Published:Updated:

காண்டாமிருக வண்டுப் பொறி, இயற்கை களைக்கொல்லி!கழனியில் கணினித்துறை இளைஞர்!

இயற்கை

பிரீமியம் ஸ்டோரி

கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய தாக்குதலால் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது. பல துறைகள் வீட்டிலிருந்து பணி செய்யும் கலாசாரத்துக்குள் சென்றுவிட்டன. இது ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு வருத்தமாக இருக்கும். ஆனால், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் சிவராம் அய்யாசாமி, ‘இயற்கை விவசாயத்தில் தீவிரம் காட்ட இந்த முறை கைகொடுத்துள்ளது’ என்கிறார் மகிழ்ச்சியாக.

கோயம்புத்தூர் மாவட்டம், ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள அரிசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராம் அய்யாசாமி. மைசூரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வமுள்ள சிவராம், தற்போது வீட்டிலிருந்து பணி செய்யும் காலத்தை, விவசாயத்துக்காகவும் பயன்படுத்தி வருகிறார்.

சிவராம் அய்யாசாமி
சிவராம் அய்யாசாமி

தென்னை மரங்களைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகளை, இயற்கை முறையில் கவர்ந்து அழிக்கும் கவர்ச்சி பொறிச் செய்வது, இயற்கை களைக்கொல்லி தயார் செய்து களைச் செடிகளை அழிப்பது, மூலிகைப் பூச்சிவிரட்டித் தயார் செய்வது எனப் பல விஷயங்களைச் செய்து அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.

தோட்டப் பணிகளில் மூழ்கியிருந்த சிவராம் அய்யாசாமியை ஒரு காலை நேரத்தில் சந்தித்துப் பேசினோம். “சின்ன வயசிலிருந்தே விவசாய வேலைகளை ஆர்வமா செய்வேன். இப்போ மைசூருல வேலைபார்த்துட்டு இருக்கிறேன். ஊரடங்கு காரணமா வீட்டிலிருந்து வேலைபார்க்குற வாய்ப்பு கிடைச்சது.

அலுவலகம் போய்ட்டு வரும் நேரம் மிச்சமாகுது. அந்த நேரத்திலதான் விவசாயம் செய்றேன். தண்ணீர் பாய்ச்சுறது, மாடுகளைப் பார்த்துக்கிறது, மட்டை எடுப்பது, இணையம் மூலம் புதிய முயற்சிகளைச் செய்து பார்ப்பதுனு கிடைக்கும் நேரத்தைப் பயனுள்ள வகையில செலவு செய்ய முடியுது’’ என்றவர், அவரது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தெளிக்கும் பணி
தெளிக்கும் பணி

காண்டாமிருக வண்டு கவர்ச்சி பொறி

‘‘எங்களுக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கு. இயற்கை முறையில் தென்னை விவசாயம் செய்றோம். அதுல பிரச்னையா இருக்குறது காண்டாமிருக வண்டுகள்தான். தென்னங் குருத்தை அதிகமாகச் சேதப்படுத்திடுது. வண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க மரம் பட்டுப்போயிடுது. இதைத் தடுக்க ரசாயன உரத்தைத்தான் பெரும்பாலும் பயன் படுத்துறாங்க. ஆனால், இயற்கை முறையிலயே கட்டுப்படுத்த முடியும். 2 - 3 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கை 5 லிட்டர் தண்ணியில கரைச்சு, அதுல, ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரை போட்டு ஒரு வாரம் அப்படியே வெச்சிடணும். ஒரு வாரம் கழிச்சு பார்த்தா ஒருவிதமான வாசனை வரும். இதைப் பானை, டின், பக்கெட்னு ஏதாவது ஒண்ணுல ஊத்தி வெச்சிடணும். அந்த வாசனை காண்டாமிருக வண்டுகளை ஈர்க்கும். அதைத் தேடி வர்ற காண்டாமிருக வண்டுகள் உள்ளே விழுந்துடும். அதனால வெளியே வர முடியாது. பிறகு, நெருப்பு மூட்டி வண்டுகளை எடுத்துப் போட்டு எரிச்சிடணும்.

நாங்க முதல்ல ரெண்டு பானைகளை வெச்சோம். 10 நாளுக்குள்ளேயே 6 வண்டுகள் விழுந்துச்சு. பிறகு, கூடுதலா பானைகளை வெச்சிருக்கோம். இதன் மூலம் காண்டாமிருக வண்டுகள் கட்டுப்படுறதை நேரடியாகப் பார்க்கிறோம். 15 நாளுக்கு ஒருதடவை தண்ணியை மாத்திடணும்’’ என்றவர் மூலிகைப் பூச்சிவிரட்டி பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இலைதழைகள்
இலைதழைகள்


‘‘காய்கறிகள் மேல பூச்சி, புழுத் தாக்குதல் அதிகமா இருக்கும். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வீடியோ மூலம் இயற்கை பூச்சிவிரட்டி எப்படித் தயார் செய்றதுனு கத்துக்கிட்டு, தயார் செஞ்சு பயன்படுத்துட்டு வர்றோம். ஆடு கடிக்காத இலைகள், கசப்புத் தன்மை கொண்ட இலைகள், ஒடிச்சா பால் வரும் இலைகள்தான் பயன்படுத்தணும்னு சொல்லியிருந்தாங்க. அதுக்காக நான், வேப்பந்தலை, நொச்சி, எருக்கு, ஆமணக்கு இலைகளைப் பயன்படுத்துறேன். பப்பாளி, சீத்தாப்பழ இலைகளைக்கூட பயன்படுத்தலாம்’’ என்றவர், அதைத் தயார் செய்யும் முறையை விளக்கினார்.

இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்கும் பணி
இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்கும் பணி

‘‘மூன்று வகை இலைகளிலும் தலா ஒரு கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். அதைப் பொடிப் பொடியாக நறுக்கி, உரலில் போட்டு சாறு வரும்வரை இடிக்கலாம். அல்லது மிக்ஸியில் போட்டுக் கூட அரைக்கலாம். பிறகு, அதை 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 10 நாள்களுக்கு ஊற வைக்க வேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு, நல்ல வாசனை வந்ததும் அதைப் பயன்படுத்தலாம். வடிகட்டிய ஒரு லிட்டர் கரைசலுடன், 10 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளில் தெளிக்க வேண்டும். 15 நாள்கள் இடைவெளியில் இதைப் பயன்படுத்தும் போது பூச்சிகளை முழுமையாகக் கட்டுப் படுத்த முடியும்” என்றவர், இயற்கை களைக்கொல்லி பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்கும் பணி
இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்கும் பணி

இயற்கை களைக்கொல்லி

“சோதனை முயற்சியாக இயற்கை களைக்கொல்லி தயாரிக்கலாம்னு எண்ணம் வந்துச்சு. எங்க தோட்டத்தில மாடுக இருக்குறதால மாட்டுச் சிறுநீருக்குப் பஞ்சம் இல்ல. 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 2 கிலோ கல் உப்பு, ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரை, 2 எலுமிச்சைப்பழத்தின் சாறு கலந்து களைகள் இருக்குற இடங்கள்ல விசை தெளிப்பான் மூலமா தெளிச்சேன். ரெண்டு மூணு நாளிலேயே செடிங்க முழுசும் கருகிடுச்சு.

காய்ந்த இலைகளை வெட்டி அதுல சாணம் தெளிச்சு சில மண்புழுக்களை விட்டுருக்கேன். அதுல இருந்து மண்புழு உரம் கிடைச்சதும் தென்னைக்குப் பயன்படுத்த நினைச்சிருக்கேன். கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பில தன்னார்வலரா இருக்கிறேன். சில வருஷத்துக்கு முன்ன மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக்காக 8 அடி ஆழம், 120 அடி நீளத்தில் பண்ணைக் குட்டை வெட்டினோம். வருஷம் 2 தடவையாவது அந்தப் பண்ணைக் குட்டை நிரம்பிடும். இதனால, எங்க போர்வெல்ல தண்ணி நல்லா ஊறுது. நிலத்தடி நீர் மட்டமும் உயருது.

பிடிபட்ட காண்டாமிருக வண்டுகள்
பிடிபட்ட காண்டாமிருக வண்டுகள்

தினசரி எனக்கு 9 மணி நேரம்தான் அலுவலக வேலை. காலையில நேரமாக எந்திரிச்சு கொஞ்ச நேரம் விவசாய வேலைகளைப் பார்ப்பேன். 10 மணிக்கு அலுவலக வேலை தொடங்கிடும். அலுவலக வேலைக்கு இடையில கிடைக்குற நேரத்தில விவசாய வேலை செய்ய வந்துடுவேன். சாயங்காலம் 6 மணிக்கு அலுவலகப் பணி முடிஞ்சிடும். அதுக்கு பிறகு, கொஞ்ச நேரம் விவசாய வேலை பார்ப்பேன். விவசாயத்தில் ஈடுபடுறதால என் மனதுக்குத் திருப்தி கிடைக்குது. உடலுக்கும் நல்ல உழைப்பு கிடைக்குது. நாமே வேலை செய்றதால பணியாள்கள் கூலியும் மிச்சமாகுது’’ என்றவர் நிறைவாக,

பிடிபட்ட காண்டாமிருக வண்டுகள்
பிடிபட்ட காண்டாமிருக வண்டுகள்

‘‘இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துட்டுப் போகணும்னு ஆசைப்படுறேன். என்கூட வேலை செய்ற பலரும் ஆர்வமா இது மாதிரியான முயற்சிகள்ல ஈடுபடுறாங்க. உழவு இல்லாம எதுவும் இல்ல. விவசாயத்துக்குத் தண்ணிதான் முக்கியம். அந்தத் தண்ணீரை நாம சேமிக்கணும். நமக்குத் தேவையான பொருள்களைக் கடைகள்ல வாங்காம பக்கத்துல இருக்கத் தோட்டங்களுக்குப் போய் விவசாயிகளிடமிருந்து நேரடியா வாங்கலாம். போக முடியலைன்னா கூட போன் மூலமா கேட்டுக்கூட வாங்க முடியும். அப்படியொரு மனநிலைக்கு எல்லோரும் வந்தா விவசாயி வாழ்க்கை வெளிச்சமாகும்’’ என்றார் அழுத்தமாக.

தொடர்புக்கு,

சிவராம் அய்யாசாமி,

செல்போன்: 96003 98259.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு