நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பூச்சி மேலாண்மை: 20 - நல்லது செய்யும் நடுநிலைப் பூச்சிகள்!

பூச்சி மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
News
பூச்சி மேலாண்மை

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0

`நன்மை செய்யும் பூச்சி’, `தீமை செய்யும் பூச்சி’ என்ற இரண்டு வகைப் பூச்சிகளைத்தான் நாம் கவனத்தில்கொள்கிறோம். இன்னொரு வகையும் உண்டு. அது, நடுநிலைப் பூச்சி. பொதுவாகப் பயிரைச் சாப்பிடுபவை `தீமை செய்யும் பூச்சிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. தீமை செய்யும் பூச்சிகளைச் சாப்பிடுபவை, `நன்மை செய்யும் பூச்சிகள்.’ இவை இரண்டுக்கும் இடைப்பட்டவை நடுநிலைப் பூச்சிகள். மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்திருப்பதுபோல, இவையும் சூழலில் கலந்தே இருக்கின்றன. இவை பயிர்களையும் தின்பதில்லை; பூச்சிகளையும் தின்பதில்லை; அமைதியாக இருப்பதுமில்லை. மண்ணை உயிர்ப்புடன் வைத்திருக்கும் செயலைச் செய்துகொண்டிருக்கின்றன. நுண்ணுயிர்களுக்கான உணவை உருவாக்கும் வேலையைச் செய்துகொண்டே இருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை கரப்பான் பூச்சி, இடுக்கிவால் பூச்சி, கறுப்புநிற வண்டு, உருளைவடிவ புழு. இவற்றில் கரப்பான் வீட்டில் மட்டும்தான் இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் அதன் சில வகைகள் மண்ணில் வாழ்கின்றன. வீட்டில் இருக்கும் கரப்பான் கழிவறை, சமையலறைக் கழிவுகளை உண்டு வாழ்வதுபோல மண்ணில் இருக்கும் கரப்பான்கள் அங்கே கிடைக்கும் கழிவுகளை உண்டு வாழ்கின்றன. அதனால் மண்ணில் விழும் பொருள்கள் மட்குகின்றன.

பூச்சி மேலாண்மை: 20 -  நல்லது செய்யும் நடுநிலைப் பூச்சிகள்!

சாணமோ, மலமோ ஓரிடத்தில் மொத்தமாக இருந்தால் மட்க அதிக நாள்கள் ஆகும். எனவே, அவற்றைச் சிறு சிறு உருண்டைகளாகச் சிதைத்து விரைவில் மட்கவைக்கும் பணியைச் செய்கிறது சாணி உருட்டி வண்டு. அதிலும் மண்ணுக்கு மேலேயே வைத்தால் மட்குவதற்கு தாமதமாகும் என்பதால், குழி தோண்டி அதற்குள் உருண்டையைப் புதைத்துவைக்கிறது. அப்படி மட்கும் சாணம் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. `பிள்ளைப்பூச்சி வீட்டுக்குள் வந்தாலே விளங்காது’ என்று சொல்கிறோம். ஆனால் அந்தப் பிள்ளைப்பூச்சியின் முன்னங்கால்கள்தான் புல்டோசருக்கான மாதிரி வடிவம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்... அந்தப் பூச்சியும் மட்கவைக்கும் பணியைச் சிறப்பாகச் செய்கிறது. இந்தப் பணியைச் செய்யும் உயிரினங்களை `நடுநிலை உயிரினங்கள்’ அல்லது `நடுநிலைப் பூச்சிகள்’ என்கிறோம்.

பூச்சி மேலாண்மை: 20 -  நல்லது செய்யும் நடுநிலைப் பூச்சிகள்!

உலக அளவில் பயிர்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பூச்சிகள் எனப் பத்து பூச்சிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அவற்றில் முதல் இடத்தில் இருப்பது பருத்தியைத் தாக்கும் `அமெரிக்கன் காய்ப்புழு.’ இது பருத்தி, கொண்டைக்கடலை ஆகிய பயிர்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது `வெள்ளை ஈ’ எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சி. கிட்டத்தட்ட அனைத்துப் பயிர்களிலும் இது தாக்குதல் தொடுத்து பாதிப்பை உண்டாக்கும் மோசமான வில்லன். அடுத்தது, `செம்பேன் சிலந்தி.’ இது எட்டுக் கால்களைக்கொண்ட ஓர் உயிரினம். ஆனால் இதுவும் பூச்சிகளைப்போலப் பயிரைச் சாப்பிடுவதால், இதைத் தீமை செய்யும் பூச்சிகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். இது தக்காளி, வெண்டை, தட்டைப்பயறு போன்ற அனைத்துவகையான பயிர்களையும் தாக்கும். `வைரமுதுகு அந்துப் பூச்சி’ காலிஃபிளவர், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களைத் தாக்கும் முக்கியமான பூச்சி. மண்ணில் இருக்கும் மண்புழுவைப் போன்ற `புகையிலைப் புழு’ புகையிலை, நிலக்கடலை, சோயா பயிர்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பூச்சிகள் எனப் பத்து பூச்சிகளைப் பட்டியலிட்டு இருக்கிறார்கள். பூச்சிகள் மிகச் சுலபமாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் சென்று விடுகின்றன.

ஆறாவது இடத்திலிருப்பது `சிவப்பு மாவு வண்டு.’ இது பயிர்களைத் தாக்காது. அதேநேரம் சேமிக்கப்படும் உணவுப் பொருள்களில் சேதத்தை ஏற்படுத்திவிடும். அரிசியைவிட கோதுமையில் இது அதிக பாதிப்பைக் காட்டும். தெற்காசிய நாடுகளில் மட்டும்தான் நெல் முக்கிய உணவுப் பயிர். ஆனால் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கோதுமைதான் முக்கியப் பயிர். கோதுமைச் சேமிப்பில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது இந்த வண்டு. அடுத்தது `அசுவினி.’ உருளைக்கிழங்கிலும் குடமிளகாயிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்காச்சோளத்தைத் தாக்கும் `அமெரிக்கன் படைப்புழு’ இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. எட்டாவது இடத்தில் இருக்கும் இதற்கே மக்காச்சோள விவசாயிகள் மிரண்டு போயிருக்கிறார்கள். அமெரிக்கன் படைப்புழுவுக்கே இப்படியென்றால், இதற்கு முன்பாக இருக்கும் பூச்சிகளின் பாதிப்பை நினைத்துப் பாருங்கள். `பருத்தியைத் தாக்கும் அசுவினி’, `நெல்லில் வரும் புகையான்’ ஆகிய பத்துப் பூச்சிகள்தான் விவசாயிகளை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

பூச்சி மேலாண்மை
பூச்சி மேலாண்மை

புகையான்தான் ஒரு காலத்தில் உச்சக்கட்ட பாதிப்பைக்கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது இறங்கிவிட்டது. அதற்கு மேல் 9 பேர் இருக்கிறார்கள். உலகில் லட்சக்கணக்கான பூச்சியினங்கள் இருக்கும்போது, இந்தப் பத்துப் பூச்சிகள் மட்டும் ஏன் மிகப்பெரிய தாதாவாக மாறின. அங்குதான் முக்கியமான விஷயம் இருக்கிறது. இவை குறிப்பிட்ட பகுதிக்கானவை அல்ல. அனைத்துக் கண்டங்களிலும் இவை இருக்கின்றன. முக்கியப் பயிர்களில் அமர்ந்து சேதத்தை உருவாக்குவதால் தாதாக்களாக இருக்கின்றன. அதனால்தான் `உலக அளவில் அதிகச் சேதத்தை ஏற்படுத்தும் 10 பூச்சிகள்’ பட்டியலில் இவை இடம் பிடிக்கின்றன. இவை தாக்காத பயிர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இவை பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறனை வளர்த்துக்கொண்டவை. பூச்சிக்கொல்லி தெளித்தாலும் அதற்குக் கட்டுப்படாமல் மேலும் மேலும் பரவுவதில் கில்லிகள். கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவை கண்டம்விட்டுக் கண்டம் பாயும் பூச்சிகள். மனிதர்களால் பயன்படுத்தப்படும் அத்தனை ரசாயன ஆயுதங்களுக்கும் எதிரான கேடயங்களை உருவாக்கித் தப்பித்துக் கொள்வதில் வல்லவர்கள்.

இந்தப் பூச்சிகள் மிகச் சுலபமாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் சென்றுவிடுகின்றன. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, மக்காச்சோளப் படைப்புழு. அதன் தாயகம் அமெரிக்கா. அங்கிருந்து ஆப்பிரிக்கா சென்று, பிறகு ஆசியா வந்தது. இந்தியாவில், தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில்கூட பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விதை வழியாகப் பரவி, கடல் மார்க்கமாகத் தாய் அந்துப் பூச்சி பறந்து வந்தது என்றும், இறக்குமதி செய்யும் பொருள்களில் கலந்து வந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் கருத்துகள் பல இருந்தாலும் பரவுகிறது என்ற உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் நமது வணிகம் பண்டமாற்று முறையாக இருந்தது. உற்பத்தியாகும் பொருள் உள்ளூரிலேயே அழிந்தது. அப்போது இந்தப் பிரச்னை இல்லை. உலகமயமாக்கல், பன்னாட்டு வணிகம் வந்த பிறகு இவை கண்டம்விட்டுக் கண்டம் சுலபமாகப் பயணிக்கின்றன. நாம் உண்ணும் முந்திரிப் பருப்பில் முக்கால்வாசி தென் ஆப்பிரிக்கா, தான்சானியா ஆகிய நாடுகளில் விளைபவை. நமது முந்திரியைவிடத் தரத்தில் குறைந்தது. அதை நாம் பயன்படுத்திக்கொண்டு, தரமான நம் முந்திரியை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு அனுப்புகிறோம். இந்தியாவில் விளையும் பயறுவகைப் பயிர்கள் முதல் தரமானவை. ஆனால், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாம், மூன்றாம் தரப் பருப்பு வகைகளை நாம் பயன்படுத்துகிறோம். இப்படி இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், அங்கிருந்து இங்கும் பொருள்கள் வரும்போது, அவற்றுடன் சேர்ந்து பூச்சிகளும் வந்துவிடுகின்றன.

‘‘தற்போது பயன்படுத்தும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லியான நரம்பு நஞ்சு, தேனீக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குகிறது.’’

உலகம் முழுவதும் பூச்சிகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. உணவுப் பொருள்கள் மட்டுமல்லாமல் மரச் சாமான்கள், தோல் ஆடைகள், பருத்தி மற்றும் வெங்காயம் போன்ற பொருள்கள் மூலமும் பூச்சிகள் இடம்பெயர்கின்றன.

பூச்சி மேலாண்மை: 20 -  நல்லது செய்யும் நடுநிலைப் பூச்சிகள்!

பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகளை அழித்துவிடுவதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அதைப் பயன்படுத்திக்கொண்டு பூச்சிகள் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்கின்றன. அடுத்த முக்கியமான ஒன்று பருவநிலை மாற்றம். இது பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது. உதாரணமாக நெல் பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப்புழு. குறுவைச் சாகுபடி செய்யும்போது தாக்குகிறது. அடுத்த பருவத்திலும் தாக்கும். அறுவடை முடிந்து, நிலம் காய்ந்து மீண்டும் குறுவைச் சாகுபடி செய்யும்போது தாக்குதலை மீண்டும் தொடங்கும். ஒரு பயிரில் ஒரு பருவத்துக்கு அமரும் பூச்சிகள் அதே பயிரில் அடுத்த பருவத்துக்கும் மிகச்சரியாக வந்து அமர்ந்து விடுகின்றன. பயிர் இல்லாத நாள்களில் அவை எங்கே செல்கின்றன... குளிர்காலத்தில் உறங்கும் பூச்சிகள், கோடைக் காலத்தில் உறங்கும் பூச்சிகள் இருக்கின்றன. இடைப்பட்ட காலங்களில் அவை முட்டை மற்றும் கூட்டுப் புழுவாகக் களைச்செடிகளில் தூங்குகின்றன. அடுத்த பருவத்துக்கு அதே பயிர் சாகுபடி செய்யப்படும்போது, அந்தப் பயிரிலிருந்து கிளம்பும் வாசனை முட்டை மற்றும் கூட்டுப் புழு உறக்கத்தைக் கலைத்து எழுப்பிவிடுகிறது.

ஏற்கெனவே பார்த்த மூன்றுவிதமான பூச்சிகள் அல்லாமல் மனித வாழ்வுக்கு உதவும் மற்றொரு வகைப் பூச்சிகள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது தேனீ. இதன் முக்கியமான பணி, ஒரு பூவிலிருக்கும் மகரந்தத்தை மற்றொரு பூவுக்கு மாற்றி மகசூலை அதிகப்படுத்தும் பணியைச் செய்வது. சூழலுக்கு மிக மிக முக்கியமான பணி. அப்படிப்பட்ட தேனீக்கள் தற்போது மிகப்பெரிய ஆபத்தில் இருக்கின்றன. அதற்குக் காரணம், நாம் தற்போது பயன்படுத்தும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லியான நரம்பு நஞ்சு. இந்தப் பூச்சிக்கொல்லி தற்போது விதையோடு கலந்துவருகிறது. அனைத்துவிதமான பயிர்களிலும் இதன் விஷம் ‘நேனோ’ அளவாவது ஒட்டிக்கொண்டிருக்கிறது. மகரந்தத்தைக் கடத்தும் தேனீக்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். இந்த நஞ்சு ஒருவிதமான மயக்கத்தையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும். இதனால் கூட்டிலிருந்து வெளியே செல்லும் தேனீக்கள் மீண்டும் கூடு வரும் பாதை மறந்து விழுந்து இறந்துவிடுகின்றன. இதைத்தான்,` தேனீக்களின் காலனிச் சிதைவுநோய்’ என்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த ஐரோப்பாவிலிருக்கும் சில நாடுகளும் கனடாவும் நரம்பு நஞ்சுகளைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்பாலான விதைகள், நரம்பு நஞ்சு தேய்க்கப்பட்ட விதைகள். `தேனீக்கள் ஒட்டுமொத்தமாக அழிந்து போய்விட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனிதர்களே வாழ முடியாத சூழல் உருவாகிவிடும்’ என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகிறார்கள்.

சிவப்பு, பச்சை மற்றும் கத்திரிப்பூ நிறத்திலிருக்கும் விதைகள் இந்த நஞ்சுகளில் தேய்க்கப்பட்டவை. பெரும்பாலான காய்கறி விதைகள் இந்த நரம்பு நஞ்சு தேய்க்கப் பட்டவைதான். மனித வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் பூச்சிகளின் வரிசையில் பட்டுப்பூச்சி, அரக்கு மரத்தில் உருவாகும் ஒருவிதமான செதில் பூச்சி ஆகியவை முக்கியமானவை.

உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தைகள், `பருவநிலை மாற்றம்’ மற்றும் `பல்லுயிர்ப்பெருக்கம்.’ ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருக்கும் தாவரங்களையும், விலங்குகளையும் வைத்துப் பல்லுயிர்ப்பெருக்கம் கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட காலச்சூழலுக்கு ஏற்ப, அந்தப் பகுதியில் வாழும் பல்வேறு வகையான உயிரினங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதில் பூச்சிகள் முக்கியப் பங்குவகிக்கின்றன.

விலங்குகளைக் கணக்கீடு செய்வதுபோலப் பூச்சி வகைகளையும் கணக்கீடு செய்ய வேண்டும். `பூச்சி என்றாலே மனிதனுக்குக் கெடுதல் செய்யும் உயிரினம்’ என நினைக்கிறோம். இதுவரை உலகில் 10 லட்சம் வகைப் பூச்சி இனங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிக இனங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. மனிதன் பூமிக்கு வந்து சுமார் 40 மில்லியன் ஆண்டுகள் என்றால், பூச்சி பூமிக்கு வந்து 400 மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆக மனிதனுக்கு முன்னோர்கள் பூச்சிகள்.

மனிதன் உயிர் வாழ, காற்று, மண், தண்ணீர் மூன்றும் முக்கியமானவை. ஆனால் இவற்றை நஞ்சாக்கிக்கொண்டிருக்கின்றன பூச்சிக்கொல்லிகள். இதை நாம் உணர வேண்டும். இயற்கை வழி விவசாயத்தைக் கைக்கொள்ள வேண்டும். கடந்த 20 இதழ்களில் உங்களுடன் உரையாடும் வாய்ப்பைக் கொடுத்த பசுமை விகடனுக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

-முற்றும்