கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் மையப்பகுதியிலுள்ள கோட்டை மைதானத்தில் (திரிபுரவாசினி), இன்று காலை, மத்திய வேளாண்துறை மற்றும் கர்நாடக மாநில வேளாண் உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி துறை சார்பில், சர்வதேச அங்கக மற்றும் தினை வர்த்தக கண்காட்சி துவங்கப்பட்டது. முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக வேளாண் அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே ஆகியோர் துவங்கி வைத்தனர். இன்று துவங்கிய கண்காட்சி வரும், 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் நடக்கிறது.

முதல் நாளான இன்று கண்காட்சியில், தினை வகைகள் மற்றும் சாகுபடி முறை, தினை பயிர்களின் எதிர்காலம், அங்கக விவசாயம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது. நாளை, 21ம் தேதி சனிக்கிழமை காலை, 10:00 மணிக்கு மேல் கண்காட்சி துவங்கப்பட்டு, தினை மற்றும் அங்கக விவசாயம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடக்கவுள்ளது.

இது, அங்கக விவசாயம், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், முன்னோடி சிறுதானிய சாகுபடி விவசாயிகள் மற்றும் வேளாண்துறை விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். நான்கு Session–களாக, காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரையில் நடக்கவுள்ளது.
22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, 10:00 மணிக்கு கண்காட்சி துவங்கி, இரண்டு Session–களாக காலை, 10:00 மணி முதல் மதியம்,1:30 மணி வரையில் சர்வதேச கருத்தரங்கள் நடக்கவுள்ளது.

இந்த கண்காட்சியில் பல்வேறு சிறுதானிய வகைகள், அங்கக சான்றளிப்புத்துறை சார்பில் அங்கீகரிக்கப்பட்ட விளைபொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட அங்கக பொருட்கள் கண்காட்சியில் மக்கள் பார்வைக்கும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
அங்கக வேளாண் சார்ந்த புத்தகங்கள், அங்கக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் கடைகள், பொருட்கள், நவீன வேளாண் கருவிகள், தினை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு செயல்முறை விளக்கம் என, விவசாயிகளுக்கு உதவும் வகையில் பலவிதமானவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மேலும், தினை மற்றும் ஆர்கானிக் பயிர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘ஆர்கானிக் ஸ்நாக்ஸ்’, ‘ஆர்கானிக் புட்’ வகைகளும் வைக்கப்பட்டுள்ளன.