பிரீமியம் ஸ்டோரி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகர்நாத் பிரசாத் மற்றும் அஜித்குமார் ஆகியோர் தயிர் கலவையைப் பயன்படுத்தி யூரியாவின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளனர்.

2 லிட்டர் தயிரைக் கொண்டு 25 கிலோ யூரியாவின் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் அங்கீகரித் துள்ளது. பீகார் மாநிலம் முஸாஃபர்பூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் விவசாயிகள் யூரியாவுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதோடு மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டத்தில் வளரும் செடிகளுக்குப் பூப்பதற்கு முன் கொடுத்தால் நல்ல வகையில் பூக்கள் பூத்து மகசூல் பெருக்கும் என்கின்றனர் விவசாயிகள். அதேபோன்று நெல், காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு நட்ட 40-வது நாளுக்கு மேல் தெளித்தால் அதிக பூக்கள் பூப்பதும், நிறைய காய்கள் காய்ப்பதும் நடக்கிறது என்கின்றனர் விவசாயிகள். வெந்தய பேஸ்ட் அல்லது வேப்ப எண்ணெய்யைக் கலந்தால் அது மிகச்சிறந்த பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

மாணிக்கம்
மாணிக்கம்

2 லிட்டர் தயிரை ஒரு மண் சட்டியில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் காப்பர் (தாமிரம்) கம்பி அல்லது ஸ்பூனைப் போட்டு 8-15 நாள்கள் விட வேண்டும். அதன் நிறம் மாறியிருக்கும். பிறகு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி என்ற கணக்கில் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். நெல், காய்கறிகள், மக்காச்சோளம், கோதுமை என்று அனைத்துப் பயிர்களின் மீதும் தெளிக்கலாம். இதனால் பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்துக் கிடைக்கிறது. அதனால் யூரியாவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்தத் தயிர் கலவையை மண்புழு உரத்தோடு (வெர்மி கம்போஸ்ட்) கலந்து பயிர்களுக்குக் கொடுத்தால் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையைத் தீர்க்கும். பயிர்களைத் தாக்கும் பூஞ்சண நோய்கள், பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும். தயிர், மண்புழு உரம் கலந்த கலவையை நெற்பயிர் என்றால் தூவலாம். பழப்பயிர்கள், மரப்பயிர்கள் என்றால் வேரைச் சுற்றி இடலாம் என்று தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.

யூரியா வேண்டாம் தயிர் போதும்!

இது சம்பந்தமாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வளம்குன்றா வேளாண்மைத் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மாணிக்கத்திடம் பேசியபோது, ``தயிரைப் பயிர்களுக்குக் கொடுக்கும்போது தயிரிலுள்ள மூலக்கூறுகளைப் பயிர்கள் உடனடியாக எடுத்துக்கொள்ளும். இதனால் பயிர்களுக்கு எதிர்ப்புத்திறன் கூடும். அதனால், பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். நாம் குளுக்கோஸ் சாப்பிட்டால் உடல் ஆற்றல் பெறுவது போன்றதுதான் இது. இது நோய்களுக்கு எதிரான பயிரின் உறுதித் தன்மையை நிறுவச் செய்கிறது. தயிரில் நுண்ணுயிரிகள் நிறைய இருக்கின்றன’’ என்றார்.

தமிழ்நாட்டு விவசாயிகளும் இதை முயற்சி செய்து பார்க்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு