Published:Updated:

4.5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 8,56,250 - ஒப்பற்ற லாபம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!

பண்ணையில் மனைவியுடன் பார்த்தசாரதி
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணையில் மனைவியுடன் பார்த்தசாரதி

ஒருங்கிணைந்த பண்ணை

விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது இயற்கை விவசாயமும், ஒருங்கிணைந்த பண்ணையமும்தான்.

இதை ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்திவந்தார். இதை மெய்ப்பிக்கும் விதமாக, இயற்கை விவசாயத்தோடு ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் இயற்கை விவசாயி பார்த்தசாரதி.

பண்ணையில் மனைவியுடன் பார்த்தசாரதி
பண்ணையில் மனைவியுடன் பார்த்தசாரதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-ஆற்காடு சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆதனூர் கிராமத்தில் இருக்கிறது பார்த்தசாரதிக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை. மாட்டுக்குத் தீவனம் கொடுத்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

“இது மொத்தம் நாலரை ஏக்கர் நிலம். அஞ்சு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் இந்த நிலம் வானம் பார்த்த பூமியா இருந்துச்சு. அதுல பெருசா வருமானம் கிடைக்கலை. அதனால இதை ஒருங்கிணைந்த பண்ணையா மாத்தணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். மானாவாரி விவசாயம்கிறதால ஆரம்பத்திலிருந்தே இயற்கை விவசாயம்தான். முதல்ல மரக் கன்றுகளை வைக்கலாம்னு முடிவு செஞ்சேன். தண்ணீருக்காக 150 சதுர அடியில ஒரு பண்ணைக்குட்டை வெட்டினேன்.

சப்போட்டா தோட்டம்
சப்போட்டா தோட்டம்

2014-ம் வருஷம் மா, சப்போட்டா, சாத்துக்குடி, நாவல், தேக்கு, வேங்கை, குமிழ்னு 1,500 மரக்கன்றுகளை நடவு செஞ்சேன். பண்ணைக்குட்டையில தண்ணியில்லாதப்போ பாசனம் செய்யறதுக்காக போர்வெல் ஒண்ணும் அமைச்சேன். மரங்கள் வருமானம் கொடுக்க நாளாகும்கிறதால தினசரி வருமானத்துக்குக் கோழி வளர்ப்புல இறங்கினேன். முதல்ல 50 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறமா ஆடுகள், மாடுகள்னு வாங்கி பண்ணையை விரிவுபடுத்தினேன்.

சாத்துக்குடித் தோட்டம்
சாத்துக்குடித் தோட்டம்

இப்போ என்கிட்ட ரெண்டு கலப்பினக் கறவை மாடுகள் இருக்கு. அதுங்க கொடுக்கிற பால் மூலமாவும் வருமானம் எடுத்துட்டு இருக்கேன். தினசரி வருமானத்துக்குக் கத்திரி, மிளகாய், வெண்டைனு பயிர் செஞ்சிருக்கேன். பண்ணைக்குட்டையில தண்ணி இருக்கறதால அதுல கட்லா, ரோகுனு மீன்களை வளர்த்துக்கிட்டுவர்றேன்” என்றவர் தொடர்ந்தார்.

திட்டமிடுவது முக்கியம்!

“ஒருங்கிணைந்த பண்ணையத்தில் தினசரி வருமானம் முதல் ஆண்டு வருமானம் வரை கிடைக்கும். மானாவாரி நிலத்தை இந்த அளவுக்கு மாத்துறதுக்கு 4 லட்சம் ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருக்கேன். முதல்ல நான் செய்யும் செலவைப் பார்த்து ஊரே சிரிச்சுது. இப்போ ஊர்ல இருக்கறவங்களே `பண்ணை நல்லா இருக்கு’னு சொல்லிட்டு, என்கிட்ட நாட்டுக்கோழிகளை வாங்கிட்டுப் போறாங்க. ஒருங்கிணைந்த பண்ணையத்துக்கு முதல்ல திட்டமிடுறது முக்கியம். தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், ஆறு மாத வருமானம், ஆண்டு வருமானம்னு தெளிவா திட்டம் போடணும். அப்போதான் வருமானம் பார்க்க முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பழமர வகைகளுக்கு ஓர் உழவு ஓட்டி, இரண்டடி ஆழத்துல குழிகள் எடுக்கணும். ஒவ்வொரு குழியிலும் ரெண்டு கிலோ மாட்டு எரு, ஒரு கிலோ மண்புழு உரம் அடியுரமா கொடுக்கணும். வறட்சியைப் பொறுத்து தண்ணீர்விடலாம். தேக்கு, குமிழ் மாதிரியான மர வகைகளை நிலத்தின் ஓரத்தில் வேலியாக நடலாம். மரங்களைக் கலந்துதான் நடவு செஞ்சிருக்கேன். அதனால இடைவெளியெல்லாம் கணக்கு வெக்கலை. பண்ணைக்குட்டை எடுத்து அதை மீன் வளர்க்குற குட்டையாவும் மாத்திவெச்சிருக்கேன். இப்போ அதுல ரெட்டிப்பு பலன் கிடைக்குது. என் பண்ணையில இருக்குற மாடு, கோழிகள்ல இருந்து கிடைக்கும் எருவை சேகரிச்சு, ஊட்டமேற்றிய தொழுவுரமாக மாத்தி, மரங்களுக்கு உரமா கொடுத்துருவேன்.

கோழிகள், மீன்குளம்
கோழிகள், மீன்குளம்

கால்நடைகளுக்கு கோ.எஃப்.எஸ்-29 புல், வேலிமசால், அகத்திக்கீரைனு இயற்கையான தீவனங்களைக் கொடுத்துக்கிட்டிருக்கேன். சீஸனுக்குச் செம்மறியாடு வாங்கி வளர்த்து, அதை ரம்ஜானுக்கு விற்பனை செய்யறேன். இந்தப் பண்ணைக்கு இயற்கை விவசாயச் சான்றிதழும் வாங்கியிருக்கேன். வேளாண்மைத்துறை சார்புல என் பண்ணையில அடிக்கடி பயிற்சிகளும் நடத்துறாங்க. பள்ளி, கல்லூரி மாணவர்களும் என் பண்ணைக்குச் சுற்றுலா வர்றாங்க. என்னோட பண்ணைக்குத் தேவையான பஞ்சகவ்யா, மண்புழு உரம் மாதிரியான இடுபொருள்களை நானே தயார் செஞ்சுக்கிறேன்” என்றவர் ஒருங்கிணைந்த பண்ணையிலுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கினார்.

ஆண்டுக்கு இரண்டு முறை மீன் அறுவடை

“வருஷத்துக்கு ஒரு முறை குளத்தைக் காயவிட்டு ஆற்றுத் தண்ணீர், மழைநீரைக் குளத்துல நிரப்பிடுவோம். தேவைப்பட்டா போர்வெல் மூலமாகக் கிடைக்கும் தண்ணீரையும் நிரப்புவோம். இந்தக் குளத்துல கட்லா, ரோகு ரகங்களை வளர்க்கிறோம். 100 கிராம் எடை இருக்கும் மீன்குஞ்சுகளைத்தான் குளத்துல விடுறோம். இதனால குஞ்சுகளோட இறப்பு விகிதம் குறைவா இருக்கு. 1,000 குஞ்சுகள் விட்டா ஆறு மாசத்துல மொத்தம் 600 கிலோ அளவுக்கு மீன்களை அறுவடை செய்யலாம். குஞ்சுகளைவிட்ட முதல் ரெண்டு மாசத்துக்கு தினமும் அஞ்சு கிலோ அசோலாவை மீன் வளர்க்கும் குளத்துல தூவிவிடுவோம்.

நாற்று வளர்ப்பு
நாற்று வளர்ப்பு

மூணாவது மாசத்துல இருந்து 10 கிலோ அசோலா போடுவோம். கடலைப் பிண்ணாக்கு 20 சதவிகிதம், எண்ணெய் எடுத்த தவிடு 60 சதவிகிதம், சோளமாவு 20 சதவிகிதம்னு கலந்துவெச்சு மீன்களுக்குத் தீவனமா கொடுப்போம். முதல் மாசம் ஒரு கிலோ, ரெண்டாவது மாசம் ரெண்டு கிலோனு அளவை அதிகரிப்போம். ஆறு மாசத்துல பிடிச்சு விற்பனை செஞ்சுடுறதால வருஷத்துக்கு ரெண்டு முறை மீன் மூலம் வருமானம் பார்க்கலாம். வருஷத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும்.

கொழுத்த லாபம் கொடுக்கும் கோழி!

ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி இடம் தேவை என்ற அளவுல 30 அடி நீளம், 18 அடி அகலத்துல கொட்டகை அமைச்சிருக்கேன். இந்தக் கொட்டகை 540 சதுர அடி அளவுங்குறதால 500 கோழிகளுக்கும் மேல வளர்க்கலாம்.

என்கிட்ட 350 நாட்டுக் கோழிகள், 150 கிரிராஜா கோழிகள்னு 500 கோழிகள் இருக்கு. 15 வாத்துகள், 20 கடக்நாத் கோழிகள் இருக்கு.

கோழி, வாத்து, கடக்நாத் கோழிகள் எல்லாத்துக்கும் வளர்ப்பு முறை ஒன்றுதான். பகல் நேரத்துல கோழிகள் பண்ணைக்குள்ளேயே மேய்ஞ்சுடும். காலை, மாலையில் கோழித்தீவனத்தை உணவாகக் கொடுக்கிறேன். இதைத் தவிர கோழிகள், பண்ணைக்குள் திறந்தவெளியில மேயறதால புழு, பூச்சிகள், வண்டுகளைப் பிடிச்சு சாப்பிட்டுக்கும்.

தனியா ஒரு கொட்டகையில 50 கிராமபிரியா தாய்க்கோழிகளை முட்டைக்காக வளர்க்கிறேன். அதுல இருந்து தினமும் 25 முட்டைகள் கிடைக்கும். ஒரு முட்டை 10 ரூபாய்னு விற்பனை செய்யறேன். அது மூலமா தினமும் 250 ரூபாய் வருமானம் கிடைக்குது. இந்தத் தாய்க்கோழிகள் முட்டையிடுறதை நிறுத்துறப்போ, அடுத்த தாய்க்கோழிகள் முட்டையிடுற மாதிரி பார்த்துக்குவேன். முட்டைகள் மூலமா வருஷத்துக்கு 91,250 ரூபாய் வருமானம் கிடைக்கும். தீவனம், பராமரிப்புனு 20,000 ரூபாய் செலவு போனாலும் 71,250 ரூபாய் லாபமா நிற்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாதம் 675 கிலோ... ஆண்டுக்கு ரூ.6,00,000

கோழிகள் விற்பனையைப் பொறுத்தவரை, ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யறேன். ஒவ்வொரு மாதமும் 500 கோழிகள் விற்பனைக்கு வர்ற மாதிரி மூன்று கொட்டகைகளை அமைச்சிருக்கேன். முதல் கொட்டகையில விடுற குஞ்சுகளை 120 நாள்கள் கழிச்சு விற்பனை செய்வேன். அஞ்சாம் மாசத்துல இருந்து, ஒவ்வொரு மாசமும் கோழிகளை விற்பனை செய்யலாம். ரெண்டாவது வருஷத்துல இருந்து 12 மாசமும் விற்பனை செய்யலாம். 500 குஞ்சுகளை வளர்த்தா 10 சதவிகிதம் இழப்பாகிடும். 450 கோழிகளை விற்பனை செய்யலாம். ஒவ்வொரு கோழியும் ஒரு கிலோவுல இருந்து ரெண்டு கிலோ வரைக்கும் எடை இருக்கும். சராசரியா ஒன்றரை கிலோனு வெச்சுக்கிட்டாலும் 450 கோழிகள் மூலமா 675 கிலோ இருக்கும். கிலோ 200 ரூபாய்னு விற்பனை செஞ்சா 1,35,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். வருஷத்துக்கு கணக்குப் போட்டா 16,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

4.5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 8,56,250 - ஒப்பற்ற லாபம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!

இதுல தீவனம், கோழிக்குஞ்சு, ஆள்கூலி, மின்சாரம்னு ஒரு வருஷத்துக்கு 10,20,000 ரூபாய் செலவாகிடும். மீதி 6 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். இதையே மாசத்துக்குனு கணக்குப் போட்டா 85,000 ரூபாய் வரைக்கும் செலவாகிடும். 1,35,000 ரூபாயில செலவுபோக மீதி 50,000 ரூபாய் மாச லாபமா நிக்கும். கோழி விற்பனை மந்தமா இருக்கும் மாசங்கள்ல இந்த வருமானம் மாறுபடும்.

பலே வருமானம் கொடுக்கும் பழ வகைகள்!

இந்த மண் நல்ல வளமான மண்ணா இருக்குறதால எல்லா மரங்களும் நல்லாவே வளருது. சாத்துக்குடியைப் பொறுத்தவரை வருஷத்துக்கு ரெண்டு பறிப்பு. மொத்தம் 1,000 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்யறேன். அது மூலமா 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மாஞ்செடிகள் இளஞ்செடிகளா இருக்கறதால சீஸன்ல 500 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 80 ரூபாய்னு கொடுக்குறேன். அது மூலமா 40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

4.5 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 8,56,250 - ஒப்பற்ற லாபம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!

சப்போட்டாவும் வருஷத்துக்கு ரெண்டு தடவை மகசூல் கொடுக்குது. இப்போ காய்ப்புல 100 மரங்கள் இருக்குது. மரத்துக்கு 20 கிலோனு கணக்கு வெச்சுக்கிட்டா குறைந்தபட்சம் 2 டன் சப்போட்டா மகசூல் கிடைக்கும். கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்யறேன். இது மூலமா 60,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

பழ மர வகைகள் மூலமா 1,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவா 15,000 ரூபாய் கழிச்சா 1,35,000 ரூபாய் லாபமா நிற்கும்.

காய்கறிகள் மூலம் உபரி வருமானம்

அதேபோல கீரைகள், காய்கறிகள் மூலமா வாரத்துக்கு 1,000 ரூபாய்னு வெச்சுக்கிட்டா மாசத்துக்கு 4,000 ரூபாய் கிடைக்கும். அதுவே வருஷத்துக்கு 48,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவா 18,000 ரூபாய் கழிச்சாலும் 30,000 ரூபாய் லாபமா நிற்கும்’’ என்றவர் நிறைவாக,

‘‘இந்த ஒருங்கிணைந்த பண்ணையில கோழிகள் மற்றும் முட்டைகள் மூலமா 6,71,250 ரூபாய், பழங்கள் மூலமா 1,35,000 ரூபாய், மீன் மற்றும் காய்கறிகள் மூலமா 50,000 ரூபாய்னு 8,56,250 ரூபாய் லாபமா நிற்கும். இதில் மாடுகள் கொடுக்குற பாலை வீட்டுத்தேவை போக மீதத்தை வெளியில் கொடுக்கிறேன். அன்றாட வீட்டுச் செலவுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துறேன். இதுபோக ஆடுகளும் வாங்கி வளர்த்து விற்பனை செய்துகிட்டிருக்கேன். இதுல எது ஒண்ணு கைவிட்டாலும், மத்தது நம்மைக் காப்பாத்திடும்கிற நம்பிக்கை இருக்கு” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பார்த்தசாரதி, செல்போன்: 94423 11505

களை எடுக்கும் கால்நடைகள்

“மரங்களுக்கு இடையில களைகளை எடுக்கறதுக்காக உழவு செய்யறதில்லை. பத்து நாளைக்கு ஒரு தடவை காய்ச்சலும் பாய்ச்சலுமாத்தான் பாசனம். களைகள், புல் பூண்டுகளை கோழி, வாத்து, மாடுகள் மேயுறதால அதுகளோட கழிவுகள் தோப்புல விழுந்து, மண் நல்ல வளமா இருக்கு. அதனால, மரங்களுக்கு எந்த ஊட்டமும் கொடுக்காமலேயே செழிப்பா இருக்கு.

கழிவிலிருந்து உரம்

கால்நடைக் கழிவுகள், இலை தழைகள் எல்லாத்தையும் வெச்சு, வருஷத்துக்கு 500 கிலோ மண்புழு உரம் தயாரிக்கிறோம். காய்கறிப் பயிர்களை முதல்ல தனியாத்தான் பயிர் செஞ்சுக்கிட்டிருந்தோம். ஆனா, மண்புழு உரப் படுக்கைக்குப் பக்கத்துல இருந்த புற்கள், செடிகள் நல்லாவே வளர்ந்திருந்துச்சு. அப்புறமா மண்புழு உரப் படுக்கையைச் சுற்றிலும் காய்கறிப் பயிர்களைப் பயிர் செஞ்சேன். வழக்கமா கிடைக்கிறதைவிட அதிகமா மகசூல் கிடைக்க ஆரம்பிச்சுது” என்கிறார் பார்த்தசாரதி.

கோழி பராமரிப்பு முறைகள்!

ரத்தக் கழிச்சல் - தலா இரண்டு கைப்பிடி துளசி, குப்பைமேனி, கீழா நெல்லியுடன் சிறிதளவு மிளகு, வெற்றிலை, மஞ்சள்தூள் எடுத்து அரைத்து, வடித்த சாதத்துடன் கலந்து மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும்.

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் சமயத்தில், 15 நாள்களுக்கு ஒரு முறை சின்ன வெங்காயம் கொடுக்கலாம். இதனால் கோழிகளுக்குச் சளி பிடிக்காது.