Election bannerElection banner
Published:Updated:

`ஓட்ஸ் சாப்பிடலாமா?!' கூட்டத்தினர் கேட்ட கேள்வியும் நம்மாழ்வார் அளித்த சுவையான பதிலும்

Nammazhvar
Nammazhvar ( Photo: Vikatan / Manikandan.N.G )

நாளை இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் நினைவுதினம். இந்த நாளில் அவரை நினைவுகூரும் விதமாக ஒரு சுவையான சம்பவம் இங்கே...

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நம்மாழ்வாரிடம் `ஓட்ஸ் சாப்பிடலாமா' என்ற கேள்வி கேட்கப்பட்டது. எப்போதும் கேள்விகளுக்குச் சுவையாகவும் வேடிக்கையாகவும், அதேநேரம் அறிவியல்பூர்வமாகவும் விடையளிப்பது அவர் வழக்கம்.

நிகழ்வில் கேள்வியைக் கேட்டதும் ``ஆஆஆ..." எனச் சிரித்தவர் தொடர்ந்து பேசினார்.

கூட்டத்தில் பேசும் நம்மாழ்வார்
கூட்டத்தில் பேசும் நம்மாழ்வார்

``இந்தியா, நீரிழிவுனு சொல்லப்படுற சர்க்கரை நோய்க்கு கேப்பிடல் ஆகும்னு டாக்டர்கள் சொல்றாங்க. எதெதுக்கு கேப்பிடல் ஆகுறதுனு வெவஸ்தை இல்லாம போச்சு.

நம்ம இயற்கை மருத்துவர்கள்கிட்ட கேட்டா சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல. ஒரு கண்டிஷன்னு சொல்றாங்க. டென்ஷனா இருந்தா அது அதிகரிக்கும். இளைப்பாருனா தானாகவே குறைஞ்சிடும்னு சொல்றாங்க. இன்னொன்னு கல்லீரலும் சிறுநீரகமும் வேலை செஞ்சா போதும்ங்கிறாங்க. இந்தக் கல்லீரலையும் சிறுநீரகத்தையும் சிறப்பா வேல செய்ய வைக்குறதுல வரகு, குதிரைவாலி, சாமை தானியங்கள் முன்னணியில இருக்குது.

கேழ்வரகு
கேழ்வரகு

இந்தத் தானியங்கள முளைக்கட்டி சாப்பிடலாம். சாமையில தோசை செஞ்சு சாப்பிடலாம். வரகுல சோறு செய்யலாம், சோளத்துல ரொட்டி, அடை செய்யலாம். கேழ்வரகு, கம்புல கூழ் செய்யலாம். தினையில பாயசம் செய்யலாம். இப்படி நிறைய உணவுப் பொருள்கள இந்தத் தானியங்கள கொண்டு உருவாக்கலாம். நிறைய இயற்கை உணவகத்துல இத இப்ப செய்றாங்க. நாங்க கொடுக்கிற பயிற்சிகள்லயும் கொடுக்கிறோம்.

இங்கிலீஷ் டாக்டர்கள் ஓட்ஸ் சாப்பிட சொன்னாங்கங்கிறதுக்காக நாம சாப்பிடக் கூடாது. இந்த வெளிநாட்டுப் பொருள்களுக்குக் காவடி தூக்குறதை விட்டுட்டு நம்ம மண்ணுல விளைஞ்ச தானியங்கள சமைச்சு சாப்பிடுங்க. நம்ம பெண்கள் பிரமாதமா சமைப்பாங்க. உடல்ல இருக்கிற அத்தனை உறுப்புகளுக்கும் இது நல்லது செய்யும்.

சாமை
சாமை

இன்னொண்ணு சிறுதானியங்கள் சாகுபடி செய்றதுக்கும் ரொம்ப எளிதானது. மூணு மழை பெய்ஞ்சா போதும் வளர்ந்து வந்துவிடும்.

முதல் மழைக்கு உழவு ஓட்டிவிடணும்...

ரெண்டாவது மழைக்கு விதைச்சு, முள் கலப்பையில பலுக்கு ஓட்டிவிட்டா விதைகள் மூடிக்கும். பிறகு அதுவே முளைச்சு வந்துடும்.

பயிர்ல பூவெடுக்கும்போது ஒரு மழை பெய்ஞ்சா போதும் வெளைஞ்சு வந்துடும்.

சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணியெல்லாம் 75 நாள்கள்ல விளைஞ்சு வந்துடும். கம்பு, கேழ்வரகு 90 நாள்கள்ல விளைஞ்சு வந்துடும். சோளம் 100 நாள்கள்லயும், வரகு 120 நாள்களுக்கு மேலயும் வளர்ந்து வந்திடும். உலகத்துல வேற எங்கும் இதுபோன்ற அற்புதமான தானியங்கள பார்க்க முடியாது.

இங்கிலீஷ்காரன் இந்தத் தானியங்கள `மைனர் மில்லட்ஸ்'னு சொன்னான். நாம அப்படியே அதை `சிறுதானியங்கள்'னு மொழிபெயர்த்துட்டோம். அத சிறுதானியங்கள்னு சொல்றதவிட `சத்துமிகு தானியங்கள்'னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

குவைத்துல ஒரு நிகழ்ச்சிகாக போயி ஒன்றரை மணி நேரம் நின்னுட்டே பேசிட்டேன். நிகழ்ச்சி முடிஞ்சவுடனே கம்மங்கூழ்தான் கொடுத்தாங்க. தெம்பா இருந்துச்சு. அப்போதான் உணர்ந்தேன் இந்தச் சிறுதானியங்களோட அருமையை" என்று முடித்தார்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார்
`பணத்தை வைத்து நிலத்தை வரையறைக்கும் தலைமுறையில் வாழ்கிறோம்!' - நம்மாழ்வார் விழாவில் பொன்வண்ணன்

இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த சிவகாசி மாறனிடம் பேசியபோது, ``2011-ம் ஆண்டு இயற்கை வாழ்வியல் கூட்டத்த சிவகாசியில நடத்தினோம். அனேகமா சிவகாசில நம்மாழ்வாரை வைத்து நடத்தின முதல் கூட்டம் இது. அந்தக் கூட்டத்துல சீக்கிரத்துல பேசிட்டாரு. வேறு ஏதாவது சுவாரஸ்யமாகக் கேட்க வேண்டும் என்பதற்காக அந்தக் கேள்வியை நம்மாழ்வார் ஐயாவிடம் கேட்டோம். அவரும் மிகவும் அற்புதமாகப் பதிலளித்துவிட்டார். அப்புறம் இது சம்பந்தமான காணொளியை ஸ்டூடியோக்காரர் கிரிதரன்தான் பரப்பினார்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு