Published:Updated:

வறட்சி, வெள்ளம், புயல்... பருவநிலை மாற்றம் மட்டும்தானா விவசாய வீழ்ச்சிக்குக் காரணம்? ஓர் அலசல்!

 விவசாயிகள்
விவசாயிகள்

கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத்தைவிட்டு வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள் என செயல்முறை சார்ந்த மனிதவள ஆய்வு மையம் (Institute of Applied Manpower Research) தெரிவிக்கிறது.

உலகிலேயே விவசாய மூலப்பொருள்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு, பார்லி, சோளம், பருத்தி போன்ற எண்ணற்ற உணவுப்பொருள்களும் மூலப்பொருள்களும் மிக அதிகளவில் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக, அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. தங்களின் அயராத உழைப்பால் ஆண்டுக்கு சராசரியாக 280 மில்லியன் டன் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்து வருகிறார்கள் நம் விவசாயிகள்.

இன்று தேசிய விவசாயிகள் தினம்... முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்தநாளான டிசம்பர் 23, கடந்த 18 ஆண்டுகளாகத் தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரத்துக்குப் பின் இந்தியா பல பிரதமர்களைக் கண்டிருந்தாலும், சரண்சிங்கின் பிறந்தநாளை விவசாயிகள் தினமாகக் கொண்டாடுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. தான் ஆட்சியிலிருந்த வெறும் 7 மாதங்களில், ``ஜமீன்தாரிமுறை ஒழிப்பு சட்டம்”, ``நில கையிருப்புச் சட்டம்”, ``வேளாண் விளைபொருள் சந்தை மசோதா” போன்ற விவசாயிகள் நலம் சார்ந்த திட்டங்களைக் கொண்டு வந்தவர் சரண் சிங்.

சரண் சிங்
சரண் சிங்
pmindia.gov.in

இவர் பங்கெடுக்கும் கூட்டங்களில், ``உழுபவர்க்கே நிலம் சொந்தம்” என்ற கருத்தை முன்மொழிந்தார். தான் இறக்கும் வரையிலும் விவசாயிகளின் நில உரிமைக்காகக் குரல் கொடுத்தமையால் டெல்லியிலுள்ள இவரது நினைவிடத்தை `கிசான் காட்' அதாவது விவசாயிகளின் நுழைவாயில் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர் இந்திய விவசாயிகள்.

சரண் சிங் இறந்து 32 ஆண்டுகள் ஆன பின்னும் அவரின் கனவான `விவசாயிகளின் நில உரிமை' இன்றுவரை நிறைவேறவில்லை என்பதே நிதர்சனம்.

கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத்தைவிட்டு வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள் என செயல்முறை சார்ந்த மனிதவள ஆய்வு மையம் (Institute of Applied Manpower Research) தெரிவிக்கிறது.

`நான் செய்த மிகப்பெரும் தவறு அதுதான்!’ - ஜாமியா வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் கதறல்

உலகமயமாக்கல் கொள்கை அனுமதிக்கப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து 2012 வரையிலான கால அளவில் சுமார் 1.5 கோடி விவசாயிகள் இல்லாமல் போயுள்ளனர். குறிப்பாக 2001-ம் ஆண்டுவரை மட்டும் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் முன்னரே அறிந்துதான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே, ``விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள்” என இந்திய விவசாயிகளுக்கு அறைகூவல் விடுத்தாரா?'' என்றும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

டிராக்டர் மூலம் உழவு செய்யும் விவசாயி.
டிராக்டர் மூலம் உழவு செய்யும் விவசாயி.

இந்திய விவசாயிகளின் பிரச்னை என்பது இன்று நேற்று தொடங்கியது அல்ல, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் தொடர் பிரச்னை. குறிப்பாக, `பசுமைப் புரட்சி' ஆரம்பிக்கப்பட்ட 1960-களிலிருந்தே விவசாயிகள் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர்.

``பஞ்சம் தீர்க்கிறோம்! விவசாயத்தை நவீனப்படுத்துகிறோம், விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்கிறோம்” என்ற முழக்கங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டது பசுமைப் புரட்சி திட்டம். ஆனால், ஆரம்பத்தில் அதை ஆர்வத்தோடு வரவேற்ற இந்திய விவசாயிகள் அதன் விளைவுகளால் நாளடைவில் பெரும் பின்னடைவைச் சந்தித்தனர்.

