்ளிட்ட நன்மைசெய்யும் பூச்சிகள் வருகின்றன. இந்த அசுவினிக்குப் பிடித்த பிரியாணி பயறுவகைப் பயிர்கள். அதிலும் தட்டைப் பயறுதான் அதற்கு அதிகம் பிடிக்கும். அதனால்தான் வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் தட்டைப்பயற்றைச் சாகுபடி செய்கிறோம்.

-அறிவோம்