Published:Updated:

ஒரு ஹெக்டேரில் மாதம் ரூ. 50,000 - கைகொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

குமார் துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
குமார் துரைசாமி

பயிற்சி

ரடங்கு நேரத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பலவிதமான வேளாண் சார்ந்த பயிற்சிகள், கருத்தரங்குகளை ஆன்லைன் மூலமாக நடத்தி வருகிறது பசுமை விகடன்.

அந்த வகையில், பசுமை விகடன் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் இணைந்து கடந்த 19-ம் தேதி ‘ஒரு ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற பெயரில் பயிற்சியை வழங்கின. நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றினார் வெற்றி அமைப்பின் தலைவரும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சிவராம். அவரைத் தொடர்ந்து வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் மூலம் மேற்கொண்டு வரும் மர வளர்ப்பு குறித்து பேசினார் அவ்வமைப்பின் இயக்குநர் குமார் துரைசாமி. தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் செந்தூர்குமரன் பயிற்சியை வழங்கினார்.

ஒரு ஹெக்டேரில் மாதம் ரூ. 50,000 - கைகொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

‘‘விவசாயத்தில் லாபம் நிச்சயம் கிடைக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், அதற்கான திட்டமிடல் மிகவும் முக்கியம். நமது நிலத்தின் மண்வாகு, நீர் வசதி, காலநிலை இவற்றைப் பற்றிய தெளிவு நமக்கு இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் திட்டமிட்டுப் பயிர் செய்தால் நல்ல வருமானம் எடுக்கலாம். ஒரு ஹெக்டேர் நிலத்தில் மாதம் 50,000 ரூபாய் வருமானம் எடுக்கும் விதம்பற்றிப் பார்ப்போம். முதலில் அந்த நிலத்தை ஒரு ஏக்கர், ஒரு ஏக்கர், அரை ஏக்கர் என மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

முதலில் ஒரு ஏக்கர் நிலத்தைப் பழப்பயிர்களுக்காக ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அதைத் தலா 25 சென்ட் என்ற அளவில் 4 பாகமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். முதல் பாகத்தில் மா சாகுபடி செய்யலாம். 25 அடிக்கு 25 அடி இடைவெளியில் மா மரங்களை நடவு செய்யலாம். 20 கன்றுகளை நடலாம். இந்த மரங்கள் மகசூலுக்கு வந்தபிறகு, ஒரு மரத்திலிருந்து 125 கிலோ வீதம் மொத்தம் 2,500 கிலோ காய்கள் கிடைக்கும். சராசரியாக கிலோ 40 ரூபாய் விலை கிடைத்தால் 1,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதனை அடர் நடவு முறையில் நடவு செய்தால் இன்னும் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.

நேரலையில் சிவராம்
நேரலையில் சிவராம்

2-வது 25 சென்ட் நிலத்தில் கொய்யா அல்லது எலுமிச்சைச் சாகுபடி செய்யலாம். 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் 77 மரங்கள் நடவு செய்யலாம். ஒரு மரத்திலிருந்து வருடத்திற்கு 125 கிலோ மகசூல் வீதம் மொத்தம் 9,625 கிலோ மகசூல் கிடைக்கும். சராசரியாக கிலோ 20 ரூபாய் விலை வைத்தால் ஆண்டுக்கு 1,92,500 வருமானமாகக் கிடைக்கும்.

3-வது 25 சென்ட் நிலத்தில் வாழை அல்லது பப்பாளிச் சாகுபடி செய்யலாம். 6 அடிக்கு 6 அடி இடைவெளி போதும். 300 மரங்கள் நடலாம். ஒரு தார் 250 ரூபாய் விலை வைத்தால் 75,000 ரூபாய் கிடைக்கும்.

குமார் துரைசாமி
குமார் துரைசாமி

4-வது 25 சென்ட் நிலத்தில் நெல்லிச் சாகுபடி செய்யலாம். 15 அடிக்கு 15 இடைவெளியில் 77 மரங்கள் வைக்கலாம். ஆண்டுக்கு ஒரு மரத்திலிருந்து 75 கிலோ மகசூல் வீதம் 5,775 கிலோ கிடைக்கும். இதை கிலோ 25 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 1,44,375 ரூபாய் கிடைக்கும்.

அடுத்த பாகத்தில் 50 சென்ட் நிலத்தில் காய்கறிச் சாகுபடி செய்யலாம். தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டைச் சாகுபடி செய்யலாம். இதில் 8 டன் மகசூல் கிடைக்கும். சராசரி விலை 20 ரூபாயென வைத்தாலும் 1,60,000 ரூபாய் கிடைக்கும். 20 சென்ட் நிலத்தில் பந்தல் சாகுபடி செய்யலாம். அதன் மூலம் 4 டன் மகசூல் கிடைக்கும். கிலோ 15 ரூபாய் விலையில் மொத்தம் 60,000 ரூபாய் கிடைக்கும். 20 சென்ட் நிலத்தில் கீரைகள் சாகுபடி செய்யலாம். அதன் மூலம் ஆண்டுக்கு 80,000 ரூபாய் கிடைக்கும். 10 சென்ட் இடத்தில் மலர் சாகுபடி செய்யலாம். அதன் மூலம் மாதம் 1,866 ரூபாய் கிடைக்கும்.

செந்தூர்குமரன்
செந்தூர்குமரன்

மீதமுள்ள 50 சென்ட் நிலத்தில் 45 சென்ட் நிலத்தில் தீவனப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும். மீதமுள்ள 5 சென்ட் நிலத்தில், ஒரு சென்ட் இடத்தில் 2 மாடுகள், ஒரு சென்ட் இடத்தில் 10 ஆடுகள், ஒரு சென்ட் இடத்தில் 200 கோழிகள் வளர்க்கலாம்’’ என்றவர் ஒவ்வொரு பயிர் மற்றும் கால்நடைமூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைப் புள்ளிவிவரங்களோடு பகிர்ந்துகொண்டவர் நிறைவாக, “இந்தத் திட்டப்படி செயலாற்றினால் தினசரி, மாத, ஆண்டு வருமானம் எடுக்கலாம். தெளிவாகத் திட்டமிட்டால் மாதம் 50,000 ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பார்க்கலாம்’’ என்றவர் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

தொடர்புக்கு, முனைவர் செந்தூர்குமரன், செல்போன்: 80720 09011