Published:Updated:

`விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!’ - மோடி சொல்வது உண்மையா?

``வழக்கமாக, விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் நெல், கோதுமைக்கும், அதற்கான விலையை இந்திய உணவுக் கழகம் வழங்கி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு ஏதோ சலுகை செய்தது போல் மத்திய அரசு காட்டிக்கொள்கிறது. ."

`விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!’ - மோடி சொல்வது உண்மையா?

``வழக்கமாக, விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் நெல், கோதுமைக்கும், அதற்கான விலையை இந்திய உணவுக் கழகம் வழங்கி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு ஏதோ சலுகை செய்தது போல் மத்திய அரசு காட்டிக்கொள்கிறது. ."

Published:Updated:

மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்துள்ள நிலையில், `விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, தற்போதைய பட்ஜெட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இது எந்தளவுக்கு உண்மை? இவர் என்ன சொல்ல வருகிறார். இனி, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்துவிடுமா? பிரதமர் மோடியின் பேச்சு குறித்து விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டோம்.

சுந்தர. விமல்நாதன்
சுந்தர. விமல்நாதன்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``நெல், கோதுமைக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல், கோதுமை சாகுபடி பரப்பு அதிகம். அங்கு ஒரு ஏக்கரில் சராசரி மகசூலாக 1.75 டன் கணக்கீடு செய்யப்படுவதால், அங்கு அந்த வரையறைக்கு உட்பட்டுதான் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. அதிகமாக விளைந்தால், அங்குள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய மாட்டார்கள். இனி கூடுதலாகக் கொள்முதல் செய்வதற்காக, தற்போது மத்திய அரசு சுமார் 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதைதான் பிரதமர் நரேந்திர மோடி, அலங்காரப்படுத்தி, `இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பெருமைப்பட்டுக்கொள்கிறார்.

விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்த, ஒரு இம்மி அளவும்கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான். கசப்பான உண்மை. அனைத்து வேளாண் உற்பத்தி பொருள்களுக்கும், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதுதான், இந்தியாவின் அனைத்துப் பகுதி விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாகும்.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திலும் இதுதான் முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது. நெல்,கோதுமைக்கும்கூட குறைந்தபட்ச ஆதார விலை என்பது, வெறும் கொள்கை முடிவாக மட்டுமே உள்ளது. எம்.எஸ்.சுவாமிதாதன் தலைமையிலான குழு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வேளாண் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான கோட்பாட்டை வழங்கியது. உற்பத்தி செலவோடு, 50 சதவிகிதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது. ஆனால், அதை மத்திய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை. சட்டபூர்வமான உத்தரவாதம் இல்லாததால்தான் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை நஷ்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்குவதாக, கடந்த நவம்பர் 9-ம் தேதி அறிவித்த பிரதமர் மோடி, குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு விவசாயிகள் போராட்டக் குழுவினர் ஜனவரி 31-ம் தேதி வரை கெடு நிர்ணயித்திருந்தார்கள். ஆனால், பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் தூரோக நாள் கடைப்பிடித்தோம். இதை திசைத் திருப்புவதற்காகவே, குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி, ஒரு மிகப்பெரிய பொய்யை பிரமாண்டப்படுத்துகிறார்’’ எனத் தெரிவித்தார்.

தேசிய தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம், ``இந்த பட்ஜெட்டில், கொள்முதல் திட்டங்களுக்கு என எந்த ஒரு நிதியும் தனியாக ஒதுக்கப்படவே இல்லை. வழக்கமாக, விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் நெல், கோதுமைக்கும், அதற்கான விலையை இந்திய உணவுக் கழகம் வழங்கி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு ஏதோ சலுகை செய்தது போல் மத்திய அரசு காட்டிக்கொள்கிறது.

ஆறுபாதி கல்யாணம்
ஆறுபாதி கல்யாணம்

குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தாமல் இருப்பதால்தான், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் எல்லாம் போதிய எண்ணிக்கையில் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதே இல்லை. அதற்கு இந்திய உணவுக் கழகம் அனுமதிப்பது இல்லை.

இதனால்தான் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், தனியார் வியாபாரிகளிடம் மிகவும் நஷ்ட விலைக்கு தங்களது நெல்லை விற்பனை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 90 - 100 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் 50 சதவிகிதத்துக்கு கூட குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதில்லை.

அனைத்து விளைபொருள்களுக்கும், தனியாரிடமும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகதான், இதைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவேன் என பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், அதற்கான எந்த முயற்சியுமே மேற்கொள்ளப்படவில்லை’’ என ஆதங்கப்பட்டார்.