Published:Updated:

உலகின் விலையுயர்ந்த காய்... வைரல் செய்தியில் என்ன உண்மை?

hop-shoots
hop-shoots ( Image by Анна Иларионова from Pixabay )

உண்மையிலேயே ஹாப் ஷுட் தாவரம் மகத்துவமிக்கதா... அதன் காய்கள் ஒரு கிலோ 85,000 ரூபாய் வரை விலை போகின்றனவா?

`உலகின் விலையுயர்ந்த காய்; ஒரு கிலோ ₹85,000..!' - அப்படி என்ன இதில் சிறப்பு?' என்கிற தலைப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன் விகடன் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியாவின் பல்வேறு ஊடகங்ளிலும் இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் விளைகிற ஹாப் ஷுட்ஸ் (hop-shoots) எனப்படும் தாவரத்தை, பீகாரைச் சேர்ந்த அம்ரேஷ் சிங் என்பவர் தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருக்கிறார் என்பது தொடர்பான செய்திதான் அது.

`உலகின் விலையுயர்ந்த காய்; ஒரு கிலோ ₹85,000..!' - அப்படி என்ன இதில் சிறப்பு?

இந்நிலையில், ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நேரடியாக அம்ரேஷின் தோட்டத்துக்குச் சென்றது. அப்போதுதான், சோதனை அடிப்படையில் மட்டுமே அம்ரேஷ் இதைப் பயிரிட்டிருக்கிறார். ஆனால், பயிர் நன்றாக செழித்து வளரும் முன்பாகவே ஹாப் ஷுட் விவசாயம் நன்றாக இருக்கிறது என்று உள்ளூர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார். இதுவே பல்வேறு தளங்களிலும் வைரலாகியிருக்கிறது. விஐபிக்கள் பலரும் ட்விட்டர் பக்கங்களிலும் பகிர்ந்தனர். ஆனால், அந்தத் தாவரம் வர்த்தகரீதியில் பயன்படும் அளவுக்குச் செழித்து வளரவில்லை. அதுமட்டுமல்ல, இப்போதைக்கு அந்தத் தாவரமே அந்தப் பகுதியில் எங்குமே பயிரிடப்படவில்லை என்று அந்த ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதை உள்ளூர் வேளாண்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், பொய்யான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வந்தால், அம்ரேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. அமரேஷ் சிங் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சரி, உண்மையிலேயே ஹாப் ஷுட் தாவரம் மகத்துவமிக்கதா... அதன் காய்கள் ஒரு கிலோ 85,000 ரூபாய் வரை விலை போகின்றனவா?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் `மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள்’ துறை பேராசிரியர் ராஜாமணியிடம் கேட்டபோது, ``ஹாப் ஷுட் என்கிற தாவரம் ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பது உண்மைதான். அதனுடைய கசப்பு சுவைக்காகவும் மணத்துக்காகவும் பீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதும் உண்மை. அந்தத் தாவரம் குளிர் பிரதேசங்களில் விளையக்கூடியது. நம் நாட்டில் இருக்கிற குளிர் பிரதேசங்களில் வளர்வதற்கும் வாய்ப்பிருக்கலாம். ஹாப் ஷுட் நம்முடைய மண்ணில் எந்தளவுக்கு வளரும் என்பது குறித்து அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) கடந்த ஓராண்டாக ஆராய்ச்சி செய்து வருகிறது. மூன்று வருடங்கள் கழித்துத்தான் நம் நாட்டில் ஹாப் ஷுட் வளர்ப்பது பற்றி விவசாயிகளுக்குச் சொல்ல முடியும்" என்று சொன்னார்.

வைரல் ட்வீட்
வைரல் ட்வீட்

தைவான் நாட்டில் உள்ள சர்வதேச காய்கறி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி முனைவர் சீனிவாசன் ராமசாமியிடமும் இதுகுறித்துப் பேசினோம். அவர் நம்மிடம், ``ஹாப் ஷுட் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. எங்கள் மையத்திலும் ஆராய்ச்சி நடக்கிறது. இந்தக் காய், கஞ்சாவைப் போலப் போதை தரக்கூடியது. இதனால், சில நாடுகளில் வெளியில் தெரியாமல் ரகசியமாகச் சாகுபடி செய்கிறார்கள்.

இதற்கான சந்தை முழுமையாக இன்னும் உருவாகவில்லை. அதனால்தான், விலையையும் கிலோ ரூ.85,000, ரூ.1 லட்சம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டுள்ளார்கள். எனவே, இந்தப் பயிர் பற்றி ஆராய்ச்சி முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகே, சாகுபடி செய்யலாமா, வேண்டாமா என்று விவசாயிகள் முடிவு செய்யவேண்டும். விலையைப் பற்றியும் அப்போதுதான் இறுதியான முடிவுக்கு வரமுடியும்’’ என்று தெளிவுப்படுத்தினார்.

ஹாப் ஷுட்
ஹாப் ஷுட்
Twitter Image

இது இப்படியிருக்க, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இதன் விலை இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாய்க்கும் மேல் என்பதாகவே செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன இணையமெங்கும். ஆக, அந்தக் காய் இந்திய சாகுபடிக்கு ஏற்றதா... விலையும் அந்த அளவுக்கு இருக்குமா என்பது இப்போதைக்கு உறுதியாகவில்லை. இதைப்பற்றியெல்லாம் முழுமையாக விசாரித்து வாசகர்களுக்குக் கொடுக்காமல், ஆரம்பக்கட்டத்தில் பரவிய தகவல்களை மட்டுமே முந்தைய கட்டுரையில் கொடுத்திருந்தோம். அதற்காக வருந்துகிறோம். எதிர்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவோம் என்றும் உறுதி கூறுகிறோம்.

அடுத்த கட்டுரைக்கு