ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

உலக அதிசயத்தை உருவாக்கிய பழமும் ‘மா’மன்னர்களின் சுவையான வரலாறும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மண்புழு மன்னாரு

இன்றைக்கு சற்றேறக்குறைய 12 மாதங்களுக்கு முன்பு அதிகாலையில் ஆக்ராவில் காலடி வைத்தேன். வட மாநில குளிருக்குத் தனிக் குணம் உண்டு. உடலில் ஊசியைப்போல குத்தும். குளிர் தடுப்புக்கான உடைகளை உடுத்தி இருந்தபோதிலும், அதையும் மீறி கடும் குளிர் நடுங்க வைத்தது.

சுருங்கச் சொன்னால் ஊரே குளிர் சாதனப் பெட்டிக்குள் இருப்பதுபோல இருந்தது. சூடாகத் தேநீர் குடித்தாலும் குளிர் விடவில்லை. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 6 என்று காட்டியது. அங்கிருந்து 10 நிமிட பயண தூரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இருந்தது.

ஏற்கெனவே சில முறை அந்த வெள்ளைப் பளிங்குக் கட்டடத்தைப் பார்த்திருந்தாலும், சூரிய உதயத்தின்போது பார்த்ததில்லை. சூரியன் உதிக்கும்போதும், அது மறையும் போதும் அந்தப் பேரழகு கட்டடத்தைப் பார்ப்பது சிறப்பு என்று சொல்வார்கள். அதற்கான வாய்ப்பு அமைந்தது. காலை 10 மணிக்கு மேல்தான் எனக்கு அடுத்த ரயில் வரும். ஆகையால், ஆக்ரா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தைவிட்டு வெளியில் வந்தேன்.

ஒரு காலத்தில் ஆக்ரா இந்தியாவின் தலைநகராக இருந்துள்ளது. மன்னர்களும் பிரபுக்களும், மாவீரர்களும் வெற்றி நடைபோட்ட மண்ணில் இறங்கினேன்.

குதிரை வண்டி, ரிக்‌ஷா, ஆட்டோ, கார் என வாகன பரிவாரங்கள் அணிவகுத்து நின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தலத்துக்குக் குதிரைவண்டியில் ஏறிப் புறப்பட்டேன். வீதியெங்கும் ஆள், ஆரவாரம் இல்லாமல் இருந்தது. பொதுவாகக் குளிர் காலத்தில் வட மாநிலங்களில் ஆள் நட மாட்டம் ஆரம்பிக்கவே காலை 10 மணிக்கு மேல் ஆகும். அரசு அலுவலர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சில அலுவலகங்களில் 12 மணிக்கு வந்துவிட்டு 2 மணிக்கு வீட்டுக்குச் செல்லும் அரைக்கை கம்பளி கோட் போட்ட அதிகாரிகளைப் பார்த்துள்ளேன்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

குதிரை வண்டி ஓடும் ஓசை இதமாக ஒலித்தது. தாஜ்மகால் அருகில் செல்லும்போது, ஆள்கள் நடமாட்டம் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. இன்னும் கொஞ்சம் பக்கத்தில் போனவுடன் நூற்றுக்கணக்கானோர் குளிரில் நடுங்கியபடி நின்றுகொண்டிருந் தார்கள். அதில் வெளிநாட்டினரும் அடக்கம். பொழுது புலர்ந்து வானத்திலிருந்து சூரியஒளி பட்டு தாஜ்மகால் மின்னியது. ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ்... என்று பன்மொழிகள் அறிந்த வழிகாட்டிகள், தாஜ்மகால் உருவான காவிய கதையை வித விதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

என்னதான் நமக்கு தாஜ்மகால் வரலாறு தெரிந்தாலும் அதை அங்குள்ள வழிகாட்டிகள் மூலம் தெரிந்துகொள்ளும்போது, புதிய தகவல்கள் கிடைக்கும். ஆகையால், ஒரு வழிகாட்டியை அமர்த்திக்கொண்டேன்.

‘‘மாம்பழம்தான் தாஜ்மகால் உருவாக அடிப்படைக் காரணம்’’ என்று ஆர்வத்தைத் தூண்டும்படி பேச்சைத் தொடங்கினார், வழிகாட்டி.

‘‘தாஜ்மகால் பற்றித் தெரிந்துகொள்ளும் முன்பு முகலாயர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அப்போதைய மன்னர் இப்ராஹிம் லோடியின் கொடுமை அதிகமாக இருந்தது. 1526-ம் ஆண்டு, காபூலில் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் பாபரை, இந்தியா மீது படையெடுத்து வரும்படி அழைப்பு விடுத்தார் தெளலத்கான். இவர் வேறு யாரு மல்ல, இப்ராஹிம் லோடியின் ஆளுநர்களில் ஒருவர். இந்தியா வின்மீது பாபருக்கு விருப்பம் இருந்தாலும், இந்த அழைப்பில் பாபருக்கு விருப்பம் இல்லை. ‘சரி, பார்க்கலாம்...’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி அனுப்பினார்.

பாபர்நாமா
பாபர்நாமா

இப்போது அரசியல்வாதிகள், உயர் அலுவலர்களைச் சந்திக்கப் போகும்போது நினைவுப் பரிசுகள், விலை உயர்ந்த இனிப்புகள், பழங்கள் கொடுப்பது போலவே, அந்தக் காலத்திலும் மன்னர், பிரபுக்களைச் சந்திக்கச் செல்லும்போது பரிசுப் பொருள் களை வழங்குவது வழக்கம். அதன்படி தெளலத்கான், பல கூடைகள் நிறைய இந்திய மண்ணில் விளைந்த மணமும் ருசியும் கொண்ட மாம்பழங்களை எடுத்துச் சென்று கொடுத்தார்.

அதுவரையிலும் அப்படியொரு மாம்பழச் சுவையை அறிந்திராத பாபர், அதை சுவைத்த அடுத்த நொடியே இந்த மாம்பழத்துக் காகவே இந்தியா மீது படை எடுக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். கூடவே, இந்தியாவி லிருந்து இன்னும் சிலர் படை எடுக்க அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் பங்குக்கும் மாம்பழங்களை அனுப்பி வைத்து பாப ருக்கு மாம்பழ ஆசையையும் மண்ணாசையையும் உருவாக் கினார்கள்.

ஆகையால், பாபர் வாளுடன் இந்தியா நோக்கிப் புறப்பட்டு, வெற்றி பெற்றது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆக, பாபர் இந்தியாவுக்குள் வர மாம்பழமும் ஒரு காரணம். ``இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி உருவாகவில்லை என்றால், ஷாஜகான், உலக அதிசயமான தாஜ்மகாலைக் கட்டியிருக்க வாய்ப்பில்லை. இந்தத் தகவல்களைப் புத்தகங் களில் தேடாதீர்கள்; அதில் கிடைக்காது. இது இந்தப் பகுதி மக்களின் வாய்மொழி வரலாறு’’ என்று முன்னுரைக் கொடுத்துவிட்டு, தாஜ்மகாலின் அருமை பெருமைகளை அடுக்கினார் வழிகாட்டி.

ஆனால், எனக்கு மட்டும் மாம்பழம் மீதே மனது இருந்தது. வழிகாட்டி சொல்லிய தகவலுக்குப் போதுமான வரலாற்று ஆதாரம் இல்லாவிட்டாலும் உத்தரப் பிரதேச மக்கள் இதைக் கதையாகச் சொல்வதைப் பார்த் துள்ளேன். இன்றும்கூட உத்தரப் பிரதேச மாநிலத்தில் மா சாகுபடி பிரமாதமாக நடைபெற்று வருகிறது.

பாபர் நாமா (Baburnama) என்ற பாபரின் சுயசரிதையில் கூட மா மரங்கள் குறித்த குறிப்பு கள் உள்ளன. அதுவும் ஓவியங் களுடன் இடம் பெற்றுள்ளன.

போரில் மிகுந்த ஆவேசம் காட்டினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் மென்மையான, நல்லொழுக்கம் மிகுந்த சிறந்த மன்னராகத் திகழ்ந்தார் பாபர். ஒவ்வொரு நாளும் நடந்த எல்லாச் சம்பவங்களையும் ‘நாட்குறிப்பில்’ நுணுக்கமாக விவரித்து எழுதுவது அவர் பழக்கம். இந்திய நாட்டின் பருவநிலை மாற்றங்கள், புவி யியல், தாவரங்கள், பூக்கள், மக்களின் மத மற்றும் ஜாதிப் பிரிவுகள், இந்தியர்களின் கணிதத்திறமை, கலைத்திறன், மக்களின் நடை உடை பாவனை களைக்கூட குறிப்பிட மறக்க வில்லை பாபர்.

பாபர், ஜலாலுதீன் அக்பர்
பாபர், ஜலாலுதீன் அக்பர்

இதைத் தவிர, டெல்லியிலும் ஆக்ராவிலும் ஏராளமான பூங்காக்களை உருவாக்கினார் அவர். இந்தியப் பறவைகள் பற்றியும் தாவர வகைகள் பற்றியும் விலாவாரி யாகக் குறிப்பிட்டிருக் கிறார் பாபர். வாழைத்தோட்டம் எப்படிப் போடுவது, அதைக் கண்காணிப்பது எப்படி என்றும், ஐந்து விதமான இந்தியக் கிளிகள் பற்றியும் துல்லியமான விவரிப்புகளையும் பாபர் நாமாவில் நாம் காணலாம்.

பாபர் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் ஹுமாயூன் நாடு இழந்து, ஓடி ஒளிந்து, தலைமறைவாக வாழ்ந்து கடைசிக் காலத்தில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றார். இவர் மறைவுக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த ஜலாலுதீன் அக்பர், பீகாரில் நவீன தர்பங்கா அருகே 1 லட்சம் மாமரங்கள் கொண்ட தோட்டத்தை உருவாக்கி மாம்பழத் துக்கு மரியாதை செலுத்தினார். அந்தப் பகுதி இப்போதும் ‘லக்கி பாக்’ என்று அழைக்கப் படுகிறது.

சலீம் என்ற இயற்பெயர் கொண்ட ஜஹாங்கீரும்கூட மாம்பழங்களின் காதலர் தான். இவர் விரும்பி ருசித்த மாம்பழத்துக்கு ‘ஜஹாங்கீர்’ என்று தன் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். காதல் மன்னர் ஷாஜகான், ஒரு பக்கம் மும்தாஜையும் மறுபக்கம் மாம்பழத்தையும் காதலித்தார். இவர் மாம்பழக் காதல் எந்த அளவுக்கு இருந்தது என்றால், மேற்குக் கடற்கரையில் உள்ள மசகான் (மும்பை) பகுதியில் விளையும் மாம்பழங்களை டெல்லிக்கு எடுத்து வர தனி கூரியர் (ஆள் அஞ்சல்) சேவையை உருவாக்கி வைத்திருந்தார். மாம்பழ பருவத்தில் மன்னருக் குப் பிடித்த மாம்பழங்கள், கூடை கூடையாக டெல்லி நோக்கிச் செல்லும்.

கண்டிப்புகளுக்கு பெயர் பெற்றவரும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்த வருமான ஔரங்கசீப்பையும்கூட மாம்பழங் களின் சுவை விட்டு வைக்கவில்லை. ‘எனக்கு மாம்பழங்கள் தேவை. நல்ல ருசியான மாம்பழங்களை விரைந்து அனுப்பி வையுங்கள்’ என்று அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுவது வழக்கம். இந்தத் தகவலை ‘ருகாத்-ஏ-ஆலம்கிரி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட் டிருக்கிறார் ஔரங்கசீப்.

‘‘மா ரகங்களின் இனத் தூய்மையைக் காக்க முகலாயர் களின் ஆட்சிக் காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே சில மா ரகங்களை வளர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அரச குடும்பத்தினர் போல நாட்டு மக்களும் சுவை யான மாம்பழங்களை உண்ண வேண்டும் என்று விரும்பிய மாமன்னர் ஷாஜகான், அந்தத் தடையை நீக்கினார்’’ என்று ஆக்ரா சுற்று வட்டார மக்கள் சொல்கிறார்கள்.

ஆக, முகலாய மன்னர்கள் அத்தனை பேரும் ‘மா’மன்னர்களாகவே இருந்துள்ளார்கள். இதில் ஒருபடி அதிகமாகச் சென்றுள்ளார் அக்பர் பாதுஷா.

அவர் ஒரு மா ரகத்துக்குச் சூட்டிய பெயர்தான் இன்றும் உலக அளவில் கொண் டாடும் முதல் தர மா ரகமாக உள்ளது; அந்த அற்புத மா ரகம் தமிழ்நாட்டில் வளராது. ஆனால், இன்றளவும் பிடிவாதத்திலும் அறியாமையிலும் அந்த ரகத்தைச் சாகுபடி செய்து கையைச் சுட்டுக்கொள்பவர்கள், தமிழக மண்ணில் நிறையவே உண்டு. இந்த மா ரகம் ஏன் இங்கு வளராது? காரணத்தையும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடைசியாகச் சாப்பிட்ட ஆந்திரா மாம்பழம் குறித்தும் சுவையான தகவல்கள் உள்ளன.

அதை அடுத்த இதழில் பார்ப்போம்.