குறிப்பாக, இந்தத் திட்டம் பாரம்பர்யமாகத் தாங்கள் செய்து வந்த இயற்கை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தியது. எருது, ஏர் கலப்பை, சாண உரம், நாட்டு விதைகள் என இயற்கையோடு இயைந்த (மரபுவழி) விவசாயம் மேற்கொண்டவர்கள் டிராக்டர், யூரியா, அமோனியா போன்ற ரசாயன உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் எனச் செயற்கை முறையிலான (நவீன) விவசாயத்துக்கு ஊக்குவிக்கப்பட்டனர்.

``இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல பன்னாட்டு நிறுவனங்களில் விற்காத வெடிகுண்டுகளின் மூலப்பொருள்களான அம்மோனியா முதலான ரசாயனக் கலவைகளை விற்றுப் பணமாக்க, அதே ரசாயனம் மூலம் உற்பத்தியைப் பெருக்கலாம் என்ற கருத்தாக்கத்தை வேளாண் உலகில் உலகெங்கும் விதைத்த காலம் தொட்டு, இந்தியாவின் வேளாண்மை கடன்காரத் தொழிலாயிற்று!”
கோ.நம்மாழ்வார்

இதன் காரணமாக, `ஜீரோ பட்ஜெட்'டாக இருந்த விவசாயம் வங்கிகளில் கடன்வாங்கி, பெரும் பொருளாதாரச் செலவு செய்து மேற்கொள்ளக்கூடிய வணிகமாக மாறியது.

மண்ணில் கொட்டப்பட்ட ரசாயன உரங்கள், மண்ணின் தன்மையைக் கெடுத்தது. உழவனின் நண்பனான மண்புழு முதலிய உயிரிகள் மாண்டன. மண்ணின் வளம் போனது. குறுகிய காலத்தில் மகசூல், அதிக மகசூல், பூச்சித் தாக்குதல் எதிர்ப்பு சக்தி என விளம்பரப்படுத்தப்பட்ட பி.டி.கத்திரிக்காய், பி.டி பருத்தி, பி.டி மக்காச்சோளம், தக்காளி, வெண்டை, சோயா, ஜி.எம்.ஓ கடுகு போன்ற மரபணுமாற்றப்பட்ட விதைகளாலும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டனர் இந்திய விவசாயிகள்.

குறிப்பாக பி.டி பருத்தி பயிரிட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதி மக்கள் மிகப்பெரிய விளைச்சல் சரிவைச் சந்தித்தனர். இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். பி.டி மக்காச்சோளம் பயிரிட்ட மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதி விவசாயிகள், பி.டி கத்திரிக்காய் பயிரிட்ட ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

மேலும், இந்தப் பயிர்களால் சுவாசக்கோளாறு, தோல்நோய்கள் ஏற்படுவதாகவும் இதன் இலைகளைச் சாப்பிட்ட ஆடுகள் இறந்து போனதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறினர். இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறிப்பிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு லாபத்தை அள்ளித்தருவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது எனச் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

நாற்று விட வயலை தயார் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ள விவசாயி.
நாற்று விட வயலை தயார் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ள விவசாயி.

உதாரணமாக, 2002-லிருந்து 2010 வரை பி.டி பருத்தி விதைக்காக `மான்சான்டோ' நிறுவனத்துக்கு சுமார் 1,500 கோடியை உரிமத்தொகையாக இந்தியா செலுத்தியிருக்கிறது.

இறுதியில் பசுமை புரட்சியின் விளைவு, தற்சார்போடு இருந்த இந்திய விவசாயிகளைக் கடன்காரனாக்கியது. மாறாக பன்னாட்டு நிறுவங்களுக்கு லாபத்தை அள்ளித்தந்தது. 1991-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் கொள்கையின் காரணமாக விவசாயம் மேலும் நலிவடைந்தது.

கோடிக்கணக்கான விவசாயிகள் தாங்கள் பாரம்பர்யமாக செய்து வந்த விவசாயத்தை விட்டு வெளியேறினர். விவசாயம் செய்வதற்காக வங்கியிடமிருந்து வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்தனர். இந்திய அரசின் தேசியக் குற்றப்பத்திரிகை ஆணையத்தின் (NCRB National Crime Records Bureau) அறிக்கையானது, 1995-ம் ஆண்டிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டுவரை இந்தியா முழுவதும் சுமார் 3,33,428 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக பட்டியலிட்டிருக்கிறது.

ஆனால், இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது. இதில் சொந்தமாக நிலம் வைத்திருந்தவர்களை மட்டுமே சேர்த்திருப்பதாகவும், குத்தகை விவசாயிகள், விவசாயக்கூலிகள், பெண் விவசாயிகள் போன்றவர்கள் விடுபட்டிருப்பதாகவும், மேலும் தற்கொலை செய்துகொண்ட பல விவசாயிகளை குடும்பத் தகராறு மற்றும் வேறு காரணங்களால் இறந்தவர்கள் என தவிர்த்த்திருப்பதாகவும் விவசாயப் பிரதிநிதிகள், சமூக மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்தியாவின் மக்கள்தொகை 1991-ம் ஆண்டில் 83 கோடியாக இருந்தது. 2011-ல் இதன் எண்ணிக்கை 121 கோடியாகப் பெருகியது. அதே 1991-ல் இந்தியாவின் விவசாய நிலப்பரப்பு 18 லட்சம் ச.கி.மீ. 2011-ம் ஆண்டு 17 லட்சம் ச.கி.மீட்டராகக் குறைந்தது. ஒரு பக்கம் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விஞ்சி அசுர வேகத்தில் பெருகிக்கொண்டிருக்க, மறுபக்கம் உணவை உற்பத்தி செய்யும் விவசாய பரப்பளவும், விவசாயிகளின் எண்ணிக்கையும் சுருங்கி வருகிறது.

இதன் உண்மையான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டால் 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் இறந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த அறிக்கையில் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவரை பசுமைப்புரட்சி, மரபணு மாற்றப்பட்ட விதைகள், செயற்கை உரங்கள், வங்கிக்கடன்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேலும் பலதரப்பட்ட காரணங்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் `வளர்ச்சித் திட்டங்கள்' எனும் பெயரில் கொண்டுவரும் நிலம் கையகப்படுத்தும் சட்டம், மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பாரத்மாலா பசுமை சாலைத் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் அனைத்துமே விவசாயிகளை விவசாய நிலங்களிலிருந்து ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்துபவையாக இருக்கின்றன எனக் குற்றம் சுமத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

வளர்ச்சி எனும் பெயரில் எதைக் கொண்டு வந்தாலும் அதில் முதல் ஆளாகப் பாதிக்கப்படுவது விவசாயிகளே. ``இந்தியாவின் வளர்ச்சி என்பது விவசாயக் கிராமங்களின் வளர்ச்சியில்தான் இருக்கிறது” என்கிறார் அண்ணல் காந்தியடிகள். ஆனால், தற்போதைய இந்திய சூழல் ``வளர்ச்சிக்குத் தடையாக விவசாயம்தான் இருக்கிறது” போன்ற தோற்றம் உருவாகிவிட்டது; அப்படி உருவாக்கிவிட்டார்கள்.

கருகிய வெங்காயத்தைக் காட்டும் விவசாயி பிச்சை
கருகிய வெங்காயத்தைக் காட்டும் விவசாயி பிச்சை

குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் (Global Hunger Index) அமைப்பு 2018-ல் வெளியிட்ட உலக பட்டினிக்குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் இருக்கிறது. மொத்தம் 119 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் 103-வது இடம் என்பது மிக அபாயகரமான நிலை எனவும் குறிப்பிடுகிறது. இந்தநிலை நீடித்தால் எதிர்காலத்தில் இந்தியா வரலாறுகாணாத அளவுக்கு உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும். இந்திய விவசாயத்தின் வீழ்ச்சிக்கு வறட்சி, வெள்ளம், புயல், பருவநிலை மாற்றம் என இயற்கையை மட்டுமே காரணம் எனக் காட்டுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய இயற்கைப் பேரிடர்களை சந்தித்தும், அதைத் தாண்டி இன்றுவரை விவசாயத்தை கைவிடாது அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்திக்கொண்டுதான் வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

மழையடித்து ஓய்ந்தாலும், புயலடித்து சாய்ந்தாலும், வெயிலடித்து கருகியே போனாலும் `வெள்ளாமை நிலம்' உள்ளவரை அவன் விவசாயிதான். எத்தனை முறை, என்னவானாலும் அவன் மீண்டுவிடுவான். மீண்டும் வருவான். ஆனால், வளர்ச்சித் திட்டங்கள் எனக் கூறி விவசாயத்தின் வேரான நிலத்தையே பறித்தால் அவன் என்ன செய்வான்? வேறு வழியின்றி தற்கொலை செய்வான். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வளர்ச்சித்திட்டங்களை விவசாயத்துக்கு பாதிப்பின்றி மாற்று வழியில் மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்திய மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு