Published:Updated:

திருவாரூர்: கிசான் சம்மான் திட்டத்தில் 15.4 லட்சம் முறைகேடு... சூடுபிடிக்கும் விசாரணை

விவசாயி
விவசாயி

இத்திட்டத்தின் பலன், உண்மையான விவசாயிகளுக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்காத நிலையில் மோசடி பேர்வழிகள் பலர், இந்த உதவித்தொகையைக் குறுக்கு வழியில் அபகரித்துள்ளார்கள்.

மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் பணம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்திலும் இந்த முறைகேடு நடைபெற்று இருப்பதாக எழுந்துள்ள புகாரின் பேரில் வேளாண்மைத்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

விவசாயி
விவசாயி

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு நான்கு மாத இடைவெளியில் தலா 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் பலன், உண்மையான விவசாயிகளுக்கு இன்னும் முழுமையாகப் பலன் கிடைக்காத நிலையில் மோசடி பேர்வழிகள், இந்த உதவித்தொகையைக் குறுக்கு வழியில் அபகரித்துள்ளார்கள். இது விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பணம். இதுகுறித்து நேர்மையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கொந்தளிக்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 15.4 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. விவசாயிகள் அல்லாத 375 நபர்கள், முறைகேடாகப் பணம் பெற்று வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து வேளாண்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய விவசாயிகள் சங்க நிர்வாகி சுவாமிமலை சுந்தர.விமல்நாதன், ``உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கும், அபகரிக்கப்பட்ட பணத்தை மீட்கவும், சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் வேறு எங்குமே இது போன்ற முறைகேடு நடைபெறவில்லை. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் 6,000 ரூபாயோடு, தெலங்கானாவில், மாநில அரசின் பங்களிப்பாகக் கூடுதலாக 4,000 சேர்த்து, ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆந்திராவில் விவசாயிகள் உதவித்தொகையாக 12,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அங்கெல்லாம் முறைக்கேடு இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அவலம் அரங்கேறியுள்ளது.

திருவாரூர் விவசாயிகள்
திருவாரூர் விவசாயிகள்

இத்திட்டத்தில் பயன்பெற, விவசாயிகளே நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்ததால், மோசடி பேர்வழிகள், விவசாயமே செய்யாத நபர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, போலி ஆவணம் மூலம் விண்ணப்பித்துள்ளார்கள். ஆனாலும், ரகசிய குறியீட்டு எண் இருந்தால்தான் அதைப் பதிவேற்றம் செய்து ஒப்புதல் வழங்க முடியும். வேளாண்மைத்துறை அதிகாரிகள், தங்களிடம் உள்ள ஆவணங்கள் மூலம் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவார்கள். எனவே, இந்த முறைகேட்டில் ஒரு சில அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் சி.பி.ஐ விசாரித்தால்தான் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிக்க முடியும். பணத்தையும் மீட்க முடியும். இது மத்திய அரசின் திட்டம் என்பதால், சி.பி.ஐ விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், உச்ச நீதிமன்றம், தாமாக முன் வந்து, இதைப் பொதுநல வழக்காகப் பதிவு செய்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு