Published:Updated:

`ஒரு கிலோ 2.7 லட்சம் ரூபாய்?!' - உலகின் விலையுயர்ந்த மாம்பழமா மியாசாகி; உண்மை என்ன?

Mango (Representational Image)
Mango (Representational Image)

`மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர், தங்களுடைய தோட்டத்தில் காய்த்திருக்கும் 7 மியாசாகி மாம்பழங்களைப் பாதுகாக்க 4 பாதுகாவலர்கள்; 6 நாய்கள் வேலைக்கு வைத்திருக்கிறார்கள்’ என்கிற செய்தி கடந்த சில தினங்களாக வைரலாகிக்கொண்டிருக்கிறது.

ஊரெங்கும் மாம்பழ சீசன் மணந்துகொண்டிருக்கிறது. பழங்களின் வகைக்குத் தகுந்தாற்போல, `ஒரு கிலோ 100 ரூபாய், ரெண்டு கிலோ 100 ரூபாய்’ என்று கூவிக்கூவி விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் `மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர், தங்களுடைய தோட்டத்தில் காய்த்திருக்கும் 7 மியாசாகி மாம்பழங்களைப் பாதுகாக்க 4 பாதுகாவலர்கள்; 6 நாய்கள் வேலைக்கு வைத்திருக்கிறார்கள்’ என்கிற செய்தி கடந்த சில தினங்களாகத் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

மியாசாகி மாம்பழம்
மியாசாகி மாம்பழம்
உலகின் விலையுயர்ந்த காய்... வைரல் செய்தியில் என்ன உண்மை?

காயாக இருக்கையில் முக்கால்வாசி பர்பிள் நிறத்திலும் நுனிப்பகுதியில் கொஞ்சம் பச்சை நிறமும் சேர்ந்து பார்ப்பதற்குக் கொள்ளை அழகாக இருக்கிற மியாசாகி, பழுக்கும்போது சிவப்பு நிறத்துக்கு மாறிவிடுகிறது. அதனால், இந்த மாம்பழத்துக்கு `சூரியனின் முட்டை’ என்கிற பட்டப்பெயரும் இருக்கிறது.

மியாசாகி மாம்பழத்தின் தாயகம் ஜப்பான். அங்கிருக்கும் மியாசாகி நகரத்தில் மாமரங்கள் விளைவதற்கான வெயில், மழை, மண்வளம் அனைத்தும் இருப்பதால், அங்குதான் இந்த பர்பிள் நிற மாங்காய் காய்க்கிற மாமரங்கள் அதிகம் விளைகின்றன. விளைவு, அந்த நகரத்தின் பெயராலேயே இந்த மாம்பழங்களை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 1970-களின் இறுதியிலோ, 80-களின் இறுதியிலோதான் இந்த வகை மாமரங்கள், மியாசாகியில் விளைய ஆரம்பித்தன என்கின்றன ஜப்பானின் உள்ளூர் பத்திரிகைகள். ஒரு பழம் 350 கிராம் வரை இருக்கும். இதில் 15 சதவிகிதம் அல்லது அதற்கு மேலும் சர்க்கரைச் சத்து இருக்கும் என்கின்றன அவை. மேலும், உலகின் விலையுயர்ந்த மாம்பழங்களில் இதுவும் ஒன்று எனவும், சென்ற வருடம் இந்த மாம்பழம் கிலோ 2.70 லட்சத்துக்கு சர்வதேச சந்தையில் விற்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியென்ன சிறப்பு இந்த மாம்பழத்தில் என்று தேடினால், வழக்கமான மாம்பழங்களைப் போலவே இதிலிருக்கிற பீட்டா கரோட்டின் கண்களுக்கு மிகவும் நல்லது என்கிறது கூகுள்.

மியாசாகி
மியாசாகி
Photo: newstracklive
Fact Check: `நீல நிறத்தில் வாழைப்பழமா?' - வைரல் புகைப்படம்... உண்மை என்ன?

மத்தியப்பிரதேசம், ஜபல்பூர் மாவட்டத்தில் மியாசாகி மாமரம் வளர்த்து வருகிற ராணி - சங்கல்ப் பரிஹார் தம்பதி, ``ரெயிலில் சந்தித்த ஒரு நபர் இந்த மரத்தின் கன்றைத் தங்களுக்குக் கொடுத்ததாகவும், இது அரிய வகை மாமரம் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் சொல்கிறார்கள். இது விலைக்கூடுதலான மாம்பழம் என்பதைத் தெரிந்துகொண்ட திருடர்கள் சென்ற வருடம் தங்கள் தோட்டத்தில் புகுந்து மியாசாகி மாம்பழங்களைத் திருடிச் சென்றுவிட்டார்கள். அதனால்தான், இந்த வருடம் காவலுக்கு ஆட்களையும் நாய்களையும் வைத்திருக்கிறோம். இந்தப் பழங்களை விற்கப்போவதில்லை. இதன் விதைகளை நட்டு நிறைய மியாசாகி மரங்களை வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்கின்றனர்.

இந்த மாம்பழங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக, பெங்களூருவில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானியும் மாம்பழம் தொடர்பான ஆராய்ச்சிகள் செய்து வருபவருமான முனைவர் சங்கரனிடம் பேசினோம்.

முதன்மை விஞ்ஞானி சங்கரன்
முதன்மை விஞ்ஞானி சங்கரன்

``அமெரிக்காவில் கென்ட், கெய்ட் என்று சற்று மாறுபட்ட நிறங்களைக் கொண்ட மாம்பழ வகைகள் சில இருக்கின்றன. அவை உலக சந்தையில் பிரசித்தப்பெற்றவையும்கூட. அதே நேரம், மியாசாகி மாம்பழத்தின் மருத்துவ குணம் பற்றி இதுவரை எந்த ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. இந்த மாம்பழங்கள் விலை கூடுதலாக விற்கப்படுகின்றனவா என்பது குறித்த உறுதியான தகவல்களும் வரவில்லை.

தவிர, மத்திய பிரதேசத்தில் இருக்கிற ஜவஹர்லால் நேரு கிரிஷி விஷ்வவித்யாலயாவின் (Jawaharlal Nehru Krishi Vishwavidyalaya) தோட்டக்கலைத்துறை தலைவர் மியாசாகி மாமர தோட்டம் வைத்திருக்கும் ராணி- சங்கல்ப் பரிஹார் தம்பதியை சந்திக்க நேரடியாகவே சென்றிருந்தார். அந்தத் தம்பதியரால், இந்த மரக்கன்று எப்படிக் கிடைத்தது, எங்கு கிடைத்தது என்பது தொடர்பாக சரியான தகவல்களைத் தர முடியவில்லை. மியாசாகி மாமரம் பற்றி இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிற வீடியோவில் இருக்கிற தகவல்கள் அனைத்தும் கூகுளில் இருந்து எடுக்கப்பட்டவையே’’ என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு