Published:Updated:

இனி அதானி குழுமம்தான் தானியங்களை வாங்குமா... தானிய சேமிப்புக் களஞ்சிய சர்ச்சையும் உண்மையும்!

Representational Image
Representational Image

இனி உணவுப் பொருள்களை வாங்க நுகர்வோரும் அதானி குழுமத்திடம்தான் கையேந்த வேண்டும். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திலும் இந்தத் தகவல் பரவி பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளிடம் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சேமிக்கும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருகிறது. பி.ஜே.பி கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா என்னும் கிராமங்களில் இந்த நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்கள் (Silos) அமைக்கப்பட்டு வருகின்றன. இது பல லட்சம் டன் தானியங்களைச் சேமிக்கும் திறன் கொண்டது. இதேபோன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா என்னுமிடத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடங்களிலிருந்து வட இந்தியா முழுமைக்கும் தானியங்களை விநியோகிக்க உள்ளது இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India).

அதானி குழுமத்தின் விளக்கம்
அதானி குழுமத்தின் விளக்கம்

ஆனால், இனி உணவுப் பொருள்களை வாங்க நுகர்வோரும் அதானி குழுமத்திடம்தான் கையேந்த வேண்டும். இது நீண்ட நாளைக்கு சேமித்து வைத்து அதிக விலை கிடைக்கும் சமயங்களில் விற்கும் நிலைக்கு வழிவகுக்கும் என்கிற தகவல் வாட்ஸ்அப், சமூக ஊடகங்களின் வழியாக வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திலும் இந்தத் தகவல் பரவி பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து அதானி குழுமம் சுட்டுரையில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

``நாங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதோ, விளைபொருள்களுக்கான விலையை எவ்வளவு நிர்ணயிக்க வேண்டும் என்பதோ எங்களிடம் இல்லை. விளைபொருள்களைச் சேமிப்பதற்கான நவீன தானிய களஞ்சியங்களை மட்டுமே அமைத்திருக்கிறோம். இந்திய உணவுக் கழகத்துக்கு விளைபொருள்களைச் சேமிப்பதும் அதைக் கொண்டுபோய் சேர்ப்பதும் மட்டும்தான் எங்கள் வேலை" என்று தெரிவித்திருக்கிறது.

விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை வாங்கும் இந்திய உணவுக் கழகம், அதைப் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறுவப்படும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களில் சேமிக்கிறது. தனியார் பங்களிப்புடன் இதற்கான சேமிப்புக் களஞ்சியங்களை மட்டும் கட்டுவதற்கான செலவை ஏற்றுக்கொள்கிறது. அதில் சேமிக்கும் தானியங்களின் உரிமை, விற்பனை, விநியோகம் அனைத்தும் இந்திய உணவுக் கழகத்தைச் சேர்ந்தது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள இந்திய உணவுக் கழகம் "விளைபொருள் தானியங்களை கொள்முதல் செய்வது, அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்வது அனைத்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வரும். பூச்சிகள் மற்றும் இதர தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவே இந்த நவீன தானிய சேமிப்புக் களஞ்சியம்" என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் அதானி மற்றும் அம்பானி குழுமங்கள்தான் இனி விளைபொருள்களை வாங்கவோ விற்கவோ செய்யும் என்று தகவல் பரவிவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு