பிரீமியம் ஸ்டோரி
கொடிப் பயிர்களில் வெண்பூசணியும் (சாம்பல் பூசணி), மஞ்சள் பூசணியும் முக்கியமானவை. சைவ உணவில் வெண்பூசணி சாம்பாருக்கும் மஞ்சள்பூசணிக் கூட்டுக்கும் எப்போதும் தனிமவுசு உண்டு.

இவற்றைத் தனிப்பயிராகச் சாகுபடி செய்து வருபவர்கள் மத்தியில், செடிமுருங்கையில் ஊடுபயிராகச் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சென்னகேசவன்.

செடிமுருங்கையில் ஊடுபயிராக விளைந்த வெண்பூசணியுடன் சென்னகேசவன்
செடிமுருங்கையில் ஊடுபயிராக விளைந்த வெண்பூசணியுடன் சென்னகேசவன்

இவர், பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான விவசாயிதான். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திலிருந்து கடலையூர் செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ள சின்னமலைக்குன்று கிராமத்தில் உள்ளது இவரது தோட்டம். பூசணி அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தவரை, ஒரு காலை வேளையில் சந்தித்தோம். நம்மைப் பார்த்ததும், மர நிழலுக்கு அழைத்துச் சென்று பேசத் தொடங்கினார். “இது மொத்தம் 10 ஏக்கர் கரிசல் தோட்டம். 2 ஏக்கரில் செடிமுருங்கை தனிப்பயிராக நட்டிருக்கேன். இன்னொரு 2 ஏக்கர்ல செடி முருங்கை நடவு செஞ்சு, அதுல ஊடுபயிராக, ஒரு ஏக்கரில் வெண்பூசணியும் மற்றொரு ஏக்கரில் மஞ்சள் பூசணியும் நடவு செஞ்சேன். இப்போ அறுவடை முடியும் நிலையில் இருக்கு. 3 ஏக்கரில் வேம்பு, மலைவேம்பு, தீக்குச்சி, குமிழ் ஆகிய மரப்பயிர்கள் இருக்கு. இன்னொரு 3 ஏக்கர் நிலத்தைக் காய்கறி, கீரைச் சாகுபடிக்காகத் தயார் செஞ்சு வெச்சிருக்கேன். முருங்கையைப் பொறுத்தவரைக்கும் தனிப்பயிராச் சாகுபடி செய்து, காய்ப்பு வர்ற வரைக்கும் காத்திருப்பதைவிட, ஊடுபயிர் சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் கிடைக்கும். நிலக்கடலை, கொத்தமல்லி, கத்திரி, தக்காளி, வெண்டை, பீட்ரூட்னு பல பயிர்களை முருங்கையில ஊடுபயிராச் சாகுபடி செஞ்சிருக்கேன். இந்தத் தடவை வெண்பூசணி, மஞ்சள் பூசணியைச் சாகுபடி செஞ்சிருக்கேன்” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

மஞ்சள் பூசணியுடன்
மஞ்சள் பூசணியுடன்

‘‘பூசணி அறுவடை செய்யும்போது சின்ன காய்களை விட்டுவிட்டுக் காம்புகள் முற்றிய பெரிய காய்களை முதலில் அறுவடை செய்யலாம். சந்தையில் விலையைப் பொறுத்தும் தேவையைப் பொறுத்தும் காய்களைப் பறிக்கலாம். நான் 10 நாள்கள் இடைவெளியில் ரெண்டு முறை பறிக்கிறேன். அறுவடை செய்த பூசணிக்காய்களை 25 முதல் 30 நாள்கள்வரை இருப்பு வைக்கலாம். தனித்தனியா, வரிசையா அடுக்கி வைக்கணும். ஒண்ணுமேல ஒண்ணாவோ, குவியலாகவோ போடக்கூடாது. இதனால காய்கள் சேதாரமாக வாய்ப்புண்டு. ஒரு ஏக்கர்ல ஊடுபயிராச் சாகுபடி செஞ்சதுல 4,230 கிலோ மஞ்சள் பூசணியும், இன்னொரு ஏக்கர்ல 5,089 கிலோ வெள்ளைப்பூசணியும் கிடைச்சிருக்கு. ரெண்டுலயும் இன்னும் 200 கிலோ காய்கள்வரை எதிர்பார்க்கிறேன். அதை வீட்டுத் தேவைக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுத்திடலான்னு முடிவு செஞ்சிருக்கேன்.

ஊடுபயிராக வெண்பூசணி
ஊடுபயிராக வெண்பூசணி

கோவில்பட்டி காய்கறிச் சந்தையிலயும், தென்னக மானாவாரி உற்பத்தியாளர் சங்கம் மூலம் கோவில்பட்டி உழவர் சந்தையிலுள்ள இயற்கை காய்கறிக்கடையிலயும்தான் விற்பனை செய்யுறேன். ஆரம்பத்துல 1 கிலோ பூசணி 12 முதல் 15 ரூபாய்க்கு விலை போய்க்கிட்டிருந்தது. ஊரடங்கினால் இப்போ 1 கிலோ, 5 முதல் 8 ரூபாய்க்குத்தான் விலை போகுது. ரெண்டுக்குமே சராசரியாக 6 ரூபாய் வைச்சுக்கிட்டாலும், 4,230 கிலோ மஞ்சள் பூசணி மூலம் ரூ.25,380-ம், 5,089 கிலோ வெண்பூசணி மூலம் ரூ.30,534-ம் கிடைச்சது. ரூ.55,914-ம் மொத்த வருமானமாக் கிடைச்சுருக்கு. இதுல, ரூ.8,000 செலவுத்தொகையைக் கழிச்சாலும் ரூ.47,914 தனிவருமானமாக் கிடைச்சிருக்கு. ஊரடங்கு இல்லாம இருந்திருந்தா ரெண்டுலயும் சேர்த்து கூடுதலா 30,000 வரை வருமானம் கிடைச்சிருக்கும். இதைத் தனிப்பயிராச் சாகுபடி செஞ்சிருந்தா, இன்னும் கூடுதல் மகசூல் கிடைச்சிருக்கும். இதே ஊரடங்கு காலத்துல விளைபொருள்களை விற்பனை செய்ய முடியாம கஷ்டப்படுற விவசாயிகள் மத்தியில இந்த வருமானத்தை நான் பெருசா நினைக்கிறேன்’’ என்றவர் நிறைவாக,

செடிமுருங்கை வயல்
செடிமுருங்கை வயல்

பூசணி அறுவடை முடியுற வரைக்கும், முருங்கைக்குத் தனியா எந்தக் கவனிப்பும் தேவையில்லை. விதை ஊன்றியதிலிருந்து 45 முதல் 50-ம் நாள்ல நுனியைக் கிள்ளி விடணும். இதனால பக்கக்கிளைகள், கூடுதலாக வரும். மகசூலும் அதிகரிக்கும். காத்துல மரம் சாயாது. பூசணி அறுவடைக்குப் பிறகு, 15 நாளுக்கு ஒருதடவை பஞ்சகவ்யா, மீன்அமிலம் ரெண்டையும் சுழற்சி முறையில தெளிச்சுட்டு வந்தாலே போதும். 2 ஏக்கர் செடி முருங்கையில் இப்போ பூப்பூத்து காய் காய்க்குற நிலையில இருக்கு. 125 முதல் 130-ம் நாள்ல இருந்து காய்களைப் பறிக்கலாம். முதல் பறிப்புக்கு 30 முதல் 40 கிலோதான் கிடைக்கும். பிறகு மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். தொடர்ந்து குறிப்பிட்ட நாள் இடைவெளியில காய்களைப் பறிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 18 முதல் 20 டன் வரை கிடைக்கும். சராசரியா 15 டன் நிச்சயம் கிடைக்கும். சராசரியா 1 கிலோ 10 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், ரூ.1,50,000 வருமானம் கிடைக்கும். பராமரிப்பும் பறிப்பும்தான் செலவு. மொத்தம் 30,000 செலவு ஆனாலும், 1,20,000 வரை லாபமாகக் கிடைக்கும்” என்றார் உற்சாகமாக.

தொடர்புக்கு, சென்னகேசவன், செல்போன்: 98423 48915.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படித்தான் செய்யணும் ஊடுபயிர் சாகுபடி

2 ஏக்கர் பரப்பளவில் செடி முருங்கைக்கு ஊடுபயிராக வெண்பூசணி, மஞ்சள்பூசணிச் சாகுபடி குறித்துச் சென்னகேசவன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

முருங்கையைப் பொறுத்தவரையில் ஆடி, புரட்டாசி, கார்த்திகை, தை மற்றும் மாசிப் பட்டங்கள் ஏற்றவை. விதை ஊன்றுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே, தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். முருங்கையுடன் ஊடுபயிரும் சேர்த்துச் சாகுபடி செய்யவிருப்பதால், சொட்டுநீர்ப் பாசனத்தைவிட, வாய்க்கால் பாசனமே சிறந்தது. 8 அடி அகலம், 10 அடி நீளத்தில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அடியுரமாக எதுவும் போடத் தேவையில்லை. வாய்க்காலில் ஒருபுறம் மட்டும் பாத்திக்கு உட்புறமாக வரிசைக்கு வரிசை 7 அடி, செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற கணக்கில் ஒரு இன்ச் ஆழத்தில், ஒரு முருங்கை விதை வீதம் ஊன்ற வேண்டும். அன்றே, பாத்திகளுக்குள் செடிக்குச் செடி 2 அடி இடைவெளியில் ஒரு பூசணி விதை வீதம் ஊன்ற வேண்டும். ஒரு ஏக்கரில் ஊன்ற 800 கிராம் முருங்கை விதை தேவைப்படும். 300 முதல் 350 கிராம் வரை பூசணி விதை தேவைப்படும்.

விதைப்புக்கு முன் விதைநேர்த்தி செய்வது அவசியம். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மி.லி மீன் அமிலம் கலந்து 8 மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். மீன் அமிலம் கிடைக்காவிட்டால் 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி பஞ்சகவ்யா கலந்தும் விதைநேர்த்தி செய்யலாம். பிறகு, 15 நிமிடம்வரை நிழலில் உலர்த்திவிட்டு விதைகளை ஊன்றலாம். 3 முதல் 4-ம் நாளில் முளைப்பு தெரியும். 5-ம் நாளில் முளைக்காத இடங்களைக் கண்காணித்து, வேறு விதையை ஊன்ற வேண்டும். 10 முதல் 12-ம் நாளில் ஒரு செடிக்கு ஒரு கைப்பிடியளவு, செறிவூட்டப்பட்ட தொழுவுரத்தைத் தூரைச் சுற்றித் தூவிவிட்டு உடனே தண்ணீர் விட வேண்டும்.

18 முதல் 20-ம் நாளில் மட்டும் ஒரு களை எடுத்தால் போதும். 20 முதல் 25-ம் நாளில் கொடிவீசத் தொடங்கும். மஞ்சள்பூசணி 45 முதல் 50-ம் நாளிலும், வெண்பூசணி 55 முதல் 60-ம் நாளிலும் பூப்பூக்கும். 25-ம் நாளிலிருந்து 15 நாளுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா மற்றும் 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி மீன் அமிலம் ஆகியவற்றைக் கலந்து சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பூசணியைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்படுவதில்லை. சில சமயங்களில் இலையைத் தின்னும் கருவண்டுகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு. இலையில் துளைத் துளையாகக் காணப்படுவதே இதன் அறிகுறி. இதைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் இஞ்சி-பூண்டு-மிளகாய் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கலாம். மஞ்சள்பூசணி 75–80 நாளிலும், வெண்பூசணி 85–90 நாளிலும் பறிப்புக்கு வரும். பூசணிக் கொடிகள் மூடாக்காக அமைவதுடன், அறுவடை முடிந்ததும் மண்ணில் மட்கி உரமாகவும் மாறிவிடும்.

செறிவூட்டப்பட்ட தொழுவுரம்

ரு ஏக்கருக்கு உரமாகத் தூவ 1,200 கிலோ செறிவூட்டப்பட்ட தொழுவுரம் தேவை. நீளமான பிளாஸ்டிக் தாளை விரித்து அதில் தொழுவுரத்தைப் பரப்பிக்கொள்ள வேண்டும். அதனுடன், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றில் தலா 2 கிலோவையும், 5 கிலோ வேம்-ஐயும் கலந்து, தண்ணீர் தெளித்துப் பிட்டுப் பதத்தில் கலவையாக்கி மூடி, 48 மணி நேரம்வரை வைத்திருந்தால், செறிவூட்டப்பட்ட தொழுவுரம் தயார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு