Published:Updated:

Fact Check: மியாசாகி மாம்பழங்கள் உண்மையிலேயே ₹2.7 லட்சத்திற்கு விலைபோகின்றனவா?

மியாசாகி
மியாசாகி

ஒரு மியாசாகி மாம்பழம் குறைந்தது 350 கிராம் முதல் அரைகிலோ வரைகூட எடை இருக்கும். மற்ற மாம்பழங்களைவிட இதில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதுதான் அதிக ருசிக்கான காரணம்.

ஒரு கிலோ மியாசாகி (Miyazaki) மாம்பழம் 2.70 லட்சம். தங்கள் தோட்டத்தில் விளைந்திருக்கிற மியாசாகி மாங்காய்களை பாதுகாக்க 4 நாய்களுடன் 6 பாதுகாவலர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் மத்தியப்பிரதேச தம்பதியினர். - இந்தச் செய்திகள்தான் கடந்த சில நாள்களாக சமூக வலைதளமெங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. செய்தியின் உண்மைத் தன்மையையும், இந்த மாம்பழம் குறித்தும் அறிந்துகொள்ள சர்வதேச காய்கறி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த காய்கறி மதிப்புச் சங்கிலிகள் ஆய்வுத்திட்ட தலைவர் சீனிவாசன் ராமசாமி அவர்களிடம் பேசினோம். மியாசாகி மாம்பழத்தின் பிறப்பிடம், வளர்ப்பிடம், அதன் சிறப்புகள் என அனைத்தையும் விவரித்தார்.

Mango (Representational Image)
Mango (Representational Image)

``ஜப்பானின் மியாசாகியில் இந்த மாம்பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுவதால், அந்தப் பகுதியின் பெயராலேயே `மியாசாகி மாம்பழம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்த மாம்பழத்தின் தாயகம் ஜப்பான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதன் தாயகம் அமெரிக்கா. இதற்கொரு சின்ன பிளாஷ்பேக் சொல்கிறேன்.

கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன்னால், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் மியாமி என்கிற இடத்தில் `இர்வின்’ என்பவருக்குச் சொந்தமான பெரிய பண்ணையொன்று இருந்தது. அதில் பல வகையான மாமரங்கள் இருந்தன. அதில் லிப்பன்ஸ் (lippens) என்னும் மாம்பழ வகையும் ஒன்று. பழுக்கும்போதுகூட, இதன் தோல் பச்சை நிறத்தில்தான் இருக்கும். பழம் மிகவும் சுவையாக இருக்கும். இன்னொரு ரகம் ஹேடன் (haden). தோலின் பெரும்பாலான பகுதி சிவப்பும் நுனிப்பகுதியில் மட்டும் கொஞ்சம்போல மஞ்சளும் என்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த மாம்பழம். இதுவும் சுவையாகவே இருக்கும்.

சர்வதேச காய்கறி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த காய்கறி மதிப்புச் சங்கிலிகள் ஆய்வுத்திட்ட தலைவர் சீனிவாசன் ராமசாமி
சர்வதேச காய்கறி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த காய்கறி மதிப்புச் சங்கிலிகள் ஆய்வுத்திட்ட தலைவர் சீனிவாசன் ராமசாமி

இந்த இரண்டு மாமரங்களுக்கிடையில் அயல் மகரந்தச் சேர்க்கை நடந்து உருவானது ஒரு மாம்பழம். இந்தப்பழம் `இர்வின்’ அவர்களின் பண்ணையில் முதன்முதலாக உருவானது என்பதால், இதற்கு `இர்வின்’ என்றே பெயரிடப்பட்டது. இந்தப் பழத்தின் விதையிலிருந்து மாமரம் முளைத்தது. இதிலிருந்து 1945-ல் முதல்முறையாக மாம்பழம் வந்தது. பழம் பெரிதாக, ரத்த சிவப்பில், வாசனையும் ஈர்க்கும்படி இருந்திருக்கிறது. சுவையும் மற்ற மாம்பழங்களைவிடக் கூடுதலாக இருந்ததால், இந்த மாம்பழத்தின் சிறப்பைத் தெரிந்துகொள்ள நான்கைந்து வருடங்கள் அமெரிக்காவில் ஆய்வுகூட செய்தனர். அதே நேரம், இர்வின் மாம்பழத்துக்கு சந்தை வாய்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.

இனி ஜப்பானுக்கு வருவோம். ஜப்பானில் இருக்கிற ஐந்து பெரிய தீவுகளில் மூன்றாவது பெரிய தீவு கியூஷூ (Kyushu). இந்தத் தீவு ஜப்பானின் தென்கோடி பகுதியில் இருக்கிறது. இங்கு ஜப்பானின் மற்ற பகுதிகளைவிடக் கொஞ்சம் வித்தியாசமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. சூரிய ஒளி இருக்கிற நீண்ட நேரம் இருப்பதால், வெயில் அதிகம் கிடைப்பதோடு இருட்டுவதற்கும் நேரம் எடுக்கும். நல்ல மழை பெறும் பகுதியும்கூட. இந்தத் தீவில்தான், மியாசாகியும் இருக்கிறது. 1980-ன் ஆரம்பம் வரைக்கும் மியாசாகியில் ஆரஞ்சுப் பழங்கள்தான் அதிகம் விளைவிக்கப்பட்டது. இந்தத் தீவின் தட்பவெப்ப நிலை காரணமாக இங்கு விளைந்த ஆரஞ்சுப்பழங்கள் கூடுதல் சுவையுடன் இருந்தன. அதனால், மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஒரு காலகட்டத்துக்குப் பிறகு, ஜப்பானின் பல பகுதிகளிலும் ஆரஞ்சு விளைவிக்கப்பட, மியாசாகியில் விளைவிக்கப்பட்ட ஆரஞ்சுப் பழங்களின் விலை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. `சரி வேறு பழம் பயிரிடலாம்’ என முடிவெடுத்து 1980-ன் மத்தியிலிருந்து மாம்பழம் பயிரிட ஆரம்பித்தார்கள் மியாசாகிவாசிகள்.

ஒருகாலகட்டத்துக்குப் பிறகு அந்தப் பகுதியின் பெயராலேயே `மியாசாகி மாம்பழம்’ என அனைவரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில், அமெரிக்காவிலிருந்து இர்வின் மாம்பழம் ஜப்பானுக்கு எப்படி வந்தது என்பதும், குறிப்பாக மியாசாகிக்கு எப்படி வந்ததும் என்பதும் தெரியவில்லை. ஆனால், ஜப்பானின் பல பகுதிகளிலும் இர்வின் மாமரத்தைப் பயிரிட ஆரம்பித்தார்கள். அறுவடை செய்யும்வரை இர்வினையும் வழக்கமான மாம்பழம் என்றே நினைத்தார்கள் ஜப்பானியர்கள். ஆனால், அறுவடை செய்து சாப்பிட்டுப் பார்த்தபோதுதான் மற்ற மாம்பழங்களைவிட இதன் சுவை கூடுதலாக இருப்பது அவர்களுக்குத் தெரிந்தது. இர்வினின் அழகையும் சுவையையும் ருசித்த ஜப்பானியர்கள் அதற்கு ’Taiyo no Tamago’ என்று பெயர் வைத்தனர். இதற்கு ஜப்பானிய மொழியில் `சூரியனின் முட்டை' என்று அர்த்தம்.

ஜப்பானின் பல பகுதிகளில் இர்வின் விளைவிக்கப்பட்டாலும், மியாசாகியில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்களுக்கு சந்தையில் மிகுந்த வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு முக்கியமான காரணமாக அந்தப் பகுதியின் தட்பவெப்பத்தையே குறிப்பிடுகிறார்கள். கூடவே, இர்வின் பழுத்து அதுவாகவே கீழே விழுவதுதான் ருசிக்குக் காரணம் என்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். செழிப்பான காய்களை மட்டும் வளர வைப்பது, பழுத்து அதுவாகவே கீழே விழுவதற்கு ஏற்றபடி காய்களில் கவர் கட்டி வைப்பது என இர்வினை பார்த்துப் பார்த்துப் பராமரித்தார்கள் மியாசாகி பண்ணையாளர்கள். விளைவு, ஒருகாலகட்டத்துக்குப் பிறகு, அந்தப் பகுதியின் பெயராலேயே `மியாசாகி மாம்பழம்’ என அனைவரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.

Fact Check: மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்ற TC தேவையில்லையா?

ஒரு மியாசாகி மாம்பழம் குறைந்தது 350 கிராம் முதல் அரைகிலோ வரைகூட எடை இருக்கும். மற்ற மாம்பழங்களைவிட இதில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதுதான் அதிக ருசிக்கான காரணம். மருத்துவ குணம் என்று பார்த்தால் மியாசாகியில் இருக்கிற பீட்டா கரோட்டின் நம் ஊரின் பப்பாளி, கேரட், மாம்பழங்களிலும் இருக்கிறது.

ஜப்பானில், 2014-ம் வருடம் ஒரு ஜோடி மியாசாகி மாம்பழம் 300,000 யென்களுக்கு ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய். 2018 ஏப்ரலில் இரண்டு மாம்பழங்கள் இந்திய மதிப்பில் இரண்டரை லட்ச ரூபாய்க்கு ஏலம் போயிருக்கின்றன. மற்றபடி, மியாசாகி எப்போதும் லட்சக்கணக்கில் விலை போகும் என்பதில் உண்மை கிடையாது.

மியாசாகி
மியாசாகி

மியாசாகியை அழகாக கவர் செய்து கலைநயமிக்க பழக்கூடைகளில் வைத்து மனதுக்குப் பிடித்தவர்களுக்கும் சமூகத்தின் முக்கியமான நபர்களுக்கும் பரிசுப் பொருளாகத் தருவதால், மற்ற மாம்பழங்களைவிட மியாசாகியின் விலை பலமடங்கு கூடுதல்தான். ஆனால், சமீப காலமாக சமூக வலைதளங்களில் சொல்லப்படுவதுபோல ஒரு கிலோ மியாசாகி மாம்பழம் இரண்டே முக்கால் லட்சமெல்லாம் விலை போகாது. அது மிகைப்படுத்தப்பட்ட செய்தி’’ என்று பேசி முடித்தார்.

மியாசாகி மரம் வளர்ப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகிற மத்தியப்பிரதேச தம்பதியரின் தோட்டத்துக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்ட ஜபல்பூர் விவசாயக் கல்லூரியின் தோட்டக் கலைத்துறைத் தலைவர் டாக்டர் எஸ்.கே. பாண்டே அவர்களிடமும் பேசினோம்.

மத்தியப் பிரதேசம் தம்பதிகளின் தோட்டம்
மத்தியப் பிரதேசம் தம்பதிகளின் தோட்டம்

``தங்கள் தோட்டத்தில் மியாசாகி மாமரம் வளர்ப்பதாகச் சொன்ன அந்தத் தம்பதியினரை நாங்கள் நேரில் சென்று சந்தித்தோம். `மியாசாகி மாமரம்’ என்று அவர்கள் குறிப்பிடுகிற அந்த மாமரத்தின் விதை எப்படிக் கிடைத்தது என்பதை அவர்களால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அவர்களுடைய தோட்டத்தில் பலவகை மாமரங்கள் இருக்கின்றன. அதில் அவர்கள் குறிப்பிடுகிற மரம் மியாசாகியா என்பது கேள்விக்குறியே. அந்த மரத்தின் மரபணுவை பரிசோதனை செய்துபார்த்தால்தான் அது மியாசாகியா, இல்லையா என்பது தெரியும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அவர்களுடைய தோட்டத்துக்குச் சென்றபோது, செய்திகளில் வந்ததுபோல காவலுக்கு நாய்களோ காவல்காரர்களோ இல்லை’’ என்று சிரித்தவர், ``ஜப்பானில் நடக்கிற மாம்பழத் திருவிழாக்களின்போதுதான் மியாசாகி மாம்பழம் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படும். அந்தச் செய்திதான், அதன் விலையாகத் தவறுதலாக சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு