Published:Updated:

அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் திருத்தம்... விவசாயத்தை கைகழுவுகிறதா மத்திய அரசு?

விவசாயி
விவசாயி

"'விவசாயிகள், தாங்கள் விரும்பும் வணிகர்களிடமும், வணிக நிறுவனங்களிடமும் தங்கள் விளைப்பொருள்களை பேரம் பேசி லாப விலைக்கு விற்றுக் கொள்ளலாம்' என அரசு கூறுகிறது. இது மாயமான் வேட்டையாகும்."

விவசாயிகளின் தலையில் அடுத்த பேரிடி இறங்கியுள்ளது. மத்திய அரசு, இன்றியமையாப் பொருள்கள் என்ற பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீக்கி, இன்றியமையாப் பொருள்கள் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில், விவசாயிகளின் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது. குறைந்தபட்ச ஆதார விலை இனி நிர்ணயம் செய்யவும் வாய்ப்பில்லை. இதனால் தனியார் நிறுவனங்களின் கோரப்பிடியில் விவசாயிகள் சிக்கித் தவிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமல்ல, 'வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் – 2020' என்ற புதிய சட்டத்தின் மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண் சந்தையில் கால் பதிப்பதற்கான ஆபத்தும் உருவாகியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்து, இந்தியா முழுவதையும் ஒற்றை வேளாண் சந்தையாக மாற்றி அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

மூன்றாவதாக, 'பண்ணைச் சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டம்' என்ற பெயரில் ஒப்பந்தப் பண்ணையச் சட்டமும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சட்டங்களுமே விவசாயிகளின் கழுத்தை நெறிக்கக்கூடிய தொடர் சங்கிலி என்கிறார், வேளாண் பொருளியல் ஆய்வாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான கி.வெங்கட்ராமன். ‘’அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களும், பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துகளும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால்தான், இவற்றை அரசு கொள்முதல் செய்து வந்தது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதால்தான், தனியார் வியாபாரிகள், இந்த விலைக்குக் கீழ், விலையைக் குறைக்க முடியாத பாதுகாப்பு இருந்து வந்தது. ஆனால் இனி அப்படியிருக்காது. தனியார் வியாபாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சொல்லக்கூடிய விலைக்கு விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிடும்.

விவசாயிகள், தாங்கள் விரும்பும் வணிகர்களிடமும் வணிக நிறுவனங்களிடமும் தங்கள் விளைப்பொருள்களை பேரம் பேசி லாப விலைக்கு விற்றுக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது. இது மாயமான் வேட்டையாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், தனியார் வியாபாரிகளிடமும் பேரம் பேசி, தங்களுக்குச் சாதகமான விலையைப் பெற்றுக்கொள்ளும் நிலையிலா நம் விவசாயிகள் இருக்கிறார்கள்? பெரும்பாலான விவசாயிகள், சிறு, குறு ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள். கடன் வாங்கி சாகுபடி செய்பவர்கள். இன்னொருபுறம், விளைவித்த விளைபொருள்களைப் பாதுகாப்பாக சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்றுக்கொள்ளும் அளவுக்கு, சேமிப்புக் கிடங்கு வசதிகள் எந்த உழவர்களிடமும் இல்லை.

கி.வெங்கட்ராமன்
கி.வெங்கட்ராமன்

நிலத்திலிருந்து தங்களுடைய விளைபொருள்களைத் தூய்மைப்படுத்தி, மூட்டை கட்டி சேமித்து வைப்பதற்கு தேவையான ஆள் கூலி கொடுப்பதற்குக் கூட வழியற்ற நிலையில்தான், பெரும்பாலான உழவர்கள் இருக்கிறார்கள். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி என்பது இன்னொருபுறம். இவற்றுக்கிடையே சிக்கியிருக்கும் உழவர்கள், வணிகக் குழுமங்கள் சொல்கிற விலைக்குத் தங்கள் விளைபொருள்களை விற்கும் நிர்பந்தத்தில்தான் இருக்கிறார்கள். இதனால்தான், வேளாண் விளைபொருள்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டுமென்றும், அரசே கொள்முதல் செய்துகொள்ள வேண்டுமென்றும் உழவர்களின் கோரிக்கை எழுந்தது. அதன் விளைவாகத்தான், அரசு கொள்முதலும், ஆதார விலை அறிவிப்பும் நடந்து வருகின்றன.

உண்மையில், கொள்முதல் பொறுப்பிலிருந்தும் வேளாண் விளை பொருள்களுக்கு அடிப்படை ஆதார விலையைத் தீர்மானிக்கும் கடமையிலிருந்தும் மத்திய அரசு விலகிக் கொள்ளப் பார்க்கிறது.

வேளாண்மைச் சந்தையைப் பெரிதும் தனியாருக்கு விட்டுவிட்ட பிறகு, மக்களுக்கான ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, உணவு எண்ணெய் போன்றவை கிடைக்கப் போவதில்லை. ரேஷன் கடைகளும் படிப்படியாக மூடப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது.

நெல்
நெல்

2002-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியிலிருந்தே இதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. மத்திய அரசு அமர்த்திய சாந்தகுமார் குழு, 2015-ல் கொடுத்த அறிக்கை, இந்திய உணவுக் கழகத்தைப் படிப்படியாகக் கலைத்துவிட வலியுறுத்தியது. உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்திய அரசுக்கு இதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றன. அதற்கு ஏற்பதான், மத்திய அரசு இப்போது இந்த முடிவுகளை எடுத்துள்ளது. பெரும் வணிகக் குழுமங்களின் சந்தைச் சூதாட்டத்தில் சிக்கிக் கொள்ளும். உழவர்கள், லாபமான தொழிலாக வேளாண்மையை நடத்த முடியாமல் நிலத்திலிருந்து வெளியேறும் அவலம் நேரும்.

மறுபுறம், ரேஷன் கடைகள் வழியாக இன்றியமையா உணவுப் பொருள்களை நியாய விலையில் பெற்றுக் கொள்ளும் ஏழை எளிய மக்களின் உரிமையும் பறிக்கப்படும். விவசாயிகளை நசுக்குவதில், மத்திய அரசுடன் போட்டி போடும் வகையில், தமிழ்நாடு அரசு 2019 அக்டோபர் இறுதியிலேயே 'ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்' என்ற ஒன்றைப் பிறப்பித்துவிட்டது. அதற்கிசைவான வகையில், இப்போது 02.06.2020 அன்று 'தமிழ்நாடு வேளாண் விளை பொருள்கள் விற்பனை (ஒழுங்குபடுத்தல்) சட்ட'த்திலும் திருத்தம் செய்து அறிவித்திருக்கிறது. உழவர்களையும், ஏழை எளிய நுகர்வோரையும் ஒருசேரத் தாக்கும் இந்த அவசரச் சட்டங்களை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்கிறார்.

"மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் சிரிப்பைத் தருகிறது" - விரக்தியில் சிரிக்கும் விவசாயிகள்!

விவசாயிகளின் எதிர்காலம், மேலும் இருளில் தள்ளப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த அபாயச் சூழல் விரைவில் விலக வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு